ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Major protests against French President Macron’s austerity measures

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் பெரும் ஆர்ப்பாட்டங்கள்

By Kumaran Ira
24 March 2018

பொதுச்சேவை துறையில் வேலைகளை வெட்டுவது, ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைப்பது, பிரான்சின் தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்குவது மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் சமூக உரிமைகளை அழிப்பது ஆகியவற்றுக்கான ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிராக, வியாழனன்று, பிரான்ஸ் எங்கிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.


பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள்

இந்த வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பொதுச்சேவை துறையைச் சேர்ந்த ஏழு சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்களது கூற்றின்படி, நாடெங்கிலும் 150க்கும் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன, பிரான்ஸ் எங்கிலும் சுமார் 500,000 பேர் பேரணி நடத்தினர், இதில் பாரிஸில் 65,000 பேர், மார்சைய் இல் 55,000 பேர், துலூஸ் இல் 20,000 பேர், லா ரோசேல் இல் 35,000 பேர், போர்தோ மற்றும் றுவான் இல் 15,000 பேர் மற்றும் நாந்த் இல் 10,000 பேர் கலந்து கொண்டதும் அடங்கும். மற்ற நகரங்களில் 1,000 முதல் 10,000 பேர் வரை இந்தப் பேரணியில் பங்குபெற்றனர்.

1968 மே/ஜூன் பொது வேலைநிறுத்த நிகழ்வுகளைத் தொடக்கி வைத்த மார்ச் 22 மாணவர் கிளர்ச்சியின் ஐம்பதாவது ஆண்டுதினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் அணிதிரண்டிருந்தனர்.

பாரிஸில், அரசாங்கத்தின் மீதும் சமூக உரிமைகளை அழிப்பதற்கான அதன் திட்டத்தின் மீதும் கோபத்தை வெளிப்படுத்துகின்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர், “மக்ரோனே இராஜினாமா செய்!”, “பொதுச் சேவைகளை அழிக்காதே!” மற்றும் “நாங்கள் ஒரு சமூக பின்வாங்கலுக்கு பேரம்பேசவில்லை. ஒரு பொது வேலைநிறுத்தத்தின் மூலமாக அதனை எதிர்த்துப் போராடுகிறோம்!”

இரயில்வே, பள்ளிகள், விமான போக்குவரத்து, மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் பிற பொதுச் சேவைகள் உள்ளிட்ட துறைகள் இந்த வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் இரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன, ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும்

பாரிஸ் பிராந்தியத்திலும் மாகாணங்களிலும் இரயில் சேவை பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பாரிஸ் விமானநிலையங்களில் குறைந்த தூர விமானங்களில் 30 சதவீதமானவை இரத்து செய்யப்பட்டன. நேற்று, ஏர் பிரான்சின் ஊழியர்கள், வேலைநிலைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அத்தனை நிலைகளிலும் ஆறு சதவீத ஊதிய உயர்வு கோரியும் ஒரு வெளிநடப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படல் பெருகிச் செல்வதன் மத்தியில் மக்ரோன் அரசாங்கத்துக்கு எதிராக அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கின்ற சமூக எதிர்ப்பினை சுட்டிக்காட்டுகின்றன.

மக்ரோனின் ஏற்பு மதிப்பீடுகள் வீழ்ந்து சரிகின்ற நிலையில், ஒரு சமூக எதிர்ப்புரட்சியைத் திணிப்பதற்கான அவரது திட்டங்கள் மீதான பொதுமக்களின் கோபம் பெருகிக் கொண்டிருக்கிறது. முதலாளிகளையும் தொழிற்சங்கங்களையும் வேலைஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதித்து, அதன்மூலமாக பாரிய வேலைநீக்கங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் குறைவான ஊதியங்களைத் திணிப்பதற்கும் வழிவகையளிக்கின்ற தொழிலாளர் உத்தரவாணைகளை திணித்த மக்ரோன், இப்போது பொதுச் சேவைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த நோக்கம் கொண்டிருக்கிறார்.

சுமார் 5 மில்லியன் பேர் பணிபுரிகின்ற பொதுச்சேவை துறையின் மீது, பிப்ரவரியில், 120,000 வேலைகளை நீக்குவது, ஊதிய உயர்வை நிறுத்திவைப்பது, கூடுதலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவது மற்றும் எல்லா நிலைகளிலும் நிதிஒதுக்கீடுகளை வெட்டுவது ஆகியவை உள்ளிட ஒரு பெரும்வீச்சுத் தாக்குதலை அரசாங்கம் அறிவித்தது.

