ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google admits collaboration with illegal US drone murder program

அமெரிக்காவின் சட்டவிரோத ஆளில்லா விமான கொலைத் திட்டத்தில் ஒத்துழைத்ததை கூகுள் ஒப்புக்கொள்கிறது

By Andre Damon
8 March 2018

இராணுவ-உளவு வளாகத்திற்கும் சிலிக்கன் பள்ளத்தாக்குக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு பெருகிச் செல்வதில் இன்னுமொரு மைல்கல்லாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் (Alphabet) அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோதமான ஆளில்லா விமானக் கொலைத் திட்டத்தில் இலக்குகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளை வழங்கியிருந்ததை ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

அமெரிக்கா 2009 இல் அதன் ஆளில்லா விமானப் படுகொலை வேலைத்திட்டத்தை தொடக்கியதில் இருந்து, சுமார் 3,000 “எதிரி போராளிகளை” ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொலைசெய்திருப்பதாக கூறிக் கொள்கிறது. ஆளில்லா விமானத் தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதருடனும் சராசரியாக சுற்றி நின்றிருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் உள்முக ஆவணங்கள் காட்டுகின்றன, இதன் பொருள் யெமன், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் வான்வழி பயங்கரவாதப் பிரச்சாரத்தில் உண்மையாகப் பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரக்கணக்காய் அதிகரிக்கிறது என்பதாகும்.

அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கத்தின் கூற்றுப்படி, “எந்த யுத்தக்களத்தில் இருந்தும் விலகி, எந்த குற்றச்சாட்டு அல்லது விசாரணையும் இல்லாமல், குறிவைத்துக் கொல்கின்ற வேலைத்திட்டம், உரிய பரிசீலனை நடைமுறைக்கான அரசியல்சட்ட உத்தரவாதத்தை மீறுகிறது. வேறு எந்த வழியுமில்லாதபோது மட்டுமே ஆயுத மோதல் வளையங்களுக்கு வெளியில் மரணமேற்படுத்தக்கூடிய படைவலிமை பயன்படுத்தப்படலாம் என்ற சர்வதேசச் சட்டத்தையும் இது மீறுகிறது.”

ஆளில்லா விமானம் மூலமாக கொலைசெய்யும் வேலைத்திட்டத்தில் கூகுள் உடந்தையாக இருந்தது என்பது அமெரிக்க இராணுவத்தின் குற்றவியல் நடவடிக்கைகளில் நிறுவனத்தை சம்பந்தப்படுத்துகிறது, சென்ற வாரத்தில் நிறுவனத்திற்குள்ளான ஒரு சுற்றறிக்கையில் அதிகாரிகள் இந்த ஒத்துழைப்பை ஒத்துக் கொண்டதன் பின்னர் நிறுவன ஊழியர்கள் மத்தியில் இது கோபத்தைத் தூண்டியிருந்ததாக Gizmodo வலைத் தளத்தில் வந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது.

தனது நடவடிக்கைகளுக்கு எழக்கூடிய சாத்தியமான சட்டரீதியான எதிர்விளைவுகள் மற்றும் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிலவும் அமெரிக்காவின் குற்றவியல் போர்களுக்கான குரோதம் ஆகியவற்றை மனதில் கொண்டு, கூகுள் அதன் ஒத்துழைப்பானது “தாக்குதல்-அல்லாத பயன்பாடுகளுக்கு மட்டுமே” என்று ஒரு அறிக்கையில் வலியுறுத்தியதோடு, “இந்தத் தொழில்நுட்பம் மனிதத் திறனாய்வுக்காக படங்களை அடையாளக்குறியிடுகிறது” என்று கூறியது.

ஆனால், ஒரு விமர்சனப்பார்வையற்ற, அரசு-கட்டுப்பாட்டிலான ஊடகங்களுக்கு பேசுபுள்ளிகளை வழங்கும் நோக்கத்துடனான இந்த அபத்தமானதும் அலட்சியமானதுமான நடிப்பு, ஒரு மாஃபியாவின் சுட்டுவிட்டு ஓடும் வாகனத்தை ஓட்டுபவர், தான் விசை வில்லை (trigger) அழுத்ததால் அந்தக் கொலையில் தான் உடந்தையாக இல்லை என்று கூறுவதற்கு நிகரானதாகும்.

அமெரிக்க எல்லைகளுக்குள் உள்ளிட உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கக் குடிமக்களை படுகொலை செய்வதற்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் உரிமை கோரியிருக்கிறது. 2011 இல் ஒபாமா நிர்வாகம், யெமனில் ஒரு வேட்டையாடும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலமாக அன்வர் அல்-அவ்லாகியை படுகொலை செய்தது, அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து இன்னொரு ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அவரது மகனான 16 வயது அப்துல்ரஹ்மான் அல்-அவ்லாகியை படுகொலை செய்தது.

