ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s fascist National Front congress sets out “to take power”

பிரான்சின் பாசிச தேசிய முன்னணி மாநாடு “அதிகாரத்தைக் கைப்பற்ற” ஏற்பாடு செய்கிறது

By Francis Dubois
12 March 2018

2017 மே ஜனாதிபதி தேர்தலில் பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) வேட்பாளர் மரின் லு பென் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் தோல்வி கண்டதற்குப் பிந்தைய காலத்தில் அக்கட்சியின் முதல் மாநாடு மார்ச் 10-11 தேதிகளில் நடந்தது. அப்போது முதலாகவே, FN, ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்திலான அதன் நிலைப்பாடு குறித்த ஒரு உள்முக மோதலால் உலுக்கப்பட்டு வந்திருக்கிறது, அதன் தலைமை கட்சிக்கு ஒரு “மறுஅடித்தளம்” காண்பதற்கான திட்டங்களை அறிவித்திருக்கிறது.

கட்சித் தலைவருக்கான ஒரே வேட்பாளரான மரின் லு பென் 100 சதவீத வாக்களிப்புடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அறிவித்தார்: “நமது இலட்சியம் தெளிவானது, அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே அது.” FN ஐ Rassemblement National (தேசியப் பேரணி) என பெயர் மாற்றுவதற்கான ஆலோசனையையும் அவர் முன்மொழிந்தார். பிரான்சில் நவ-பாசிசத்துடன் பரவலாய் தொடர்புபடுத்தப்படுகின்ற ஒரு பெயரை கைவிட்டால், கட்சி பாரம்பரியமான வலதுகள் உள்ளிட மற்ற அரசியல் சக்திகளுடன் கூட்டணி வைப்பதற்கு எளிதாக இருக்கும் என்பது பெயர் மாற்றத்திற்கு FN இன் நிர்வாகிகள் முன்வைத்த காரணங்களில் ஒன்று.

அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் அதி-வலது சக்திகளது சர்வதேச எழுச்சியை வலியுறுத்துகின்ற விதமாக FN அதன் கட்சி மாநாட்டை ஒழுங்கமைத்தது. லு பென்னின் உரைக்கு முன்னதாக இத்தாலியின் அதி-வலது Legaவின் (முன்னர் வடக்கு லீக்) தலைவரான மாத்தியோ சால்வினியின் காணொளிச் செய்தி வந்தது.

ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகரும் அதி-வலது Breitbart News வலைத் தளத்தின் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் பானன் சனிக்கிழமையன்று  தோற்றமளித்தது மாநாட்டில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. FN பிரதிநிதிகளது இடிமுழக்கமான ஆரவாரத்திற்கு மத்தியில் அவர் பேசினார்: “அவர்கள் உங்களை இனவாதிகள் என்றட்டும், அந்நியர் வெறுப்பு கொண்டவர்கள் என்றட்டும், இஸ்லாமிய வெறுப்பு கொண்டவர்கள் என்றட்டும். அதையெல்லாம் உங்களுக்கான கவுரவப் பதக்கமாக அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாளுக்கு நாள் நாம் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறோம், அவர்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கிறார்கள்.” அவர் மேலும் தெரிவித்தார்: “இத்தாலியை விடப் பெரிய, போலந்தை விடப் பெரிய, ஹங்கேரியை விடப் பெரிய ஒரு உலகளாவிய இயக்கத்தின் பாகம் நீங்கள்.”

FN இன் ஸ்தாபகரான ஜோன் மரி லு பென் —மரின் லு பென்னின் தந்தை, இவரை மரின் கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்— உரையின் போது தனது நினைவுப் பிரசுரப் பிரதிகளில் கையெழுத்திட்டபடி பின்வருமாறு கருத்துரைத்தார்: FN இன் “பூச்சாண்டி பிம்பத்தை அகற்றுவது என்பதன் அர்த்தம் துல்லியமாக இது அல்ல என்றே நான் கருதுகிறேன்.”

FN ஸ்தாபகரது பேத்தியான மரியோன் மரேசால் லு பென் — இவர், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், “சாதாரண வாழ்க்கை”யில் நுழைவதற்காக சற்றுகாலம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, FN இல் தனது பதவிகளையும் தேசிய சட்டமன்றத்திலான தனது இருக்கையையும் விட்டு உத்தியோகபூர்வமாக விலகினார்— உடன் பானன் 2016 முதலாக தொடர்பில் இருந்து வருகிறார். ட்ரம்ப்பின் குழுவுக்கும் FNக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாக 2016 இல் மரேசால் அறிவித்தார். பானன் தனது பங்காக, Breitbart News இன் நடவடிக்கைகளை பிரான்சில் விரிவுபடுத்துகின்ற தனது இலட்சியங்களை எடுத்துவைத்த ஒரு நேர்காணலில், மரியோன் மரேசால் லு பென்னை FN இன் ஒரு வளரும் நட்சத்திரம் என்று அழைத்தார்.

ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர், “சேர்ந்து வேலை செய்வதற்கு, ட்ரம்ப் பிரச்சாரத்தின் இயக்குநரான ஸ்டீபன் பானனை அழைப்பதற்கு ஆம்” என்றே சொல்வேன் என மரேசால் லு பென் தெரிவித்தார். சென்ற மாதத்தில், கணக்குப்படி இன்னும் அவர் அரசியல் ஓய்வில் தான் இருந்து வந்ததொரு சமயத்தில், வாஷிங்டன் டிசியில் நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC) பேசுவதற்கு அவர் பயணித்தார். லீல் இல் பானன் மீண்டுமொரு முறை மரேசால் லு பென்னைப் பாராட்டினார், அவர் ஒரு “மனம்கவரும்” ஆளுமை என்று அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, மரின் லு பென், ஒரு வாய்வீச்சான மற்றும் பாதுகாப்புவாத உரையில், உலகமயமாக்கத்தைத் தாக்கினார், மாற்றாக தேசியவாதத்தை ஊக்குவித்தார். FN ஐ ஸ்தாபக-எதிர்ப்புக் கட்சியாகவும் மக்ரோன்-எதிர்ப்புக் கட்சியாகவும் முன்வைத்த அவர், “பண”த்தைக் கண்டனம் செய்து யூத-விரோதத்திற்கான மறைமுகமான விண்ணப்பங்களுடன் கைகோர்த்த அந்நியர்வெறுப்பு வாய்வீச்சுகளை முன்வைத்தார். இந்த அடிப்படையில், இரயில் சேவைகளை தனியார்மயமாக்குவதற்கு மக்ரோன் போடும் திட்டங்கள் மீது கடுகடுப்புடனான விமர்சனங்களையும் அவர் வைத்தார், அறிவித்தார்: “உலகின் இரண்டு கருத்தாக்கங்கள் எதிரெதிரே எதிர்த்து நிற்கின்றன.. உலகமயவாதிகள் அவர்களுக்கு எதிராய் தேசியவாதிகள்.”

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் பொதுவான யூரோ நாணயத்தில் இருந்தும் வெளியேறுவதற்கு பகிரங்கமாக அழைக்காமல், முக்கியமான ஐரோப்பிய ஒப்பந்தங்களை மாற்றி எழுதுவதற்கு FN தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக அறிவித்தார். நவம்பரில் நடந்தவொரு கருத்துக்கணிப்பில், FN இன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் விட்டு விலகுவதை அவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர்.

FN இன் அத்தனை அடிப்படை கருப்பொருட்களையும் அதிக மறைவற்றதான மொழியில் லு பென் வழங்கினார், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான விண்ணப்பங்களை “கிறிஸ்தவ கலாச்சாரத்தின் ஒரு பாதுகாப்பு” எனும் பேரில் அல்லது ஒரு வலிமையான பாதுகாப்புக் கொள்கைக்கான அவசியத்தின் பேரில் அவர் முன்நிறுத்தினார். பிரான்சின் கடைசி மாபெரும் பொதுவேலைநிறுத்தமான “1968 மே க்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நமது வேலைத்திட்டத்தின் பகுதியாகும்” என்று உற்சாகமான கைதட்டலுக்கு மத்தியில் லு பென் கூறியபோது FN இன் தொழிலாளர்-விரோத கண்ணோட்டம் தெளிவாக புலப்பட்டது.

தனது சாத்தான் நகங்களை, இரண்டாம் உலகப் போரில் நாஜிசத்துடனான பிரெஞ்சு ஒத்துழைப்பிலும் அல்ஜீரியப் போரின் போது பிரான்சின் காலனி ஆதிக்கத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியிலும் தான் கொண்டிருக்கும் வரலாற்று வேர்களை, மறைக்கின்ற தனது தந்திரோபாயத்தின் தொடர்ச்சியில், ஜோன்-மரி லு பென்னின் கவுரவத் தலைவர் பதவியை அகற்றும் புதிய கட்சிச் சட்டங்களுக்கு FN வாக்களித்தது. இதன்மூலம், யூத-விரோத வசனங்களின் மற்றும் யூதப்படுகொலை மறுப்பின் குற்றங்கள் பலமுறை ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்தவரான கட்சியின் ஸ்தாபகரிடம் இருந்து அது தன்னை தள்ளி நிறுத்திக் கொண்டிருந்தது, இறுதியில் அவர் FN இல் இருந்து 2015 இல் வெளியேற்றப்பட்டார். FN அதன் மத்திய கமிட்டியின் பெயரை தேசியக் கமிட்டி என்று மாற்றியது, அதில் இடம்பெற்றிருந்தவர்களில் பெரும் வெளிப்பட்ட மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக, பிரான்சின் வெகுஜன ஊடகங்கள், இந்த மாநாடு, FN கடுமை-குறைந்த போக்குகளுக்கு தன்னை திறந்து விடுவதற்கும் தனது “அரசியலை” இயல்பானதாக்குவதற்கும் நிர்ப்பந்தம் பெற்ற நிலையில், மத்தியை நோக்கியும் பிரதான நீரோட்டத்தை நோக்கியும் அது நகர்ந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாக சித்தரித்தன. மரின் லு பென் அரசியல்ரீதியாக பலவீனப்பட்டு அல்லது முடிந்து போயும் கூட விட்ட நிலையில் அக்கட்சி ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஒரு கட்சியாகவும், சற்றுகாலத்திற்கு ஒரு சிறிய பாத்திரத்தையே வகிக்கத் தலைவிதி பெற்றிருக்கும் கட்சியாகவும் சித்தரிக்கப்பட்டது.

