ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Reject German coalition pact! Make public all secret agreements!

ஜேர்மன் கூட்டணி உடன்படிக்கையை நிராகரியுங்கள்! அனைத்து இரகசிய உடன்படிக்கைகளையும் பகிரங்கப்படுத்து!

Statement of the Sozialistische Gleichheitspartei
10 February 2018

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியத்திற்கும் (CDU/CSU) சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (SPD) இடையே பெப்ரவரி 7 இல் எட்டப்பட்ட கூட்டணி உடன்பாடானது, ஜேர்மனியில் நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் வலதுசாரி அரசாங்கம் உருவாவதற்கு அடித்தளம் அமைக்கிறது. எதிர்வரவிருக்கும் அரசாங்கமானது, வங்கிகள், பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் பெரும்-செல்வந்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தொடரும் என்பதோடு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு பாரிய இராணுவ ஆயத்தப்படுத்தலைத் தொடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) அதுபோன்றவொரு அரசாங்கத்தை எதிர்ப்பதுடன், புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த பெரும் கூட்டணிக்கு எந்த ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் கிடையாது. செப்டம்பர் 24, 2017 வாக்களிப்பில் நிராகரிக்கப்பட்ட இதை, இப்போது வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் குறைவானவர்களே ஆதரிக்கின்றனர். இது வங்கிகள், முதலாளிமார்களின் கூட்டமைப்புகள், இராணுவம், உளவுத்துறை முகமைகள் மற்றும் முதலாளித்துவ கட்சிகள் ஈடுபட்டுவரும் ஒரு சதித்திட்டத்தின் விளைபொருளாகும். பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைத்து, அவற்றின் பிரதிநிதிகள் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதத்காக, பேரம்பேசுவதிலும், சதி செய்வதிலும் நான்கரை மாதங்களை செலவிட்டுள்ளனர்.

தொழிலாள வர்க்கத்திற்கு, இந்த பெரும் கூட்டணி எதை நோக்கி செல்கிறது என்பதை அறியும் உரிமை உள்ளது. ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் உண்மையான உள்ளடக்கங்கள் மூடிமறைக்கப்பட்டு, பூசிமெழுகப்பட்டு, திரித்து கூறப்பட்டு வருகின்ற இக்கூட்டணி உடன்படிக்கை சம்பந்தமாக மட்டுமல்ல, மாறாக திரைக்குப் பின்னால் நடத்தப்பட்ட விவாதங்களின் உள்ளடக்கம் மற்றும் எட்டப்பட்ட பரந்தளவிலான இரகசிய உடன்பாடுகளுக்கும் இது பொருந்தும். SGP, இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பின்பற்றப்பட்ட அனைத்து இரகசிய பதிவேடுகளையும் மற்றும் பங்கெடுத்தவர்களின் பட்டியலையும் பிரசுரிக்குமாறு கோருகிறது.

எதிர்வரவிருக்கும் வாரங்களில் இக்கூட்டணி உடன்படிக்கை மீது வாக்களிக்க உள்ள 450,000 சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு, உண்மையில் என்ன ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான உரிமை உள்ளது. இக்கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்த அனைத்து விபரங்களும் மேசையில் வைக்கப்பட வேண்டுமென அவர்கள் கோர வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு விபரம் தெரிவிக்கப்படாத மற்றும் அதன் விளைவுகளை பற்றி தெரியாத கொள்கைகளுக்கு வெறுமனே கையெழுத்திட்ட பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டுவிடுவர்.

இக்கூட்டணி உடன்பாடு மீதான ஒரு சுருக்கமான ஆய்வானது, பலமான எதிர்ப்பைச் சந்திக்கக் கூடிய பல உடன்பாடுகள் வெறுமனே குறிப்பாக மட்டுமே கூறப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. சான்றாக, அணுஆயுதங்கள் குறித்தும் மற்றும் அதற்கான வழிமுறை திட்டமிடல்களுக்குமான மூலோபாய விவாதங்களின் பாகமாக இருப்பதில் ஜேர்மன் ஆர்வம் கொண்டிருப்பதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. எளிய மொழியில் கூறுவதானால், இந்த பெரும் கூட்டணி அணுஆயுதங்களைக் கொண்டிருக்க விரும்புகிறது என்பதை மட்டுமே இது அர்த்தப்படுத்தும்.

