ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why does Mélenchon want to expel Syriza from the European Left Party?

ஐரோப்பிய இடது கட்சியில் இருந்து சிரிசாவை வெளியேற்ற வேண்டுமென ஏன் மெலோன்சோன் விரும்புகிறார்?

By Alex Lantier
8 February 2018

அடிபணியா பிரான்ஸ் (LFI) கூட்டணிக்குள்ளாக ஜோன்-லுக் மெலோன்சோனால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சிறிய கட்சியான இடது கட்சி (PG), கிரீசின் ஆளும் கட்சியான சிரிசாவை (”தீவிர இடதுகளின் கூட்டணி”) கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஐரோப்பிய இடது கட்சி (EL) கூட்டணியின் தேசியக் கட்சிகளை சென்ற வாரத்தில் கேட்டுக் கொண்டது.

2015 முதலாக சிரிசா, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் அத்தோடு அதன் சொந்த 2015 ஜூலை கருத்துவாக்கெடுப்பில் கிரேக்கத் தொழிலாளர்கள் அளித்த பாரிய “வேண்டாம்” வாக்களிப்பையும் காலில் போட்டு நசுக்கி வருகிறது. இத்தனை ஆண்டுகளில், அது தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்திருப்பதோடு பில்லியன் கணக்கான யூரோக்கள் சிக்கன நடவடிக்கைகளையும் திணித்திருக்கிறது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் EL கூட்டணியின் ஒரு முக்கிய அங்கத்தவராக அது ஆர்வமாக செயல்பட்டு வந்தது, சொல்லப் போனால் 2015 இல் மெலோன்சோன் சிரிசாவின் தேர்வை ஒரு “வரலாற்று” முன்னேற்றம் என்று கூறிப் பாராட்டினார். ஆயினும், கடைசியாக சிரிசா மூலம் வலிந்து திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றிய “பல-மசோதா”வுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்ததை அடுத்து, PG அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.

PG இன் தேசிய நிர்வாகச் செயலகம் ஜனவரி 28 அன்றான ஒரு கூட்டத்திற்கு பின்னர், “சிரிசாவை வெளியேற்றுவதை எத்தனை முடியுமோ அத்தனை விரைவில் நாளின் நடப்பில் வைப்பதற்கு” EL க்கு ஆலோசனை வைக்கும் ஒரு அறிக்கையை விடுத்தது. 1975 இல் கிரேக்க அரசியல்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த உரிமையை அகற்றுகின்ற நோக்கத்துடன் சிரிசாவின் சமீபத்திய சிக்கன நடவடிக்கைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகளை அது விமர்சனம் செய்தது.

“அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிசாவுடன் அருகிலிருந்தபடி வேலை செய்வதென்பது உண்மையில் சாத்தியமற்றதாக ஆகியிருக்கிறது. வேலைநிறுத்த உரிமையைத் தடைசெய்யும் மட்டத்திற்கு அவரது சிக்கன நடவடிக்கைத் தர்க்கத்தில் அவர் வெகுதூரம் சென்றிருக்கிறார்” என்று PG சேர்த்துக் கொள்கிறது. “மக்களை மூச்சுத் திணறச் செய்கின்ற சுதந்திரச் சந்தை தளைக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் இது தெளிவுக்கான சமயமாக இருக்கிறது, EL இன் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே அவற்றின் சொந்த நாட்டில் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன. நடப்பு ஒப்பந்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதொரு ஐரோப்பியக் கட்டுமானத்தில் மட்டுமே கிரேக்க மக்களின் மீதும், மற்றும் பிறவெங்கிலும் திணிக்கப்பட்ட நாடகம் நிற்க முடியும். அப்படியான ஒரு ஐரோப்பாவின் எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்கள் இரண்டு தரப்பையும் EL தனக்குள் கொண்டிருக்க முடியாது.”

இது அப்பட்டமான கபடநாடகமாகும். வேலைநிறுத்த உரிமையின் மீதான சிரிசாவின் தாக்குதல் ஐயத்திற்கிடமின்றி அந்தக் கட்சியின் எதேச்சாதிகாரத் தன்மையையும் தொழிலாள வர்க்கத்திற்கு அது கொண்டுள்ள ஆழமான குரோதத்தையும் தெளிவுபடுத்துகிறது. ஆயினும் இது, EL கட்சிகள் அத்தனையாலும் பின்பற்றப்படுகின்ற பிற்போக்குத்தனமான, தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளது ஒரேயொரு திகைப்பூட்டுகின்ற மற்றும் மறுக்கவியலாதவொரு உதாரணம் மட்டுமேயாகும். ஐரோப்பாவெங்கிலும் வேலைநிறுத்தப் போர்க்குணம் பெருகிச் செல்வதன் மத்தியில் சிரிசாவை விமர்சனம் செய்வதன் மூலமாக, சிரிசாவுடன் EL கொண்டிருக்கும் இணைப்புகளுக்கு முகமூடியிடுவதற்கும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கான முட்டுக்கட்டையாக EL இன் பயனுள்ளதன்மையைப் பாதுகாப்பதற்கும் PG முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

