ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Opposition party wins Sri Lankan local council elections

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கட்சி வெற்றி பெற்றது

By K. Ratnayake 
12 February 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கடந்த சனிக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகளையும், சபைகளையும் வென்றது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சுமார் 4.9 மில்லியன் வாக்குகளை பெற்று இப்போது இலங்கையில் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 239 சபைகளுக்கும் மேலாக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆகிய, தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பங்காளிகள் தனித்தனியே தேர்தல்களில் போட்டியிட்டன.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தான் பொறுப்பல்ல என்று சிறிசேன பாசாங்குத்தனமாக கூறிக்கொண்டு, ஆளும் கூட்டணியின் மேலாதிக்கக் கட்சியான ஐ.தே.க.யில் இருந்து தன்னை தூர விலக்கிக்கொள்ள முயன்றார்.

ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் (ஐ.ம.சு.கூ.) சேர்ந்து மொத்தமாக சுமார் 1.5 மில்லியன் வாக்குகளைப் பெற்று 10 சபைகளை வென்றுள்ளன. ஐ.தே.க. சுமார் 3.6 மில்லியன் வாக்குகளைப் பெற்று 41 சபைகளை வென்றுள்ளது. 2015 ஆகஸ்டில் நடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது ஐ.தே.க.வின் வாக்குகள் 1.4 மில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 34 சபைகளை வென்றுள்ளது -இது தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாகும். சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரை மில்லியன் வாக்குகளைப் பெற்றதுடன் எந்தவொரு சபையையும் வெல்லவில்லை. மற்ற குழுக்கள் மீதமுள்ள சபைகளை வென்றன.

சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் மத்திய அரசாங்கத்தை நேரடியாக பாதிக்காத அதேவேளை, ஆளும் கூட்டணி சம்பந்தமாக தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பின் மற்றொரு அடையாளமாகும்.

இராஜபக்ஷவின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகால ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் பரந்தளவிலான தாக்குதல்களாலும் மற்றும் 2009ல் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான மற்றும் இரத்தக்களரி போரினாலும் முற்றிலும் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தனால் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் இராஜபக்ஷ படுதோல்வி அடைந்தார்.

இராஜபக்ஷ 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.-ஐ.ம.சு.கூ.க்கு உத்தியோகபூர்வமாக தலைமை தாங்கிய போதிலும், அவர் அரசாங்கத்தில் சேரவில்லை. அதற்கு பதிலாக ஸ்ரீ.ல.சு.க.-ஐ.ம.சு.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதியைச் சூழ தனியாக கூடினர். பின்னர் அவர்கள் அரசாங்கத்தின் மீது பெருகி வந்த எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யை அமைத்தனர்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சமீபத்திய ஊள்ளூராட்சி சபைத் தேர்தலில் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் வெளியிடவில்லை. மாறாக அது அரசாங்கத்தை கண்டனம் செய்தது, சிங்கள வகுப்புவாதத்தை தூண்டிவிட்டது மற்றும் ஆளும் கூட்டணி தமிழ் கட்சிகளுக்கு நாட்டை "காட்டிக்கொடுத்துவிட்டதாக" குற்றம் கூறியது. உண்மையில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெற்ற வாக்குகள், அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பரந்த தட்டினர் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஊர்காவற்துறை, கொலன்னாவை மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு வேட்பாளர்களான நிறுத்தியிருந்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஜனவரி 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டதாவது: "தீவில் சமூக மற்றும் அரசியல் குமுறல் நிலைமைகளை அடிக்கோடிட்டுக் காட்டும், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் இடையே நிலவும் பரந்த அரசாங்க-விரோத அமைதியின்மைக்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றி ஒரு நாள் கூட கடந்து போகவில்லை. அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகளும், இந்த வளரும் இயக்கத்தை முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யவிடாமல் தடுத்து, அதை ஆட்சியில் இருப்பவர்களிடம் பயனற்ற வேண்டுகோளாக்கும் பக்கத்திற்கு திசை திருப்பிவிடுவதற்காக உறுதியுடன் செயற்படுகின்றன."

சனிக்கிழமையன்று நடந்த தேர்தல்களுக்கு முந்திய நாட்கள் மின்சாரம், இரயில், தபால் துறை, பெருந்தோட்டம் மற்றும் நீர் வழங்கல் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களாலும், அதேபோல் கல்வி தனியார்மயமாக்கப்படுதலுக்கு எதிராக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களாலும் குறிக்கப்பட்டன. இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் குழப்பியடிக்கப்பட்டாலும், அவை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் ஒரு பகுதியாக அரசாங்கத்தின் மீதான ஆழ்ந்த எதிர்ப்பை பிரதிபலிக்கின்றன.

சிறிசேன, வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதாகவும், ஜனநாயக உரிமைகளை மீட்பதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகவும் மற்றும் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கில் உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான சமூக நிலைமை சரிசெய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தே 2015 ஜனாதிபதித் தேர்தலில் பதவிக்கு வந்தார்,

ஊதியங்கள் மற்றும் மானியங்களை அதிகரிக்கும் சில ஆரம்ப ஒப்பனை முயற்சிகள் முடிந்த பின்னர், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பக்கம் திரும்பியதுடன் திட்டமிட்டபடி அதன் சிக்கன கோரிக்கைகளை அமுல்படுத்தியது. 2015ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதமாக இருக்கும் நிதி பற்றாக்குறையை கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி சமூக மானியங்களை வெட்டுவதன் மூலம் 2020ம் ஆண்டளவில் பாதியாக குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது ஸ்ரீ.ல.சு.க., ஐ.தே.க., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஜே.வி.பி. ​​ஆகிய ஒவ்வொரு ஸ்தாபகக் கட்சியும் ஒன்றையொன்று ஊழல் சம்பந்தமாக பீதியுடன் குற்றம்சாட்டிக்கொண்டன. இது, மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளுடன் இலங்கையை கட்டிப்போடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளமை போன்ற. அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து உழைக்கும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு வஞ்சத்தனமான முயற்சியாகும்.

