ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A tool of imperialism: Jean-Luc Mélenchon’s Unsubmissive France calls for military buildup

ஏகாதிபத்தியத்தின் கருவி: ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் இராணுவ கட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது

By Alex Lantier
19 February 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மற்றும் போருக்கு எதிரான அதன் போராட்டத்தையும், நீண்டகாலமாக “இடது" என்று கூறி செல்வாக்கு செலுத்தி வந்துள்ள கட்சிகளையும் ஒரு வர்க்க பிளவு பிரிக்கிறது. இந்த குட்டி-முதலாளித்துவ சக்திகள் இராணுவவாதத்தை ஆதரிப்பதுடன், போர் முனைவுக்கு மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இந்த யதார்த்தம், 2018-2024 க்கான மக்ரோனின் 300 பில்லியன் யூரோ புதிய இராணுவ செலவுத் திட்டத்தை ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (La France insoumise – LFI) ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

சிரியா மீது குண்டு வீச மக்ரோன் அச்சுறுத்துகின்ற வேளையில், ஜேர்மனி அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயப்படுத்துகையில், வாஷிங்டனோ ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், LFI, பிரெஞ்சு போர் எந்திரத்தைக் கட்டமைக்க அழைப்பு விடுக்கிறது. மெலோன்சோனும் அவரது இரண்டு LFI நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசிய நாடாளுமன்ற பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது இராணுவ செலவு அதிகரிப்புகளை வேகப்படுத்த வேண்டுமென்ற பிரெஞ்சு இராணுவத்தின் கோரிக்கைகளைப் பாராட்டினர். அவர்களின் கருத்துக்கள், தொழிலாளர்கள் மீது சுமையேற்றி திரட்டிய நிதியில், பேர்லினுடன் ஓர் இராணுவ கூட்டணியைக் கட்டமைக்க உத்தேசிக்கும் பாதுகாப்பு தொழில்துறை மற்றும் ஆளும் உயரடுக்கு பிரிவுகளது கண்ணோட்டங்களை எடுத்துரைக்கின்றன.

பிரான்சின் முன்னாள் காலனி சாம்ராஜ்ஜியமான ஆபிரிக்காவில் பிரான்சால் நடத்தப்பட்டு வரும் போர்களை ஆதரித்து, LFI நாடாளுமன்ற உறுப்பினர் Bastien Lachaud (பாஸ்டியன் லாஷோ) கூறுகையில், “இராணுவத்தின் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது, ஏனென்றால் முந்தைய ஜனாதிபதிகளின் கீழ் ஆயுதப் படைகளுக்கு கடுமையாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. நாம் பல சிப்பாய்களை இழந்துள்ளோம், நமது ஆயுதங்கள் பழையதாகிவிட்டன, இனியும் அவை உபயோகப்படாது… ஆகவே ஆம், நாம் நமது ஆயுதங்களில் முதலீடு செய்ய வேண்டும்,” என்றார்.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், தயாரிக்கப்பட்டு வருகின்ற போர்களின் விளைவுகள் குறித்தோ, அல்லது தொழிலாள வர்க்கத்தின் மீது இராணுவ கட்டமைப்பின் சமூக தாக்கம் குறித்தோ ஒரேயொரு வார்த்தை கூட கூறப்படவில்லை. பணக்காரர்களுக்கான வரி வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைக் கொண்ட வரவு-செலவு திட்டத்திற்கு மக்ரோன் சூளுரைத்துள்ளார். பில்லியன் கணக்கான நிதியானது, சமூக திட்டங்களில் இருந்தும் தொழிலாளர்களிடம் இருந்தும் பறிக்கப்பட உள்ளது. இவ்வாறிருக்கையிலும் இராணுவ செலவுக்கு நிதி அதிகரிப்பை வேகப்படுத்தவே Lachaud அழைப்பு விடுத்தார்.

“இந்த இராணுவ திட்டமிடல் சட்டத்தில் நாங்கள் விரும்பாதது என்னவென்றால்,” அவர் தொடர்ந்து கூறினார், “அது ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது… நமக்கு அவசியப்படும் இடத்தில் நிறைய பணம் ஒதுக்கப்படவில்லை. ஓர் உடனடி அதிகரிப்பு அவசியப்படுவதை தெளிவுபடுத்துவதற்காக [பிரெஞ்சு ஆயுதப் படைகளின் தலைவர்] ஜெனரல் [பியர்] டு வில்லியே கடந்த ஜூலையில் இராஜினாமா செய்தார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், ஆகவே செலவு அதிகரிப்புகளை உடனடியாக தொடங்கப்பட வேண்டும், பின்னர் செலவுகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.