இரயில்வே தொழிலாளர்களின் சமூக உரிமைகளை —நிலையான ஊதிய அட்டவணை, இரயில் ஓட்டுநர்களுக்கு ஓய்வூதிய வயது 52, மற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயது 57, மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதமான வாழ்நாள் வேலைவாய்ப்பு ஆகியவை உள்ளிட்டவை— அழிப்பதுடன் சேர்த்து பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்குவதை நோக்கியும் அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கங்களும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் போன்ற அவற்றின் போலி-இடது கூட்டாளிகளும் சமூக கோபத்தைத் தணிப்பதற்கு ஒரு அடையாள நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தனர். அரசாங்கத்தின் மீதான பிரமைகளை ஊக்குவிக்கும் விதமாக மக்ரோனுடன் பேரம்பேசிக் கொண்டே அவர்கள் இதைச் செய்கின்றனர், அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் எழுவதைத் தடுப்பதற்கு இயன்ற அனைத்தையும் செய்கின்றனர்.

பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) லோரோன் பேர்ஜே பிரான்சின் RTL வானொலியிடம் கூறினார், “அரசாங்கம் காதுகொடுக்க வேண்டும் இல்லையேல் அரசு நிர்வாகப் பணியிலிருக்கும் தொழிலாளர்கள் பெருமளவில் அணிதிரட்டப்படுவர்.”

தொழிலாள வர்க்கத்திலான ஒரு பரந்த சமூக இயக்கத்திற்கான தனது குரோதத்தை வெளிப்படுத்துகின்ற விதமாக பேர்ஜே தெரிவித்தார், “போராட்டங்களை ஒருங்குவிப்பது CFDT இன் வழக்கமாக இருப்பதில்லை என்பதற்கு ஒரேயொரு எளிமையான காரணம், போராட்டங்களை ஒருங்குவிப்பது எப்போதும் ஸ்தூலமான முடிவுகளைக் கொண்டிருப்பதில்லை என்பது தான் அது.”

Force Ouvrier (FO) இன் பங்காக அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார், “நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்புவதில்லை, அரசாங்கத்துடன் விவாதிக்கவே விரும்புவோம், ஆனால் நாங்கள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியிடம் கேட்டிருக்கிறோம், பிரான்சுவா ஹாலண்டிடம் கேட்டிருக்கிறோம், இப்போது இம்மானுவல் மக்ரோனிடம் கேட்டிருக்கிறோம், இன்னும் அதற்காகக் காத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.”

தொழிலாளர்கள் இந்தக் கருத்துக்களை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு ஒரு பேரத்திற்கு முனைந்து கொண்டு, அதேவேளையில் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

மக்ரோன் பொதுச்சேவை துறையிலும் இரயில்வேயிலும் மேலதிக வெட்டுக்களைத் திணிப்பதற்கு எதிரான சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்களையே நம்பியிருக்கிறார். தன்னுடைய சீர்திருத்தத் திட்டத்தில் இருந்து, தான் பின்வாங்கப் போவதில்லை என்பதை அவர் தெளிவாக்கி இருக்கிறார்.

தொழிலாள வர்க்கத்தில் போர்க்குணம் பெருகிச் செல்கின்றதான நிலையிலும் கூட, தேசிய நோக்குநிலையுடனான தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் சிக்கன நடவடிக்கையை பேரம் பேசுகின்ற நிலைக்கு தொழிலாளர்கள் முகம்கொடுத்துள்ளனர். மக்ரோனின் தாக்குதலை எதிர்ப்பதற்கு, தொழிலாளர்கள் தேசிய மட்டத்திலான ஒரு சில அடையாள தொழிற்சங்கப் போராட்டங்களை நம்பியிருக்க முடியாது. போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து மீட்டு மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக-விரோத மற்றும் இராணுவவாதக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு சுயாதீனமாக ஒழுங்கமைப்பதே இன்றியமையாத பிரச்சினையாகும்.


பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை தொழிலாளர்கள்

வேலைநிறுத்தம் செய்து போராடும் தொழிலாளர்களை வீதிக்குக் கொண்டு வந்த காரணங்கள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி அவர்களுடன் பேசியது.

