ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Left Party voices support for military rearmament and war

ஜேர்மன் இடது கட்சி இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கு ஆதரவு குரல் கொடுக்கிறது

By Johannes Stern
26 February 2018

சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) ஒரு புதிய பெரும் கூட்டணி அரசாங்கம் அமைக்க செயலாற்றிக் கொண்டிருக்கையில், நவ-காலனித்துவ போர் மற்றும் வல்லரசு மோதலைப் பின்பற்றுவதில் ஜேர்மனியை மீள்ஆயுதமயப்படுத்துவதே இதன் மத்திய குறிக்கோள் என்கின்ற நிலையிலும், ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கலுக்கு இடது கட்சி (Linkspartei) அதன் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியது.

கடந்த திங்களன்று, நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் இடது கட்சி பிரதிநிதி ஸ்ரெபான் லீபிச், மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் (SPD) வழங்கிய உரையை உற்சாகத்துடன் வரவேற்றார்.

“இது நீண்டகாலமாக கிடப்பில் இருந்தது; அங்கே [அமெரிக்காவில்] நமக்கு மிகவும் நட்புரீதியிலான அரசாங்கங்கள் இருந்தபோதே நான் நேர்மையோடு கூறியிருந்தேன், அதைத்தான் எங்கள் கட்சியும் கூறியது, ஏனென்றால் நாம் பனிப்போர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை,” என்றவர் "Unter den Linden” என்ற அரசியல் உரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஜேர்மனி, “அதன் சொந்த நலன்களைக் கொண்ட ஓர் இறையாண்மை நாடு, இந்த நலன்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்து போகின்றன என்றாலும், சிலவேளைகளில் ஒத்து போவதில்லை,” என்றார்.

மூனிச்சில் காப்ரியேலின் போர் உரையில், அந்த சமூக ஜனநாயகக் கட்சியாளர், வெளியுறவு விவகாரங்களில் "அசைவ" கொள்கை குறித்தும், “உலகில் பலத்தைக் காட்டும்" ஒரு பொதுவான ஐரோப்பா குறித்தும் பிதற்றி இருந்தார். கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியுடனான புதிய வகை பெரும் கூட்டணி ஜேர்மன் ஆயுதப்படைகளைப் (Bundeswehr) பாரியளவில் மேம்படுத்தும் என்றும், ஒரு சுதந்திரமான வல்லரசு கொள்கையை அபிவிருத்தி செய்யும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார்.

இது லீபிச்சின் முழு ஆதரவைப் பெற்றுள்ளது. “ஜேர்மனி அதன் முடிவுகளைத் தனியாக மற்றும் இறையாண்மையுடன் மேற்கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன். எங்கே எல்லாம் [அமெரிக்காவுடன்] சேர்ந்து பொதுவான நலன்களைப் பின்தொடர்கிறோமோ, அதையும் நாம் செய்ய வேண்டும், ஆனால் எங்கே எல்லாம் அது ஒத்துப் போகவில்லையோ, நீங்கள் மறுத்துக் கூற கூடியவராக இருக்க வேண்டும்,” என்றார். இதுவே "காலங்கடந்துவிட்டது, சரி செய்து கொள்ளுங்கள் என்பதே இப்போது ட்ரம்ப் நிர்வாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்,” என்றார். இப்போது அவர்கள் "அதை செய்ய வேண்டும்.”

அவர் இராணுவத் தலையீட்டைத்தான் அர்த்தப்படுத்துகிறார் என்பதில் லீபிச் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. சிரிய போரில் "மேற்கின் மிகப் பெரிய தவறுகள்" என்னவாக இருந்தன என்று நிகழ்ச்சி நெறியாளர் வினவியதும், அவர் பதிலளித்தார், “நம் நாட்டின் மிகப்பெரிய தவறே, நாம் மிகவும் தொலைநோக்குடன் பார்ப்பதில்லை என்பது தான். சிரியர்கள் நம் நாட்டை எட்டிய போதுதான் ஜேர்மனி இந்த மோதலில் தலையிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதனால், அகதிகள் அலையென ஜேர்மனிக்குள் வந்த போதுதான், அங்கே நாம் தலையிட வேண்டியுள்ளது என்பதையே உணர்ந்தோம். பின்னர் ஜேர்மனி நிறைய பொறுப்பை எடுத்துக்காட்டியது, ஆனால் அங்கே நாம் பெரிய பாத்திரம் வகிப்பவராக இல்லை,” என்றார்.

சிரியாவில் டிசம்பர் 15 இல் உத்தியோகபூர்வமான ஜேர்மன் போர் முயற்சி தொடங்குவதற்கு முன்னரே இடது கட்சி ஏற்கனவே ஏகாதிபத்திய-சார்பு சிரிய எதிர்ப்பை ஆதரித்ததுடன், அதிக ஆக்ரோஷமான ஜேர்மன் தலையீட்டுக்காக பிரச்சாரம் செய்தது.

ஏப்ரல் 2014 இல், லீபிச் மற்றும் நாடாளுமன்ற குழு தலைவர் டீற்மார் பார்ட்ஷ் உட்பட பல்வேறு இடது கட்சி நாடாளுமன்ற நிர்வாகிகள், சிரிய இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக என்ற பெயரில், மத்தியத்தரைக் கடலுக்கு ஒரு ஜேர்மன் சிறிய போர்க்கப்பலை அனுப்ப வாக்களித்தனர்.

