ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The CIA takeover of the Democratic Party

ஜனநாயககக் கட்சியை சிஐஏ கையகப்படுத்துகிறது

Patrick Martin
13 March 2018

உலக சோசலிச வலைத் தளம் கடந்த வாரம் பிரசுரித்த மூன்று பாக தொடர் கட்டுரையில், முன்னொருபோதும் இல்லாதளவில் உளவுத்துறை மற்றும் இராணுவ செயல்பாட்டாளர்கள் ஜனநாயகக் கட்சிக்குள் உள்நுழைவதை ஆவணப்படுத்தியது. ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவால் 2018 க்கான அதன் இலக்குகளாக அடையாளம் காணப்பட்ட 102 மாவட்டங்களில் 50 க்கும் அதிகமானவற்றில் அதுபோன்ற இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிற்க விண்ணப்பித்துள்ளனர். ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக ஒரு மாற்றம் ஏற்பட்டு தற்போது பதவியிலிருக்கும் குடியரசு எம்.பி. தாவினால் மற்றும் காலியாக உள்ள ஆசனங்களும் இதில் உள்ளடங்கும்.

பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை வென்றெடுக்க அவசியமான மொத்தம் 24 ஆசனங்களை ஜனநாயகக் கட்சியால் நவம்பர் 6 இல் பெற முடிந்தால், முன்னாள் சிஐஏ முகவர்களும், இராணுவ தளபதிகள், அரசுத்துறை அதிகாரிகளும் வெற்றியின் எல்லையை வழங்கி, காங்கிரஸில் அதிகார சமநிலையைக் கைப்பற்றுவார்கள். சட்டமன்றத்தில் இந்தளவுக்கு இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பிரதிநிதிகள் இருப்பது, அமெரிக்க வரலாற்றிலேயே முன்பில்லாத ஒரு நிலைமையாகும்.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஹரி ட்ரூமேன் நிர்வாகத்தின் கீழ் 1947 இல் சிஐஏ ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, உளவுபார்ப்பு, ஊடுருவல், அரசியல் ஆத்திரமூட்டல், படுகொலை என அதன் வெளிநாடுகள் சார்ந்த திட்ட நடவடிக்கைகளை அது அமெரிக்காவுக்குள் நடத்துவதற்கு சட்டரீதியில் தடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உதட்டளவில் உத்தியோகபூர்வமாக உச்சரிக்கப்பட்டிருந்தன என்றாலும் நடைமுறையில் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

வாட்டர்கேட் நெருக்கடியை அடுத்தும் மற்றும் நிர்பந்திக்கப்பட்டு ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் இராஜினாமா செய்ததற்கு பின்னரும், பத்திரிகையாளர் செமோர் ஹெர்ஸ் முதன்முதலில், டிசம்பர் 22, 1974 இல் நியூ யோர்க் டைம்ஸ் க்கான ஒரு புலனாய்வு அறிக்கையில், சிஐஏ இன் உள்நாட்டு உளவுபார்ப்பு குறித்து பட்டவர்த்தனமான அம்பலப்படுத்தலைப் பிரசுரித்தார். இந்த அறிக்கை, சேதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வெள்ளை மாளிகையின் ஒரு முயற்சியாக, ரோக்கிஃபெல்லெர் (Rockefeller) கமிஷனையும், செனட்டர் பிரான்க் சர்ச் மற்றும் பிரதிநிதி ஓடிஸ் பைக்கின் பெயரிலேயே செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் நியமன குழுக்களை (அவர்கள் இவற்றின் தலைவர்களாவர்) அமைக்க செய்தது, இவை விளக்கவுரை கோரும் விசாரணைகளை நடத்தியதுடன், CIA, FBI மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) குற்றங்களை விசாரித்து, அம்பலப்படுத்துவதற்காக தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டன.

சர்ச் கமிட்டி குறிப்பாக பெடல் காஸ்ட்ரோ, காங்கோவில் பாட்ரிஸ் லூமும்பா, சிலியில் ஜெனரல் ரெனே ஷினைடர் மற்றும் இவர்களைப் போன்ற இன்னும் பல வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக சிஐஏ படுகொலை திட்டங்களை அம்பலப்படுத்திக் காட்டியது. இன்னும் பல கொடூரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன: MK-Ultra, இதில் சிஐஏ கதைகளை இட்டுக்கட்டி எதிர்ப்பாளர்களை அவமானப்படுத்த பத்திரிகையாளர்களை நியமித்தது; ஆபரேஷன் Chaos, இது போர்-எதிர்ப்பு இயக்கத்தை உளவுபார்த்து தொந்தரவுபடுத்தும் ஒரு முயற்சியாக இருந்தது: ஆபரேஷன் Shamrock, இதன் கீழ் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தேசிய பாதுகாப்பு முகமையுடன் (NSA) தகவல்களைப் பரிமாறின.