இரயில்வேயில் ஒரு பராமரிப்புத் தொழிலாளியாக இருக்கும் ஜாக் கூறினார், “இரயில்வே தொழிலாளர்களது உத்தியோகபூர்வ சட்ட அந்தஸ்து சீர்திருத்தத்திற்கு எதிராகவும் அத்துடன் இரயில்வே தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும் நான் ஆர்ப்பாட்டம் செய்கிறேன். எனக்கும் அந்த அந்தஸ்து நிலை இருக்கிறது, அது ரொம்ப அசாதாரண ஆதாயமெல்லாம் இல்லை. நான் மாதத்திற்கு 1,854 டாலர்கள் சம்பாதிக்கிறேன். குறைந்தபட்ச ஊதியம் பெறும் சிலரை விட இது சற்று மேம்பட்டதே தவிர, ஒரு தனியந்தஸ்தான வாழ்க்கை வாழ்வதெல்லாம் ரொம்ப தூரம், ஏனென்றால் அத்தையதொரு சம்பளம் தான் எனக்குக் கிடைக்கிறது.”

“இன்று தனியார்மயமாக்கத்தில் எங்களை போட்டிக்காய் திறந்து விடுகையில் என்ன நடக்குமென்றால், ஒரு சமூகத் தாக்குதலே நடக்கும். எங்களது ஊதியங்கள் உத்தியோகபூர்வ குறைந்தபட்ச ஊதியங்களுக்கோ (SMIC) அல்லது அதற்குக் குறைவாகவோ சரிந்து விடும், ஏனென்றால் எங்கள் போட்டி நிறுவனங்களில் அது தான் நடக்கிறது. ஏற்கனவே SNCF இல் பலரும் என்னை விடவும் SMICக்கு நெருக்கமான ஊதியத்தையே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய், திட்டப்பணிகளுக்கு ஏலம் கோருகையில், நாங்கள் அதிக செலவு எனக் கூறி, எங்களுக்கு அவை கிடைக்காமல் போகும். அதன்பின் தொழிலாளர்கள் உபரியாக இருப்பதாகக் கூறுவார்கள், நாங்கள் வேலைவாய்ப்பற்றவர்களாய் ஆகியிருப்போம்.”

“இத்தனை பணத்தை குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களுக்கு இன்னும் என்ன தான் வேண்டும் என புரியவில்லை. என் அப்பா தொழிற்துறை விவசாயத்தில்- இறைச்சி துறையில் வேலைசெய்தார். அவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், ‘அவர்கள் ஒவ்வொரு சாப்பாட்டிலும் இறைச்சி சேர்த்து சாப்பிடுவார்கள்’ என்று. இன்று பலபேருக்கு இறைச்சி சாப்பிடக் கூட வசதியில்லாத நிலை. நாம் அத்தனை பணத்தையும் மறுபங்கீடு செய்தால், பொருளாதாரம் மறுதொடக்கம் காணும், இது ரொம்பவே வெளிப்படையானது.

“மக்ரோனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பணக்காரர்களுக்கும் நாம் வாழுகின்ற உலகத்தில் என்ன நடக்கிறதென்றே தெரிவதில்லை, அவர்கள் வேறொரு உலகத்தில் வாழ்கிறார்கள். நாம் அன்றாடம் முகம்கொடுக்கும் சிரமங்களை அவர்கள் உணர்வதில்லை. நானே, வசிக்கும் வீட்டில் இருந்து கொண்டே தான், அதனைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் உடைந்த சீமேந்து கட்டிகளாய் கிடக்கிறது. ஏழு வருடங்களாய் இதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு தங்கமும் ஆடம்பரங்களும் இருக்கிறது, அவர்களால் புரிந்து கொள்ளவும் கூட முடிவதில்லை. இந்த ஏழு ஆண்டுகளில் வீட்டை ஒழுங்குபடுத்த மட்டும் தான் முடிந்திருக்கிறது. இப்போது முன்பு போல அந்த அளவுக்கு குளிர் தாக்காத அளவுக்கு.

