ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan local elections: SEP holds public meetings in island’s north

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சோசலிச சமத்துவக் கட்சி தீவின் வடக்கில் பொதுக் கூட்டங்களை நடத்தியது.

By our correspondent 
9 February 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் சமீபத்தில் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணத்திலும் ஊர்காவற்துறையிலும் இரண்டு பொதுக் கூட்டங்களை நடத்தின. இந்த கூட்டங்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கம் நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மேற்கொள்ளும் தலையீட்டின் பாகமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) ஊர்காவற்துறையில் 16 வேட்பாளர்களையும், கொழும்பு தொழிலாள வர்க்க புறநகர் பகுதியான கொலன்னாவவில் 21 வேட்பாளர்களையும், மத்திய பெருந்தோட்ட பிரதசேமான அம்பாகமுவவுக்கு 24 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.

கூட்டங்களுக்கு முன்னதாக சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மற்றும் யாழ்ப்பாணம் நகரங்களிலும் மற்றும் குருநகர், ஊர்காவற்துறை போன்ற பல்வேறு மீன்பிடி கிராமங்களிலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். சோ.ச.க.யின் தேர்தல் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை அவர்கள் விநியோகித்திருந்தனர்.


திருஞான சம்பந்தர்

இப்பிரதேச மக்கள், ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் பிரிவினைவாத புலிகளின் தோல்வியுடன் போர் முடிவடைந்தது.

யாழ்ப்பான கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க. வேட்பாளர் பி. திருஞான சம்பந்தர், முதலாளித்துவ கட்சிகளுக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச மாற்றீட்டை வழங்குவதற்காகவே எமது கட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்று விளக்கினார்.

"இந்த தேர்தல் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் முக்கியமான நேரத்தில் நிகழ்கிறது," என்று அவர் கூறினார். "ஒருபுறம், அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் பேரழிவு தரும் மூன்றாம் உலக யுத்தத்திற்குள் மனிதகுலத்தை இழுத்துத் தள்ள செயற்படுகின்றன. மறுபுறம், சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மறு எழுச்சியை இப்பொழுது நாம் காண்கிறோம்."

ஏனைய எல்லா கட்சிகளும் ஊடகங்களும் யுத்தம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகளை மூடி மறைக்கின்றன, என சம்பந்தர் தெரிவித்தார். இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக உழைக்கும் மக்களுடன் கலந்துரையாடும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி எனப்படுவது மக்களின் அரசாங்கமே அல்ல" என்று சம்பந்தர் கூறினார். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் கொடூரமான சமூகத் தாக்குதல்களை விரித்துரைத்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உட்பட தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகள், சிறிசேனவின் அமெரிக்க-சார்பு நிர்வாகத்தை ஆதரிக்கின்றன என தெரிவித்தார்.

சிறிசேன அரசாங்கமும், எதிர்க்கட்சிகள் என அழைக்கப்படுபவையும் தமிழ் மொழி பேசும் தொழிலாளர்களை அவர்களது சிங்கள சகோதரர்களிடமிருந்து இன ரீதியில் பிரிப்பதற்காக தேசியவாதத்தை தூண்டிவிடுவதாக சம்பந்தர் கூறினார். தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.


ராசரட்ணம் பாலகௌரி

சோ.ச.க. மத்திய குழு உறுப்பினரான ராசரட்ணம் பாலகௌரி இணைய தள தணிக்கை விரிவாக்கப்படுவது பற்றி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

"கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை இராட்சத நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன," என்று அவர் கூறினார். "அவர்கள் முற்போக்கு மற்றும் சோசலிச வலைத் தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் குறிப்பாக உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்கின்றனர். இது ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். மக்கள் எதை சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பகிர்ந்துகொள் வேண்டும் என்று இவர்களே முடிவு செய்கிறார்கள். இந்த பெருநிறுவனங்களும் அரசாங்கங்களும், இப்பொழுது தீவிரமடைந்து வருகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச கருத்துக்கள் பரவுவதை கண்டு அவர்கள் விழிப்படைந்துள்ளனர்."


