ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Behind the Facebook data scandal: The drive to censor the Internet

பேஸ்புக் தகவல் மோசடிக்கு பின்னால்: இணையத்தை தணிக்கை செய்வதற்கான உந்துதல்

Andre Damon
23 March 2018

முழுமையாக ஒரு வாரகால பெரும் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திகளில், முன்னாள் ட்ரம்ப் பிரச்சார தலைவர் ஸ்டீவ் பானனுடன் முன்னர் இணைந்திருந்த நிறுவனமான, தேர்தல்களுக்கான தகவல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் பேஸ்புக்கின் தொடர்புகளைச் சுற்றியுள்ள மோசடியை விட வேறெந்தவொரு தலைப்பும் அந்தளவுக்கு அமெரிக்க ஊடக அமைப்புகளில் நிரம்ப இருக்கவில்லை.

கடந்த ஐந்தில் மூன்று நாட்கள் இந்த செய்திகளுக்கு தலைமை வகித்த நியூயோர்க் டைம்ஸ், இவ்வாரத்தின் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இது தொடர்பான ஒரு முதல்-பக்க செய்தியையாவது கொண்டிருந்தது. இதர பிரதான பத்திரிகைகளும் அதே வழியைப் பின்தொடர்ந்து, #DeleteFacebook என்ற துரித தலைப்புடன், அந்த சமூக ஊடக நிறுவனத்தைக் கைவிடுமாறு பயனர்களை நோக்கி ஒரு பிரச்சாரத்தை ஊக்குவித்தன, ஆனால் காணக்கூடிய வகையில் மக்கள் இதை பின்தொடரவில்லை. இப்பிரச்சாரத்தின் பதிலிறுப்பாக, பேஸ்புக்கின் பங்கு விலை 11 சதவீதம் சரிந்து, அந்நிறுவனத்தின் சந்தை மூலதன திரட்சியிலிருந்து 50 பில்லியன் டாலர் அழிக்கப்பட்டது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் உருவப்பட்டிருப்பது தீவிரமாக தகவல் பாதுகாப்பு கவலைகளை உயர்த்துகிறது தான். ஆனால், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் கார்டியனின் ஒருமித்த செய்தி வெளியீடுகளால் தூண்டி விடப்பட்டுள்ள ஊடக பிரச்சாரப்புயல் தொலைதூரத்திற்கு இருண்ட மற்றும் இன்னும் அதிக கொடிய உத்தேசங்களைக் கொண்டுள்ளது. உளவுத்துறை முகமைகள் மற்றும் காங்கிரஸில் உள்ள முன்னணி ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டு வரும் ஊடகங்கள், தேர்தல்களுக்கான தகவல் மோசடி என்ற மூடிமறைப்பைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய அந்த சமூக வலைத் தளத்தில் நிலவும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான சூழலை உருவாக்க முனைந்து வருகின்றன.

முதலாளித்துவ தேர்தல் பிரச்சாரங்களின் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், பாரிய தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் நீண்டகாலமாகவே நடைமுறையில் இருந்து வந்துள்ளன. 2012 இல், ஒபாமாவின் மறுதேர்வு பிரச்சாரம் பேஸ்புக் பயனர்களிடையே ஓர் பயன்பாட்டை (app) நிறுவுமாறு செய்து அதன் மூலமாக பயனர்களின் ஒட்டுமொத்த தொடர்பு பட்டியலை, மொத்தம் 190 மில்லியன் நபர்களின் விபரங்களை உருவி, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா செய்ததைப் போலவே இன்றியமையாத விதத்தில் இதையே தான் செய்தது. அதேநேரத்தில், இந்த நடைமுறை பரவலாக செய்திகளில் கொண்டு வரப்படவே இல்லை என்பது மட்டுமல்ல, மாறாக அப்பிரச்சாரத்தின் புதிய மற்றும் தொலைநோக்கு சிந்தனைக்கு இதுவொரு முன்னுதாரணம் என்று பிரதான செய்தி நிறுவனங்களால் பாராட்டப்பட்டது.

அனைத்திற்கும் மேலாக, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் பேஸ்புக் தகவல் களஞ்சியத்தை அணுக முடிந்தது என்பது ஒருபுறம் இருக்க, ட்ரம்ப் பிரச்சாரமோ அந்த தகவல்களைப் பயன்படுத்தவில்லை, ஏனென்றால் குடியரசுக் கட்சியின் தேசிய குழுவினது அதை விட பெரிய, அதை விட விரிவான, அதை விட துல்லியமான தகவல் விபரங்களை ஏற்கனவே அது வைத்திருந்தது.

நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டு, முன்பினும் பெரும் செல்வ வளத்தில் திளைக்கின்ற பில்லியனிய நன்கொடையாளர்களால் பாதுகாக்கப்பட்ட, நவீன முதலாளித்துவ தேர்தல் பிரச்சாரங்கள் வாக்காளர்களின் அரசியல் பார்வைகள் மீது செல்வாக்கு செலுத்தி அவற்றை வடிவமைக்கும் நோக்கில், தனிநபர்களின் தகவல்களை துருவி எடுத்து, அளவிட்டு, பகுத்தாராய்வதற்காக, நூற்றுக் கணக்கான, அல்லது ஆயிரக் கணக்கிலும் கூட, பணியாளர்களை நியமிக்கிறது, இவர்களில் பலர் நவீன கணினி விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர பட்டங்களைப் பெற்றவர்களாக இருப்பர்.

இத்தகைய நடவடிக்கைகள், 2016 ஜனாதிபதி தேர்தலில் "ரஷ்யர்களின்" “தலையீடு" என்று குற்றஞ்சாட்டப்படும் நடவடிக்கையின் அளவையும் பாரியளவில் மிஞ்சிவிடுகின்றன, செனட் உளவுத்துறை கமிட்டிக்கு பேஸ்புக் வழங்கிய ஓர் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் சுமார் 100,000 டாலர் மதிப்பிலான பேஸ்புக் விளம்பரங்கள் வாங்கப்பட்டதும் இந்நடவடிக்கைகளில் உள்ளடங்கி இருந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா சிறியளவில் பாத்திரம் வகித்திருந்தாலும் கூட, பயனர்கள் "பேஸ்புக் கணக்கை அழிக்குமாறு" பத்திரிகைகளில் நடத்தப்படும் பாரிய பிரச்சாரம் எதை காட்டுகிறது?

இப்பிரச்சாரத்தின் அடியில் உள்ள நிஜமான பிரச்சினைகளை, புதன்கிழமை முதல் பக்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில் காண முடிகிறது. “விரக்தி அடைந்து, ஓக்லஹோமா ஆசிரியர்கள் அடுத்து வெளிநடப்பு செய்யலாம்,” என்ற தலைப்பில், மேற்கு வேர்ஜினியாவில் தொடங்கிய கல்வியாளர்களின் வேலைநிறுத்த இயக்கம் ஓக்லஹோமா, அரிசோனா, மற்றும் பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயமிருப்பதை அது எச்சரித்தது.

“பல பேஸ்புக் குழுக்களும்" “வெளியேற முனைந்து" உள்ளன என்று குறிப்பிட்ட அக்கட்டுரை, "சாமானிய ஆசிரியர்கள்" ஆசிரியர் தொழிற்சங்க கட்டமைப்புக்கு வெளியே போராட்டத்தை ஒழுங்கமைக்க சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்தியதாக குறிப்பிட்டது.

பேஸ்புக்கின் தகவல் ஏய்ப்பு தொடர்பான ஊடகப் பிரச்சார புயலின் நிஜமான இலக்கில் இருப்பது, தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியாகும். இன்னும் அதிகமாக வெளிப்படையான தணிக்கை முறைகளை அறிமுகப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதே இத்தகைய பத்திரிகை பிரச்சாரங்களின் நோக்கமாகும்.

பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க்கும் மற்றும் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி செர்ல் சாண்ட்பேர்க்கும், இக்குற்றச்சாட்டுக்களுக்கு விடையிறுத்து அடுத்தடுத்த பேட்டிகளில், அவர்களின் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, அரசியல் விளம்பரங்களை விலைக்கு வாங்குவதை —பேஸ்புக்கில் பரந்த வாசகர்களை ஈர்ப்பதற்கு இதுவே சுதந்திர செய்தி நிறுவனங்களுக்கு திறந்திருக்கும் ஒருசில வழிகளில் ஒன்றாக உள்ள நிலையில்— இதை கடுமையாக குறைத்துக் கொள்வதன் மூலமாக அமெரிக்க அரசியலில் "வெளிநாட்டு தலையீட்டை" இலக்கு வைக்க, காங்கிரஸ் மூலமாக அதன் வழியில் செயல்படுவதற்கான ஒரு சட்டமசோதாவை பலமாக ஆமோதித்தனர்.

“நாங்கள் நெறிமுறைகளைக் கடைபிடிக்க காத்திருக்கிறோம். நாங்கள் உலகெங்கிலுமான சட்டவல்லுனர்களுடன் இணைந்து செயலாற்றுவோம்,” என்று சாண்ட்பேர்க் CNBC க்கு தெரிவித்தார். “ரஷ்யர்களால்" விலைக்கு வாங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் பேஸ்புக் விளம்பரங்கள் போன்றதை குறி வைத்து, CNN உடன் உரையாற்றிய சக்கர்பேர்க் கூறுகையில், அவர் நெறிமுறைகளை "காண விரும்புவதாக" தெரிவித்தார்.