“என்னைப் பொறுத்தவரை மக்ரோன் ஒரு தாராளவாத தீவிரவாதி என்பேன். இடது-சாரி மற்றும் வலது-சாரி தீவிரவாதிகளை அடிக்கடி கேள்விப்படுவோம், ஆனால் தாராளவாத தீவிரவாதிகளும் அதே வகையினர் தான்... நாம் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும். மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களை நான் மனதார ஆதரிக்கிறேன். இன்று போல தினங்கள் வருமாயின், நாம் அனைவரும் ஒன்று கூடி அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தவர்களாக ஆகி விடுவோம்.”

“தாராளவாதம் மற்றும் உலகமயமாக்கத்தில் தொடங்கி, பிரான்சில் இன்று நாம் காணும் பிரச்சினைகள் உலகெங்கும் நிலவும் பிரச்சினைகளாக இருக்கின்றன. பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாகும். பிரான்சுக்கு நல்ல அரசியல்வாதிகள் தலைமை கொடுத்து பொருளாதாரம் வலுவானாலும் கூட, சர்வதேச அளவில் நல்ல விடயங்களை செய்வதில் இருந்து நாம் தடுக்கப்படுவோம். அதனால் தான் நமக்கு ஒரு சர்வதேசிய இயக்கம் அவசியமாக இருக்கிறது, ஏனென்றால் இன்றைய உலக அமைப்பு முறையில் ஒரு தனி நாடு ஒரு முற்போக்கான சமூகக் கொள்கையை பின்பற்றுவதில் வெற்றி காண முடியாது. ஒட்டுமொத்த உலகமாக அது செய்தாகப்பட வேண்டும். கையாளுவதற்கு கடினமானது என்றாலும், அதுவே உண்மையாகும்.

“இன்னொன்றையும் கூற விரும்புகிறேன். கொஞ்சக் காலமாகவே, நிலைமை மிகவும் மோசமடைந்து செல்கிறது. ஊடகங்கள் இரயில்வே தொழிலாளர்களை அத்தகைய விதத்தில் திரித்து சித்தரிக்கின்றன. ஊடகங்களில் இரயில்வே தொழிலாளர்களைக் காட்டும்போதெல்லாம், அத்தனை இரயில் தொழிலாளர்களையும் சிறுமைப்படுத்துவதற்காக அதிக சலுகையுடைய தொழிலாளர்களையே அவர்கள் காட்டுகின்றனர். ஆனால் SMIC க்கு சற்றே அதிகமாய் சம்பாதிக்கின்ற பலரும் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் மாதத்திற்கு வெறும் 1,482 டாலர் முதல் 1,606 டாலர் வரையான தொகையையே ஊதியமாகப் பெறுகிறார்கள், அவர்களைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் வாய்திறப்பதே கிடையாது. இரயில்வண்டிகளில் வேலைசெய்கின்ற ஓட்டுநர்களையும் மற்றவர்களையும் மட்டுமே அவர்கள் காட்டுகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு போனஸ் கிடைக்கிறது என்பதற்காக. ஆனால் அது நியாயமான போனஸ் தான், ஏனென்றால் அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், அத்துடன் அவர்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் தூங்க வேண்டியிருக்கிறது. இரயில்வண்டிகளை திருத்தம் செய்கின்ற ஒரு இடத்தில் நான் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். இன்று என் வேலையை நான் மாற்றிக் கொண்டேன், ஏனென்றால் அந்த வேலையால் எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் வந்து சேர்ந்தன. இப்போது சரக்குபோக்குவரத்து பிரிவில் வேலை செய்கிறேன், இரயில்வண்டிகளது பராமரிப்பில் தான் இன்னும் இருக்கிறேன்.”

இரயில்வண்டி ஓட்டுநரான திபோ விவரித்தார், “இன்று நாங்கள் எங்களது உரிமைகளையும் வேலைநிலைமைகளையும் பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அவற்றை எங்களிடம் இருந்து பறிப்பதற்கு அவர்கள் அச்சுறுத்துவது நியாயமற்ற செயலாக நாங்கள் காண்கிறோம்.”

“அத்தனையும் எங்களது அந்தஸ்திற்காகவும் வேலை நிலைமைகளுக்காகவும் நாங்கள் வென்றெடுத்திருந்த உரிமைகளாகும். நாளை எங்கள் ஆரோக்கிய பராமரிப்புக்கான நிதி காணாமல் போகுமாயின், முந்தைய தலைமுறைகள் போராடிப் பெற்றிருந்த அத்தனை உரிமைகளும் காணாமல் போகுமாயின் என்னாகும், ஆகவே அந்த உரிமைகளை நாங்கள் இழக்காமல் பார்த்துக் கொள்வது எங்களது கடமையாக இருக்கிறது. 