இத்தகைய தீய நடவடிக்கைகளில் கூகுள் பங்காளியாவது, உலகெங்கிலும் உள்ள சட்டரீதியான தடைகளை மட்டுமல்ல, தீவிர வர்த்தகரீதியான பின்விளைவுகளுக்கும் கூட அதனை அச்சுறுத்தக் கூடியதாகும். இந்த அபாயங்களையும் பொருட்படுத்தாமல் இதில் ஈடுபடுவதற்கு நிறுவனம் எடுத்திருக்கும் முடிவானது பெரும் தொழில்நுட்ப பகாசுர நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் இராணுவ ஒப்பந்தங்கள் மேலும் மேலும் அதிமுக்கியமான பாத்திரம் வகிப்பதை சுட்டிக்காட்டுகிறது.

பாதுகாப்புத் துறை சென்ற ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் (artificial intelligence) திட்டங்களுக்காக குறைந்தபட்சம் 7.4 பில்லியன் டாலர்கள் செலவிட்டிருந்தது, இந்த ஆண்டில் இந்த செலவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் பெரும்பகுதி ஆல்ஃபபெட் (கூகுள்), அமசான், மற்றும் என்விடியா போன்ற பெருநிறுவனங்களுக்கு -இவற்றின் செயற்கை நுண்ணறிவுத்திறன் பென்டகன் தனது வளாகத்திற்குள் மேற்கொள்ளும் திட்டங்களின் செயற்திறனை விஞ்சியவையாக கூறப்படுகிறது- பாயவிருக்கிறது.

சென்ற ஆண்டின் போது, கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய அனைத்தும் அவர்களது பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தணிக்கை செய்து, அமெரிக்க போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துகின்ற மற்றும் கண்டனம் செய்கின்ற செய்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் “மாற்று” கண்ணோட்டங்களைக் காட்டிலும் “அங்கீகாரமான” மற்றும் “நம்பிக்கைக்குரிய” செய்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தன. தொழில்நுட்ப நிறுவனங்கள் அத்தனையிலும், தனது தளத்தில் தணிக்கைக்கு தான் கொண்டுள்ள உறுதி குறித்து சற்றும் மனசஞ்சலம் கொண்டிராததாக இருக்கும் நிறுவனமான ஃபேஸ்புக், “வைரல்” காணொளிகளை பின்னுக்குத் தள்ளுவது மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற “நம்பிக்கைக்குரிய” செய்தி ஆதாரங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றின் ஒரு விளைவாக பயனர் ஈடுபாடு சரியும் என்று எதிர்பார்ப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.   

இந்த நிறுவனங்கள் அதிக கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை திணிக்கின்ற நிலையில் பயனர் நுகர்வில் ஓரளவுக்கு வீழ்ச்சி ஏற்படுவதை எதிர்பார்க்கின்றன என்பதால், இலாபகரமான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் அவற்றின் நிகர வருவாயை அதிகரிப்பதற்கும் அவர்களது நிதி நலன்களை அமெரிக்க அரசின் போர்-புரியும் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுடன் முன்னெப்போதினும் நெருக்கமாக தங்களை பின்னால் நிறுத்திக் கொள்வதற்குமான ஒரு வழிவகையாக இருக்கின்றன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த மாதத்தில் கூறியிருந்தவாறாய் ஒரு “செயற்கை நுண்ணறிவு ஆயுதப் போட்டியில்” தன்னைக் காண்கின்றதொரு முடிவுக்கு பென்டகன் வந்துசேர்ந்திருக்கின்ற அதேநேரத்தில்தான், இந்த தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தணிக்கை நடவடிக்கைகளைத் திணிப்பதை நோக்கி நகர்ந்திருக்கின்றன. அமெரிக்கா ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற போர்கள், வெளிநாட்டு நிலைநிறுத்தங்கள், மற்றும் ஸ்திரம்குலைப்பு நடவடிக்கைகளின் பாரிய தடவாளப் போக்குவரத்து சுமை இல்லாமல் புதிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அமலாக்குவதற்கும் திறம்பெற்றிருக்கின்ற ரஷ்யா மற்றும் சீனா போன்ற கணிசமான இராணுவ சக்திகளின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், வருங்கால மோதல்களில் அமெரிக்காவின் இராணுவ அனுகூலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இருக்கும் ஒரே வழி சிலிக்கன் பள்ளத்தாக்கினை போரிடும் எந்திரத்துடன் ஒருங்கிணைப்பதே என்ற முடிவுக்கு அமெரிக்க இராணுவத் திட்டமிடலாளர்கள் வந்திருக்கின்றனர்.

