ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US sells Poland Patriot anti-missile system amid continued campaign against Russia

ரஷ்யாவுக்கு எதிரான தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கு மத்தியில் அமெரிக்கா போலந்திற்கு பேட்ரியாட் ஏவுகணை-எதிர்ப்பு அமைப்பை விற்பனை செய்கிறது

By Bill Van Auken
29 March 2018

கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்திற்கு பேட்ரியாட் ஏவுகணை-எதிர்ப்பு அமைப்பை விற்பதற்கான 4.75 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் புதன்கிழமையன்று பென்டகனும் போலந்தும் கையெழுத்திட்டன.

போலந்தின் வரலாற்றில் மிகப் பெரியதான இந்த ஆயுத ஒப்பந்தத்தை அந்நாட்டின் அதி வலது-சாரி அரசாங்கம் பாராட்டியிருக்கிறது என்ற அதேநேரத்தில், மேற்குக்கும் மாஸ்கோவுக்கும் -ஒரு அணுஆயுதத் தாக்குதலுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத்தக்க ரஷ்யாவின் திறனை பலவீனம் செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்கின்ற ஒன்றிணைந்த முயற்சியின் பகுதியாக இத்தகைய அமைப்புகளின் நிலைநிறுத்தங்களை அது காண்கிறது- இடையிலான பதட்டங்களை இது மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

“இது ஒரு அசாதாரணமான, வரலாற்றுத் தருணம்; நவீன தொழில்நுட்பத்தின், நவீன ஆயுதங்களின் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் ஒரு முற்றிலும் புதிய உலகத்திற்குள் போலந்து காலடி எடுத்து வைத்திருக்கிறது” என்று ஆயுதத் தொழிற்சாலை ஒன்றில் போலந்து துருப்புகளின் ஒரு வரிசையினருக்கு முன்னால் நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது போலந்தின் ஜனாதிபதியான Andrzej Duda தெரிவித்தார்.

“இது ஏராளமான தொகை தான், ஆயினும் பாதுகாப்பு விலையில்லாதது என்பதையும் நமது வரலாற்று அனுபவத்தின் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம்” என்று கூறிய டூடாவின் எதேச்சாதிகார ஆட்சி, இந்த ஏவுகணைகளுக்கு செலுத்துவதற்கான பணத்தை போலந்து தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதல்களை இரட்டிப்பாக்குவதன் மூலம் தான் பிழிந்தெடுக்கவிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மார்ச் 4 அன்று பிரிட்டனின் தெற்கு நகரமான சாலிஸ்பரியில் முன்னாள் ரஷ்ய உளவாளி சேர்ஜி ஸ்கிரிபாலுக்கும் அவரது மகளுக்கும் நஞ்சூட்டியதற்கு மாஸ்கோவைக் குற்றம்சாட்டி இலண்டன் மற்றும் வாஷிங்டன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த சர்வதேசப் பிரச்சாரம் நடந்து வருவதன் மத்தியில் தான் இந்த போலந்து ஆயுத ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்டிருந்த “ஒருவகையான” நரம்பு வாயுவை (நோவிசோக்) கொண்டு நடத்தப்பட்டிருப்பதாகவும், இது “அநேகமாக” ரஷ்யாவின் வேலையாக இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறி வந்திருக்கிற நிலையில், இந்த நஞ்சூட்டலில் எந்த பங்களிப்பையும் ரஷ்யா மறுத்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளை ஊர்ஜிதம் செய்வதற்கான எந்த ஆதாரத்தையோ, குறைந்தபட்சம் ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற ஒரு நேரத்தில் இத்தகையதொரு நடவடிக்கையில் மாஸ்கோ இறங்குவதற்கான ஏதாவது கற்பனைசெய்யத்தக்க நோக்கத்தையோ கூட, அளிக்காமல் பிரதமர் தெரசா மேயின் பிரிட்டிஷ் பழமைவாத அரசாங்கம் 23 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

