ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French neo-fascist Marine Le Pen indicted for tweeting pictures of IS killings

IS கொலைகள் தொடர்பான படங்களை ட்வீட் செய்தமைக்காக பிரான்சின் நவ-பாசிச மரின் லு பென் மீது குற்றப்பத்திரிகை

By Francis Dubois
3 March 2018

இஸ்லாமிக் அரசு (IS) அமைப்பின் படுகொலை நிகழ்த்தும் மூன்று படங்களை 2015 டிசம்பரில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தமைக்காக நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) தலைவரான மரின் லு பென் மீது வியாழனன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. FN இன் இன்னுமொரு பிரதிநிதியான ஜில்பேர் கோலார் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளில் ஜனவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரது நாடாளுமன்றரீதியான பாதுகாப்புவளைய அந்தஸ்து செப்டம்பரில் தேசிய சட்டமன்றத்தினால் அகற்றப்பட்டது, அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மரின் லு பென்னின் பாதுகாப்புவளைய அந்தஸ்து அகற்றப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் ஒரு பிற்போக்குத்தனமான ஷரத்தின் ஒரு அரக்கத்தனமான பொருள்விளக்கத்தின் அடிப்படையில் இந்த இரண்டு அதி-வலது சட்டமன்ற உறுப்பினர்களும் கணிசமான சிறைத் தண்டனைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். இந்த சட்டப்பிரிவு “இந்த செய்தி ஒரு சிறாரால் பார்க்கப்பட நேரும்போது பயங்கரவாதத்தை தூண்டக் கூடியதாகவோ, ஆபாசமானதாகவோ, அல்லது மனித கண்ணியத்துக்கு மரணகரமான தீங்கிழைக்கக் கூடியதாகவோ இருக்கின்ற ஒரு வன்மையான தன்மை கொண்ட செய்திகளை பரப்புவதற்கான” தண்டனையாக மூன்றாண்டு வரையான சிறைத் தண்டனையும் 75,000 யூரோ வரையான அபராதத்தையும் விதிக்கிறது.

FN பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் வம்சாவளியாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்துக்கு அது எத்தனை பெரும் உயிராபத்தை முன்நிறுத்துகிறது என்பதைக் குறித்து WSWS தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆயினும் கூட, வலதினைக் குறிவைத்து ஏவப்படுகின்ற போது உள்ளிட, அரசினால் கருத்து சுதந்திரம் எந்த வகையில் ஒடுக்கப்பட்டாலும், WSWS அதற்கு தெளிவான எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது.

FN இன் இரண்டு பிரதிநிதிகள் மீதான குற்றப்பத்திரிகை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு அபாயகரமான தாக்குதல் ஆகும். இது எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தையும் ஏகாதிபத்தியப் போருக்கான எதிர்ப்பையும் அச்சுறுத்துகின்றவாறாய், இணையத்தை தணிக்கை செய்வதற்கும் அரசியல் சுதந்திரங்களை பலவீனப்படுத்துவதற்குமான ஒரு பரந்த நடவடிக்கையின் பகுதியாகும். பாரிஸில் நடந்த 2015 இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட பிரான்சின் அவசரகாலநிலை எப்படி சோசலிஸ்ட் கட்சியின் மக்கள்விரோத தொழில் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டதோ, அதைப் போல, அரசு இத்தகைய நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்துக்கும் அதன் இடதின்பக்க அபாயத்திற்கும் எதிராகப் பயன்படுத்துவதற்கு திட்டமிடுகிறது என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

லு பென் மற்றும் கோலாருக்கு எதிரான புகார் PS இன் முன்னாள் உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கஸ்னேவ் மூலமாக தொடுக்கப்பட்டது. இஸ்லாமிய விவகாரங்களிலான கருத்துரையாளரான கிலெஸ் கெப்பல் உடனான ஒரு நேர்காணலின் போது BFM-TV செய்தியாளரான ஜோன்-ஜாக் பூர்டன் ISக்கும் FNக்கும் இடையிலான “சமாந்திரம்”களை ஸ்தாபித்ததைக் கண்டு ஏற்பட்ட வெறுப்பில் தனது ட்விட்டர் கணக்கில் இந்த படங்களை தான் பதிவிட்டதாக லு பென் தெரிவித்தார். IS இன் வன்முறையான இஸ்லாமியவாதத்திற்கும் தனது தலைமையிலான FN இன் நாடாளுமன்றரீதியானதாகவும் அதிக சமாதானவாதமுடையதாகவும் சொல்லப்படக் கூடிய நவ-பாசிசத்திற்கும் இடையிலான பேதத்தை வலியுறுத்திக் காட்டுவதற்கு விரும்பியதாக லு பென் தெரிவித்தார்.