இந்த பிரச்சினையில் என்ன உடன்பாடு எட்டப்பட்டது? ஜேர்மன் அணுகுண்டை உருவாக்கும் திட்டங்கள் உள்ளதா? பிரான்சின் "Force de frappe” (அதிரடிப்படை) இல் ஜேர்மன் பங்கேற்பை உறுதிப்படுத்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதா? மக்ரோனுக்கு முன்பிருந்த நிக்கோலா சார்க்கோசி, 2007 இல் அதுபோன்றவொரு முன்மொழிவை ஜேர்மனியின் முன் வைத்தார், ஆனால் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அப்போது அதை நிராகரித்திருந்தார்.

இதற்கு கூடுதலாக, இக்கூட்டணி உடன்படிக்கையானது "நேட்டோவிடம் ஒப்புக் கொண்டுள்ள ஆற்றல் சார்ந்த இலக்குகள்" மற்றும் இராணுவ சிப்பாய்களுக்கு "சாத்தியமானளவுக்கு சிறந்த தளவாடங்களுக்கு" அரசாங்கத்தின் பொறுப்புறுதியை ஏற்கிறது. ஆனால் வரவு-செலவு திட்டக்கணக்கின் மற்ற பகுதிகளுக்கான செலவு மிகவும் கவனமாக கணக்கிட்டு அளவீடு செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கில் மிகப் பெரும் தொகைகள் சம்பந்தப்பட்டுள்ள போதும் கூட, அது குறித்து எந்த விபரங்களும் வழங்கப்படவில்லை.

துல்லியமாக என்ன ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது? வருடாந்தர இராணுவ வரவு-செலவு கணக்கை 70-80 பில்லியன் யூரோவுக்கு இரட்டிப்பாக்கும் வகையில், இக்கூட்டணி வெளிப்படையாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதுகாப்புத்துறைக்கு என 2 சதவீதம் செலவிடுவதற்கான நேட்டோவின் இலக்கை எட்ட உத்தேசிக்கிறது.

ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்திற்கு பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில் மற்றும் செல்வந்தர்களுக்கு வரி உயர்வுகள் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது என்னென்ன செலவின வெட்டுக்களை உள்ளடக்கும்? இந்த சட்டமன்ற காலகட்டம் முழுவதும் 46 பில்லியன் யூரோவாக இருக்குமென, அல்லது ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் யூரோவா இருக்குமென முன்மொழியப்பட்டுள்ள கூடுதல் செலவினங்கள் மற்றும் சமூக செலவின குறைப்புகளின் விளைவுகள் என்னவாக இருக்கும்? 2010 செலவு குறைப்பு திட்டத்தை முன்மாதிரியாக கொண்ட ஒரு புதிய "திட்ட" கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதா?

வாசகரை இருட்டில் வைக்க, தெளிவின்றி இருக்கும் அல்லது அதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற டஜன் கணக்கான பந்திகளை அந்த ஆவணத்தில் ஒருவரால் காண முடியும்.

இந்த உடன்படிக்கையின் பிற்போக்குத் தன்மையை மூடிமறைக்க ஊடகங்கள் மற்றும் SPD தலைமையால் ஒரு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடன்படிக்கை இராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கை இலக்குகளையே அதன் கவனத்தின் மையத்தில் கொண்டுள்ளது என்கின்ற போதினும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவை குறித்து எந்த செய்திகளும் வெளியாவதில்லை. அதற்கு பதிலாக, அனைத்து விடயங்களிலும் இரண்டாந்தர பிரச்சினைகளே ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன, மற்றும் குழந்தை நலன்களுக்காக நான்காண்டுகளுக்கு 25 யூரோ அதிகரிப்பு போன்ற போலிக் கட்டுப்போடும் நடவடிக்கைகளே பெரும் சமூக சீர்திருத்தங்களாக புகழப்படுகின்றன.