ஆயினும் உண்மைக்கும் இதற்கும் வெகுதூரமாகும். ஐரோப்பிய முதலாளித்துவம் நவ-பாசிசக் கட்சிகளை, ஆஸ்திரியாவில் போல அரசாங்கத்தில் அமர்த்திக் கொண்டிருக்கிறது, அல்லது ஜேர்மனியில் போல மறுஇராணுவமயமாதல் மற்றும் தொழிலாளர்களது சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான திட்டங்களில் எந்த சிரமமும் இன்றி அவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில், FN மத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கவில்லை, மாறாக நிதிப் பிரபுத்துவம் தான் அதி-வலதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில், ஆளும் வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாய் FN இன் கொள்கைகளை அது எடுத்துக் கொண்டு விட்டிருக்கிறது. முந்தைய ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழும், இப்போது மக்ரோனின் கீழான அரசாங்கத்தின் கீழும், பிரெஞ்சு நிதி பிரபுத்துவமானது, போலிசுக்கு முழு அதிகாரங்கள் அளிக்கின்ற ஒரு அவசரநிலையைப் பிரகடனம் செய்தது, குடியுரிமைப் பறிப்பை அரசியல்சட்டத்தில் எழுதுவதைப் பரிசீலனை செய்தது, முஸ்லீம்-விரோத மனப்போக்கிற்கு விண்ணப்பம் செய்தது, அத்துடன் கட்டாய இராணுவச் சேர்க்கையை மீண்டும் கொண்டுவருவதற்கான விண்ணப்பங்களை தீவிரப்படுத்தியது.

இப்போது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியானது அமெரிக்க அதி வலதுடன் சேர்ந்து கொண்டு மரியோன் மரேசால் லு பென்னை அவரது சித்தியான மரின் லு பென்னுக்கு —FN ஐ அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் திறனற்றவராக ஊடகங்கள் பலவும் இவரை நிராகரிக்கின்றன— மாற்றாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

ஆயினும் ஜோன்-மரி லு பென்னின் பேத்தி வலது நோக்கி வெகுதூரத்தில் இருக்கிறார், நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பிரதான அடித்தளமான சார்ல் மோராஸின் யூத-விரோத Action française அமைப்பின் வம்சாவளியான முடியரசுவாத Action française இயக்கத்துடனும், அத்துடன் கத்தோலிக்க அடிப்படைவாதிகளுடனும் தொடர்புடைய ஒரு ஆளுமையாவார். பானன் வெள்ளை மாளிகைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது கு க்ளக்ஸ் கிளானினாலும் (Ku Klux Klan) டெய்லி ஸ்ட்டோர்மர் வலைத் தளத்தினாலும் —நூரெம்பேர்க் விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாஜி தலைவர்களில் ஒருவரான ஜூலியுஸ் ஸ்ட்ரைகரின் வன்மையான யூத-விரோத பத்திரிகையைக் குறிப்பிடும் பெயர்— அது பாராட்டப் பெற்றது.

இவ்வாறாக, லீல் இல் தேசிய முன்னணி (FN) மாநாட்டில் நடந்தது மத்தியை நோக்கிய ஒரு மறுநோக்குநிலையோ அல்லது மத்தியப்படுவதை நோக்கிய நவ-பாசிஸ்டுகளின் ஒரு தாக்குப்பிடிக்கத்தக்க நடவடிக்கையோ அல்ல. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாசிச மற்றும் காலனித்துவவாத கடந்தகாலத்துடன் FN கொண்டிருக்கும் வரலாற்றுத் தொடர்புகளை மறுதிட்டவட்டம் செய்கின்ற அதேநேரத்தில், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் மிக அதி வலது-சாரி பிரிவுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு அக்கட்சி மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இதுவாகும்.