கஸ்னேவ் இந்த படங்களை “ISக்கான பிரச்சாரம்...ஆகவே ஒரு பரிதாபகரமான நடவடிக்கை, வெறுக்கத்தக்க செயல் அத்துடன் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான ஒரு உண்மையான அவமதிப்பு” என்றார். அந்த சமயத்தில் பிரதமராக இருந்த மானுவல் வால்ஸ், மரின் லு பென் “நெருப்புடன் விளையாடு”வதாக குற்றம்சாட்டினார்.

லு பென் மீதான இந்தத் தாக்குதல் ஒரு சிடுமூஞ்சித்தனமான சூது வேலையாக இருந்தது, இதன்மூலம் PS, FN மீதான உத்தியோகபூர்வ பொதுக் கருத்தின் வெறுப்புநிலையை பராமரிக்க முயன்ற அதேசமயத்தில், FN இன் திட்டநிரலில் பெரும்பகுதியை ஏற்றுக் கொண்டது. 2015 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உண்மையில் சிரியாவில் நேட்டோவின் பினாமிப் போரில் சண்டையிட்ட இஸ்லாமிய வலைப்பின்னல்களது அங்கத்தவர்களாய் இருந்தனர் என்ற உண்மையை PS மறைத்தது, இவ்வாறாக FN இன் நிர்வாகிகள் ஊக்குவித்தவாறாக, இஸ்லாமியர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எளிமையான சமானப்படுத்தலை ஏற்றுக் கொள்வதற்கு மக்களை அது ஊக்குவித்தது. அதேநேரத்தில், அவசரகாலநிலை, தேசிய குடியுரிமை பறிப்பு மற்றும் ஒரு இராணுவ தேசிய காவற்படைக்கான அழைப்புகள் போன்ற FN இன் கொள்கைகளை PS திணித்துக் கொண்டிருந்தது.

PS இன் அதி-வலது திருப்பத்தில் இருந்து FN ஆதாயம் பெறுவதை கருத்துக்கணிப்புகள் காட்டியதும், பல்வேறு பண்டிதர்களும் IS, FN ஐ கட்டியெழுப்ப முயல்வதாகவும் அதேபோல் IS ஐ வளர்க்க FN முயல்வதாகவும் கூறத் தொடங்கினர். கெப்பல் உடனான நேர்காணலின் போது பூர்டன் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தார், அறிவித்தார்: “IS விடயத்துக்கு மீண்டும் வருவோம். ISக்கும் FNக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விவாதிக்க எனக்கு விருப்பம், தொடர்புகள் என்றால் ISக்கும் தேசிய முன்னணிக்கும் (FN) இடையில் நேரடித் தொடர்புகள் இல்லை, மாறாக இதுபோன்று ஒரு அடையாளத்தின் மீது, அது இறுதியில் மூளையின்… ஒரு சமுதாயமாக இருக்கிறது, கவனத்தைக் குவிக்கும் வகையான தொடர்பு... ஏனென்றால் பிரெஞ்சு சமூகத்தை அதன் அடையாளத்தை ஒட்டியிருக்கச் செய்வதற்கு நெருக்குவது தான் IS இன் சிந்தனையாக இருக்கிறது."

இந்த வாதம் அடிப்படையாக போலியானதாகும். சிரியாவில் இருக்கின்ற இஸ்லாமியப் போராளிகள் பிரான்சில் உள்ள அரசுடனும், அத்துடன் பிற நேட்டோ நாடுகளில் உள்ள அரசுகளுடனும் தொடர்புபட்டுள்ளனர். FN இந்த விவகாரங்களில் ஒரு உடந்தையான அமைதியைப் பராமரித்தது என்றபோதிலும் இதற்கான பொறுப்பு எல்லாவற்றுக்கும் மேல் ஆளும் கட்சியான PSக்கே உரியதாகும். சிரியாவில் IS மற்றும், அல்கெய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணி போன்ற மற்ற இஸ்லாமியப் போராளிகளின் எழுச்சியானது, அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் மத்திய கிழக்கில் செய்த பல தசாப்த கால தலையீடு, ஈராக் மீதான அவற்றின் ஆக்கிரமிப்பு, மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் பயங்கரவாத போராளிக் குழுக்களை அவை பயன்படுத்துவது ஆகியவற்றில் இருந்து பிறந்ததாகும்.

