ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: The coalition agreement and the return of militarism

ஜேர்மனி: கூட்டணி உடன்பாடும் இராணுவவாதத்தின் மீள்வருகையும்

By Ulrich Rippert
15 February 2018

கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான பெரும் கூட்டணி நடைமுறைக்கு வருமாயின், ஜேர்மனியின் இராணுவத் தலைமை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேறெந்த அரசாங்கத்தின் கொள்கைகள் மீதும் இல்லாத அளவுக்கான மட்டத்திற்கு அதன் கொள்கைகள் மீது அரசியல் செல்வாக்கு செலுத்த இருக்கிறது. CDU/CSU மற்றும் SPDக்கு இடையில் சென்றவாரத்தில் உடன்பாடு காணப்பட்டிருக்கும் கூட்டணி ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்கள் ஜேர்மன் இராணுவப் படைகளது (Bundeswehr) அடையாளமுத்திரையைத் தாங்கிநிற்கின்றன.

நவம்பர் இறுதியில் நடந்த பேர்லின் பாதுகாப்பு மாநாட்டில், முன்னணி இராணுவ அதிகாரிகள் ஜேர்மனியின் இராணுவத் திறங்களை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்கான ஒரு திறம்பட்ட அறிக்கையை ஏற்கனவே வழங்கியிருந்தனர். மாநாட்டில் தனது நிறைவுப்பேச்சில், விமானப் படை (Luftwaffe) ஆய்வாளர் கார்ல் முல்னர் தெரிவித்தார், “ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசாக, உலகின் கூடுதலான பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறோம். இது இலவசமாய் கிடைத்து விடாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்”. “அரசியல்வாதிகள் இதனை உணர்ந்து கொண்டு பொருத்தமான வழிவகைகளை வழங்குவார்கள்” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நீண்டநெடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஜனவரியின் மத்தியில் CDU/CSU மற்றும் SPD வழங்கிய கூட்டணி பரிசீலனை ஆய்வறிக்கையில், திறமிக்க ஆயுத மேம்பாட்டுத் திட்டங்கள் ஓரங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. இல்லையென்றால் பெரும் கூட்டணி தொடர்வதை கட்சி நிராகரித்து விடும் என்பதுதான் எல்லாவற்றுக்கும் மேல் SPD இன் தலைமையின் அச்சமாய் இருந்தது.

Bundeswehr கூட்டமைப்பின் தலைவரான லெப்டினெண்ட் கர்னல் ஆண்ட்ரே வுஸ்ட்னார், கிட்டத்தட்ட கோபக் கொந்தளிப்பின் உச்சிக்குப் போய் விட்டதாக சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்த அரசியல் உடன்பாட்டை அசாதாரண கூர்மையுடன் அவர் தாக்கினார். இந்த பரிசீலனை ஆய்வறிக்கை இராணுவம் குறித்து சில வரட்சியான வாசகங்களை மட்டும் அர்ப்பணித்திருந்ததைக் கண்டு “அதிர்ச்சி” அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை 2 பில்லியன் யூரோ அதிகரிப்பது மற்றும் இந்த அதிகரிப்பை அபிவிருத்தி உதவியுடன் கலப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று தொடர்ந்து கூறிய அவர் இவ்வாறு அறிவித்தார்: “இது தான் உண்மையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதென்றால், இது ஜேர்மன் இராணுவப் படைகளது நலன்களை விலைகொடுத்து, நமது நம்பகத்தன்மை மற்றும் கூட்டணித் திறனை விலை கொடுத்து—இவ்வாறாக ஜேர்மனியின் பாதுகாப்பை விலைகொடுத்து ஏற்படுகின்ற உடன்பாடாகும். அது பொறுப்பற்றதாகும்.”

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கியதற்காக அந்த அதிகாரி பொறுப்பாக்கப்படுவதற்குப் பதிலாக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதியுடன் ஒன்றுபட்டு இராணுவ உயர்தலைமையுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்தினர். கூட்டணி உடன்பாடு அதன் கையெழுத்தை தெளிவுறத் தாங்கி நிற்கிறது.

