ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංවිම සමිති නායකයන්ගේ වැඩ තහනමට එරෙහිව සේවක විරෝධය වැඩෙයි

இலங்கை மின்சார சபை சங்கத் தலைவர்களின் வேலை இடைநிறுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு அதிகரிக்கின்றது

By our correspondents 
2 March 2018

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டு முன்னணியின் இணை அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், தேசிய ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் அஜித் தேவபிரிய, இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ.ஏ.பி. பிரபாத், துணை தலைவர் பி.டி.எஸ். பிரேமலால் மற்றும் குழு உறுப்பினர்களான டி.எஸ். விஜயலத் மற்றும் பிரியந்த குணசேகர ஆகிய ஆறு உறுப்பினர்கள் பெப்பிரவரி 16 அன்று வேலை இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நிர்வாக மற்றும் துணைச் சேவைகளுக்கு இடையே நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளை அகற்ற வேண்டும் எனக் கோரி, ஜனவரி 17 அன்று கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தலைமையகத்தின் முன்னால் நடத்தப்பட்ட பிரச்சாரமே அவர்களது வேலை இடை நிறுத்தத்துக்கான காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அன்று பிரச்சாரத்தின் போது சட்டவிரோத மற்றும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும் தொழிற்சங்கத் தலைவர்கள் அவற்றை மறுக்கின்றனர்.

வேலை இடை நீக்கத்துக்கு எதிராகவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கக் கோரியும் கண்டி, திருகோணமலை, காலி உட்பட நகரங்களில் இ.மி.ச. அலுவலகங்களுக்கு முன்னால் நடத்தப்பட்ட பிரச்சாரங்களில் அநேகமான இ.மி.ச. ஊழியர்கள் பங்குபற்றினர். இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக சேவையில் இருத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். மார்ச் 14 அன்று வேலைநிறுத்தம் ஒன்றையும் கொழும்பு தலைமையகத்திற்கு முன்னால் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் உள்ளதாக இ.மி.ச. தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

மார்ச் 14 அன்றுடன் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு மாதமாகின்றது. தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்களுக்கு "நனவூட்டுவதன்" பெயரில் மாதம் பூராகவும் சுற்றி வளைத்து, இடை இடையே மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்குள் போராட்டத்தை வரையறுப்பதையும் காலம் தாழ்த்துவதையுமே செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ஊழியர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பைத் தணிப்பதற்கும் அரசாங்கத்துடன் மோதலை தவிர்ப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்.

தொழிற்சங்கத் தலைவர்களின் வேலை இடை நீக்கத்துக்கும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கும் எதிராகவும், அதே போல், தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்களுக்கும் விரோதமாக இ.மி.ச. ஊழியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு தீவிரமடைந்து வருகின்றது.

சிலாபத்தில் இ.மி.ச. சிகப்பு பட்டியல் எழுதும் இரு தற்காலிக தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டனம் செய்து, உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களிடம் பேசினர். "தொழிற்சங்கத் தலைவர்களின் வேலை இடை நீக்கத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். மார்ச் 14 அன்று நாங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். அரசாங்கம் சலுகை கொடுக்கும் என்று தொழிற்சங்கம் தான் பிரச்சாரத்தை ஒத்திவைத்தது. "

அரசாங்கத்தின் தாக்குதல்களைக் குறித்து பேசிய அவர்கள், "ஒரு ஆட்சியாளராலும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது, அதனால் எங்களைத் தாக்குகின்றனர். ஒரு நாளுக்கு நாம் எழுதுகின்ற சிவப்பு பட்டியல் எண்ணிக்கைபடி தான் எங்களுக்கு ஊதியம் கிடைக்கும். மின்சாரம் கட்டணங்களை செலுத்த மக்களிடம் பணம் இல்லாததால்தான் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது," எனக் கூறினர்.

சுமார் 40,000 மாதாந்த ஊதியம் பெற்றாலும் வாழ்வது கடினம் எனக் கூறிய அவர்கள், பிரதான கட்சிகள் ஒவ்வொன்றும் மக்களை ஏமாற்றுவதால், இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) வாக்களித்ததாக கூறினர். எனினும் ஜே.வி.பி. மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை என கூறிய அவர்கள், "இந்த அரசாங்கங்களை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு ஜே.வி.பி. தான் எப்பொழுதும் வேலை செய்து வருகின்றது" என்று குற்றம் சாட்டினர்.

