ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අනධ්‍යන කම්කරුවන් අඛන්ඩ වැඩ වර්ජනයක

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கின்றது

By Pani Wijesiriwardena 
2 March 2018

இலங்கை பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் பெப்பிரவரி 28 முதல் சம்பள அதிககரிப்பு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காலை வாரிவிடும் நடவடிக்கைகளை அலட்சியம் செய்து தீவு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலிருந்தும் 15,000 அளவிலான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித்துள்ளன.

அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு தங்களது மாத மேலதிக கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என கல்விசாரா ஊழியர்கள் கோரி வருகின்றனர். கல்விசாரா ஊழியர்கள், 2015ல் அரசாங்கம் கொடுத்த மேலதிக கொடுப்பனவை, அதாவது அடிப்படை சம்பளத்தில் 20 சதவிகிதத்திற்கு சமமான தொகையை, நூற்றுக்கு 100 வீதம் அதிகரிக்க வேண்டும் எனக் கோரி, 2016 ஜூலையில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். 2017ல் இருந்து நான்கு கட்டங்களாக 20 சதவீத அளவில் அதிகரித்து, கோரப்படும் முழு கொடுப்பனவையும் 2020ம் ஆண்டளவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்ததுள்ளதாக கூறி, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி இந்த வேலைநிறுத்தத்தை கைவிட்டது.

இருப்பினும், 2017ல் அரசாங்கம் 2015 அடிப்படை சம்பளத்தில் 15 சதவீதத்தை மட்டுமே சேர்த்துள்ளது. அதே வேளை 2018ம் ஆண்டிற்கான அதிகரிப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை.

தமது வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் மத்தியில், கேட்ட சம்பள உயர்வு கிடைக்காமல் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக, தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க நேர்ந்தாலும், அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்ட நாள் தொடக்கம் வேலை நிறுத்தத்தை கரைத்து விடுவதற்காக கமிட்டியைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக வேலை செய்தன. தமது தொழிற்சங்கம் இனிமேலும் கூட்டுக் கமிட்டியுடன் சேர்ந்து வேலை செய்யாது எனக் கூறிக்கொண்டு, பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் (தொ.நு.அ.ச.) முன்கூட்டியே வேலை நிறுத்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.

எனினும், இந்த தலைமைகளுக்கு முரணாக, சாதாரண உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக தங்கள் போராட்டத்தைத் முன்னெடுக்கும் விருப்பத்தை வெளிக்காட்டினர். இதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்காமல் இருக்க தொழிற்சங்கத் தலைமைத்துவம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக, வேலை நிறுத்தத்தில் பங்குபற்றும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினர்.

ஆனால், வேலைநிறுத்தம் பற்றி அறிவிப்பதற்காக எனக் கூறிக்கொண்டு, கூட்டுக் கமிட்டியின் மொரட்டுவ பல்கலைக்கழக கிளை பெப்பிரவரி 27 அன்று நடத்திய கூட்டத்தில் பங்கெடுத்த தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் மொரட்டுவ கிளை அதிகாரி, அதன் உறுப்பினர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை மூடி மறைத்து, "தொழில்நுட்ப காரணங்களுக்காக" தனது சங்கம் 28ம் திகதி தொடங்கவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாவிட்டாலும், பின்னர் இணைந்துகொள்ளும், எனக் கூறினார்.

உலக சோசலிச வலைத் தள நிருபருடன் பேசிய தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் மொரட்டுவ கிளையின் சாதாரண உறுப்பினர் ஒருவர் கூறுகையில், கிளை அதிகாரி வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாமல் செய்யும் “கருங்காலி” வேலை பற்றி ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பபை தணிப்பதற்கும், வேலை நிறுத்தத்தில் பங்குபற்றுவதற்காக தமது கிளை உறுப்பினர்கள் எடுத்த முடிவை “இரத்துச் செய்வதற்குமே” இந்த கூட்டத்தில் முயற்சி செய்தார், எனத் தெரிவித்தார்.

இருப்பினும், அதிகாரத்துவம் காலை வருவதை அலட்சியம் செய்து, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்க கிளை, சுகயீன விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளில் இருக்குமாறு தமது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன், பேராதனை உட்பட பல கிளைகள், தமது உறுப்பினர்களை வழமை போல் சேவையில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளன.

நேற்று காலை காலை மொறட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கூட்டுக் கமிட்டி கூட்டத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆற்றிய உரைகளில் இருந்து, வேலைநிறுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான தயார் நிலை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

புதிய உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம், தனது முதல் நடவடிக்கை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனையை தீர்ப்பதே என கூறியுள்ளதாகவும் இதனால் "அடுத்த இரண்டு நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்," எனவும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் மொரட்டுவை பல்கலைக்கழக கிளை தலைவர் கே.எம். சிறிசேன கூறினார்.

2016ல் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தில், முன்னாள் உயர் கல்வி அமைச்சரால் கொடுக்கப்பட்ட போலியாக எழுதப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள கூட்டுக் கமிட்டி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக ஊழியர்கள் மத்தியில் எழுந்த விரோதத்தை நினைவூட்டி, சிறிசேன கூறியதாவது: "அந்த கடிதத்தை கொண்டு வந்து கொடுத்தவுடன் சிலர் என்னை திட்டினர். இருப்பினும், அந்த கடிதத்தின் காரணமாகத்தான் இன்று நாம் புதிய அமைச்சருடன் அதைப் பற்றி கலந்துரையாடக் கூடியதாக உள்ளது."

