ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Prime Minister Modi to tout pro-business record at World Economic Forum

இந்திய பிரதம மந்திரி மோடி உலக பொருளாதார அரங்கில் வணிக சார்பு சாதனை பற்றி பேசவிருக்கிறார்

By Kranti Kumara 
23 January 2018

இந்தியாவின் வணிக சார்பு பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) பிரதம மந்திரியும், இந்து-வகுப்புவாத ஆதரவாளருமான நரேந்திர மோடி, 2018 உலக பொருளாதார அரங்கில் (World Economic Forum-WEF) இன்று முக்கிய ஆரம்ப உரையாற்றவுள்ளார். 

இந்த வருடாந்திர அரங்கு, உலக பில்லியனர் தன்னலக்குழுக்கள், தலைமை நிறைவேற்று அதிகாரிகள், பெரு வர்த்தக சார்பு கொண்ட அரசாங்க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சுவிட்சர்லாந்திலுள்ள உல்லாச நகரமான டாவோஸில் வெள்ளியன்று ஒன்றுகூடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி உரையுடன் நிறைவடையவுள்ளது.

இவ்வாறு, குஜராத் மாநில முதலமைச்சராக 2002 இல் ஒரு முஸ்லீம் விரோத படுகொலைக்கு தலைமை வகித்து முதன்முதலாக ஒட்டுமொத்த இந்தியா மற்றும் உலகின் கவனத்திற்கு வந்தவரான மோடி மற்றும் சமீபத்திய மாதங்களில் வட கொரிய மக்களை நிர்மூலமாக்கி விடுவேன் என்று மீண்டும் மீண்டும் அச்சுறுத்திவந்த பாசிச மனநிலையிலுள்ள ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரம்ப் ஆகியோரின் உரைகளுடன் தான் WEF இன் கலந்தாய்வு விவாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

மோடி மற்றும் ட்ரம்ப் இடையேயான ஒரு சந்திப்பு இதுவரை பகிரங்கமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், இவ்விரு தலைவர்களும் டாவோஸ் நகரில் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இந்த பயணத்தை ஒழுங்கமைத்திருப்பர் என்பதே பெரும்பாலான செய்தி ஊடகங்களின் ஊகமாக உள்ளது. இருவரும் வெளிப்படையாகவே, வளர்ந்துவரும் இந்திய-அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை ஒரு “புதிய மட்டத்திற்கு” இட்டுச்செல்ல உறுதிபூண்டுள்ளனர்.

மோடியின் கீழ், சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளை முன்னிட்டு அதனை சுற்றிவளைக்கவும், மூலோபாய ரீதியாக தனிமைப்படுத்தவும் முனையும் வாஷிங்டனின் உந்துதலில் ஒரு உண்மையான முன்னணி அரசாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்கா பலமுறை அதன் “கடல்வழி போக்குவரத்து சுதந்திர” நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் சீனக் கடல் பகுதி குறித்த அமெரிக்காவின் பாதையை மோடி அரசாங்கம் பின்பற்றி வந்துள்ளதோடு, வட கொரியாவிற்கு எதிரான ட்ரம்பின் போர் வெறியையும் ஆதரித்தது, மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள முன்னணி அமெரிக்க நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உடனான அதன் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

இந்தியா தனது இராணுவத் துறைமுகங்களையும், விமானத் தளங்களையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்துள்ளதோடு, அதற்கு பதிலாக அதன் பிராந்திய அணுவாயுதம் தாங்கிய போட்டியாளரான பாகிஸ்தானுடன் பொறுப்பற்ற வகையில் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு ஆதரவாக ட்ரம்ப் நிர்வாகத்தை சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது, அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பு கூட்டணியுடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பும் சேர்ந்து, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலுமான போர் அபாயத்தை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியுள்ளது.