அந்த 177 பக்க ஆவணத்தின் ஒவ்வொரு வரியும், பல ஆண்டுகளாக ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவுக்கும் மற்றும் ஓர் ஐரோப்பிய வல்லரசு கொள்கைக்கும் அழைப்பு விடுத்து வருகின்ற இராணுவம், உளவுத்துறை முகமைகள் மற்றும் சிந்தனைக் குழாம்களது உத்வேகத்தில் மூழ்கியுள்ளது. ஜேர்மனி ஓர் ஆக்ரோஷ மற்றும் இராணுவவாத வெளியுறவு கொள்கைக்குத் திரும்புவதையும் மற்றும் பிரான்சின் கூட்டுறவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை கோரமாக ஆயுதமேந்திய ஓர் இராணுவ கூட்டணியாக மாற்றுவதையும் இதன் மையத்தில் கொண்டுள்ளது.

மேற்கு பால்கன்களில் இருந்து, ரஷ்யா, உக்ரேன், துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, பாரசீக வளைகுடா மற்றும் வட ஆபிரிக்கா வரையில், அத்துடன் ஆபிரிக்காவின், இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் ஏனைய பகுதிகள் வரையில், மீண்டுமொருமுறை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலத்தைச் சேர்ந்தவைகளாக பார்க்கப்படும் நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் முழு கண்டங்களை அந்த ஆவணம் அடையாளப்படுத்துகிறது.

CDU/CSU மற்றும் SPD, இராணுவத்தின் தற்போதைய இராணுவ தலையீடுகளை விரிவாக்கவும், “'ஐரோப்பிய இராணுவம்' நோக்கி கூடுதல் நடவடிக்கை" எடுக்கவும், “ஏற்கனவே தொடங்கிவிட்ட இராணுவ புதுப்பிப்பு, நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்தை" தீவிரப்படுத்தவும் உடன்படுகின்றன.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்குள் தள்ளிய முந்தைய அரசாங்கங்களின் சிக்கன கொள்கைகள், ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதிலும் தொடரப்பட உள்ளன. ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்தை பேணுவதற்கும், ஐரோப்பிய ஸ்திரப்பாடு மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தில் நிலைத்திருக்கவும் அந்த உடன்படிக்கை சூளுரைக்கிறது.

உள்நாட்டில், இந்த பெரும் கூட்டணியானது சமூக தாக்குதல்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசை கட்டியெழுப்ப திட்டமிடுகிறது. இந்த நடவடிக்கைகளின் பட்டியல் விடுக்கும் கோரிக்கைகளில், மாநில அளவிலும் மத்திய அளவிலும் உளவுத்துறை முகமைகளுக்காக 15,000 க்கு நெருக்கமாக புதிய நியமனங்களையும், நீதித்துறையில் 2,000 புதிய நியமனங்களையும் மேற்கொள்வதை உள்ளடக்கி உள்ளது. இந்த ஆவணம் பொலிஸை இராணுவமயப்படுத்துவதற்கும், வீடியோ கண்காணிப்பை விரிவாக்குவதற்கும், உளவுத்துறை சேவைகளைப் பலப்படுத்தல் மற்றும் இணைய வேவுபார்ப்பை விரிவாக்கவும் அழைப்பு விடுக்கிறது. உள்துறை அமைச்சகம் (Innenressorts) என இதுவரை இருந்ததை உள்நாட்டு அமைச்சகம் (Heimatministerium) என்று மறுபெயரிடப்பட்டு அதன்  தலைவராக CSU தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவர் நியமிக்கப்பட உள்ளதுடன், ஒரு கடுமையான சட்ட-ஒழுங்கு உள்நாட்டு கொள்கை உறுதி செய்யப்படும்.

அகதிகள் கொள்கை மீது, அக்கூட்டணி உடன்படிக்கை அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் கோரிக்கைகளை ஏற்கிறது. ஓராண்டுக்கான புலம்பெயர்வோர் ஏற்பு எண்ணிக்கை 220,000 நபர்களில் இருந்து 180,000 ஆக குறைக்கப்படும், தஞ்சம் கோருவோர் மத்தியமயப்படுத்தப்பட்ட முகாம்களில் அடைக்கப்படுவார்கள், சட்டரீதியாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள் ஈவிரக்கமின்றி நாடு கடத்தப்படுவார்கள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்-எல்லைகளும் வெளி-எல்லைகளும் மூடப்படும்.