சிரிசாவின் புதிய சிக்கன நடவடிக்கைத் தொகுப்பில், வேலைநிறுத்த உரிமையின் மீதான ஒரு தாக்குதலைக் கொண்டிருக்கிறது என்ற செய்தி ஜனவரி ஆரம்பத்தில் வெளியானதும் PG சிரிசாவை விமர்சனம் செய்து விடவில்லை, மாறாக சிரிசாவுக்கு எதிராய் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை முன்னெடுத்த பின்னர் தான் செய்திருக்கிறது. அதேபோல வர்க்க நிலையில் இருந்து பார்த்தால், பிரான்சில் இதன் கொள்கையும் அடிப்படையில் வேறுபட்டதல்ல. இடது முன்னணியின் பிரதிநிதிகள் 2015 நவம்பரில் தேசிய அவையில் அவசரகாலநிலை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்; ஜனநாயக உரிமைகளைத் தடைசெய்வதற்கும் 2016 இல் தொழிலாளர்-விரோத பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக தமது வேலைநிறுத்த உரிமையை செயலுறுத்த முயன்ற தொழிலாளர்களைக் கொடூரமாக ஒடுக்குவதற்கும் பிரெஞ்சு அரசை இது அனுமதித்தது.

ஐரோப்பாவெங்கிலும் பெருகிச் செல்லும் வேலைநிறுத்த அலையானது, சிரிசா மற்றும் EL இன் எதிர்ப்புரட்சிகர, தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு முன்னோக்கின் திவால்நிலையைத் தெளிவாக்குகிறது. தொழிலாளர்களின் போர்க்குணம் —அவற்றுடன் வேலைநிறுத்தம் செய்த துருக்கியின் உலோகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பு, பிரிட்டனில் இரயில் வேலைநிறுத்தங்கள், எல்லாவற்றுக்கும் மேல் கிரீசுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தாக்குதலுக்கு தலைமை வகித்த நாடான ஜேர்மனியில் உலோகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை— நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) புரட்சிகர சர்வதேச மூலோபாயத்தின் செல்தகைமையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்தில், கிரேக்கத் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சிக்கன நடவடிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ICFI வலியுறுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய 25 ஆண்டு காலம் ஏகாதிபத்தியப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றிருப்பதன் பின்னர், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தினுள் வெடிப்பார்ந்த கோபம் மேலெழும்பி வருகிறது. தொழிலாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஐரோப்பாவெங்கிலும் நிலவுகின்ற வெகுஜன எதிர்ப்புக்கும் விண்ணப்பம் செய்வதற்கு குரோதம் காட்டுகின்ற சிரிசா, இந்த மனோநிலையை அணிதிரட்டுவதற்கு மறுத்ததோடு அதற்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான மோசமான தலைவிதி கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு நேரடியாக சென்றது. எதிர்பார்க்கத்தக்க வகையில், இது பெருநாசத்தையே உண்டுபண்ணியது.

சிரிசாவின் செயல்வரலாற்றினால் ஒட்டுமொத்த ELP யும் மதிப்பிழப்பதை தடுப்பதற்கும் அதன்மூலம் தொழிலாள வர்க்கத்திலான ஒரு அரசியல் மறுநோக்குநிலையையும் அத்துடன் ICFI ஆல் முன்னெடுக்கப்படுகின்ற புரட்சிகர, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பியத் தொழிலாளர்களது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதையும் தடுப்பதற்குமான முயற்சியில் மெலோன்சோனும் PGம் இப்போது தலையீடு செய்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிரான்சில் தொழிலாளர் சட்டத்தை குப்பையில் வீசிவிட்டு குறைந்தபட்ச மட்டத்திற்கும் குறைவான ஊதியங்களைத் திணிப்பது, வேலைகளை வெட்டுவது, பொதுத் துறை தொழிலாளர்களது வாழ்நாள் வேலை பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை கொண்ட மக்ரோனின் திட்டநிரலுக்கு எதிர்ப்பு அதிகரித்துச் செல்வதைக் கண்டு PG அச்சம்கொள்கிறது.

PG இன் இந்தத் தந்திரம் அரசியல் நேர்மையற்றதாகும், ஏனென்றால் ELP அதன் மிகப் பெரும்பான்மையில் சிரிசாவின் தொழிலாளர்-விரோத நிலைப்பட்டையும் எதேச்சாதிகாரக் கொள்கைகளையும் ஆதரிக்கிறது. ELP தலைவர்களில் பலரும் PG இன் அறிக்கைக்கு அளித்த எதிர்வினையில், சிரிசாவை ஆதரித்து அறிக்கைகள் விட்டிருப்பதோடு வேலைநிறுத்த உரிமையை அகற்றுவதற்கு முனையும் சிரிசாவுடனான தமது ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்யவிருப்பதாகவும் வலியுறுத்தினர்.

