ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Top US intelligence official declares “decision time” on North Korea coming closer

வட கொரியா குறித்து “முடிவெடுக்கவேண்டிய தருணம்” நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை உயர் அதிகாரி அறிவிக்கிறார்

By Peter Symonds 
14 February 2018

அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் நேற்று, வட கொரியாவுடனான மோதல் குறித்து ஏதாவதொரு அமைதியான தீர்வை எட்டுவதற்கான நேரம் குறைந்துகொண்டே வருவதாக எச்சரித்தார். அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம், அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒரு “சாத்தியமுள்ள இருப்பை” பியொங்யாங் கொண்டிருப்பதாகவும், அதேபோன்று இந்த வருடத்திலும் அதிகளவு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தும் என்றும் தெரிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க கண்டத்தை தாக்கும் திறன் கொண்ட அணுவாயுத ஏவுகணையை வட கொரியா கட்டமைப்பதைத் தடுக்க, இராணுவ தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் மேசை மீது தயாராக உள்ளதென மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. சிறிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடான அது அமெரிக்காவிற்கு எதிராக அணுவாயுதங்களை நிறுவப்போவதாக அச்சுறுத்துமானால், அது “ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கப்படும்” என்பது உள்ளிட்ட போர்வெறி கொண்ட எச்சரிக்கைகளை ட்ரம்ப்பே விடுத்தார்

மேலும் கோட்ஸ் குழுவிடம், வட கொரியா தனது உயிர்பிழைப்புக்கு அணுவாயுதங்கள் அவசியமென பலமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறியதுடன், அதன் தலைவர்கள் “பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை” எனவும் தெரிவிக்கிறார். “அதிகபட்ச அழுத்தத்தை” ஏற்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் நோக்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், அவர் இதையும் அறிவித்தார்: “இவ்விடயம் குறித்து நாம் என்ன விதத்தில் பதிலடி கொடுக்கவேண்டுமென்று முடிவெடுப்பதற்கான நேரம் இன்னும் நெருங்கிவிட்டது.”

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் தென் கொரியா உள்ளிட்ட ஆசிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்த குறிப்புகள், கடந்த வெள்ளியன்று குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி மூன் ஜே இன் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளியாகின. அவரது தென் கொரிய வருகைக்கு முன்பாக டோக்கியோவில் பேசுகையில், “வட கொரியா மீது கடுமையான மற்றும் மிக ஆக்கிரோஷமான பொருளாதார தடைகளை” அமெரிக்கா விரைவில் அறிவிக்கும் என்று கூறியதுடன், ஒலிம்பிக்ஸின் பெயரில் பதட்டங்களைத் தணிக்க வட கொரியா முயற்சி செய்வதாக பரிகசிக்கவும் செய்தார்.

பென்ஸ், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இன் சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ முன்னாள் தலைவர் கிம் யோங் நாம் ஆகிய வட கொரிய உயர்மட்ட அதிகாரிகளை வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். கிம் யோங் நாம், அத்துடன் பிற நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கான இரவு விருந்தில் கலந்துகொள்வதையும் தவிர்த்தார். மேலும், ஏகாதிபத்திய ஆணவத்தைக் காட்டும் விதமாக, தொடக்க விழாவில் வட-தென் கொரிய கூட்டணி தோன்றிய போது அவர் எழுந்து நிற்பதற்கும் மறுத்துவிட்டார்.

“விரைவில்” மூன் உடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தவேண்டுமென அவரது சகோதரரிடம் இருந்து வந்த செய்தியை கிம் யோ ஜோங் வெளியிட்டார். ஒரு ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தபடி, “அது நடப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவோம்” என மூன் பதிலிறுத்திருந்தார். தென் கொரிய பிரதம மந்திரி லீ நாக்-யோன், எந்தவொரு உச்சிமாநாட்டையும் நடத்துவதற்கு “சரியான நிலைமைகள்” தேவைப்படும் என்று ஊடகத்தில் தெரிவித்ததற்கு, ஞாயிறன்று வெளியான மூனின் விடையிறுப்பு எச்சரிக்கையம்சத்துடன் இருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டியது.

கிம் ஜோங் உன் இன் சகோதரியுடனான அவரது பேச்சுவார்த்தைகளில், இரு கொரியாக்களுக்கும் இடையிலான எந்தவிதமான சமரசத்திலும் அமெரிக்கா ஈடுபட வேண்டும் என்பதை மூன் தெளிவு படுத்தினார். “கொரிய உள் உறவுகளின் வளர்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையேயான பேச்சு வார்த்தைகளை மறுதொடக்கம் செய்வது முற்றிலும் அவசியமானது,” என்றும் கிம் யோ ஜோங்கிடம் அவர் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பம் மீதான ஆபத்தான நிலைப்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகள் என்பது, வட கொரியா, அதன் அணுவாயுதங்களை கைவிட வேண்டும், அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும், இவையனைத்திற்கும் மேலாக அதன் தொழில்துறை மற்றும் இராணுவ அமைப்பு மீதான இன்னும் கூடுதலான ஊடுருவும் பரிசோதனைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு பியொங்யாங் அடிபணிந்தால் மட்டுமே நடைபெறும் என்று அமெரிக்கா பலமுறை வலியுறுத்தியுள்ளது.

பரந்தளவிலான போர் எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டதன் மூலமாக கடந்த ஆண்டு தென் கொரிய ஜனாதிபதி பதவியை வென்ற மூன், பதட்டங்களை தணிப்பதற்கான மற்றும் ஒரு பேரழிவுகரமான மோதலினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக வட கொரியாவுக்கு ஆதரவான பேச்சுவார்த்தைகளை பகிரங்கமாகவே மேற்கொண்டார். அதே நேரத்தில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அல்லது அமெரிக்காவுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ள மற்றும் வட கொரியாவிற்கான எந்தவித சலுகைகளுக்கும் விரோதமான தென் கொரியாவில் நிறுவப்பட்டுள்ள சக்திவாய்ந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பிற்கு விரோதமானவராகவும் இல்லாமல் கவனமாக நடந்து கொள்கிறார்.

