ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google’s alliance with the military: The ruling class responds to social unrest in America

இராணுவத்துடன் கூகுளின் கூட்டு: அமெரிக்காவில் சமூக அமைதியின்மைக்கு ஆளும் வர்க்கம் விடையிறுக்கிறது

Andre Damon
10 March 2018

மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலும் அதன் டிரோன் போர் மற்றும் படுகொலை திட்டத்தின் பாகமாக தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில், அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்கு உதவ கூகுள் செயற்கை வேவுபார்ப்பு மென்பொருளை வழங்கியுள்ளதை கடந்த வாரம் அது உறுதிப்படுத்தியது.

முதலில் இத்தகவலை வெளியிட்ட Gizmodo வலைத் தளம், கூகுளைப் பயன்படுத்தும் இராணுவ திட்டம், ஆப்ரேஷன் மேவன் என்றழைக்கப்படுவதாக அறிவித்தது. இத்திட்டத்தைக் குறித்து கடந்த ஆண்டு அறிவித்த ஓர் இராணுவ அறிக்கை, அது "நகரும் அல்லது ஓரிடத்தில் நிற்கும் காட்சியிலிருந்து தேவையான பகுதிகளைத் தன்னிச்சையாக பிரித்தெடுக்கும் வகையில் —அதாவது இயந்திர புரிதல் மற்றும் ஆழ்ந்த புரிதலின் ஓர் அம்சமாக— கணினி கண்காணிப்பில் ஒருகுவிந்திருக்கும்,” என்று குறிப்பிடுகிறது.

“அறிவுசார் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கான இயக்குனரகம்-போர்முறை ஆதரவு எனும் பிரிவின், தேடல் மென்பொருள் வழிமுறையின் (அல்காரித) போர்முறை கலப்பு-செயல்பாட்டு குழுவின் தலைவராக" அடையாளம் காணப்படும், கடற்படை பிரிவின் கர்னல் Drew Cukor, அமெரிக்கா "செயற்கையறிவு ஆயுத போட்டியில்" இருப்பதாக கூறினார், அந்நேரத்தில் “[கூகுளின் தாய் நிறுவனமான Alphabet இன் நிர்வாக தலைவர்] எரிக் ஷிமித் கூகுளை செயற்கையறிவு நிறுவனம் என்றழைக்கிறார்,” என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த வெளிப்பாடுகள், உலகெங்கிலும் அமெரிக்க அரசின் குற்றகரமான நடவடிக்கைகளில் நேரடியாக கூகுளையும் உடந்தை ஆக்குகிறது. இவை, மிகப் பெரும் இணைய மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் மற்றும் அரசின் ஒடுக்குமுறை எந்திரத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த உறவையும் கூடுதலாக அம்பலப்படுத்துகின்றன.

தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்களின் பணிக்குழுக்களுக்கும் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கும் இடையே ஒரு சுழல் கதவு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத அரசு விசாரணை ஒன்றில் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அதன் தணிக்கைகளுக்கான படையை இரட்டிப்பாக்கி, இந்தாண்டு இறுதியில் அது 20,000 ஐ எட்ட உள்ளதாகவும், முன்னர் "பயங்கரவாத எதிர்ப்பு துறையில் வேலை செய்துள்ள" “முன்னாள் உளவுத்துறை மற்றும் சட்ட-அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு" அந்நிறுவனம் வேலை நியமனத்தில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் பெரும் பீற்றினார்.

ஷிமித் அவரே கூட பென்டகனின் ஓர் ஆலோசகராக மற்றும் பென்டகனின் பாதுகாப்புத்துறை கண்டுபிடிப்பு ஆலோசகர் குழு தலைவராக ஆகியுள்ளார். பாதுகாப்புத்துறை கண்டுபிடிப்புகளுக்கான பரிசோதனை கூடம் (DIUx) என்றழைக்கப்படும் ஒரு தனியார்/இராணுவ கூட்டு பங்காண்மை, கூகுளின் முக்கிய தலைமையகத்திலிருந்து சில நிமிடங்களில் செல்லக்கூடிய தொலைவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்திகள் அமெரிக்காவுக்குள்ளே ஜனநாயக உரிமைகள் தொடர்பாக மிகவும் நீண்டகாலத்திற்கு மோசமான தாக்கங்களைக் கொண்டிருக்கும். ஏகாதிபத்திய போரும் உள்நாட்டு ஒடுக்குமுறையும் அதே ஆளும் வர்க்க கொள்கையின் இரண்டு பக்கங்களாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளின் போக்கில், கூகுள், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் இன்னும் பல தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுடன் நெருக்கி இணைந்து இயங்கி, தேடல் முடிவுகள் மற்றும் செய்தி ஓடைகளில் (news feed) மோசடிகள் செய்து, மிக வேகமாக இணைய கருத்துக்களைத் தணிக்கை செய்ய நகர்ந்துள்ளன. “பொய் செய்திகள்" மற்றும் "ரஷ்யாவின் தலையீடு" தொடர்பாக சிஐஏ மற்றும் ஜனநாயக கட்சிக்குள் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், இந்நடவடிக்கைகளின் நோக்கம் உள்நாட்டு எதிர்ப்பை மவுனமாக்குவது, ஒடுக்குவது மற்றும் குற்றகரமாக்குவது ஆகும்.

