ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why the far-right won in Italy

இத்தாலியில் அதிவலது ஏன் வென்றது

Peter Schwarz
7 March 2018

இத்தாலியின் மார்ச் 4 நாடாளுமன்ற தேர்தல்களின் முடிவுகளை, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகக் கட்சி (PD) மற்றும் அதன் போலி-இடது தொங்குதசைகளான உத்தியோகபூர்வ "இடதின்" தோல்வியே, நகைச்சுவையாளர் பெப்பே கிறில்லோ தலைமையிலான ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S) மற்றும் முன்னர் Lega Nord என்று அழைக்கப்பட்ட அதிதீவிர வலது Lega ஆகியவை உட்பட அதி வலதின் ஒரு தேர்தல் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.

அவர்களின் ஜனநாயக சமூக வாக்குறுதிகளைக் கைவிட்டு, இந்த அதிவலது கட்சிகள் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் உட்பட, இப்போது பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஜனநாயகக் கட்சி (PD) இன் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளைத் தீவிரப்படுத்தும். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது Lega தலைவர் மத்தேயோ சால்வினி அவர் கட்சி பதவிக்கு வந்தால் அரை மில்லியன் புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த அச்சுறுத்தி இருந்தார்.

மற்ற Lega அரசியல்வாதிகள் தோல் நிறம் மற்றும் மத அடிப்படையில் இரயில் வண்டிகளைப் பிரித்து வைக்க விரும்புகின்றனர். அவர்கள் அகதிகளின் படையெடுப்பு காரணமாக வெள்ளையினம் நிர்மூலமாவதாக கூறப்படுவதன் மீது பொரிந்து தள்ளினர். ஆரம்பத்தில் ஸ்தாபக கட்சிகளுக்குள் நிலவும் ஊழல் மீது பிரதானமாக ஒருங்குவிந்திருந்த M5S, நீண்டகாலமாகவே அகதிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் நீண்டகாலமாக போர்குணமிக்க பாசிச-விரோத பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாடான இத்தாலியில் இந்தளவுக்கு ஆக்ரோஷமாக அதிவலதால் தலை தூக்க முடிகிறது என்றால், அது உத்தியோகப்பூர்வ "இடதின்" முழு திவால்நிலைமைக்குச் சான்று பகிர்கிறது. வலதுசாரி கட்சிகள் பின்பற்றிய இனவாத மற்றும் பாசிசவாத கொள்கைகளை பரந்த பெருந்திரளான தொழிலாளர்கள் ஆதரிக்கவில்லை. இத்தேர்தலுக்கு வெறும் ஒரு சில நாட்களுக்கு முன்னர், இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக 100,000 பேர் ரோமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Lega மற்றும் M5S க்கு கிடைத்த வாக்குகள் பெரிதும் ஸ்தாபக கட்சிகள் மீதான வெறுப்பின் வெளிப்பாடாகும், இவை சமூக பேரழிவுக்கு தலைமை தாங்கி இருந்ததுடன், ஆழமாக வெறுக்கப்பட்ட நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போர் கொள்கைகளை ஆதரித்திருந்தன.

அமெரிக்காவில், வோல் ஸ்ட்ரீட் உடனும் மற்றும் இராணுவ/உளவுத்துறை எந்திரத்துடனும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் நெருங்கிய தொடர்புகள் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நுழைவதற்கு வழி வகுத்தது. ஐரோப்பாவில், சமூக ஜனநாயக கட்சிகள் நவ-தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றியதன் காரணமாக தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை இழந்துள்ளன.

ஒவ்வொரு விடயத்திலும், அதிவலது தான் ஆதாயமடைந்துள்ளது. பிரான்சில் கடந்த ஆண்டு தேர்தலில் தேசிய முன்னணி இரண்டாம் இடத்தில் வந்தது; ஜேர்மனியில் அதிவலது அதி-தேசியவாத ஜேர்மனிக்கான மாற்றீடு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தது, ஆஸ்திரியாவில், சுதந்திரக் கட்சி (FPÖ) அரசாங்க பதவியைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

பெயரளவிலான "இடது" கட்சிகளின் தொழிலாள-வர்க்க விரோத கொள்கைகளின் காரணமாக வலதுசாரியின் வளர்ச்சி, இத்தாலியில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 1990 களுக்குப் பின்னர் இருந்து, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த வாரிசு அமைப்புகள் மீண்டும் மீண்டும் நிதியியல் சந்தைகளின் நலன்களை அமலாக்கியதுடன், தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக செலவின குறைப்பு கட்டளைகளை நிறைவேற்றின.

கடந்த ஆறு ஆண்டுகளாக, அடுத்தடுத்து வந்த நான்கு பிரதம மந்திரிகள்—தொழில் வல்லுனரான மரியோ மொன்டி, இவரை ஜனநாயகக் கட்சியினர் ஆதரித்தனர், மூன்று ஜனநாயகக் கட்சி பிரதம மந்திரிகள் (என்ரிகோ லெட்டா, மத்தேயோ ரென்சி மற்றும் பாவுலோ ஜென்ரிலோனி)—தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று வெற்றிகளைப் பறித்துக் கொண்டதுடன், சமூக சலுகைகளையும் வெட்டித் தள்ளியுள்ளனர்.