அடுத்ததாக LFI நிர்வாகி Alexis Corbière (அலெக்ஸி கோர்பியேர்) கட்டாய இராணுவச் சேவையை மக்ரோன் மீண்டும் கொண்டு வர அழைப்பு விடுத்ததை ஆதரித்துப் பேசினார், ஓர் இராணுவத்திற்கு சிப்பாய்களும் ஆயுதங்களும் தேவைப்படுகின்றன. பியர் லம்பேர் இன் தொழிலாளர் கட்சிக்கான இயக்கம் (MPPT) மற்றும் பப்லோவாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (இன்று இது புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, NPA ஆகும்) ஆகியவை உட்பட ட்ரொட்ஸ்கிசத்தை விட்டோடியவர்களின் வழி தோன்றிய பல குழுக்களில் Corbière இருந்துள்ளார். அவர், மக்ரோனின் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வர திட்டமிடும் நாடாளுமன்ற குழுவின் ஓர் உறுப்பினராகவும் உள்ளார்.

அனைத்து இளைஞர்களும் 3 இல் இருந்து 6 மாதங்களுக்கு கட்டாய இராணுவச் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்ற மக்ரோனின் அழைப்பைக் குறித்து கூறுகையில், அவர் மக்ரோனின் நாடாளுமன்ற குழு அலட்சியமாக நடந்து கொள்ளும் விடயங்களை விமர்சித்ததுடன், தெளிவின்றி “என்ன செய்யப்பட வேண்டுமோ அதற்கும், என்ன அறிவிக்கபட்டிருக்கிறதோ இதற்கும் இடையே நிறைய முரண்பாடுகள்" இருப்பதாக சேர்த்துக் கொண்டார்.

இராணுவ சேவைக் காலத்தை நீடிக்க கோருமளவுக்கு சென்ற Corbière, இது மக்களையும் இராணுவத்தையும் ஒத்துப்போகவைக்கும் என்று வாதிட்டார்: “LFI இன் பாகத்தில், பொதுவான ஒரு எதிர்காலம் (A Future in Common) என்ற எங்களின் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டிருப்பதை நான் நினைவூட்டுகிறேன், அதன் அடிப்படையில் தான் நாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தினோம். ஒன்பது மாத கால குடிமக்களுக்கான கட்டாய இராணுவ சேவையை நாங்கள் ஆதரிக்கிறோம், இது குடிமக்களின் தேச பாதுகாப்பு படைக்கு அடித்தளமாக இருக்கும் என்பதோடு, இராணுவத்திற்கும் தேசத்திற்கும் இடையே தொடர்பைக் கட்டமைக்க இது நம்மை அனுமதிக்கும்,” என்றார்.

இத்தகைய கருத்துக்கள், LFI குறித்தும் இதுபோன்ற சர்வதேச அளவில் உள்ள போர்-ஆதரவு போலி-இடது குழுக்கள் குறித்தும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l'égalité socialiste—PES) விடுத்த எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. LFI இன் இணையவழி உறுப்பினர் சேர்ப்பு முனைவில் பங்கெடுத்தவர்களுக்கு அல்லது அதற்கு வாக்களித்தவர்கள் மற்றும் 2017 இல் ஜோன்-லூக் மெலோன்சோனின் ஜனாதிபதி பிரச்சாரத்தை ஆதரித்த மில்லியன் கணக்கான மக்களுக்கு LFI ஒரு பொறியாக கட்டமைக்கப்பட்டது. சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் மீதும், ஐரோப்பாவில் முடிவில்லா சிக்கன நடவடிக்கைகள் மீதும், கடந்த ஏப்ரலில் சிரியா மீதான ட்ரம்பின் தூண்டுதலற்ற குண்டுவீச்சு போன்ற ஏகாதிபத்திய குற்றங்கள் மீதும் LFI வைத்த விமர்சனங்களை ஆமோதிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் LFI இன் விமர்சனங்கள் தந்திரோபாயரீதியில் மோசடியாக இருந்தன. LFI நிர்வாகிகள் அதுபோன்ற விமர்சனங்களை, போர் மற்றும் பிரெஞ்சு இராணுவத்தின் குட்டி-முதலாளித்துவ, ஏகாதிபத்திய-ஆதரவு ஆதரவாளர்களாக இருந்து வெளியிட்டனர். இதனால் தான், கடந்த ஆண்டு சிரியா மீது ட்ரம்ப் குண்டுவீசியதை கண்டித்த மெலோன்சோன், சிரியா மீது குண்டு வீச மக்ரோனின் கடந்த வார அச்சுறுத்தல் குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒன்றும் கூறவில்லை. அதற்கு பதிலாக, எதிர்கால போர்களில் மில்லியன் கணக்கான இளைஞர்களை போர்க்கள பலி படைகளாக பயன்படுத்த LFI நோக்கம் கொண்டிருப்பதால் தான், அவரும், Corbière மற்றும் Lachaud உம் பிரெஞ்சு இராணுவவாதத்தை ஆமோதித்தனர்.