கடந்த ஏப்ரலில் முதலில் வெளியிடப்பட்ட கூகுளின் தேடல் மென்பொருள் வழிமுறையில் அது செய்திருந்த தணிக்கையைப் பின்தொடர்ந்து, முன்னேறிய "மாற்று கண்ணோட்டங்கள்" கொண்ட சுதந்திரமான செய்தி அமைப்புகளை பின்னுக்குத் தள்ளி, நியூ யோர்க் டைம்ஸ் போன்ற "நம்பகமான" செய்தி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக பேஸ்புக்கின் செய்தி ஓடைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பரந்தளவில் பல இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி உள்ள ஒரு பிரச்சாரத்தின், முக்கிய இலக்கில் உலக சோசலிச வலைத் தளம் வைக்கப்பட்டுள்ளது.

உலகைக் கட்டுப்படுத்தவும், ரஷ்யா மற்றும் சீனா உட்பட மிகப்பெரிய சக்திகளுடன் ஓர் உலகளாவிய மோதலுக்கு தயாரிப்புகளைச் செய்வதற்கும் தொழிலாள வர்க்க போராட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அதன் வளர்ச்சியைக் குறித்து பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கு பீதியுற்றுள்ளது.

இந்த மரணகதியிலான அச்சுறுத்தல் அமெரிக்காவில் பரவி வரும் சமூக அமைதியின்மை அலையில் அப்பட்டமாக வெளிப்படுகிறது, அது தொழிற்சங்கங்கள் உட்பட முதலாளித்துவ அரசு அமைப்புகளிலிருந்து சுதந்திரமாக உடைத்துக் கொள்ள தொடங்கி உள்ளது. தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒரு முதல் கிளர்ச்சியாக வடிவெடுத்த மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் நாடெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளிடம் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவுக்கு உள்ளேயும் அதன் எல்லைகளைக் கடந்தும் தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள அனுமதிப்பதில், சமூக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றன. பெருநிறுவன ஊடங்கள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. “மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் பாரம்பரிய தொழிற்சங்கவாதத்தின் வழமையான வழிமுறைகளுக்கு வெளியே ஒழுங்கமைக்கவும் செயல்படவும் வழிகளைக் கண்டனர். அம்மாநிலம் எங்கிலுமான ஆசிரியர்கள் மற்றும் சேவை தொழிலாளர்கள் ஒரு மிகப்பெரிய பேஸ்புக் குழுவில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டனர்,” என்று நியூ யோர்க் டைம்ஸ் இவ்வார தொடக்கத்தில் கவலை தொனிக்க கருத்துரைத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் “தொழிலாளர் அமைதியின்மையில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு" குறித்து எச்சரித்ததுடன், மேற்கு வேர்ஜினியாவில் இருந்து ஓக்லஹோமா வரையில் நாடெங்கிலும் ஆசிரியர்கள் அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற உண்மையை அது சுட்டிக்காட்டியது.

ஆளும் உயரடுக்கு அனைத்திற்கும் மேலாக எதை குறித்து அஞ்சுகிறது என்றால் இரு-கட்சி ஆட்சிமுறை மற்றும் அதை பிரதிநிதித்துவம் செய்கின்ற நிதியியில் பிரபுத்துவத்திற்கு சவால்விடுக்கும் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கம் உருவாவது குறித்து அஞ்சுகின்றது. வர்க்க போராட்டம் தீவிரமடைந்து வருவதுடன் சேர்ந்து வாசகர் எண்ணிக்கையிலும் வேகமான வளர்ச்சியைக் கண்டு வரும் WSWS வகிக்கும் பாத்திரம் இதில் பெரிதும் நன்கறியப்பட்டதாகும். பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் WSWS கட்டுரைகளைப் படித்தும் பகிர்ந்தும் கொண்ட நிலையில், ஏற்கனவே 2015 இல் UAW சங்கத்திற்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர் கிளர்ச்சியின் அனுபவத்தை ஆளும் வர்க்கம் பெற்றுள்ளது.

ஒரு சமூக வெடி உலையின் மீது நின்றிருக்கும் ஆளும் வர்க்கம் பெரும் பிரயத்தனத்துடன் தகவல்களைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவம் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்காக என்னவெல்லாம் கருவிகளை உருவாக்கிறதோ, அவை உள்நாட்டில் பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளின் "மொத்த படைகளுக்கும்" விரிவாக்கப்படும். உலகெங்கிலுமான முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் இதேபோன்ற நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருகின்றன.

எச்சரிக்கை மணி ஒலித்தாகப்பட வேண்டும்! தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பானது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பேச்சு சுதந்திரம் மற்றும் இணைய சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமானது, அதேநேரத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்கான, இராணுவ-உளவுத்துறை முகமைகளை அழிப்பதற்கான, மிகப்பெரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிற மிகப்பெரிய பெருநிறுவனங்களை அரசு மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டில் அமைந்த பயன்பாடுகளாக மாற்றுவதற்கான ஒரு போராட்டமும் ஆகும்.

உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), தணிக்கையை நோக்கி அதிகரித்து வரும் முனைவை அம்பலப்படுத்தி எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்காக, “இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்" என்று, அமெரிக்கா எங்கிலும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், அவற்றைக் குறித்து சாத்தியமான அளவுக்கு பரவலாக பரப்புமாறும், போர், சமத்துவமின்மை மற்றும் இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க WSWS ஐ தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் எமது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.