முந்தைய கூட்டணி உடன்பாடுகளுடனான ஒரு ஒப்பீடு இதனைத் தெளிவாக்குகிறது. 2009 இல் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினருக்கும் சுதந்திர ஜனநாயகக் கட்சியினருக்கும் (FDP) இடையில் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு செய்யப்பட்ட உடன்பாட்டில் “Bundeswehr” என்ற வார்த்தை ஒன்பது தடவை காட்சியளிக்கிறது. அச்சமயத்தில் 5வது அத்தியாயம் “ஒரு சக்திவாய்ந்த மற்றும் நவீன Bundeswehr க்காக” என்று தலைப்பிடப்பட்டிருந்ததுடன் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு தொடங்கியது, ““Bundeswehr ஜேர்மன் அமைதிக் கொள்கையின் ஒரு அத்தியாவசியமான சாதனமாகும்”. அதன்பின் கட்டாய இராணுவச் சேர்க்கையை ஒழிப்பது குறித்தும் ஒரு நாடாளுமன்ற இராணுவமாக Bundeswehr இன் முக்கியத்துவம் குறித்துமான சில பத்திகள் பின்தொடர்ந்து வந்தன.

நான்கு ஆண்டுகளின் பின்னர், SPD உடனான ஒரு பெரும் கூட்டணி உருவாக்கமானது ஒரு பெரும் வெளியுறவுக் கொள்கை தாக்குதல்நிலை மற்றும் தீவிரமான இராணுவ மறுஆயுதபாணியாகல் ஆகியவற்றின் அரவணைப்பில் தான் ஏற்கனவே நின்று கொண்டிருந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவான விஞ்ஞான மற்றும் அரசியல் அறக்கட்டளை (SWP), அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னணிப் பத்திரிகையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது ஒத்துழைப்புடன், “புதிய சக்தி-புதிய பொறுப்பு” என்ற மூலோபாய ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது, முன்னாள் ஜனாதிபதி ஜோஅஹிம் கவுக் 2013 ஜேர்மன் ஒற்றுமை தினத்தில் பேசுகையில் உலகின் நெருக்கடியான பிராந்தியங்கள் அத்தனையிலும் ஜேர்மன் கூடுதல் பொறுப்பேற்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இராணுவப் பொறுப்பேற்பது என்பதும் இதன் அர்த்தமாக இருக்கும் என்பதையும் காக் வெளிப்பட அழுத்தம்திருத்தமாகக் கூறியிருந்தார்.

அந்த சமயத்தில், “Bundeswehr” என்ற வார்த்தை கூட்டணி உடன்பாட்டில் 24 முறைகள் இடம்பெற்றிருந்தன. “Bundeswehr இன் மறுசீரமைப்பு” என்ற அத்தியாயம் தெரிவித்தது, “நவீன மற்றும் திறம்பட்ட இராணுவப் படைகளைக் கொண்ட ஒரு வலிமையான பாதுகாப்புக்கு நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்”. இராணுவத்தின் நவீனமயமாக்கம் மற்றும் மேம்படுத்தல் குறித்த உடன்பாடுகள் அதனைப் பின்தொடர்ந்திருந்தன.

இப்போதைய கூட்டணி உடன்பாட்டில், “Bundeswehr” என்ற வார்த்தை 38 முறைகள் காட்சியளிக்கின்றன, இராணுவ மீள்ஆயுதபாணியாகல் மீதான முடிவு ஆவணத்தின் அத்தனை பகுதிகளிலும் விரவியிருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கையானது ஒட்டுமொத்தமாக இப்போது ஜேர்மனி ஒரு மூர்க்கமான வெளியுறவு மற்றும் வல்லரசுக் கொள்கைக்குத் திரும்புவதை நோக்கி முடுக்கப்பட்டதாய் இருக்கிறது.

நடப்பு கூட்டணி உடன்பாட்டின் மைய அம்சமாக இருக்கின்ற “உலகின் அமைதி, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு ஜேர்மனியின் பொறுப்புடைமை” என்ற அத்தியாயம் 20 பக்கங்கள் நீண்டதாய் இருக்கிறது, உலக அதிகாரத்தை மூன்றாவது முறையாக ஜேர்மன் கைப்பற்றுவதற்கான ஒரு மூலோபாய அறிக்கை ஆவணம் போல அது காட்சியளிக்கிறது. ஆர்வம்காட்டும் பகுதிகளது பட்டியலில் மேற்கு பால்கன்கள், ரஷ்யா, உக்ரேன், துருக்கி, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகியவை அடங்கும்.