நாட்டின் அரசியல் நிலைமை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ஒரு போக்குவரத்து தொழிலாளி கூறினார்: "நாட்டின் அரசியல் நிலைமை மிக நெருக்கடியில் உள்ளது. என்னை பொறுத்தவரையில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் எல்லாமே வெறுப்படைந்துள்ளது.” தொழிற்சங்க தலைவர்களின் வேலை இடை நிறுத்தத்தை எதிர்க்கின்ற அதேவேளை, அந்தந்த தரத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்துவது தொழிற்சங்கங்களே, என அவர் கூறினார்.

"உதவிச் சேவே என அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பனவை நூற்று 25 சதவிகித சம்பள அதிகரிப்பு கொடுத்து, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ​​நூற்றுக்கு 38 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஊழியர்களின் ஒற்றுமை உடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு தொழிற்சங்கங்களிடம் வேலைத் திட்டங்கள் ஏதும் இல்லை. தனியார்மயமாக்குவதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைப்பது அரசாங்கத்திற்கு நன்மையானது."

பொறியாளர்களுக்கு விபத்துகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் கிடைத்தாலும், சாரதிகள் உடப்ட உதவி ஊழியர்களுக்கு அப்படி கிடைப்பதில்லை என அவர் கூறினார். வாழ்க்கை செலவு உயர்வு பற்றி பேசுகையில், "என் மனைவியும் நானும் மின்சார சபையில் வேலை செய்கிறோம், ஆனால் எங்கள் சம்பளம் வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. ஆனால் நாங்கள் அதிக ஊதியம் பெறுவதாக அரசாங்கம் கூறுன்றது என அவர் கூறினார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அரசாங்கம் வேலை இடை நீக்கத்தை இரத்துச் செய்யுமா என்பது சந்தேகம் தான் என, கண்டி இ.மி.ச. தொழிலாளியான ஜோசப் கூறினார். "நாங்கள் போராட்டத்தில் சேர்ந்துள்ளோம். ஆனால், அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பற்றி நம்பிக்கை இல்லை. எங்களது அனுபவத்தின் படி இவர்கள் வேலை இழக்க நேரிடும். கடந்த காலத்தில் இருந்ததைவிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பது மிகவும் புரிகிறது." பிரியந்த என்ற மற்றொரு தொழிலாளி, வாழ்க்கைச் செலவு உயர்வது பற்றி அரசாங்கத்தை விமர்சித்தார். "நல்லாட்சியைப் பற்றி பேசிப் பயனில்லை. முழு நாடும் படுகுழியில் விழுந்துள்ளது. விலைவாசி ஒவ்வொரு மணி நேரமும் அதிகரிக்கின்றது. எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் பயனில்லை. 60,000 ரூபா அளவு சம்பளம் எடுத்தாலும், வீட்டுவசதி மற்றும் பிற கடன்களுக்கு வெட்டப்பட்ட பின்னர், கையில் கிடைக்கும் தொகையில் வாழ்வது கடினம். இந்த காலகட்டத்தில் வாழ்வது மிகவும் பிரச்சினையாக உள்ளது.”

வேலை இடை நீக்கத்துக்கு எதிராக காலியில் நடந்த பிரச்சாரத்தில், இ.மி.ச. ஊழியர்கள் முன் உரையாற்றிய இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜயலால், இலஞ்ச ஊழல்களுக்கு எதிராகப் போராடுபவர்களின் வேலையை இடை நீக்கம் செய்து, அவற்றுக்குப் பொறுப்பானவர்களை பாதுகாக்கின்றனர் என அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். அதே வேளை, தண்டனைகள் சிறைச்சாலைகள் மற்றும் மரணத்திற்கும் பயம் இல்லை என்றும், வெற்றியை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்பதகாவும் கூறி, வழமையான வாய்ச்சவடாலை விடுத்தார்.

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் ஜே.வி.பி. தலைமையில் இருப்பதோடு ஜயலால் ஜே.வி.பி. தொழிற்சங்க பிரிவின் முன்னணி தலைவர் ஆவார். ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கம் போலவே, ஜே.வி.பி. மற்றும் இலங்கை மின்சார ஊழியர் சங்கமும் தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பங்களித்தன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக கூச்சல் போட்ட ஜே.வி.பி. முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கீழ் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகள மூடி மறைக்கும் பிரதான பாத்திரத்தை ஆற்றுகின்றது. ஜயலால் உட்பட இலங்கை மின்சார சபை தொழிற்சங்க அதிகாரத்துவம், முகாமைத்துவத்தின் ஊழல் மற்றும் மோசடிகள் சம்பந்தமான பிரச்சாரங்களின் பக்கம் தொழிலாளர்களை திசைதிருப்பி, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான உண்மையான போராட்டத்தில் இருந்து அவர்களை தடம்புரளச் செய்கின்றது.