சர்ச் மற்றும் பைக் குழுவின் அம்பலப்படுத்தல்களில் மட்டுப்படுத்தல்கள் இருந்தாலும், அவை படுமோசமான அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தன. சிஐஏ மற்றும் அதனுடன் சேர்ந்திருந்த பென்டகனின் உளவுத்துறை அமைப்புகளும் மற்றும் NSA உம் அரசியல் தொழுநோய்களாக மாறியிருந்தன என்பதோடு, ஜனநாயகக் உரிமைகளின் எதிரிகளாக சாடப்பட்டன. குறிப்பாக சிஐஏ பரவலாக "படுகொலை ஒருங்கிணைப்பாளராக" பார்க்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில், டஜன் கணக்கான "முன்னாள்" இராணுவ-உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் தேர்தல் அரசியலில் பகிரங்கமாக பங்கெடுப்பது குறித்தோ, அல்லது இரண்டு பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான கட்சிகளால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள், நியமிக்கப்படுவார்கள் என்றோ சிந்திக்கவும் முடியாததாய் இருந்தன. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசு கட்சியினரும், குறைந்தபட்சம் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவேனும், அந்த உளவுத்துறை எந்திரத்திடம் இருந்து தங்களைத் தூர நிறுத்திக் கொள்ள முனைந்தனர், அதேவேளையில் வேர்ஜினியாவின் லாங்லேயில் கிடைத்த ஆவணங்களைப் பிரசுரிக்க அது இனி அமெரிக்க பத்திரிகையாளர்களை நியமிக்காது அல்லது நிதி வழங்காது என்று சிஐஏ பகிரங்கமாக அறிவித்தது. 1980 களில் கூட, ரீகன் நிர்வாகத்தின் சிஐஏ இயக்குனர் வில்லியம் கசே இன் (William Casey) சட்டவிரோத செயல்பாடுகளது அம்பலப்படுத்தல் ஈரான்-கான்ட்ரா மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தது.

காலம் எவ்வளவு மாறிவிட்டது. உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து தொடங்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதன் பிரதான செயல்பாடுகளில் ஒன்று, அமெரிக்க உளவுத்துறை எந்திரத்திற்கு மறுவாழ்வு கொடுப்பதாகவும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்க மக்களின் பாதுகாவலனாக கூறி அதற்கு ஒரு மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதாகவும் இருந்துள்ளது.

இதன் அர்த்தம், ஒசாமா பின் லேடன் மற்றும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் மற்றும் சிஐஏ க்கும் இடையே நன்கறியப்பட்ட தொடர்புகளைக் கைவிடுவதாகும், சிஐஏ தான் 1979 இல் இருந்து 1989 வரையில் ஆப்கானிஸ்தானில் தொடுக்கப்பட்ட சோவியத்-எதிர்ப்பு கொரில்லா போருக்காக அவர்களை நியமித்தது, அத்துடன் 9/11 தாக்குதல்களில்களுக்கு உதவுவதிலேயே கூட அமெரிக்க உளவுத்துறை முகமைகள் வகித்த பாத்திரம் இன்னும் விளங்கப்படுத்தப்படாமல் உள்ளது.

முடிவில்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன், அமெரிக்க உளவாளிகள் மற்றும் படுகொலையாளர்களை பெருமைப்படுத்தும் திரைப்படங்களுடன் (24, Homeland, Zero Dark Thirty, இதர பிற), ஊடக பிரச்சார பிரவாகத்தால் ஆதரிக்கப்பட்டு, கடந்த 15 ஆண்டுகள், சிஐஏ மற்றும் பிற உளவுத்துறை முகமைகளின் ஒரு பாரிய விரிவாக்கத்தைக் கண்டுள்ளன.