எகனாமிஸ்ட் இதழ் சமீபத்தில் “அடுத்த போர்” என்ற தலைப்பிலான தனது முதல் பக்க கட்டுரையில் கூறியிருப்பதன் படி, ”தானாகக் கற்றுக்கொள்ளும் அமைப்புகள், மனிதன்-எந்திரம் சேர்ந்து முடிவெடுத்தல், உதவியுடனான மனித நடவடிக்கைகள், முன்னேறிய இயக்கும்-மனிதர்-இருக்கின்ற/இயக்கும்-மனிதர்-இல்லாத முறை நடவடிக்கைகள்” ஆகியவற்றில் கவனம் குவிப்பதன் மூலமாக சீனாவின் “விஞ்சும் அச்சுறுத்தலை” முறியடிப்பதற்கு “மூன்றாவது ஈடுகட்டல்” (Third offset) என்று சொல்லப்படுவதான ஒரு மூலோபாயத்தை பென்டகன் வகுத்திருக்கிறது.

இந்த மூலோபாயம், உலகின் மிகவும் வளர்ச்சியடைந்ததாக திகழ்கின்ற அமெரிக்க தனியார் தொழில்நுட்பத் துறையை பணியமர்த்துவதைச் சுற்றியதாகும். எகானாமிஸ்ட் கூறுகின்ற வார்த்தைகளில், அமெரிக்காவானது “தொடர்ந்தும் வர்த்தக ரீதியான செயற்கை நுண்ணறிவு நிதியாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறது, அத்துடன் வேறெந்த நாட்டை விடவும் அதிகமாய் இங்கு கூடுதலான நிறுவனங்கள் இந்தத் துறையில் வேலை செய்து கொண்டிருக்கின்றன.”

மரைன் கார்ப்ஸ் தளபதியும், கூகுள் ஒரு முக்கியமான ஒத்துழைப்பாளராக இருக்கும் ”மேவன் திட்டம்” என்று சொல்லப்படும் திட்டத்தின் தலைவருமான ட்ரூ குக்கோர் சென்ற ஆண்டில் ஒரு கருத்தரங்கில் பேசுகையில், அமெரிக்கா ஒரு “செயற்கை நுண்ணறிவு ஆயுதப் போட்டி”யின் மத்தியில் இருப்பதாக அறிவித்தார், “எரிக் ஷிமித் கூகுளை இப்போது ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக அழைக்கிறார், தரவு நிறுவனமாக அல்ல என்பதை உங்களில் பலரும் கவனித்திருப்பீர்கள்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அவர் மேலும் கூறினார், “அரசாங்கத்திற்கு அவசியமாக இருக்கின்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை வழங்குகின்ற ’கருப்பு பெட்டி’ எதுவும் இல்லாதிருக்கிறது... முக்கிய கூறுகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும்... நம் உடன் இருக்கின்ற வர்த்தகக் கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்வதே அதைச் செய்வதற்கான ஒரே வழியாகும்.”

தொழில்நுட்ப பகாசுர நிறுவனங்களது பரந்த கணிதத் திறன், செயற்கை நுண்ணறிவுத் திறன், மற்றும் அந்தரங்கமான பயனர் தகவல்களது பாரிய தரவுத்தளம் ஆகியவற்றுக்கும் அமெரிக்க இராணுவத்தின் கிட்டத்தட்ட வரம்பற்ற நிதிஒதுக்கீட்டுக்கும் இடையிலான பரஸ்பர பரிவர்த்தனையை சீர்படுத்தும் பொருட்டு, பென்டகன் சிலிக்கன் பள்ளத்தாக்குடன் வரிசையாக கூட்டுகளை அமைத்திருக்கிறது. 2015 இல் பென்டகன் Defense Innovation Unit Experimental (DIUx) என்று சொல்லப்படுகின்ற தனியார்-அரசு நிதியாதார வாகன அமைப்பை உருவாக்கியது, இதன் தலைமையகம் கலிபோர்னியா, மவுண்டெய்ன் வியூவில் கூகுளின் பிரதான வளாகத்தில் இருந்து சில நிமிட பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.


பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு புதுமைகள் ஆலோசனை வாரியம் குறித்து எரிக் ஷிமித் மற்றும் ஆஷ் கார்ட்டர் சந்தித்து பேசுகின்றனர்

2016 இல், “சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பப் புதுமைகளையும் சிறந்த நடைமுறைகளையும் அமெரிக்க இராணுவத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கும்” நோக்கத்துடன் பாதுகாப்பு புதுமைகள் ஆலோசனை வாரியம் என்று அழைக்கப்படுவதான ஒரு அமைப்பை பென்டகன் உருவாக்கியது, அதற்கு தலைவராக அமர்த்தப்பட்டவர் வேறு யாருமல்ல, கூகுளின் முன்னாள் தலைவரான எரிக் ஷிமித் தான்.

தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் பென்டகனுடன் ஒத்துழைத்து வேலை செய்வதில் தயக்கம் காட்டுவது குறித்து சென்ற இலையுதிர் காலத்தில் ஷிமித் புகாரிட்டார், “இராணுவ-தொழிற்துறை வளாகமானது ஏதோவொருவிதத்தில் தங்களது வேலையை மக்களை சரியற்ற விதத்தில் கொல்வதற்காக பயன்படுத்துகிறது என்பதான பொதுவான ஒரு கவலை தொழில்நுட்ப சமூகத்தில் இருக்கிறது” என்ற உண்மையைக் கூறி புலம்பினார்.

ஆனால், ஏவுகணைகளை வழிநடத்துவதற்கும் பலியாக வேண்டியவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் தொழில்நுட்ப பகாசுர நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை பயன்படுத்திக் கொள்வதையும் தாண்டி, சிலிக்கன் பள்ளத்தாக்குடன் பென்டகன் சேர்ந்து வேலைசெய்வதன் ஊரறிந்த இரகசியம் என்னவென்றால், திரைமறைவில், மிகப்பெரும் அளவிலான அந்தரங்கமான, தனிநபர் விவரங்கள் கண்காணிப்பு மற்றும் குறிவைப்பு நோக்கங்களுக்காக பென்டகனுக்கும் மற்ற உளவு முகமைகளுக்கும் பாய்ச்சப்பட இருக்கிறது.

மேவன் திட்டத்தில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் லெப்டினெண்ட் ஜெனரல் ஜோன் ஷானஹான் சென்ற ஆண்டில் ஒரு கருத்தரங்கில் தெரிவித்ததைப் போல, “நடவடிக்கையின் இறுதியில் கூகுளை நீங்கள் பார்க்கலாம். அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் சொல்வதில்லை, கூகுளில் இருக்கும் எவரேனும் பின்னர் என் காதில் கிசுகிசுக்க விரும்பினால் ஒழிய.”

இராணுவ-உளவு எந்திரமாக முன்னர் அறியப்பட்டு வந்திருக்கும் ஒன்றிற்குள்ளாக கூகுள் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைவதானது மனித வரலாற்றில் இதுவரை அறிந்திராத அரசு ஒடுக்குமுறையின் ஒரு பரந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கை தெரிவிப்பதைப் போல, பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு “தேசிய அதிகாரத்தின் பல கூறுகளும் —இராஜதந்திரம், தகவல், பொருளாதாரம், நிதி, சட்ட அமலாக்கம், மற்றும் இராணுவம்— பிசிறில்லாமல் ஒருங்கிணைப்பு செய்யப்படுவதற்கு” அவசியமாக இருக்கிறது.

இந்த மேலெழுந்து வருகின்ற இராணுவ-தகவல்தொழில்நுட்ப-உளவு தொடர்பின் அச்சாணியாய் தணிக்கையும் கண்காணிப்பும் இருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனா போன்ற “சமபல” இராணுவங்களுக்கு எதிராக “கொதிக்கின்ற” போர்களை நடத்துவதற்கு அமெரிக்கா தயாரிப்பு செய்கின்ற நிலையில், உள்நாட்டிலான போர்-எதிர்ப்பு மனோநிலையின் வளர்ச்சியானது, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், சமூக ஊடக தகவல் பரிவர்த்தனைகளின் அடிப்படையிலான அரசியல் விபரப்படத்தை உருவாக்கி, பாரிய தணிக்கையைப் பயன்படுத்துவதன் மூலமாக எதிர்த்துப் போரிடப்படும்.

தணிக்கைக்கான இந்த முனைப்புக்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கும் உலக சோசலிச வலைத் தளம் முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. தேடல் முடிவுகளை அரசியல்ரீதியாக தணிக்கை செய்வதை —இடது-சாரி மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களுக்கான தேடல் போக்குவரத்திலான பாரிய வீழ்ச்சிக்கு இது இட்டுச்சென்றிருக்கிறது— கூகுள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரி ஒரு பகிரங்கக் கடிதத்தை 2017 ஆகஸ்டில் நாங்கள் வெளியிட்டோம். இணைய தணிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சர்வதேச கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு அத்தனை “சோசலிச, போர்-எதிர்ப்பு, இடது-சாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள், அமைப்புகள், மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு” உலக சோசலிச வலைத் தளம் ஜனவரியில் ஒரு அழைப்பை வெளியிட்டது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முனைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்வதற்கும் சோசலிசத்துக்கான அதன் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கும் நாங்கள் அழைக்கிறோம்.