சர்வதேச இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கைகள் கோருவதன் படி, இத்தாக்குதலில் பயன்பட்ட நரம்புவாயுவாகச் சொல்லப்படுவதன் ஒரு மாதிரியை வழங்குமாறு மாஸ்கோ விடுத்த கோரிக்கைகளை இலண்டன் மறுத்திருக்கிறது. மே அரசாங்கத்தின் மனோபாவம் “சாலிஸ்பரியில் நடந்த குற்றத்திற்கான நோக்கங்களையோ அந்தக் குற்றத்திற்கு பொறுப்பானவர்களையோ கண்டுபிடிப்பதில் ஐக்கிய இராஜ்ஜிய அதிகாரிகளுக்கு ஆர்வமில்லை என்பதைக் காட்டுவதுடன், பிரிட்டிஷ் உளவு முகமைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் சூசகம் செய்கிறது” என குற்றம்சாட்டுகிற ஒரு அறிக்கையை புதன்கிழமையன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் விடுத்தது.

வாஷிங்டன் இந்த ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் கரம்கோர்த்தது, 60 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதற்கும் சீயாட்டிலில் இருக்கும் ரஷ்ய தூதரக அலுவலகத்தை மூடுவதற்கும் உத்தரவிட்டது, அத்துடன் மற்ற நாடுகளையும் அதேபோல செய்ய அழுத்தமளிப்பதில் இலண்டனுடன் இணைந்து கொண்டது. 20க்கும் அதிகமான நாடுகள் வெளியேற்றங்களைக் கொண்டு பதிலளித்தன. ஆயினும் இவற்றில் அநேகமான நாடுகள், ஒன்று அல்லது இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி அடையாளரீதியான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பது உறுப்பு நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐரோப்பாவில் நான்குக்கும் அதிகமான தூதர்களை வெளியேற்றிய நடவடிக்கை உக்ரேனின் தீவிர ரஷ்ய-விரோத அரசாங்கத்தினால் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது, இது ரஷ்யாவின் 13 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளைப் போலவே நான்கு ரஷ்யர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்த போலந்து, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இராணுவப் பெருக்கத்திற்கான ஒரு தூணாக நீண்ட காலமாக சேவை செய்து வந்திருக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்தது முதலாகவே வாஷிங்டன், 1920களின் Intermarium திட்டத்திற்கு -சோவியத் ஒன்றியத்திற்கும் அத்துடன் கண்டத்தின் மேலாதிக்க சக்தியாக ஜேர்மனி எழுவதற்கும் எதிராக செலுத்தப்படும் வகையில் பிராந்தியத்தின் பாசிச மற்றும் வலது-சாரி ஆட்சிகளுடன் ஒரு கூட்டணிக்கு அமெரிக்கா முனைந்தது- மறுஉயிர் கொடுக்கும் விதமாக, வார்சோ மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதை வெளிப்படையாக ஊக்குவித்து வந்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய திருப்பமானது பெருமளவுக்கு அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் -ஜேர்மனி ரஷ்யாவுடன் வர்த்தக மற்றும் பிற உறவுகளின் மூலமாய் உள்ளிட அதன் சொந்த வல்லரசு நலன்களை முன்னெடுப்பது அதிகரித்துச் செல்கிறது- இடையில் அதிகரித்துச் செல்லும் பதட்டங்களுக்கான ஒரு பதிலிறுப்பாக இருக்கிறது. ஸ்கிரிபால் நஞ்சூட்டலுக்கு ரஷ்யாவைக் குற்றம்சாட்டுகின்ற ஒரு கூட்டுப் பிரகடனத்தில் ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் பேர்லினும் கைகோர்த்திருக்கிறது என்றாலும் கூட, இது விவகாரத்தில் ஜேர்மன் ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளும் சான்சலர் அங்கேலா மேர்கெலின் பெரும் கூட்டணி அரசாங்கத்திற்குள்ளும் கூர்மையான பிளவுகள் நிலவுகின்றன.