தேர்தலுக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் ஏற்பட்டுள்ள தீவிர அரசியல் ஸ்திரமின்மை பற்றி கவலை கொண்டுள்ளதனால், இ.மி.ச. அல்லது தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர் மத்தியில் எழும் போராட்டங்கள், முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் ஸ்திரமின்மைமயை மேலும் மேலும் ஆழப்படுத்தும் என்பதையிட்டு ஜே.வி.பி.யும் அதன் தொழிற்சங்கங்களும் பீதியில் உள்ளன.

இந்த கூட்டத்திலேயே, தொழிலாளர்கள் முன் உரையாற்றிய இ.மி.ச. தேசிய ஊழியர் சங்க கூட்டணியின் செயலாளர் பிரபாத், துறைமுகம், எயர் லங்கா, இரயில், தண்ணீர் வழங்கல், வங்கி மற்றும் எரிபொருள் போன்ற பிரதான நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் தமது போராட்டத்துடன் இணைந்துள்ளதாகவும் சகல தொழிற்சங்கங்களையும் அரசியல் கட்சிகளையும் அணிதிரட்டிக்கொண்ட பிரச்சாரத்திற்கு நடவடிக்கை எடுப்பதகாவும் அறிவித்தார். இப்போதே கூட தேசிய தொழிற்சங்க கூட்டணி மூலம் ஒரு முன்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கத்தை மண்டியிடச் செய்வதாகவும் செப்டெம்பர் 13 முதல் 20 வரையான வேலை நிறுத்தத்தின் காரணமாக அரசாங்கம் மண்டியிட நேர்ந்தது என்றும் கூறினார்.

பிரபாத்தின் கதை, ஒரு கட்டுக் கதையாகும். உண்மை என்னவென்றால், செப்டம்பர் வேலைநிறுத்தத்தின் போது அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு முன்பு மண்டியிட்டது இ.மி.ச. தொழிற்சங்கங்களே ஆகும். அப்போது அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், சம்பள கோரிக்கையை வெட்டிக் குறைப்பதற்கும், வேலை நிறுத்தம் செய்த நாட்களை ஊழியர்களின் மேலதிக விடுமுறைகளில் குறைத்துக்கொள்வதற்கும், அல்லது சம்பளம் அற்ற விடுமுறையாக கருதி சம்பளத்தை வெட்டுவதற்கும் மற்றும் இந்த உடன்படிக்கையை கடைசித் தீர்வாக ஏற்றுக்கொண்டு, அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இனி வர்க்கப் போராட்டங்களுக்கு செல்லப் போவதில்லை என்றும் இந்த தொழிற்சங்கங்கள் உடன்பாட்டுக்கு வந்தன.

ஏனைய தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு கொடுத்தன என அவர் கூறுவது, வேலை இடை நீக்கத்துக்கு எதிராக அவை கொடுத்த வெற்று அறிக்கைகளையே ஆகும். ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளை வெட்டுவதற்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு இந்த தொழிற்சங்கங்கள் முற்றிலும் எதிராக உள்ளன.

இ.மி.ச. தொழிற்சங்க தலைவர்கள் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டது, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் வளரும் நிலைமையின் கீழேயே ஆகும். இ.மி.ச. ஊழியர்களின் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்கம் அமுல்படுத்தும் பொருளாதார சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பகுதியினர் மத்தியில் கடந்த மாதங்களில் வெடித்தெழுந்த போராட்டங்களதும், சமூக எதிர்ப் புரட்சி தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலினதும் பாகமாகும்.

தொழிற்சங்க தலைவர்களின் வேலையை இடை நீக்கம் செய்து, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை கொடூரமாக அடக்கும், மிகவும் ஒடுக்குமுறையான பொலிஸ் ஆட்சியை உருவாக்குவதற்கான தயார் நிலையை அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ளது. அதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டும் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம், தொழிலாளர்களை கட்டுப்படுத்தி வைக்கும் வாக்குறுதியின் அடிப்படையில் அரசாங்கத்துடன் சமசரத்திற்கு செல்லும் தயார் நிலையை தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.