“வேலைப் பாதுகாப்புக்கான எங்கள் உரிமை என்பதன் அர்த்தம் ‘வாழ்நாளுக்கான ஒரு வேலை’ என்பதல்ல. எந்த நிறுவனத்திலுமே, ஒரு தொழிலாளி தவறு செய்தால் அவர் நீக்கப்பட முடியும். இங்கே எங்கள் நிறுவனத்திற்குள்ளாக நாங்கள் வேலைகளை மாற்றிக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமே எங்களது ஒரே அனுகூலமாகும்.

“நிறுவனம் பல்வேறு வேலைகளை எடுத்துச் செய்கிறது என்பதால் நாங்கள் பார்க்கின்ற வேலையின் வகைகளை மாற்றிக் கொள்ள முடிகிறது என்பதே அதன் அர்த்தமாகும். நான் ஒரு இரயில்வண்டி ஓட்டுநர். நாளை, எனக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வருமாயின், என்னால் அப்படியே தொடர முடியாமல் போகும். நான் ஒரு வேறுபட்ட வேலைவகைக்கு மாற்றப்படுவேன், இதுவே வேறு நிறுவனமாக இருந்தால், நான் மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெறாமல் போனால் நான் வேலையை விட்டு நீக்கப்படலாம். அது மட்டும் தான் வித்தியாசம். எங்களுக்கு ஆயுளுக்கும் ஒரு வேலை இருக்கிறது என்பதாக சிலர் பேசும்போது, எனக்கு அபத்தமாய் தெரியும்.

“நாங்கள் அதிகமான ஊதியம் பெறுவதாக சிலர் கூறுகிறார்கள். அது இன்னொரு விவாதம். என்னுடைய சம்பளப்பட்டியலை அவர்களுக்கு காண்பிக்க நான் தயாராய் இருக்கிறேன், என்னுடைய அடிப்படை சம்பளத்தை பார்க்கட்டும். நல்ல ஊதியம் பெறக் கூடிய இரயில்வண்டி ஓட்டுநர்களும் இருக்கிறார்கள் தான், காரணம் அவர்களுக்கு போனஸ்கள் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு உடல்நலமில்லாமல் போனால், அத்தனை போனஸ்களும் நின்றுபோகும். தனியார் துறையில் என்னை விட அதிகமான அடிப்படை சம்பளம் பெறக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.”

“ஆம், SNCF இன் சில வேலைகளில் நீங்கள் ஓரளவுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியும் தான். அது முக்கியமாக ஓட்டுநர்களுக்கும் இரயில்வண்டியில் வேலைசெய்கின்ற மற்றவர்களுக்கும் தான். ஆனால் ஒரு ஆறு மாதத்திற்கு எனக்கு உடம்பு சரியில்லை என்று வையுங்கள், அத்தனையும் தொலைந்து விடும். ஒரு இரயில்நிலையத்தில் அல்லது வேறிடத்தில் வேலை செய்கிற எல்லாருக்கும் போனஸ்கள் கிடைப்பதில்லை, அவர்கள் தனியார் துறைக்கு அதிகமான சம்பளம் பெறுவதில்லை.

“சர்வதேச அளவில் வேலைநிறுத்தம் செய்கின்ற அத்தனை மற்ற தொழிலாளர்களையும் நான் ஆதரிக்கிறேன். ஒவ்வொரு தொழிலாளியும் தனது உரிமைகளைப் பாதுகாத்தாக வேண்டும், அவற்றைக் காப்பாற்றப் போராடியாக வேண்டும். மேம்பட்ட வேலைநிலைமைகளுக்காகவும் போராடியாக வேண்டும். நான் அதற்காகத் தான் போராடுகிறேன்!

“இராணுவத்திற்கு அத்தனை ஆயுதங்களாக அத்தனை நிதியையும் அளிப்பதை நான் ஆதரிக்கவில்லை. பணம் செலவழிக்கப்படுவதற்கு, ஆயுதங்கள் வாங்குவதை விட மேம்பட்ட விடயங்கள் இருக்கின்றன.”