சூழ்ச்சிகள் மற்றும் இரகசிய உடன்பாடுகள் மீது ஜேர்மனியில் ஒரு நீண்டகால மற்றும் நாசகரமான பாரம்பரியம் உள்ளது. வைய்மார் குடியரசின் முடிவிலும் அதுபோன்ற சூழ்ச்சிகள் நிறைந்திருந்தன. ஏற்கனவே ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நாடாளுமன்றத்தைச் சார்ந்திருக்கவில்லை, மாறாக அவசர கால உத்தரவாணைகள் மற்றும் ஜனாதிபதி ஆணைகளைச் சார்ந்திருந்தன. கார்ல் வொன் ஒஸிஸ்ட்கி போன்று, மீள்ஆயுதமயப்படுவதைக் கண்டித்த எவரொருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

பின்னர் ஜனவரி 30, 1933 இல், பிரதான தொழிலதிபர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்கைச் சுற்றியிருந்த ஒரு கூட்டமும், இராணுவம் மற்றும் மற்ற பிற்போக்குத்தனமான சக்திகளும், அடோல்ஃப் ஹிட்லரின் கட்சி தேர்தலில் கடுமையாக பின்னடைவைச் சந்தித்தபோதும் கூட, இரண்டு மாதங்களில் அவரையே சான்சிலராக பெயரிட்டன.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, மத்திய கிழக்கின் பரந்த போர் அபாயம் மற்றும் கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் அபாயத்திற்கு இடையே, ஜேர்மன் ஏகாதிபத்தியம் கடந்த காலத்தின் குற்றகரமான அணுகுமுறைகளுக்குள் தஞ்சமடைந்து வருகிறது. இது கூட்டணி உடன்படிக்கையில் மிகவும் தெளிவாக உள்ளதுடன், அது குறிப்பிடுகிறது: “அமெரிக்காவிற்கான புதிய மூலோபாய முன்னுரிமைகள், சீனாவின் வளர்ச்சி மற்றும் ரஷ்யாவின் கொள்கை ஆகியவை முன்னொருபோதையும் விட ஐரோப்பா அதன் தலைவிதியை அதன் கரங்களில் எடுக்க வேண்டும் என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.”

அந்த கூட்டணி உடன்படிக்கை மீது வரவிருக்கும் நாட்களில் நடக்கவுள்ள வாக்கெடுப்பில் அதை எதிர்க்குமாறு நாங்கள் அனைத்து SPD உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். போர் மற்றும் புதிய சமூக தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யும் ஒரு பெரும் கூட்டணி தொடர்வதை அனுமதிக்க முடியாது.

ஆனால், நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளாலும் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மிகப் பெரிய பிரிவுகளாலும் ஆதரிக்கப்படுகின்ற இந்த வலதுசாரி சூழ்ச்சியை, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும். சமீபத்திய வாரங்களில் வாகனத்துறை மற்றும் மின்துறை தொழிலகங்களில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தில் நிலவும் போர்குணத்தின் சாத்தியக்கூறை எடுத்துக்காட்டின.

ஆனால் இந்த கூட்டணி உடன்படிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வர IG Metall தொழிற்சங்கம் அதன் சக்தியைப் பிரயோகித்து அனைத்தும் செய்தது. ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் அதில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் ஒரு பெரும் கூட்டணிக்கும் மற்றும் அதன் வலதுசாரி கொள்கைகளுக்கும் பலமாக வக்காலத்து வாங்குபவைகளாக உள்ளன.

ஆளும் வர்க்கத்தின் இந்த பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) வரவிருக்கும் வாரங்களில், பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், தொழிலாள வர்க்கத்திடையேயும் ஆழமாக பிரச்சாரம் செய்யும். SGP, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் இணைந்து, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஐரோப்பா எங்கிலும் ஒரு பலமான சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பும். அனைத்து இரகசிய உடன்படிக்கைகளையும் வெளியிடுமாறும் மற்றும் புதிய தேர்தல்களுக்கும் கோருவது இந்த நடவடிக்கையில் முக்கிய படிகளாகும்.