முதல் முறையாக உலக பொருளாதார அரங்கினை ஒரு இந்திய பிரதம மந்திரி தொடங்கி வைப்பதாக மோடியின் உரை இருக்கப் போவதுடன், 1997 க்கு பின்னர் இவ்வரங்கில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் இந்திய அரசாங்கத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆளும் உயரடுக்கினர் ஒன்றுகூடும் உலகின் மிகவும் மதிப்புமிக்க இந்த கூட்டத்தை தொடங்கிவைக்க மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது என்பது அவரது அமெரிக்க சார்பு மற்றும் வணிக சார்பு சாதனைக்கான ஒப்புதலாக இதை சரியாக புரிந்துகொண்டு இந்திய பெருவணிகமும், பெருநிறுவன கட்டுப்பாட்டு ஊடகங்களும் இது குறித்து ஆர்வமாக உள்ளன.

மோடி, 100 க்கும் மேற்பட்ட இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள், நிதியமைச்சர் அருண் ஜேட்லி உட்பட ஆறு மந்திரிசபை அமைச்சர்கள் ஆகியோரடங்கிய 129 பேர் கொண்ட ஒரு பெரும் பிரதிநிதித்துவக் குழுவுடன் சேர்ந்து இதில் பங்கேற்கிறார். மோடி உடனான நெருக்கமான கூட்டணியில், உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் செலவில் ஒரு பரந்தளவிலான வணிக சார்பு சட்டங்களை செயல்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளாக அருண் ஜேட்லி ஒரு இடைவிடாத உந்துதலை முன்னெடுத்துள்ளார். மோடி இரண்டு நாட்களுக்கு மட்டுமே சுவிட்சர்லாந்தில் இருப்பார் என்றபோதிலும், நிதி, வர்த்தகம், வெளி விவகாரங்கள், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்கள் சார்ந்த அவரது மந்திரிசபை சகாக்கள் அனைவரும் அங்கு தங்கியிருந்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு தொழில்துறையை ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

780 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் பங்கேற்கும் அமெரிக்கா, கிட்டத்தட்ட 270 பிரதிநிதிகளுடன் பங்கேற்கும் பிரிட்டிஷ், மற்றும் நிகழ்ச்சியை வழங்கும் நாடான சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்த நான்காவது பெரிய பிரதிநிதிகள் குழுவைக்   கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

மோடி அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித பற்றாக்குறையை குறைக்கும் பெயரில், பெரும் சமூக செலவின வெட்டுக்களை திணிக்கும் அதே வேளையில், தனியார்மயமாக்கல் மற்றும் மானிய வெட்டுக்கள் உட்பட சந்தை சார்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டுள்ளது.

அதே நேரத்தில் பிஜேபி, நீண்டகால வறுமை, வேலையின்மை மற்றும்  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு  போட்டிபோடும் அளவிலான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றினால் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை திசைதிருப்பும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக இந்து பேரினவாதத்தை தூண்டிவருகிறது. மோடி அரசாங்கம், நாட்டின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் திட்டமிட்டு இந்து மேலாதிக்கவாத சிந்தனையாளர்களை இருத்திவருகின்ற நிலையில், அதன் ஆட்சியை விமர்சிப்பவர்களை கூட “தேச விரோதிகளாக” கண்டனம் செய்கின்றனர்.

பிஜேபி இன் இந்து வலதுசாரி தளத்தை தூண்டிவிடும் ஒரு நடவடிக்கையாக மோடி கடந்த மார்ச் மாதம், முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையை தூண்டிவிட்டதற்கு பேர்போன, இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை ஒரு இந்து மகான் (பிரதான மதகுரு) என்று குறிப்பிட்டார். உடனடியாக அவர், ஏழை முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் (முன்னாள் தீண்டத்தகாதவர்கள்) வேலைவாய்ப்பு மற்றும் மலிவான புரதத்தை வழங்குகின்ற தொழிற்துறையான சட்டவிரோதமான கசாப்புக் கூடங்களுக்கு என்று அழைக்கப்படுபவற்றை இலக்குவைத்து ஒரு பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த நகர்வுகளால் துணிச்சல் பெற்று பிஜேபி உடன் இணைந்த இந்து தீவிரவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையாக தாக்குதல் நடத்தி கொலை செய்வது உட்பட தொடர்ச்சியான கடும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர்.