அமெரிக்க ஊடகங்கள் இந்த முயற்சிக்காக நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் "பாரிய பேரழிவு ஆயுதங்கள்" குறித்த தமது அறிக்கைகளுடன், நியூ யோர்க் டைம்ஸின் Judith Miller, டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பிரதான தொலைக்காட்சி வலையமைப்புகளில் "உடனுக்குடன்" உளவுத்துறையுடன் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களின் மிகவும் ஒரே மிகவும் இழிவார்ந்த உருவாக உள்ளார். ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டரின் சகோதரரும், சர்வதேச வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் நிர்வாகியின் மகனுமான ஜேம்ஸ் பென்னட்டை மிக சமீபத்தில், டைம்ஸ் அதன் தலையங்க பக்க பதிப்பாசிரியராக நியமித்துள்ளது. இந்த சர்வதேச வளர்ச்சி ஆணையமானது, மத்திய உளவுத்துறை முகமையின் நடவடிக்கைகளுக்கு ஒரு முகப்பாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2016 அமெரிக்க தேர்தல்களில் ரஷ்ய தலையீடு இருந்ததாக குற்றஞ்சாட்டும் ஊடக பிரச்சாரம், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கைப்பாவையாக தன்னையறியாமல் செயல்படுகின்ற அல்லது நனவுபூர்வமாக முகவர்களாக உள்ள பத்திரிகையாளர்களுக்கு முற்றிலும் CIA, NSA மற்றும் FBI இன் கைப்பிரதிகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் உள்ளது. தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கு பெரும் சம்பளம் வாங்கும் "வல்லுனர்களாக" மற்றும் "பகுப்பாய்வாளர்களாக" சேவையாற்ற உயர்மட்ட சிஐஏ மற்றும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதும் இதில் சேர்கிறது.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான மற்றும் ஜனநாயகக் உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள், அதிதீவிர வலது மற்றும் வெள்ளையின மேலாதிக்க குழுங்களுடன் அவரின் அணிசேர்க்கை, மருத்துவ உதவி மற்றும் உணவு வில்லைகள் போன்ற சமூக திட்டங்கள் மீதான அவர் தாக்குதல்கள், அணுஆயுத போருக்கான அவரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவவாதம் என முக்கியமான இவற்றை புறக்கணித்துவிட்டு, ஜனநாயகக் கட்சி ட்ரம்புக்கு எதிராக அதன் எதிர்ப்பை ரஷ்ய தலையீடு என்ற போலி குற்றச்சாட்டுக்களின் மீது மையப்படுத்தி உள்ள அதேவேளையில், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் திட்டநிரலையும் தழுவி உள்ளது, அத்துடன் அதன் பிரதான அரசியல் குரலாக மாறுவதற்கும் முயன்று வருகிறது.

இந்த நிகழ்வுபோக்கு பராக் ஒபாமா நிர்வாகத்தின் போக்கிலும் சிறப்பாக நடந்திருந்தது, அது வெளிநாடுகளிலும் மற்றும் அமெரிக்காவுக்கு உள்ளேயும் உளவுத்துறை முகமைகளின் பல்வேறு நடவடிக்கைகளை அங்கீகரித்து விரிவாக்கியது. ஒபாமா அவருக்கு அடுத்து வழிமொழிந்த ஹிலாரி கிளிண்டன், அடுத்த தலைமை தளபதியாக அவரின் கடுமையை ஆர்ப்பரித்தும், சிரியாவிலும் சரி உக்ரேனிலும் சரி ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்த சூளுரைத்தும், பகிரங்கமாகவே பென்டகன் மற்றும் சிஐஏ இன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளராக போட்டியிட்டார்.

சிரியாவில் அதன் நடவடிக்கைகளுக்கு தொந்தரவுபடுத்தியதன் மீதான சீற்றத்தின் காரணமாக சிஐஏ, ட்ரம்புக்கு எதிராக ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது, அவ்விதத்தில் அது அப்பிரச்சாரத்தை வெற்றிகரமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை மாற்ற நிர்பந்திக்க பயன்படுத்துகிறது. நியூ யோர்க் டைம்ஸின் Nicholas Kristof மற்றும் Roger Cohen, வாஷிங்டன் போஸ்டின் ஒட்டுமொத்த பதிப்பாசிரியர் குழு, தொலைக்காட்சி வலையமைப்புகளில் பெரும்பாலானவை என ஊடக ஆதரவாளர்களின் ஒரு கூட்டம், மக்கள் கருத்தைக் குழப்புவதற்காகவும் மற்றும் சிரியாவில் அமெரிக்க போரை விரிவாக்குவதற்கு "மனித உரிமைகள்" என்ற அடித்தளத்தில் குற்றஞ்சாட்டி ஆதரவை முடுக்குவதற்கும் இந்த பிரச்சாரத்தின் பாகமாக இருந்துள்ளது.