ஆயுத உற்பத்தி பாரிய அளவில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது, குறிப்பாக ஊக்குவிக்கப்பட இருக்கிறது. உடன்படிக்கை தெரிவிக்கிறது “Bundeswehr அதற்கு அவசியமானதைக் கொள்முதல் செய்யும், அதற்கு முன் நீட்டப்படுவதை அல்ல”. “ஒரு வெளிப்படையான, திறம்பட்ட மற்றும் உகப்பாக்கப்பட்ட ஆயுதபாணியாகல் நிகழ்முறைகளே” அவசியமானதாய் இருக்கிறது.

இந்த உள்ளடக்கத்தில், “நாடாளுமன்ற இராணுவம்” என்ற கருத்தையே கூட்டணி அறிக்கை முற்றிலுமாய் மறுவரையறை செய்கிறது. இராணுவத்தை நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் கண்டிப்பாக கீழ்ப்படியச் செய்வது என்பதே இதன் அர்த்தமாக முன்பு புரிந்து கொள்ளப்பட்டிருந்தது, நாடாளுமன்றம் “நமது படைவீரர்களுக்கான ஒரு சிறப்பான பொறுப்புநிலையை” ஏற்றுக் கொள்கிறது என இப்போது கூறப்படுகிறது. நாடாளுமன்றக் கட்டுப்பாடு என்பது இப்போது பராமரிப்புக் கடமையாக மாற்றப்பட்டிருக்கிறது.

Bundeswehr “அதற்குக் கொடுக்கப்படும் உத்தரவுகளை அத்தனை பரிமாணங்களிலும் முறையாக நிறைவேற்ற இயலும் பொருட்டு, நாம் படைவீரர்களுக்கு சாத்தியமான சிறந்த சாதனங்களை, பயிற்சியை மற்றும் உதவியை வழங்குவோம்” என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, இப்போது துவக்கமளிக்கப்பட்டிருக்கின்ற “மனிதவளம், பொருள்வளம் மற்றும் நிதிவளத்திலான போக்கு மாற்றங்கள்” முறைப்படி தொடரவிருக்கின்றன என்பதுடன் “Bundeswehrக்கு தொடர்ந்து நீடிக்கின்ற நிதிவளத்தை உறுதிசெய்வதுடன் கூடுதலாக, பல ஆண்டுகளின் காலத்திலான பாதுகாப்பு முதலீடுகளுக்கு திட்டமிடுதல் மற்றும் நிதியளிப்புக்கான அத்தியாவசியமான சூழ்நிலைகளும் உத்தரவாதமளிக்கப்படவிருக்கின்றன.” எதிர்காலத்தில், “நாடாளுமன்ற இராணுவம்” என்பதன் அர்த்தம் நாடாளுமன்றம் இராணுவ உயர்தலைமையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்தாக வேண்டும் என்பதாகும்.

இராணுவத்தின் நாடாளுமன்றக் கட்டுப்பாடு என்பது இராணுவத் தலைமைக்கான நாடாளுமன்ற ஆதரவு என்பதாக தலைகீழாக்கப்படுவதில் ஒரு முக்கியமான பாத்திரம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டியால் வகிக்கப்படுகிறது. ஆகவே, அதி-வலது தீவிர கட்சியான ஜேர்மனிக்கான மாற்று (AfD) இக்கமிட்டியில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலுவான குரலைக் கொண்டிருக்கிறது என Bundeswehr Journal குதூகலிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

கமிட்டியில் AfD நாடாளுமன்றக் குழு Rüdiger Lucassenயின் தலைமையில் செயல்படுகிறது,  Colonel iG பதவியில் 34 ஆண்டுகள் வேலை செய்திருப்பதன் பின்னர் Bundeswehr ஐ விட்டு வெளியில் வந்திருக்கும் அவர், இராணுவ மற்றும் போலிஸ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆளெடுப்பு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை அமைத்திருக்கிறார்.

AfDயின் இன்னொரு கமிட்டி உறுப்பினரான ஜெரோல்ட் ஓட்டனும் ஒரு தொழில்முறை படைவீரராக இருந்தவர் ஆவார். 1997 இல் மேஜர் பதவிநிலையில் விமானப் படையை (Luftwaffe) விட்டு விலகிய அவர், ஏர்பஸ் குழுவின் ஆயுதப் பிரிவுக்காக வேலை செய்தார், மிக சமீபத்தில் யூரோஃபைட்டருக்கு விற்பனை மேலாளராக பணியாற்றினார்.