EL இன் தலைவரும் முன்னாளில் Die Linke இல் —1989 இல் கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவத்தை மீட்சி செய்த ஸ்ராலினிச சக்திகள் மற்றும் மேற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயக மற்றும் குட்டி-முதலாளித்துவக் குழுக்களின் கூட்டணி, இது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைப் பிணையெடுப்புகளுக்கு ஆதரவாய் வாக்களித்தது— தலைவராக இருந்தவருமான கிரிகோர் கீஸி சிரிசாவைப் பாதுகாத்துப் பேசினார். அவர் தெரிவித்தார், “சிரிசா அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒரு பெரிய காரணம், முக்கூட்டு மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தமேயாகும். வேலைநிறுத்த உரிமை மீதான கட்டுப்பாடுகள் -இதன் மீது எனக்கும் விமர்சனமுண்டு- உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதுவே மூலகாரணமாக இருக்கிறது.”

இது வெறுமனே EL மற்றும் Die Linke இன் தொழிலாளர்-விரோதக் கொள்கையை மூடிமறைப்பதற்கு செய்யப்படுகின்ற ஒரு சிடுமூஞ்சித்தனமான காட்சிவேலை மட்டுமேயாகும். தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை அரசியல்சட்ட உரிமைகளுக்கு குழிபறிக்கின்ற போலி-சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து “மிகவும் விமர்சனம்” கொண்டிருப்பதாக கூறிக் கொள்கின்ற அதேநேரத்தில், கீஸி, கிரீசில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவிருக்கும் சிரிசாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயல்ப்படவிருப்பதை தெளிவாக்குகிறார். ELக்குள்ளான பல சக்திகள் சிரிசாவின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளுக்கான கீஸியின் ஆதரவை இன்னும் வலிமையுடன் எதிரொலித்திருக்கின்றன.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரதிநிதியான Anne Sabourin, சிரிசாவை வெளியேற்ற PG விடுத்திருக்கும் அழைப்பைக் கண்டனம் செய்தார். இது “வடிவத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி அபத்தமானதாய் இருக்கிறது” என்றார் அவர். “...நாம் ஐரோப்பிய மக்ரோன்வாதத்திற்கும் அதி வலதுகளின் எழுச்சிக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம், தீவிர இடதின் மாறுபட்ட, வெவ்வேறு தேசியக் கொள்கைகளையும் கலாச்சாரங்களையும் கொண்ட சக்திகளை நாம் ஐக்கியப்படுத்தியாக வேண்டும்.”

ஐரோப்பிய நிதி மூலதனத்தின் தாக்குதலுக்கு முகம்கொடுத்து நிற்கும் நிலையில், எல்லாவற்றுக்கும் முதலில் அவசியமாக இருப்பது என்னவென்றால், வேலைநிறுத்தங்களை உடைக்கும் ஆட்சிகளை “தீவிர இடது” என்று கூறுகின்ற நோக்குநிலைமாற்றும் ஏமாற்றுக்கதைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். 1980கள் முதலான முதலாளித்துவத்தின் உலகமயமாக்கம் அவற்றை, ICFI போலி இடதுகள் என்று அழைக்கின்றவையாக மாற்றியிருக்கிறது. நாளுக்குநாள் வெற்றுக் கூடுகளாக ஆகி வருகின்ற சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் “தீவிர இடது” அதிகாரத்துவங்களை —தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளால் இவை தொழிலாள வர்க்கத்தினுள் முன்னர் கொண்டிருந்த எந்தவிதமான அடித்தளத்தையும் முற்றிலுமாய் தொலைத்து விட்டிருக்கின்றன— நடத்தி வந்த குட்டி-முதலாளித்துவத் தட்டுகள் உண்மையில் வலது-சாரி, தொழிலாளவர்க்க-விரோத சக்திகளாய் இருக்கின்றன.