தென் கொரியாவில் ஒரு முன்னைய அதிஉயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defence – THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை முழுமையாக நிறுவுவது குறித்து வட கொரியாவும் சீனாவும் கண்டனங்களைத் தெரிவித்த போதும் கடந்த ஆண்டு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்திற்கு மூன் தலைவணங்கினார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் முக்கிய தேர்தல் வாக்குறுதியொன்றையும் மீறினார்.

மூன் உடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்த வட கொரியா முன்வருவது என்பது, அமெரிக்காவிலிருந்து தென் கொரியாவை பிரிப்பதற்குத்தான் தெளிவாக நோக்கம் கொண்டுள்ளது என்பதையே அது காட்டுகிறது. பென்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் இருவருமே, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே எந்தவித வேறுபாடுகளும் கிடையாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். “மக்கள் ஒரு பிளவை எதிர்நோக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்…. அங்கு பிளவிற்கு வாய்ப்பே இல்லை,” என்று மாட்டிஸ் கூறியதோடு, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

வாஷிங்டனுக்கு அவர் திரும்பிய பின்னர் Washington Post பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், பென்ஸ், வட கொரியாவுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா பரிசீலிக்கக்கூடும் என்பதை குறிப்பிட்டார். அவர், வட கொரியா அணுவாயுதங்களை ஒழிப்பது குறித்த அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது பெரும் சலுகைகள் எதையும் வழங்கும் வரை, வட கொரியா மீதான “அதிகபட்ச அழுத்தம்” குறித்த பிரச்சாரம் தொடரும் என்று வலியுறுத்தினார். “எனவே அதிகபட்ச அழுத்தப் பிரச்சாரம் இன்னும் தொடர்ந்து தீவிரமடையவுள்ளது,” என்றும், “மாறாக, நீங்கள் பேச விரும்பினால், நாங்களும் பேசுவோம்” என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், உண்மையான பேச்சுவார்த்தைகள் என்பது இன்னும் சாத்தியமற்றதே. ஜனாதிபதி மூன் உடனான அவரது சந்திப்புக்களை பென்ஸ், வட கொரியாவிற்கு தென் கொரியா எந்தவித சலுகைகளையும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே பயன்படுத்திக் கொண்டார். Washington Post தெரிவித்தது போல்: “வட கொரியா பொருளாதார அல்லது இராஜதந்திர நன்மைகள் எதையும் பெற முடியாது, இது வெறும் பேச்சுவார்த்தை தான் என்பதை வட கொரியர்களுக்கு அவர் தெளிவாக கூறிவிடுவார் என பென்ஸிடம் மூன் உறுதியளித்தார், மேலும், அணுவாயுத ஒழிப்பு குறித்த உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மட்டும் தான் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.”

ஒலிம்பிக்ஸ் க்கு பின்னர், வட கொரியாவுடனான போருக்கான ஒரு சிறிய மாறுபட்ட ஒத்திகையாக, கடந்த ஆண்டில் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் ஆதரவுடன் 300,000 க்கும் அதிகமான துருப்புகள் பங்கேற்ற பாரிய கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் முன்வருவர். குவாமில் அணுவாயுதம் ஏந்தும் B-52 மற்றும் B-2 குண்டுவீசிகளை நிலைநிறுத்தியும், முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்த கடல்சார் அதிரடிப்படை பிரிவுகள் (Marine Expeditionary Units) ஆசிய பசிபிக் பகுதியில் நிலைநிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டு, கிழக்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ சக்திகளை வலுப்படுத்தி வருகிறது.

நேற்றைய செனட் புலனாய்வுக் குழு விசாரணையில் பேசுகையில், சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பியோ, வட கொரிய ஆட்சி அணுவாயுதங்களை கட்டமைக்கும் அதன் முயற்சிகளில் “எந்தவித மூலோபாய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கான அறிகுறி எதுவும் அங்கு இல்லை” என்பதாகத் தெரிவித்தார். ஜனவரியில், அவர், அமெரிக்காவை சென்று தாக்கும் திறன்வாய்ந்த அணுவாயுத ஏவுகணைகளை கொண்டிராமல் “ஒருசில மாதங்கள்” மட்டுமே பியொங்யாங் இருந்ததாக அறிவித்தார்.

வட கொரியா மீதான தாக்குதல் நடத்துவதற்கான முன்னேறிய தயாரிப்புகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான கூடுதல் அறிகுறியாக போம்பியோவின் நேற்றைய குறிப்புகள் உள்ளன. அமெரிக்காவின் முன்கூட்டிய தாக்குதலுக்கு வட கொரியா எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை சி.ஐ.ஏ. மதிப்பிட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், “நாங்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம்,” என்றும் உளவுத்துறை சமூகமும், “அந்த பகுப்பாய்வு குறித்து நாம் கொண்டுள்ள உறுதியான மற்றும் உறுதியற்ற தன்மைகளை” அளவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்ட போது போம்பியோ, “இன்று மதியநேர முடிவு அமர்வின் போது உங்களுடன் அதை பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்” என்று மழுப்பலாக கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகம் எதை தீவிரமாகப் பரிசீலிக்கிறது என்றால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அணுவாயுத சக்திகளை உள்ளிழுத்து விரைவில் பேரழிவுகரமான போராக விரிவடைக்கூடிய இராணுவ ஆக்கிரமிப்பின் சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டல் நடவடிக்கையை ஆகும்.