கமிட்டியில் இருக்கும் AfD குழுவின் இன்னொரு உறுப்பினரான Berengar Elsner von Gronow, Bundeswehr ரிசர்வ் படையின் ஒரு உறுப்பினராவார்.

AfDயுடன் சேர்ந்து, இடது கட்சியின் நான்கு உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டியில் அமர்ந்திருக்கின்றனர்: மார்க்ஸ்21 அமைப்பின் (பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஜேர்மன் சகோதர அமைப்பு) ஒரு முன்னணி உறுப்பினரான கிறிஸ்டின் புக்கோலஸ், இவர் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் (CDU) உடன் இணைந்து அவ்வப்போது துருப்புகளைப் பார்வையிடுபவர்; இடது கட்சியின் கூட்டரசாங்க மேலாண்மை இயக்குநராக மிக சமீபகாலம் வரை இருந்த மத்தியாஸ் ஹோன்; நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டியில் நீண்டகாலமாக இடது கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கக் கூடிய OSCE இன் ஒரு முன்னாள் ஊழியரான அலெக்ஸாண்டர் நெயூ, இவர் “சர்ச்சைக்குரிய விதத்தில் விவாதம்” செய்வார், ஆனாலும் கமிட்டியின் அத்தனை முடிவுகளுக்கும் ஆதரவளிப்பார்; மற்றும் Tobias Pflüger, முன்னர் இராணுவவாதத்தின் எதிரியைப்போல காட்டிக்கொண்டவர், இப்போது பாதுகாப்புக் கமிட்டியில் இடது மறைப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

இந்த பிற்போக்குத்தனமான எடுபிடிகளில் எவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் உண்மையாக எதற்கு உடன்பாடு காணப்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் துணிச்சல் பெற்றவரில்லை. அரசாங்க உடன்பாட்டை வரைவுசெய்வதில் எந்த Bundeswehr அங்கங்கள், இராணுவத் தலைவர்கள் மற்றும் உளவுப்பிரிவு முகவர்கள் பங்குபெற்றனர்? Bundeswehr உடன் என்ன கூடுதலான பேச்சுவார்த்தைகளும் உடன்பாடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன?

போர் மற்றும் மீள்ஆயுதபாணியாகலுக்கு எதிராக தீவிரத்துடன் போராட விரும்புகின்ற எவரொருவரும் இந்தக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும், கூட்டணி உடன்பாட்டிற்கு எதிரான மற்றும் புதிய தேர்தலுக்கு ஆதரவான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

இராணுவ சமூகப்பிரிவு ஜேர்மன் வரலாற்றில் ஒரு அழிவுகரமான பாத்திரத்தை வகித்திருக்கிறது. சாம்ராஜ்யத்தின் முதுகெலும்பை உருவாக்கிய அது முதலாம் உலகப் போர் தோல்வி மற்றும் 1918 நவம்பர் புரட்சியின் பின்னரும் கூட தப்பிப்பிழைத்ததென்றால் SPDயின் வலது-சாரித் தலைமை இராணுவத்தின் உயர் தலைமையுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை ஒடுக்கியது மட்டுமே -இதன் உச்சமாக ரோஸா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் படுகொலை செய்யப்பட்டனர்- அதற்கான ஒரே காரணமாகும். வைய்மார் குடியரசில், அது ஜனநாயக விரோத அரசுக்குள்ளான அரசாக செயல்பட்டதோடு நாஜிசத்தின் எழுச்சிக்கு கணிசமாகப் பங்களிப்பு செய்தது.

1950களில் ஜேர்மன் மறுஆயுதபாணியாகலுக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் இருந்தன. அவை உடைக்கப்பட முடிந்ததென்றால் அதற்குக் காரணம் SPD Bundeswehr க்கு ஆதரவாகப் பேசியதும் இராணுவத்தின் சிவிலியன் கட்டுப்பாடு உத்தரவாதமளிக்கப்பட்டிருந்ததும் மட்டுமேயாகும். இப்போது பெரும் கூட்டணியானது மீண்டும் மூர்க்கமான வல்லரசு அரசியலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது, பிற்போக்குத்தனமான இராணுவ சாதி அதிகாரத்தையும் செல்வாக்கையும் மீண்டும் பெறுவதற்கு அது உதவிசெய்து கொண்டிருக்கிறது. இது அனுமதிக்கப்படக் கூடாது.