சிரிசாவின் வேலைநிறுத்த விரோதக் கொள்கைக்கான EL இன் ஆதரவு இந்த உண்மையை திகைப்பூட்டும் விதத்தில் ஊர்ஜிதம் செய்வதோடு, லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் படைப்புகள் மற்றும் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் மீதான அவரின் மார்க்சிச விமர்சனத்தின் -இன்று ICFI மட்டுமே அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது- காலத்தால் அழியாத வரலாற்றுப் பொருத்தத்தை மேலுயர்த்திக் காட்டுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பாசிச ஆட்சிகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை கழுத்தை நெரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, இத்தாலிய மற்று பிரெஞ்சு அரசியல்சட்டங்களில் வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட பல சமூக உரிமைகள் சேர்க்கப்பட்டதை ஸ்ராலினிஸ்டுகளும் சமூக ஜனநாயகக் கட்சியினரும் பெரிதும் பாராட்டின. அதன்பின்னர் அவை கிரேக்க மற்றும் ஸ்பானிய அரசியல்சட்டங்கள், 1974 இல் இராணுவத் தளபதிகளின் ஆட்சிக்குழுவின் வீழ்ச்சிக்கும் 1978 இல் பிராங்கோவாத ஆட்சியின் வீழ்ச்சிக்கும் பின்னர் இந்த ஐரோப்பிய “நிர்ணயங்களின்” அடிப்படையில் ஒருஅணிவரிசைக்குள் வந்ததைப் பாராட்டின.

இதன் மூலமாக, அவை முதலாளித்துவத்தின் கீழும் கூட தொழிலாளர்கள் போராடமுடியும் தமது சமூக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று வாக்குறுதியளித்தன. இத்தகைய பிரமைகளின் அடிப்படையில் பல குட்டி-முதலாளித்துவப் போக்குகள் -மெலோன்சோன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடக்கிய பியர் லம்பேர் இன் Organisation communiste internationaliste ம் இதில் ஒன்று- ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் ICFI இல் இருந்தும் முறித்துக் கொண்டன.

அவற்றின் குட்டி-முதலாளித்துவ, தேசியவாத மற்றும் எதிர்ப்புரட்சிகர அரசியல், தொழிலாளர்களுக்கு ஒரு அபாயகரமான சிக்குபொறியாகும் என்று வலியுறுத்திய ICFI இன் நிலைப்பாடுகளை வரலாறு சரியென நிரூபணம் செய்திருக்கிறது. முதலாளித்துவத்தின் மீட்சி சோவியத் ஒன்றியத்திலும் -இந்த சாத்தியத்தைக் குறித்து ட்ரொட்ஸ்கி ஏற்கனவே எச்சரித்திருந்தார்- மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் நடந்தேறியதற்கு கால் நூற்றாண்டு காலத்தின் பின்னர், கண்டமெங்கிலும், அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன.

புதிய போராட்டங்கள் வெடிக்கின்ற நிலையில், தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினர் இந்த அடிப்படை சமூக உரிமைகள் முதலாளித்துவத்துக்கு இணக்கமற்றவையாக இருப்பதைக் காண்கின்றனர். கிரீசில், சகலருக்குமான மருத்துவக் காப்பினை முடிவுக்குக் கொண்டுவந்த சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆளும் வர்க்கமும் சராசரியாக சுமார் 40 சதவீத ஊதிய வெட்டினைத் திணித்தன. பிரான்சில், மக்ரோன் பொதுத்துறை தொழிலாளர்களின் வாழ்நாள் வேலைவாய்ப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோடு ஓய்வூதியங்களையும் சமூகப் பாதுகாப்பையும் வெட்டுவதற்கும் வாக்குறுதியளிக்கிறார். ஜேர்மனியில், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை முடுக்கி விடுவதில் மக்ரோனுடன் நெருங்கி இணைந்து வேலை செய்யக் கூடிய ஒரு மெகா கூட்டணி அரசாங்கத்திற்கு ஆளும் வர்க்கம் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

ஆளும் வர்க்கம், ஐரோப்பாவெங்கிலுமான மக்களைக் குறிவைத்து மிகப் பரந்த வேவுபார்ப்புச் சட்டங்களையும் கண்காணிப்புச் சட்டங்களையும் அமைப்பதன் மூலமாக சமூகத்தை இராணுவமயமாக்கி வருகின்ற அதேநேரத்தில், வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான உரிமையை மீண்டும் பின்வாங்கச் செய்வதற்கு, அல்லது ஒட்டுமொத்தமாக அகற்றுவதற்கும் கூட நப்பாசையுடன் இருக்கிறது. இந்த உண்மையை மூடிமறைக்க PG முயற்சி செய்கின்ற வேளையில், தொழிலாளர்களை கைகால் கட்டி வங்கிகளிடம் ஒப்படைத்து விடுவதையே கொள்கையாய் கொண்டிருக்கும் EL இன் ஆதரவை இக்கொள்கையில் அது அனுபவிக்கிறது.

சிரிசா அதிகாரத்துக்கு வரும் முன்பாகவே அதன் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து தொழிலாளர்களை எச்சரித்த ஒரே போக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு புரட்சிகரத் தலைமையையும் சோசலிச முன்னோக்கையும் வழங்கத்தக்க கட்சியாகும் என்பதை இது மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

[13 November 2015]