“ரஷ்யாவுடனான ஒரு புதிய பனிப்போரைத் தடுப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும்” என்று சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் ரஷ்யாவுக்கான அரசாங்க ஒருங்கிணைப்பாளருமான Gernot Erler, Passauer Neue Presse இடம் தெரிவித்தார்.  

சமூக ஜனநாயகக் கட்சியின் மற்ற முக்கிய பிரமுகர்கள் இன்னும் மேலே சென்றனர். முன்னாள் ஐரோப்பிய ஆணையரான Guenter Verheugen இந்தத் தடைகளுக்கான புறநிலை அடிப்படையின் மீது கேள்வியெழுப்பினார். “சந்தேகமாய் இருக்கும்பட்சத்தில், புட்டினும் ரஷ்யர்களும் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதான ஒரு கண்ணோட்டம் சிந்தனயை நச்சுப்படுத்துவதாகும், அது நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் Augsburger Allgemeine இடம் கூறினார்.

இத்தகைய கண்ணோட்டங்கள் ரஷ்ய சந்தையுடன் தங்களது இலாபங்கள் பிணைந்திருப்பதைக் கொண்ட பெரும் ஜேர்மன் பெருநிறுவன மற்றும் நிதி நலன்களது கவலைகளைப் பிரதிபலிக்கின்றன.

கிழக்கு ஐரோப்பிய பொருளாதார உறவுகளுக்கான ஜேர்மன் கமிட்டி -இதில் சுமார் 200 ஜேர்மன் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன- ஸ்கிரிபால் விவகாரத்தில் “தீவிரப்படல்களின் ஒரு சுழற்சி”க்கு இட்டுச் செல்லக்கூடிய “அவசரகதியிலான முடிவுகளுக்கு” எதிராக எச்சரித்தது.

ரஷ்ய தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற்றியதற்கு ஒரேயொரு நாள் கழித்து, ஜேர்மன் அரசாங்கம், ரஷ்ய இயற்கை எரிவாயுவை பால்டிக் கடலுக்குக் கீழ்வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரும் ரஷ்ய தலைமையிலான Nord Stream 2 எரிவாயுக் குழாய் கட்டுமானத்திற்கும் இயக்கத்திற்குமான இறுதி ஒப்புதலை, செவ்வாயன்று அறிவித்தது. இந்த திட்டம் வாஷிங்டனாலும் அதன் கிழக்கு ஐரோப்பியக் கூட்டாளிகளாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருப்பதாகும்.

இந்தப் பதட்டங்களை மனதில் கொண்டுதான், அமெரிக்க பாதுகாப்பு செயலரான ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் பென்டகனில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ரஷ்யா “மேற்கத்திய கூட்டணியின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது” என்று கூறினார் என்பதில் சந்தேகமில்லை. ஸ்கிரிபால் நஞ்சூட்டலுக்கு ரஷ்யாதான் பொறுப்பு என்பது “நன்கு வெளிப்படையாக” தெரிவதாக கூறிக் கொண்ட மாட்டிஸ், மாஸ்கோ “பொறுப்பற்ற நடவடிக்கையின் புள்ளி வரை சென்றும் கூட ஒரு மூலோபாய போட்டியாளராக திகழ தெரிவுசெய்திருக்கிறது” என குற்றம்சாட்டினார்.

நேட்டோ சக்திகளுக்கு இடையில் எழுந்திருக்கும் கூர்மையான பிளவுகள் எல்லாம் இருந்தாலும், ரஷ்யாவுடனான போருக்கு செயலூக்கமான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான தொடர்ச்சியான அறிகுறிகள் இருந்துவருகின்றன.