இப்போதைக்கு, தணிக்கையானது ஒரு அதி-வலது கட்சியைக் குறிவைத்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும், லு பென்னுக்கு எதிரான குற்றச்சாட்டானது, ட்விட்டரில், சிரியாவில் அரசாங்க-எதிர்ப்பு போராளிக் குழுக்களின் குற்றங்களுக்கு கவனத்தை ஈர்த்து வருகின்ற நிலையில், பிற பல இலக்குகளையும் கொண்டிருக்கிறது. டமாஸ்கஸுக்கு எதிராக நேட்டோ மற்றும் பிரான்சின் PS அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இஸ்லாமியப் போராளிகளது குற்றவியல் தன்மையை தோலுரித்துக் காட்டுவதற்காக சிரியாவின் “கிளர்ச்சிக் குழுக்களின்” நடவடிக்கைகளைக் காட்டுகின்ற படங்களை அல்லது காணொளிகளை பதிவிடக் கூடிய எந்தவொரு இடது-சாரி, போர் எதிர்ப்பு அமைப்பையும் இது குறிவைக்கக் கூடும். இறுதி ஆய்வில், இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளையும் அச்சுறுத்தக் கூடியதாகும்.

இணையத்தின் மீது அரசியல் தணிக்கையை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன. ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் கூகுள் போன்ற தேடுபொறிகளும் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமாக வேலைசெய்து அவற்றின் தளங்கள் அல்லது தேடல்முடிவுகளில் அரசியல் உள்ளடக்கங்களை திட்டமிட்டு தணிக்கை செய்து வருகின்றன.

முதலாளித்துவ அரசினால் ஒழுங்கமைக்கப்படுகின்ற தணிக்கையை ஆதரிப்பதன் மூலமாக நவ-பாசிசத்தின் எழுச்சிக்கு எதிராக தொழிலாளர்கள் எந்தவிதத்திலும் போராட இயலாது, ஏனென்றால் சோசலிச அமைப்புகள் அதன் பிரதான இலக்குகளாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் சமயத்தில், அதிலும் குறிப்பாக 1930களிலும் மற்றும் பாசிசத்தின் எழுச்சியின் போதும், அதி-வலது அமைப்புகளைத் தாக்கியதன் மூலம் தான் அரசு எந்திரமானது, பின்னாளில் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகளை துன்புறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட அரசியல் சாதனங்களுக்கு உருக்கொடுத்தது.

லு பென் மற்றும் கோலாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தையும் சோசலிசத்தையும் வன்மையாக ஒடுக்குவதையே தனது பாரம்பரியமாகக் கொண்ட ஒரு கட்சியான FN, மறுபடியும் தன்னை நிதியப் பிரபுத்துவத்தின் ஒரு பலிகடாவாகவும் “அமைப்புமுறைக்கு-எதிரான” ஒரு கட்சியாகவும் காட்டிக் கொள்வதற்கு அனுமதிக்கும். PS இன் பிற்போக்கான கொள்கைகளைக் குறித்து வெறுப்படைந்திருக்கும் மக்களின் பரந்த பகுதிகள் மத்தியில் ஒரு செவிமடுப்பை வெற்றி காண்பதற்கு இது அதற்கு மிகவும் பிடித்த தந்திரமாக இருந்து வரக் கூடியதாகும்.

இந்த மூலோபாயத்தைக் கொண்டு முன்னேறுவதில் லு பென் கொஞ்சமும் நேரத்தை வீணாக்கவில்லை. “இந்த சம்பவத்தின் ஆரம்பத்தில் இருந்தே எனக்குத் தெரியும், இது ஒரு அரசியல் துன்புறுத்தல் வழக்கு என்பதை” என்று வியாழனன்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறினார், “இது கருத்து சுதந்திரத்தை கொலைசெய்கிறதான ஒரு நடவடிக்கை ஆகும். நான் இந்தக் குற்றத்தைப் புரிந்திருப்பதாக அவர்கள் காண்பார்களேயானால், அது எனது மேலங்கியில் நான் அணியக் கூடிய ஒரு பதக்கமாக இருக்கும்.”

இணைய தணிக்கை என்பது பிற்போக்கானதாகும், FNக்கு எதிராக அது பயன்படுத்தப்பட அனுமதிப்பதன் மூலமாக நவ-பாசிசத்திற்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்கின்ற எவரொருவரும் அபாயகரமான பிரமைகளை மட்டுமே பரப்பி வருகிறார்கள். நவ-பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது, போர் மற்றும் நவ-காலனித்துவவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளது பாதுகாப்புக்கு ஆதரவாகவும், அத்துடன் அதிவலதுக்கு பாதை திறந்து விடுகின்ற சமூக-ஜனநாயகக் கட்சிகள் மற்றும் அவற்றின் அரசியல் சுற்றுவட்டத்திற்கு எதிராகவும் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே முன்னேறிச் செல்லும்.