2018 தேர்தல் பிரச்சாரம் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது: முதல்முறையாக, இராணுவ-உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் ஒரு அரசியல் கட்சியை கையகப்படுத்தவும் மற்றும் காங்கிரஸில் மிகப் பெரிய பாத்திரம் வகிக்கவும் பெரும் எண்ணிக்கையில் நகர்ந்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் டஜன் கணக்கான சிஐஏ மற்றும் இராணுவ அதிகாரிகள், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் "முன்னாள்" முகவர்கள் ஆவர். ஆனால் இந்த "ஓய்வூபெற்றவர்கள்" என்ற அந்தஸ்து முற்றிலும் பெயரளவிலானது. சிஐஏ இல் அல்லது Army Rangers இல் அல்லது கடற்படை SEALS இணைவதென்பது மாஃபியாவில் இணைவதைப் போன்றது: உண்மையில் எவரும் வெளியேறுவதில்லை; அவர்கள் புதிய வேலைகளைச் செய்ய நகர்கிறார்கள்.

2018 இல் சிஐஏ இன் நடவடிக்கையானது முக்கியமான ஒரு விதத்தில் அதன் வெளிநாட்டு நடவடிக்கைகளைப் போன்றதல்ல: அதாவது அது மறைமுகமாக நடத்தப்படவில்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் போட்டியிடும் இராணுவ-உளவுத்துறை செயல்பாட்டாளர்கள், உளவாளிகளாகவும் சிறப்பு நடவடிக்கை வீரர்களாகவும் பெருமைப் பீற்றிக் கொள்கிறார்கள். போர்கள அனுபவம் கொண்டவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாலைவன சீருடைகளிலோ அல்லது மற்ற சீருடைகளிலோ புகைப்படங்களை தங்களின் வலைத்தளங்களில் காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் வரவேற்கப்பட்டு பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது, அத்துடன் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் அடிக்கடி அவர்களின் வேட்பாளர்களுக்கான களங்களை வெற்றிடமாக்கி அளிக்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் ஓர் அசாதாரண அரசியல் சூழலை எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம், குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் நிர்வாகம் வேறெந்த முந்தைய அரசாங்கத்தையும் விட அதன் உயர்மட்ட பதவிகளில் நிறைய இராணுவ தளபதிகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், உளவுத்துறை முகவர்கள் "நேசமாக கையகப்படுத்துவதற்கு" ஜனநாயகக் கட்சி அதன் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

மொத்த அரசாங்கத்தின் மீதும் இராணுவ-உளவுத்துறை முகமைகளின் நம்பவியலாத அதிகாரம், அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த முறிவுக்கு மத்திய காரணம், செல்வ வளம் ஒரு சிறிய உயரடுக்கின் கரங்களில் அதீதளவில் திரண்டிருப்பதாகும், இவர்களின் நலன்களுக்கு அரசு எந்திரமும், அதன் "ஆயுதப்படை அமைப்புகளும்" சேவையாற்றுகின்றன. கோபமான மற்றும் எதிர்விரோதமான தொழிலாள வர்க்கத்தை முகங்கொடுத்து, ஆளும் வர்க்கம் முன்பினும் அதிகமாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குள் தஞ்சமடைந்து வருகிறது.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் அதிதீவிர வலது கொள்கைகளுக்கு எதிராக போராட விரும்புகின்றனர். ஆனால் ஜனநாயகக் கட்சி, பெருநிறுவன ஊடகங்களின் ஒரு கூட்டம் மற்றும் சிஐஏ ஆகியவற்றை இணைத்துள்ள "தீய அச்சின்" மூலமாக இந்த போராட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை. இராணுவ-உளவுத்துறை வேட்பாளர்கள் உள்நுழைவது என்பது, ஜனநாயகக் கட்சி "குறைந்த தீமையைப்" பிரதிநிதித்துவம் செய்வதாக தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களும் பரப்பி வந்த நீண்டகால நப்பாசையை வெளிச்சமாக்குகிறது. இதற்கு எதிர்முரணாக, பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இந்த இரு-கட்சி ஆட்சிமுறையின் கட்டமைப்புக்குள், உழைக்கும் மக்கள் சம அளவில் இரண்டு பிற்போக்குத்தனமான தீமைகளை அவர்கள் முகங்கொடுக்கின்றனர் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்

[13 June 2017]

One year of Democratic sabotage of opposition to Trump
[20 January 2018]