அடிபணியா பிரான்ஸ் இயக்கம் போன்ற சக்திகளை அம்பலப்படுத்துவது, போருக்கு எதிரான ICFI போராட்டத்தில் ஓர் அதிமுக்கிய கூறுபாடாகும். அடிபணியா பிரான்சுக்குப் பின்னால் உள்ள அரசியல் எந்திரங்கள் —மெலோன்சோனின் இடது கட்சியை (PG) உருவாக்க சோசலிஸ்ட் கட்சியிலிருந்து உடைந்து சென்ற கன்னை, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் NPA இல் இருந்து உடைந்து வந்த பல்வேறு கன்னைகள்— இந்த போர் பிரச்சார எந்திரத்தின் பல் சக்கரங்களாக இருந்து, மக்களை தூக்கத்தில் ஆழ்ந்த முயன்று வருகின்றன. மெலோன்சோனை சுற்றியுள்ள கன்னை குறிப்பாக போர் அபாயத்தைக் குறைத்துக் காட்டுவதிலும், அமெரிக்கா மீதான பிற்போக்குத்தனமான வெகுஜனவாத தாக்குதல்களுடன் அவர்களின் இராணுவவாத கொள்கைகளை மூடிமறைப்பதிலும் நிபுணத்துவம் கொண்டுள்ளது.

மெலோன்சோன் அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், அவர் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலின் ஒரு கருவியாக மக்ரோனை விமர்சித்ததன் மூலமாக மக்ரோனிடம் இருந்து LFI விலகி இருப்பதாக காட்ட முயன்றார். “நாம் முதல் பக்கத்தைத் திறப்போம், நாம் காண்பது, இந்த பூமியில் நமது உண்மையான எதிரிகள் ரஷ்யர்கள் சீனர்கள் என்று சமீபத்திய அறிக்கைகள் நமக்கு கூறுகின்றன. நல்லது, அது நல்ல செய்தி அல்ல, ஏனென்றால் நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது நிரூபிக்கப்படவில்லை, இது அவர்களின் உலகளாவிய ஒப்புயர்வற்ற நிலையைப் பேணுவதற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பாவனைகளை மட்டுமே தாங்கியுள்ளதாக நாம் கருதுகிறோம்,” என்று அறிவித்து, அவர் மக்ரோனின் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை விமர்சித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார், “அமெரிக்காவினால் மற்றும் அது வழிநடத்தும் இராணுவ கூட்டணியால், அதாவது நேட்டோவினால், திட்டமிட்டு முடுக்கி விடப்பட்ட பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன, இது குறித்து நாம் இங்கே பல முறை எச்சரிக்கை மணி ஒலித்துள்ளோம். இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு மசோதாவின் தர்க்கமும், பிரான்சின் தற்போதைய அனைத்து அரசியல் தலைவர்களின் சிந்தனையும் ட்ரம்பிசத்தின் அடியொற்றி பின்தொடர்கின்றன,” என்றார்.

மெலோன்சோனின் அமைப்பு, பிரெஞ்சு இராணுவத்தை ஆயுதமேந்த செய்வதில் தலைதெறிக்க முண்டியடித்து செல்கின்ற அதேவேளையில், மெலோன்சோனோ போர் அபாயத்தைக் குறைத்துக் காட்டுகிறார்.