ஊள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர், சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் எவ்வாறு தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதை கணக்கிடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​சிறிசேன ஐ.தே.க. மற்றும் இராஜபக்ஷவின் ஊழலுக்கு எதிரான போராளியாக தன்னைக் காட்டிக்கொண்டு அரசாங்கத்தில் இருந்து தன்னை ஒதுக்கிவைத்துக்கொள்ள முற்பட்டார். "மோசடிக்காரர்களுடன்" அரசாங்கத்தை தொடர மாட்டேன் என்றும் சிறிசேன அறிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.க.-ஐ.ம.சு.கூ. அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதைத் தொடர்ந்து, "அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்" நடக்கும் என சிறிசேன ஊடகங்களுக்கு கூறினார், ஆனால் விரிவாக கூறவில்லை. அவரது கட்சி தேர்தலில் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளதுடன் அரசியலமைப்பில் 19வது திருத்தத்தைத் தொடர்ந்து, சிறிசேன எந்தவொரு மாற்றத்தையும் செய்வதற்கு குறந்தளவு அதிகாரத்தையே கொண்டுள்ளார். தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.க்கு தாவிச் செல்வதற்கான சாத்தியத்தையும் அவர் எதிர்கொள்கிறார்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹசிம், மக்கள் "எங்களுக்கு ஆபத்து சமிக்ஞை காட்டியுள்ளனர்" என்று அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் "வெள்ளப் பெருக்குகள், வறட்சி மற்றும் நிலச் சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள்" மற்றும் இராஜபக்ஷ ஆட்சி விட்டுச் சென்ற "பெரும் கடன்கள்" ஆகியவற்றின் விளைவே இது என அவர் கூறிக்கொண்டார். ஐ.தே.க.வின் ஒரு பகுதியினர் இப்போது அதன் சொந்த உறுப்பினர்களுடனான ஒரு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் அது 106 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது.

ஒரு வலுவற்ற சிறிசேன-விக்கிரமசிங்க கூட்டணி தொடர்ந்தால் அல்லது ஐ.தே.க. அதன் சொந்த அரசாங்கத்தை உருவாக்கினாலும், நிர்வாகம் மேலும் வலதுபுறம் சென்று உழைக்கும் மக்கள் மீதான அதன் தாக்குதல்களை அதிகரிக்கும்.

இலங்கை மிகப் பெரிய வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு 2,9 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2019-2021 இல் 5 அமெரிக்க பில்லியன் டாலர்களையும் திருப்பிச் செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் அதன் சிக்கன உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், ஏற்றுமதி வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகின்றன. எந்த கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி ஆட்சியை உருவாக்கினாலும், உழைக்கும் மக்களுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கு அது சர்வாதிகார ஆட்சியின் வழிமுறையை நாடும்.

இராஜபக்ஷ தனது பங்கிற்கு பிரகடனம் செய்ததாவது: "இந்தத் தேர்தலானது செயற்பாடின்மை சம்பந்தமான அதிருப்தியில் உள்ளனர் மற்றும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றனர் என்பதன் தெளிவான அறிகுறியாகும்." நேற்று இராஜபக்ஷவின் நெருக்கமான கூட்டாளியான, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன ஒரு ஊடக மாநாட்டில் "இராஜிநாமா செய்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு தேர்வு இல்லை," என்றார்.

இராஜபக்ஷ, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லாத அதேவேளை, மக்களின் துயரத்தைப் பற்றி அவர் காட்டிய தோரணை முற்றிலும் பொய்யாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மில்லியன் கணக்கான மக்கள் பொதுத் தேர்தல்களில் அவருடைய பொலிஸ்-அரச வழிமுறைகளையும் வாழ்க்கை நிலைமைகளின் மீதான இரக்கமற்ற தாக்குதல்களையும் நிராகரித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளை சுமத்துவதற்கு அவர் மீண்டும் சர்வாதிகார வழிமுறைகளை பின்பற்றுவார்.

நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, இராஜபக்ஷவுக்கு வாக்களித்தமைக்காக பொது மக்களை குற்றம் சாட்டியுள்ளார். "இந்த வகையான குற்றவாளிகளை மக்கள் அங்கீகரித்து வளர்த்து விட்டால், அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இழிவான தாக்குதலை நிராகரிக்க வேண்டும். 2015ல் ஜே.வி.பி., ஐ.தே.க. உடனும் மற்றும் ஏனைய வலதுசாரி சக்திகளுடனும் கைகோர்த்து, இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் குண்டர் ஆட்சிக்கான ஒரே மாற்றாக சிறிசேனவை ஊக்குவித்தது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பெருமளவில் மதிப்பிழந்த பின்னரே ஜே.வி.பி. கூட்டணியில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றது. மேலும், ஜே.வி.பி முன்னர் இராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வெறுக்கப்பட்ட ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஆட்சிகளை ஆதரித்தது.

இந்த ஸ்தாபகக் கட்சிகளுக்கு எதிரான ஒரு உண்மையான சுயாதீனமான அரசியல் மாற்றீட்டை இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கிய ஒரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. இது, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான தேவையை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விளக்கியது.