திங்களன்று அமெரிக்க இராணுவப் படை கழகத்தின் உலகளாவிய படை கருத்தரங்கத்தில் பேசிய அமெரிக்க இராணுவ மூத்த அதிகாரிகள், “ஐரோப்பாவில் ஒரு போரின் ‘முதல் சில வாரங்களில்’ களப் படைகளுக்கு வான்வழி ஆதரவை இல்லாது செய்வதாக இருக்கின்ற ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு பென்டகன் ஆட்டிலறி மற்றும் ஏவுகணை அமைப்புகளின் வீச்சை மிகப்பெருமளவில் அதிகரிக்க வேண்டும்” என்று எச்சரிக்கைகள் அளித்ததாக மிலிட்டரி.காம் வலைத் தளம் தெரிவித்தது. நிலையான இறக்கை விமான இயக்கத்தை இயலாமல் செய்யக் கூடிய மேம்பட்ட ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை எதிர்த்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான புதிய ஆயுத வகை அமைப்புகளில் அமெரிக்க இராணுவம் வேலை செய்து கொண்டிருப்பதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நமது எதிரியை ஆயுதங்களால் நாம் வெல்ல வேண்டியிருக்கிறது என்பதால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை அமைப்புகளின் அதிகப்பட்ச வீச்சையும் இன்னும் நெருக்கி முன்தள்ளுவதற்கு நமக்கு அவசியமாயிருக்கிறது” என்று அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் உத்தரவகத்தின் தளபதி ஜெனரல் ரொபர்ட் பிரவுன், இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் ஒரு பார்வையாளர் கூட்டத்திடம் கூறினார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டு அங்கமான ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய எல்லைகளை சுதந்திரமாக கடக்க நேட்டோ சக்திகளை அனுமதிக்கும் ஒரு “இராணுவ Schengen மண்டலத்தை” உருவாக்கும் முன்முயற்சியை அது தொடங்கியிருப்பதாக புதனன்று அறிவித்தது. இரண்டு தசாப்தங்களாய் அமலில் இருக்கின்ற, கையெழுத்திட்ட 26 ஐரோப்பிய நாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடின்றி பயணிக்க அனுமதிக்கும் மூல Schengen உடன்பாட்டை, ஜேர்மனியின் புதிய உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர் உள்ளிட்ட வலது-சாரி தேசியவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத ஐரோப்பிய அரசியல்வாதிகள் பகிரங்கமாக நிராகரிக்கும் நிலையிலும் இந்த இராணுவத் திட்டம் கட்டவிழ்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“கண்டமெங்கும் துரிதமான மற்றும் பிசிறற்ற நகர்வுத்திறனை உறுதி செய்வதே நோக்கம். இது கூட்டுப் பாதுகாப்பு குறித்த விடயமாகும்” என்று ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்து ஆணையரான Violeta Bulc செய்தியாளர்களிடம் கூறினார்.

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது தவிர, முக்கியமான பாதைகள் டாங்குகளையும் கனரக ஆயுத வாகனங்களையும் கையாளுவதற்கு திறம்படைத்ததாக இருப்பதை உறுதி செய்வதற்கு முதலீடுகள் செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக துரிதமாக துருப்புகளை நிலைநிறுத்துவது அல்லது வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை துரிதமாக தொடக்குவது நம்மால் இயன்றாக வேண்டும், அவ்வாறு செய்வதற்கு அதற்குரிய உள்கட்டமைப்பு நமக்கு அவசியமாக இருக்கிறது.

உண்மையான நோக்கம் ”ரஷ்யாவின் எல்லைகளை நோக்கிய நிலைநிறுத்தத்தை அதிகபட்சமாக துரிதப்படுத்துவதே...” என்று கூறி இந்த அறிவிப்புக்கு ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சரான கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமின் பதிலிறுத்தார்.

ரஷ்யாவுடனான போருக்கு தயாரிப்பு செய்வதற்காக போலந்து, ருமேனியா, ஹங்கேரி, பல்கேரியா, ஸ்லோவாக்கியா, லித்வேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உணவு விநியோகங்களது கிடங்குகளை அமெரிக்காவும் நேட்டோவும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகப்பூர்வ செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார்.