சக்கர்பேர்க் அவரது CNN பேட்டியில், “பிளவுகளை விதைக்க முயலுபவர்களின்" முயற்சிகளை எதிர்க்க பேஸ்புக்கின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு சூளுரைத்தார். நிறுவனம் "தேடுவதற்கும் கண்காணிப்பதற்கும் இப்போது என்ன செய்து வருகிறதோ அதைவிட அதிகமாக செயற்கை அறிவுசார் கருவிகளைப் பயன்படுத்தியும், பின்தொடர்ந்தும் சிறப்பாக செயலாற்றும்,” என்றார். நிறுவனத்தின் மீது அரசின் கூடுதல் நெறிமுறைகளுக்கு அவர் ஒத்துழைக்க விரும்புவதாக கூறினார், அதாவது, பேஸ்புக்கை அரசு மற்றும் அதன் உளவுத்துறை முகமைகளுடன் இன்னும் அதிகமாக இணைத்துக் கொள்வதாகும்.

பின்னர் அவர் கூறுகையில், பேஸ்புக்கில் இப்போது "15,000 பேர் கண்காணிப்பு மற்றும் தகவல் மீளாய்வில் செயல்படுகின்றனர்,” இந்தாண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 20,000 ஆக உயர்த்தப்படும் என்று கூறுமளவுக்கு சென்றார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் அந்நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 25,000 ஆக இருந்ததை அடிப்படையாக கொண்டு பார்த்தால், அந்நிறுவனத்தின் பெரும்பாலான பணியாளர்கள் தகவல்களை மீளாய்வு மற்றும் தணிக்கை செய்யவே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதையே இந்த வியக்க வைக்கும் ஒப்புதல் அர்த்தப்படுத்துகிறது. பேஸ்புக், உலகைத் தெரிந்து கொள்வதற்கும் தகவல் பரிமாறுவதற்கும் பயனர்களுக்கு உதவுவதற்காக அர்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதிலிருந்து, பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் தணிக்கைமுறைக்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த ஊடகம் உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளத்தின் மீது பாரிய தணிக்கையை இன்னும் கூடுதலாக நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் சூழலை உருவாக்க வேலை செய்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் போன்ற சுதந்திரமான செய்தி நிறுவனங்களைத் தணிக்கை செய்யும் நோக்கில் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற "நம்பகமான" செய்தி ஆதாரங்களை ஊக்குவிக்கும் நோக்கில், இவ்வாரம் கூகுள் அறிவித்த "செய்தி முன்னெடுப்பு" அறிவிப்புடன் இந்த பிரச்சாரம் சேர்ந்துள்ளது. இந்த அறிவிப்பானது, தேடுபொறி மூலமாக இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்களுக்கு வருபவர்களைப் பாரியளவில் குறைத்துள்ள, கடந்த ஏப்ரலில் கூகுளின் தேடுபொறி மென்பொருள் வழிமுறையில் செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடங்கி, நடவடிக்கைகளின் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.

தங்களின் வேலைகள், சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளைப் பாதுகாக்க போராட்டத்தினுள் நுழையும் தொழிலாளர்கள் தணிக்கைக்கான இந்த முனைவு எதற்காக செய்யப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்: இது அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட அவர்களின் கருத்து சுதந்திரம் பிழைத்திருப்பதற்கு ஓர் அச்சுறுத்தல் என்பது மட்டுமல்ல, மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடியிலிருந்து உடைத்துக் கொள்ள அவர்களின் சுய-ஒழுங்கமைப்பு மற்றும் போராட்ட முயற்சியை நசுக்குவதற்காகவும் ஆகும்.

இணைய தணிக்கைக்கு எதிரான இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறும், அதன் பிரச்சாரத்தில் இணையுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தணிக்கையை நோக்கி அதிகரித்து வரும் முனைவை அம்பலப்படுத்தவும், எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், உலக சோசலிச வலைத் தளமும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் அமெரிக்கா எங்கிலும் "இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்" என்ற தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது மற்றும் ஏப்ரல் 22 இல் "வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டமும்" என்ற கூட்டத்தையும் நடத்துகிறது. இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், இவற்றைக் குறித்து சாத்தியமான அளவுக்கு பரவலாக எடுத்துச் செல்லுமாறும், உங்கள் பகுதியில் ஒரு கூட்டத்தை ஒழுங்கமைக்க WSWS தொடர்பு கொள்ளுமாறும் நாம் நமது வாசகர்களை வலியுறுத்துகிறோம்.