அக்டோபர் 2014 இல், இடது கட்சியின் 14 முன்னணி அரசியல்வாதிகள் "கொபானியைக் காப்பாற்றுங்கள்!” என்று தலைப்பிட்டு ஒரு முறையீட்டை வழங்கினர், இது சிரியா மற்றும் ஈராக்கிய இஸ்லாமிக் அரசுக்கு (ISIS) எதிராக அரசு ஒரு பாரிய இராணுவ தலையீட்டைத் தொடங்க அழைப்பு விடுத்தது.

நான்காண்டுகளுக்குப் பின்னர், லீபிச், பார்ட்ஷ் மற்றும் இடதும் கட்சியும் தங்களை ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் "சிறந்த" ஆலோசகர்களாக காட்டிக் கொள்கின்றனர். கடந்த செவ்வாயன்று வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில், பார்ட்ஷ் கோருகையில், இராணுவச் செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்புக்கு அழைப்பு விடுத்த ஆயுதப் படைகளுக்கான நாடாளுமன்ற ஆணைக்குழுவின் தற்போதைய அறிக்கையை "மிகவும் கவனத்தில்" எடுக்க வேண்டும், இப்போது “…கூட்டாட்சி அரசாங்கத்திற்கு அனைத்து எச்சரிக்கை மணிகளும் ஒலிக்கப்பட" வேண்டும். பல ஆண்டுகளுக்கு, “ஆண்டுதோறும் தளவாடங்களுக்கான செலவுகள் அதிகரிக்க வேண்டியிருக்கும், குறிப்பிடத்தக்களவில் அதிகரியுங்கள்,” என்றார். ஆனால் "இந்த பணம் எங்கே இருந்து வரும்?” என்பது தான் "முக்கிய கேள்வி.”

அது "பல மிகப் பெரிய திட்டங்களில் முதலீடு" செய்துள்ளது, ஆனால் "எப்போதைக்கும் இது போதாது,” என்று பார்ட்ஷ் கோபத்துடன் கூறினார். [சமூக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பாதுகாப்புத்துறைக்கான ஆணையாளரான] திரு Bartels, ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஆறுமே இன்று செயல்பாட்டுக்கு உரியதாக இல்லை என்று கூறுகையில்" இது, “அதிர்ச்சியூட்டுவதாகும்.” இது "உண்மையிலேயே பரபரபூட்டுகிறது" “இந்த நீர்மூழ்கி கப்பல் படையை ஒருவர் மொத்தமாக மூழ்கடித்து விட வேண்டியது தான்,” என்றவர் கேலியாக குறிப்பிட்டார்.

மறுபுறம், “சாதாரண சிப்பாய் தனது தளவாடங்களுக்கு தானே பணம் செலுத்த வேண்டுமென" கூறப்படுகிறது. இந்த நிலைமை "உண்மையிலேயே சகித்துக் கொள்ளவியலாதது.” பாதுகாப்பு துறையின் தற்காலிக நிர்வாக அமைச்சராக உள்ள ஊர்சுலா வொன் டெர் லெயென் (கிறிஸ்துவ ஜனநாயக கட்சி) “வயது குறைந்த சிப்பாய்களை … விளம்பரப்படுத்துவதில் இவ்வளவு செலவு" செய்திருக்க கூடாது, மாறாக "உண்மையில் படையில் முதலீடு செய்திருக்க வேண்டும்,” என்றார்.

இடது கட்சி "மீள்ஆயுதமயமாவதற்கு" எதிரானது, ஆனால் "நாம் ஜேர்மன் இராணுவத்தை இந்த வடிவத்தில் வைத்திருக்கும் வரையில், சிப்பாய்கள் மீது வேறு வழிகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.” “இந்த அர்த்தத்தில், பாதுகாப்பு அறிக்கை பொறுப்பான நபர்களை எட்டுமென,” அவர் நம்புவதாக தெரிவித்தார்.

லீபிச் அல்லது பார்ட்ஷ் இன் இராணுவவாத ஆவேச பேச்சுக்கள் கவனக் குறைவானவை கிடையாது, மாறாக பல ஆண்டுகளாக முதலாளித்துவ அரசு மற்றும் அதன் உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தின் கட்டமைப்புகளுக்குள் ஆழமாக ஒருங்கிணைத்துள்ள ஒரு கட்சியின் மையத்தில் வேர் கொண்டிருக்கும் வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய-சார்பு தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இது இடது கட்சிக்கு (Linkspartei) உள்ளும், அதை சுற்றியும் உள்ள போலி-இடது போக்குகளுக்கும் பொருந்தும். சான்றாக, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியின் சகோதர அமைப்பான மார்க்ஸ்-21 போக்கின் (Marx-21 tendency) உறுப்பினர் கிறிஸ்டீனே புஹ்ஹோல்ஸ் (Christine Buchholz), இரகசியமாக ஒன்றுகூடும் ஒரு குழுவான நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை குழுவில் ஒன்பது ஆண்டுகளாக இப்போதும் அமர்ந்துள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள தகவலின்படி, இக்குழு "பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்ளை அபிவிருத்தி செய்வதிலும், ஜேர்மன் இராணுவத்திற்கு தளவாடங்கள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.”