டி. சந்திரசேகரன்

கட்சியின் நீண்டகால உறுப்பினரான டி. சந்திரசேகரன், 2018ம் ஆண்டு சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து 50 ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது என குறிப்பிட்டார். "சோ.ச.க.யின் பயணம் சோசலிசத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மார்க்சிச முன்னோக்கின் அடிப்படையில், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் எமது வரலாற்றில் ஒவ்வொரு அபிவிருத்தியிலும் எமது இயக்கம் தொடர்ந்து தலையீடு செய்துள்ளது."

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் இறுதி உரையாற்றினார். அவர், தற்போது கூர்மையடைந்து வரும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை விளக்கினார், பின்னர் இலங்கையில் நிலவும் நிலைமையை சுட்டிக் காட்டினார்.

"கடந்த காலத்தில், இலங்கை முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினால், லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி போன்ற துரோக இடதுசாரிகளின் ஆதரவோடு, உழைக்கும் மக்களுக்கு எதிராக அதன் ஒடுக்குமுறை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஏனெனில், அவற்றின் காட்டிக் கொடுப்புக்கள் காரணமாக, இடதுசாரிகள் என்று அழைக்கப்படும் கட்சிகள் மக்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்திருப்பதால், இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவை 2015ல் அரசாங்கம் ஒன்றை அமைக்க அவநம்பிக்கையுடன் கூட்டுச் சேர்ந்தன."

ஆரம்பத்தில் இருந்தே இந்த அரசாங்கம், ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் தற்போது நடத்திவரும் போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது என டயஸ் சுட்டிக் காட்டினார். தனது நோக்கங்களுக்கு பாராளுமன்ற ஆட்சி போதவில்லை என்று ஆளும் வர்க்கம் உணர்கின்ற ஒரு சூழ்நிலையை அது நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ், இராணுவம் மற்றும் நீதித்துறை முறைக்கு அதிக அதிகாரம் கொடுப்பதாக மேலும் கொடூரமான சட்டங்களுடன் அரச இயந்திரத்தை ஆயுதபாணியாக்கியுள்ளார், என டயஸ் தெரிவித்தார். சிறிசேன, சிங்கள-பெளத்த பேரினவாதம் பூசப்பட்ட ஒரு பிரச்சாரமாக "ஊழலை ஒழிக்கும்" ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.

"சில சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொள்கின்றன. ஆனால் உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக ஒடுக்குமுறை அரசை கடுமையான மறுசீரமைப்பதை நோக்கி அவை நகர்கின்றன" என்று பேச்சாளர் கூறினார்.


விஜே டயஸ்

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பு முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் வெளிப்பாடு என்று டயஸ் விளக்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்தை தனது இராணுவ வலிமையால் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்ட சர்வதேச அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பின் முறிவிற்கு வழிவகுத்துள்ளது, என அவர் கூறினார்.

"அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகள் வெவ்வேறு திசைகளிலும் இழுக்கும் நிலையில் நேட்டோ போன்ற நிறுவனங்கள் பிரதியீடு செய்ய முடியாதளவு பிளவை எதிர்கொள்கின்றன. இது சிரியாவிலான இராணுவ மோதலில் தெளிவாகக் காணப்படுகிறது. பிரெக்ஸிட்டில் வெளிப்பட்டவாறு ஐரோப்பிய ஒன்றியமும் பிளவடைய ஆரம்பித்துவிட்டது. அதேபோல், பின்தங்கிய நாடுகளில் உறுப்பினர்களுக்கிடையிலான மோதல்களால் அணிசேரா நாடுகள் அமைப்பு கூட்டப்பட முடியாமல் உள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக இந்தியா தலையிடுவதுடன், சீனாவுடனான உறவுகள் சம்பந்தமாக ஆசியான் அமைப்பும் கூட ஆழமாக பிளவடைந்துள்ளது."