இத்தகைய கொள்கைகளின் விளைவுகளை இத்தாலியின் நாசகரமான சமூக நிலைமைகளில் காணலாம், அங்கே 10 மில்லியன் பேர் வறுமையில் வாழ்கின்றனர், 7.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றியோ அல்லது தகுதி குறைந்த வேலையிலோ உள்ளனர், மேலும் 10 மில்லியன் பேர் மருத்துவக் காப்பீடின்றி உள்ளனர். உத்தியோகபூர்வ "இடதோ", வருவாய் மற்றும் செல்வ வளத்தை அடிமட்டடத்திலிருந்து உயர்மட்டத்திற்கு விரைவாக மறுபகிர்வு செய்வதற்கு தலைமை தாங்கி உள்ளது. இன்று, மக்கள்தொகையில் 1 சதவீத மிகப் பணக்காரர்கள் 20 சதவீத மிக வறியவர்களைக் காட்டிலும் 240 மடங்கிற்கு அதிகமாக செல்வ வளத்தைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

மொத்தம் பதிவான வாக்குகளில் ஏறத்தாழ அரைவாசியை கூட்டாக வென்றுள்ள ஐந்து நட்சத்திர இயக்கமும் Lega உம், அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான மக்கள் கோபத்திற்கு முறையீடு செய்திருந்தன. இரண்டு கட்சிகளுமே ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கியதுடன், தேசியவாதத்தை ஊக்குவித்தன மற்றும் அகதிகளைப் பலிக்கடா ஆக்கின. வடக்கு இத்தாலியின் செல்வந்தர் பகுதியில் பலமான இருப்பைக் கொண்டுள்ள Lega கட்சி, வரி வெட்டுக்களுக்கான கோரிக்கைகளுடன் வாய்வீச்சுக்களையும் சேர்த்திருந்தது. வறிய தெற்கு பகுதியில் அதிக வெற்றி பெற்ற ஐந்து நட்சத்திர இயக்கம், உத்தரவாதமான அடிப்படை வருவாய் மற்றும் நல்லதொரு ஓய்வூதியங்களுக்கு போராட சூளுரைத்தது—இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அதற்கு எந்த உத்தேசமும் இல்லை.

இத்தேர்தலில் மக்களுக்கே அதிகாரம் (Potere al Popolo) கூட்டணி என்று போட்டியிட்ட போலி-இடது அமைப்புகளும், அதிதீவிர வலதின் வளர்ச்சிக்கு பொறுப்பாகின்றன. இந்த போக்குகள் எல்லாம் தங்களை "இடதுசாரி" என்றும், “முதலாளித்துவ எதிர்ப்பு" என்றும் சித்தரித்து கொள்கின்றன, ஆனால் பல ஆண்டுகளாக இவை ஜனநாயக கட்சியின் மற்றும் தொழிற்சங்கங்களின் வலதுசாரி கொள்கைகளை ஆதரித்துள்ளன. மக்களுக்கே அதிகாரம் கூட்டணிக்குப் பின்னால் Rifondazione Comunista கட்சி உந்துசக்தியாக இருந்தது, இக்கட்சி 1990 களில் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுப்பதில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தியதுடன், இறுதியில் ரோமனோ பிரோடி இன் வெறுக்கப்பட்ட மத்திய-இடது அரசாங்கத்திற்குள் நுழைந்தது.

ஸ்பெயினின் பொடெமோஸ், ஜோன்-லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களை விட மிகவும் கடுமையான சமூக தாக்குதல்களைத் திணித்த கிரீஸின் சிரிசா ஆகியவை மக்களுக்கே அதிகாரம் கூட்டணியின் சர்வதேச முன்மாதிரிகளில் உள்ளடங்குகின்றன. ஓர் உண்மையான மார்க்சிச மற்றும் சோசலிச மாற்றீடு இல்லாததால், இந்த காட்டிக்கொடுப்புகள், தொழிலாளர்களையும், இளைஞர்களையும் மற்றும் நிராதரவான மக்கள் பிரிவுகளையும் M5S மற்றும் Lega போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க தள்ளியது. மக்களுக்கே அதிகாரம் இத்தேர்தலில் 1 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றது.

உத்தியோகபூர்வ இத்தாலிய "இடது" மற்றும் அதன் போலி-இடது தொங்குதசைகளின் தோல்வியானது, அதிவலதின் வளர்ச்சி மற்றும் ஆளும் உயரடுக்குகள் போர், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்கள், அதுபோன்றவொரு இயக்கம் உருவாவதற்கான நிலைமைகள் சர்வதேச அளவில் கனிந்து வருகின்றன என்பதையே காட்டுகின்றன.

இந்த இத்தாலிய தேர்தல், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வர்க்க போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கி இருப்பதைக் குறிக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஒரு புதிய அரசாங்கம் அமைவதற்கு பல மாதங்கள் இழுபறியாக இருக்கலாம், ஒருவேளை புதிய தேர்தல்களே கூட ஏற்படலாம். இத்தாலியின் வங்கி அமைப்புமுறை முற்றிலும் தோல்வி அடையும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறது. ஆளும் உயரடுக்குகள் ஐரோப்பாவை மீள்இராணுவமயப்படுத்தவும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் முயன்று வருகின்ற அதேவேளையில், அக்கண்டம் முழுவதும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

1930 களின் போது ஜேர்மன் மற்றும் இத்தாலிய பாசிசம் மேலெழுந்ததற்கு இடையே, லியோன் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், “அரசியல் நிலைமை ஒட்டுமொத்தமாக முக்கியமாக பாட்டாளி வர்க்க தலைமையின் வரலாற்று நெருக்கடியால் குணாம்சப்பட்டுள்ளது,” என்றார். இதுவே இன்றைய மிக அத்தியாவசிய கேள்வியாக நிற்கிறது.

ஒவ்வொன்றும் இப்போது, இத்தாலிய, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறனை அணிதிரட்டுவதற்கு ஒரு மார்க்சிச கட்சியைக் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது. இதன் அர்த்தம், இத்தாலியிலும் ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.