இதைக் கேள்விப்பட்ட ஒரு கல்விசாரா ஊழியர், உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார்: "அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு இந்த போராட்டத்தை நடத்தினால் எந்த பிரதிபலனும் கிடைக்கப் போவதில்லை. கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் எத்தனை அமைச்சர்கள் இத்தகைய வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்? இந்த அமைச்சரும் அதே போன்ற ஒரு இன்னொரு கடிதத்தை கொடுத்தால் அதை எங்களுக்கு தூக்கி காட்டுவர். சங்கங்களில் இணைதிருப்பதை விட அவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது."

இலங்கை சுதந்திர கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அசங்க டி மெல் கூறியாதாவது: தொழிலைப் பாரம் எடுக்கும் இன்றைய தினம் அந்த வேலைகளை தடங்கல் இன்றி முறையாக இட்டு நிரப்புமாறு தேசிய ஊழியர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளின் படி, உயர் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாமல் இருக்க முடிவு செய்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்குபற்றுவதில் கடும் ஆர்வத்துடன் உள்ள அந்த தொழிலாளர்களை, “இரண்டு மணித்தியலம் அளவில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னரே வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாமல் இருப்பதற்காக உடன்பட வைக்க முடிந்தது,” என கொஞ்சமும் அருவருப்பின்றி கூறினார்.

பேராதனை பல்கலைக்கழகத்திலும் 500க்கும் அதிகமான கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றிய கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கெடுத்த ஒரு கல்விசாரா ஊழியர், தொழிற்சங்க அதிகாரத்துவம் பற்றிய தமது அதிருப்தியை வெளிப்படுத்தி பின்வருமாறு கூறினார்: "தலைவர்கள் பற்றி எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் நாங்கள் போரட்டத்தை முன்னெடுக்கின்றோம். தலைவர்கள் போராட்டத்தை ஒத்திவைக்க முயன்றனர். எனினும் உறுப்பினர்களின் அக்கறை மற்றும் முயற்சியின் காரணமாக தள்ளிப்போட முடியாமல் போனது. தொழிற்சங்க தலைவர்கள் தங்கள் பதவிகளையும் நிலைமைகளையும் பாதுகாக்க விரும்புகின்றனர். கோரிக்கைகளை வென்றெடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை."

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய கூட்டுக் கமிட்டியின் அதிகாரி கூறியதாவது: கோரப்பட்ட மேலதிக கொடுப்பனவை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், முன்னாள் உயர் கல்வி அமைச்சரான லக்ஷ்மன் கிரிலியல்லவின் அகங்காரத்தினால் அதை கொடுக்கவில்லை.

கூட்டுக் கமிட்டியின் செயலாளர் ஹேரத் தெரிவித்ததாவது: "புதிய அமைச்சர் பதவி ஏற்பதனால் சாதகமான பிரதிபலிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதனால் முன் திட்டமிடப்பட்ட ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டத்தை தள்ளிவைக்கின்றோம்."

கூட்டுக் கமிட்டியின் பொருளாளர், கே.எல்.டி.ஜே. ரிச்மண்ட் தெரிவித்ததாவது: "அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு தொழிற்சங்கங்களுக்கு அமைச்சு அவர்களுடையது என்பதால், அமைச்சர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான தலையீடுகளை செய்ய முடியும்."

உயர் கல்வி பிரதி அமைச்சர் மோகன் லால் கெய்ரோவைப் பற்றி குறிப்பிட்ட ரிச்மண்ட் மேலும் கூறியதாவது: "கெய்ரோ ஒரு நிலைப்பாட்டில் இருந்தார். கிரிசெல்லாவின் உடன்பாடின்மை காரணமாகத்தான் இது தாமதமாகியது. அரசாங்கத்தின் தரப்பில் நல்ல நிலைமை உள்ளது. நிதி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது."

சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெரும் தோல்வி சந்தித்த பின்னர் பெரும் மாற்றங்களைச் செய்யப்போவதாக தம்பட்டமடித்த அரசாங்கம், அமைச்சர்களின் முகங்களை மட்டுமே மாற்றியுள்ளது. அமைச்சர்களின் முகம் மாறினாலும், புதிய அமைச்சை பொறுப்பெடுத்த அனைத்து அமைச்சர்களுன் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த நிர்பந்திக்கப்படுவர். இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கபர் ஹாசிம்மின் உறுதிப்பாடு கிரியெல்லவுக்கு இரண்டாந்தரமானதாக இருக்கப் போவதில்லை.

கூட்டுக் கமிட்டியின் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் இப்போது அதனுடன் தொடர்பில்லை எனக் கூறும் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்க அதிகாரத்துவமும், அமைச்சரவை மாற்றத்தின் “சாதகமான” அறிகுறிகளை சுட்டிக் காட்டி, கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுப்பதற்கே முயற்சிக்கின்றனர்.