WEF இல் மோடி பங்கேற்பதன் முக்கிய நோக்கம், இந்தியாவை மலிவு உழைப்பிற்கு தயாராகவுள்ள ஒரு மூலஆதாரமாகவும், வணிக முதலீட்டிற்கான ஒரு சொர்க்கமாகவும் முன்வைக்கும் அவரது “இந்தியாவில் உற்பத்திசெய்வோம்” பிரச்சாரத்தை ஊக்குவிப்பதாகும். இந்தியாவில் சராசரியாக இருந்துவரும் தொழில்துறை ஊதியங்கள் சீனாவில் இருந்துவரும் ஒரு காலாண்டுக்கான ஊதியத் தொகையை விட அதிகமாக இல்லை என்று மோடி பலமுறை பெருமையடித்துக் கொண்டார். இது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் உட்பட, தொடர்ச்சியான அரசாங்கங்களால் பின்பற்றப்பட்டு வந்த பெருநிறுவன சார்பு மற்றும் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளினால் விளைந்தது. கடந்த வருடம், மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையின் 13 தொழிலாளர்கள் மீதான அப்பட்டமான ஜோடிப்பு வழக்கின் காரணமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை பிஜேபி மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுமே ஆதரித்தன என்பது, ஆபத்தான வேலை, குறைவூதியம் மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகள் ஆகியவற்றின் மீதான தொழிலாளர் எதிர்ப்பை நசுக்குவதில் இந்திய அரசாங்கம் தலையீடு செய்யும் என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இந்த டாவோஸ் பயணம், “வணிகம் செய்வதை எளிதாக்குவது” என்பதை மேம்படுத்த மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகழ்பாடும் ஒரு பெரும்திரள் கொண்ட விளம்பர பிரச்சாரத்துடன் இணைந்ததாக உள்ளது.

இந்த பயணத்திற்கு முன்னதாக, பிஜேபி அரசாங்கம், ஒற்றை-அடையாள சில்லறை விற்பனை துறையில் அரசாங்க ஒப்புதல் இல்லாமல் 100 சதவிகிதம் வெளிநாட்டு உரிமையை அனுமதிப்பது உட்பட பெரும் எண்ணிக்கையிலான புதிய பொருளாதார “சீர்திருத்தங்களை” அறிவித்ததோடு, ஒரு விரைவுபடுத்தப்பட்ட முதலீட்டுகளை மீண்டும் பெறும் (தனியார்மயமாக்கம்) பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, ஏர் இந்தியாவின் 49 சதவிகித பங்கினை உடைத்து விற்கவும் திட்டமிட்டுள்ளது.

மோடியின் டாவோஸ் பயணத்திற்கு முன்னதாக ஒரு ஊடக செய்தி வெளியீட்டில், இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஜய் கோகலே, “பெரியளவில் வணிகம் செய்ய இந்தியா திறந்தநிலையில் தயாராகவுள்ளது என்பதை முக்கிய செய்தியாக பிரதம மந்திரி தெரிவிப்பார். இந்தியாவிற்கு வந்து முதலீடு செய்யுமாறு உலகிற்கு தெரிவிக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்று அறிவித்தார்.

இதன் முடிவாக, ஜனவரி 22 அன்று இந்தியாவிற்கு மோடி திரும்பியவுடன், ஐபிஎம், ஐரோப்பிய ஏர்பஸ், ஜப்பானிய ஹிட்டாச்சி, பிரிட்டிஷ் பி.ஏ.இ. சிஸ்டம்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட 60 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு வட்டமேசை இரவு விருந்தளித்தார். இன்று, மோடி ஜெனரல் மோட்டார்ஸ், ராயல் டட்ச்சு ஷெல், நெஸ்லே, மற்றும் ஜே.பி.மோர்கன் போன்ற பிற இரக்கமற்ற பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திப்பார்.