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களின் வெடிப்பை சுட்டிக்காட்டிய பேச்சாளர், அண்மைய வேலை நிறுத்தங்களை சுட்டிக் காட்டினார். இந்தியாவில் தமிழ்நாட்டில் 180,000 பஸ் தொழிலாளர்கள் அதேபோல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்கள் கடந்த ஆண்டு வேலை நிறுத்தம் செய்தனர். மற்றும் 960,000 ஐ.ஜி. மெட்டல் உறுப்பினர்கள் ஜேர்மனியில் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

"இந்த போராளித் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் எதிர்கொள்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் உறுப்பான உலக சோசலிச வலைத் தளமும் வழங்கும் அரசியல் முன்னோக்கின் மூலம் மட்டுமே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். “எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சோ.ச.க. கலந்துரையாட முற்படும் மையப் பிரச்சினைகள் இவைதான்," என்று பேச்சாளர் கூறினார்.

டயஸ், முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் அவர்களது போலி-இடது ஆதரவாளர்களின் மோசடி தேர்தல் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தினார். தமது உள்ளூர் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை எதிர்கொள்ளும் எரியும் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்று அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

பிராந்தியத்தின் உயர் நிர்வாக அலுவலரான யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அண்மைய பத்திரிகை செய்தியை டயஸ் மேற்கோளிட்டார். இது தொழில்துறை பற்றாக்குறை மற்றும் கடுமையான வேலையின்மையை சுட்டிக் காட்டியது. தமிழர்-விரோத போரில் தந்தைமார் கொல்லப்பட்ட 30,000 குடும்பங்கள் உள்ளன. விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை வழங்கப்படுவதில்லை. 20,000 குடும்பங்களுக்கு வீடு தேவைப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்கள் ஒருபுறம் இருக்க, இந்த முக்கியமான பிரச்சினைகளில் எதுவும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் தீர்க்கப்பட முடியாது, என டயஸ் கூறினார்.

"எல்லாவற்றுக்கும் மேலாக, யாழ்ப்பாணம் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது," என டயஸ் தெரிவித்தார். இராணுவம் மொத்தம் 243,000 சிப்பாய்களைக் கொண்டுள்ள அதே வேளை அவர்களில் 150,000 பேர் வடக்கை ஆக்கிரமித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார். "அதாவது ஒவ்வொரு ஏழு குடிமகனுக்கும் ஒரு சிப்பாய் என்றளவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தமது முகாம்களுக்காக 5,000 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் கைப்பற்றிக்கொண்டுள்ளது."

"இந்த பிரச்சினைகள் அனைத்தும், பகுத்தறிவான தீர்வுகளைப் பெற ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக அழைப்பு விடுக்கின்றன. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் ஒரு பகுதியாக இத்தகைய ஒரு அரசியல் மாற்றத்திற்கே சோ.ச.க. போராடுகிறது."

கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தானும் நண்பர்களும் தேர்தலில் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறினார். "யாரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என்று கூறுகிறது, ஆனால் அது பிளவுபட்டுள்ளது. தமது சொந்த நலன்களைப் பற்றியே அவர்கள் கவலை கொண்டுள்ளனர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அல்ல."

ரேவதி, 60 கிலோமீட்டர் தொலைவில் கிளிநொச்சியில் இருந்து கூட்டத்திற்கு வந்திருந்தார். "முதல் தடவையாக நான் ஒரு அரசியல் கூட்டத்திற்கு வந்துள்ளேன்," என்று அவர் கூறினார். "உங்கள் கட்சி உண்மையைச் சொல்கிறது, மற்ற எல்லா கட்சிகளும் தங்கள் சொந்த நலனுக்காக வேலை செய்கின்றன என்பதை நான் கண்டேன்."

கூட்டத்திற்கு வந்திருந்த மற்றொருவர்: "முதலாளித்துவ அமைப்பு முறை என்றால் என்ன என்பதையும் சோசலிச வேலைத்திட்டத்தின் தேவையையும் சோ.ச.க. விளக்குகிறது. இன்று முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். பூமியின் வளங்கள் பகுத்தறிவுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாததால் சமூக வேறுபாடுகள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் சமத்துவத்தை அமைப்பதற்கான ஒரே வழி சோசலிசமாகும்."

எழுத்தாளர் கீழ்வரும் அறிக்கையையும் பரிந்துரை செய்கிறார்:

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சிக்கன நடவடிக்கைக்கும் யுத்தத்துக்கும் எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரியுங்கள்! தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக போராடுவோம்! [PDF]