வாஷிங்டன் வெறுமனே "பாவனை" “காட்டிக்" கொண்டிருக்கவில்லை. ஹிரோஷிமா மீதான அணுகுண்டு வீச்சின் நினைவாண்டில், ட்ரம்ப் வட கொரியாவுக்கு எதிராக "உலகம் ஒருபோதும் பார்த்திராத நெருப்பு கக்கும் சீற்றத்துடன்" அச்சுறுத்திக் கொண்டிருக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பெரும்பிரயத்தனத்துடன் அச்சுறுத்தல் மூலமும், சாத்தியமானால் முற்றுமுதலான போர் தொடங்குவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், தீவிரமடைந்துள்ள பொருளாதார போட்டி மற்றும் ஏகாதிபத்திய போர்களின் இந்த இருப்பத்தி ஐந்து ஆண்டுகள், உலக போருக்குப் பிந்தைய முதலாளித்துவ புவிசார் அரசியல் ஒழுங்கமைப்பின் ஓர் அரசியல்ரீதியிலான பொறிவுக்குச் சென்றுள்ளன.

20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை சமூக புரட்சி மற்றும் உலக போரை வெடிக்க செய்த, பூகோளமயப்பட்ட உற்பத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான அதே முரண்பாடுகள் மீண்டுமொருமுறை வெடிப்பார்ந்த மட்டங்களில் உள்ளன. வாஷிங்டன் அதன் போட்டியாளர்களின் அதிகரித்து வரும் பொருளாதார பலத்தை இராணுவ பலம் கொண்டு எதிர்கொள்ளும் முயற்சியில், அது ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனாவை அச்சுறுத்தி வருகிறது —இந்த போர்கள் மிகப் பெரியளவில் உயிரிழப்புகளையும், கிட்டத்தட்ட தவிர்க்கவியலாமல், அணுஆயுத பயன்பாட்டையும் உள்ளடக்கி உள்ளன. அல்லது, பிரிட்டனின் Economist இதழ் கடந்த மாதம் எழுதியவாறு, “இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத அளவில் தீவிரம் கொண்ட மோதல், மீண்டுமொருமுறை சாத்தியமாகும் போல் தோன்றுகின்றது. உலகமோ அதற்கு தயாராக இல்லை.”

வரவிருக்கும் போர் அபாயத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தில் —அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில்—தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கையூட்டுவதே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னிருக்கும் மத்திய பணியாகும். மக்ரோன் மற்றும் பிற நேட்டோ அரசு தலைவர்களுக்கு முன்னிறுத்த வேண்டிய கேள்வி இது தான்: அவர்கள் தயாரிப்பு செய்து வரும் போர்களின் விளைவுகள் என்னவாக இருக்கும்? 2015 இல் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறியதைப் போல, ரஷ்யாவுடன் "முழுமையான போர்" இப்போது ஓர் அபாயம் என்றால், ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பெரும் நகரங்களின் மீது எத்தனை அணுகுண்டுகள் வீசப்படும், எத்தனை பேர் உயிரிழப்பார்கள்?

இதற்கு பதிலாக, மெலோன்சோனோ ட்ரம்புடன் மக்ரோன் அணி சேர்ந்துள்ளதாக கூறி, அவரை தாக்குகிறார். உண்மையில் ட்ரம்புடன் மக்ரோன் அணி சேர்ந்திருப்பதை விட மிக அதிகமாக, மக்ரோனுடன் மெலோன்சோன் அணி சேர்ந்துள்ளார். மக்ரோன் அவரது வரவு-செலவு திட்டக்கணக்கு மசோதாவில் ரஷ்யா மற்றும் சீனா மீதான அமெரிக்க விமர்சனங்களை எதிரொலிப்பதுடன், பிரான்ஸ், நேட்டோவின் பாகமாக இருந்து, ரஷ்யா மற்றும் சீனாவைத் தாக்கலாம் என்பது ஒரு நிஜமான அபாயம் தான். ஆனால் மெலோன்சோனோ மிக நேரடியாக மற்றொரு தரப்பினருக்காக பேசுகிறார், அதாவது ஒரு வித்தியாசமான கொள்கையை எதிர்பார்த்து வரும் மக்ரோன் நிர்வாகம் உட்பட, பிரான்சின் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்காக பேசுகிறார்.

மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் உடன் நெருக்கமான உறவுகளையும், ஒரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையும் கோரும் மக்ரோனின் கோரிக்கைகள், ரஷ்யாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளுக்கான மக்ரோனின் அழைப்புகளையும், கடந்த மாதம் சீனாவுக்கான அவரது சுமூக பயணத்தையும் மற்றும் பேர்லின்-பாரீஸ் அச்சை சுற்றி ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான அவர் முயற்சியையும் எதிரொலிக்கிறது. இது, ஐரோப்பிய ஒன்றிய இராணுவ திட்டமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான இராணுவ கூட்டணியை "முறித்துவிடக்" கூடும் என்று நேட்டோ மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து கவலை தோய்ந்த அறிக்கைகளை வரவழைத்தது.

அல்லது, Corbière குறிப்பிடுவதைப் போல, “நாங்கள் நேட்டோவிலிருந்து வெளியேற விரும்புகிறோம், இப்போது, முன்னெப்போதையும் விட. ஏனென்றால் நாங்கள் அமெரிக்காவின் நலன்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் அந்த இராணுவ கூட்டணியில் அமெரிக்காதான் மேலாளுமை செலுத்துகிறது. உங்களுக்கே தெரியும், அவர்கள் இராணுவ செலவுக்கென 600 பில்லியன் டாலர் வரவு-செலவு திட்டக்கணக்கும், உலகெங்கிலும் 700 இராணுவ தளங்களையும் கொண்டுள்ளனர், மேலும் யதார்த்தத்தில் இராணுவ-தொழில்துறை கூட்டுத்தான் அமெரிக்க பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துகிறது.”

ஆனால் இவையெல்லாம் ஒரு போட்டி ஏகாதிபத்திய சக்தியின் பொறாமை நிலைப்பாட்டிலிருந்து வழங்கப்படும் சாதாரண விமர்சனங்கள் தான். LFI க்கு உள்ளிருக்கும் எல்லா அமைப்புகளும், பல தசாப்தங்களுக்கு முன்னரே, 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் கூட்டணி அமைத்து, மார்க்சிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நிராகரித்துவிட்டன. பல தசாப்தங்களாக, அவை இராணுவம், வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களுடான அவர்களது நெருக்கமான உறவுகளுடன் முன்பினும் அதிக நேரடியாக அவற்றின் ஸ்ராலினிச அல்லது குட்டி-முதலாளித்துவ வாய்சவுடால்களை ஏற்றிருந்தன — LFI விடயத்தில், பாதுகாப்பு ஒப்பந்ததாரரும் விமானத்துறையில் பல கோடி பில்லியனருமான சேர்ஜ் டாஸ்ஸோ (Serge Dassault) உடன் மெலோன்சோனின் நட்புறவும் இதில் உள்ளடங்கும்.

அத்தோடு, அமெரிக்க இராணுவ-தொழில்துறை கூட்டு மற்றும் அதன் பாரிய நிதி ஆதாரங்களை Corbière கண்டித்த அதே பத்திரிகையாளர் கூட்டத்தில், Lachaud, பிரெஞ்சு இராணுவத்திற்கு டாஸ்ஸோ இன் ரஃபால் போர்விமானங்களை வாங்குவதற்கான வெட்கமற்ற வேண்டுகோளை விடுத்தார், அதை அவர் "யூரோபைட்டர் போர்விமானத்தை விட சிறந்தது" என்றார்.

ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும், குறிப்பாக அமெரிக்காவில், தொழிலாளர்களிடையே போருக்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. மக்ரோன் அவரது இராணுவ கட்டமைப்புக்கு நிதி வழங்கும் திட்டங்களுக்காக, அடிப்படை சமூக உரிமைகளைத் தாக்குவதற்கு பிரான்சில் தொழிலாளர்களிடையே வேகமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த சமூக சக்திதான், சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர்-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான ICFI இன் சடரீதியிலான அடித்தளமாக உள்ளது. இதுபோன்றவொரு இயக்கத்தின் இன்றியமையா அரசியல் முன்நிபந்தனையாக இருப்பது, LFI ஆல் ஊக்குவிக்கப்படும் தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ கண்ணோட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும்.