மேலும் கோகலே, “உலகப் பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தியாக இந்தியாவின் பொருளாதாரம் இருக்க முடியும் என்பதே பிரதம மந்திரியின் செய்தியாக இருக்கும். எங்களுடைய வளர்ச்சியில் மற்றவர்கள் பங்கேற்கவும், அதே போல் மற்றவர்களின் வளர்ச்சியில் நாம் பங்கேற்கவும் வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

அரசாங்க செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, பயங்கரவாதத்திற்கும் மற்றும் இணைய அச்சுறுத்தல்களுக்கும் இன்னும் மிருகத்தனமான பதிலடியைக் கொடுக்க “உலகம்” முன்வரவேண்டுமெனவும் மோடி வலியுறுத்துவார். மோடி அரசாங்கத்தின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது, அதன் பரம எதிரியான பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் மற்றும் அதன் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரித்ததை நியாயப்படுத்தவும் மேற்கொண்டுவரும் அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாகிஸ்தான், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத கிளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் மோடி அரசாங்கம், சச்சரவுக்குரிய காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு ஊடாக எல்லை தாண்டிய குண்டுவீச்சில்  ஈடுபட இந்திய இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்து பாகிஸ்தான் உடனான இராணுவ பதட்டங்களை அதிகளவு முடுக்கிவிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல், இரு தரப்பினரும் அப்பாவி குடிமக்களைக் கொன்றதுடன், எல்லை தாண்டிய தாக்குதல்களில் எண்ணற்ற இராணுவ அதிகாரிகளையும் கொன்றுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் மூடிஸ் (Moody’s) போன்ற சர்வதேச மூலதன அமைப்புக்களின் அழுத்தத்தின் கீழ் பிஜேபி, மே 2014 இல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து பெருமளவு முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்ப்படுத்தியுள்ளது. இவை, பொருட்கள் மற்றும் சேவை வரியை (Goods and Services Tax-GST) அறிமுகப்படுத்துவது, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களை விகிதாச்சார ரீதியாக அல்லாமல் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிற்போக்கு வரியை சுமத்துவது; டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது; நீண்டகால தொழிலாளர் சட்டங்களை நீக்குவது; மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை பலவீனப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்தக் கொள்கைகள் இந்தியாவின் வறுமையில் வாடும் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் வாழ்க்கையை இன்னும் நம்பிக்கையற்றதாக்குகிறது. சுமார் 90 சதவிகித அனைத்து இந்திய தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன், அங்கு பெரும்பாலும் ஆகக்குறைந்த சம்பளமுறையை செயல்படுத்தப்படாதது மட்டுமல்லாது, அங்கு தொழில் தரங்களோ அல்லது நலன்களோ கூட முற்றாக இல்லை என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. மோடி அரசாங்கம், “வணிகத்தை எளிதாக செய்வதை” மேம்படுத்தியும், மற்றும் இராணுவ செலவினங்களை உயர்த்தியும் உள்ள அதே வேளையில், நாட்டின் 1.25 பில்லியன் மக்களில்  வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 800 மில்லியன் மக்களுக்கான சமூக செலவினங்களைக் குறைத்துவிட்டது.

சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் வெளிநாட்டு மூலதனத்திற்கு இன்னும் கூடுதலாக நாட்டை திறந்து வைக்கும்படி மோடியிடம் கோரிக்கை விடுக்கின்றன. இந்திய பிரதம மந்திரியோ அதையும் தாண்டி செயல்பட விருப்பம் கொண்டுள்ளதை தெளிவுபடுத்தி உள்ளதோடு, சமீபத்திய மாதங்களில் புது தில்லி “உலகின்” மீது கவனம் செலுத்திவருவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், மேலும், அவரது அரசாங்கம் நாட்டை “மாற்றும் சீர்திருத்தங்களை” மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.