ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The campaign over the Skripal poisoning: An international war provocation

ஸ்கிரிபால் நஞ்சூட்டல் தொடர்பான பிரச்சாரம் : ஒரு சர்வதேச போர் ஆத்திரமூட்டல்

Chris Marsden
17 March 2018

முன்னாள் ரஷ்ய உளவாளியும் பிரிட்டிஷ் இரட்டை முகவருமான சேர்ஜி ஸ்கிரிபால் நஞ்சூட்டப்பட்டது தொடர்பாக ஐரோப்பாவிலுள்ள ஏகாதிபத்திய சக்திகளாலும் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிற பிரச்சாரத்தின் நெடி விண்ணை முட்டுகிறது. மிகவும் நீண்ட-கால பின்விளைவுகளைக் கொண்ட, தொலைதூர தாக்கம் கொண்ட கூற்றுக்கள், எந்த வித ஆதாரங்களும் இன்றி கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த பிரச்சாரத் தாக்குதல் மார்ச் 4 அன்று இங்கிலாந்தின் சாலிஸ்பரியில் உள்ள ஒரு பூங்காவில் என்ன நடந்திருக்கலாம் அல்லது நடக்காமலிருந்திருக்கலாம் என்பது குறித்தது அல்ல. சிரியாவிலும், அகன்ற மத்திய கிழக்கிலும், அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராகவுமே கூடவான போர் முனைப்பை பாரிய அளவில் தீவிரப்படுத்துவதற்கான ஒரு சாக்குபோக்கை உருவாக்குவது குறித்ததாக அது இருக்கிறது.

ஸ்கிரிபாலும் அவரது மகளும் ஒரு பூங்கா வாங்கில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, என்ன நடந்தது என்பதை கூறுவதற்கு பல மாதங்கள் இல்லாவிடின், பல வாரங்கள் பிடிக்கலாம் என போலிஸ் அறிவித்தது. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கமோ வழக்கமான குற்றவியல் விசாரணையைக் காட்டிலும் மிக வேகமாக இந்த வழக்கை முடித்திருக்கிறது.

மார்ச் 12 அன்று, பிரதமரான தெரசா மே, “ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு எதிரான ஒரு கண்மூடித்தனமான மற்றும் பொறுப்பற்ற செயலுக்கு” ரஷ்யா தான் “அநேகமாக” பொறுப்பாயிருக்க வேண்டும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜிய வெளியுறவு அமைச்சரான போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமையன்று, “எங்களது சண்டை புட்டினின் கிரெம்ளினுடன், மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வீதிகளில் ஒரு நரம்பு வாயுவைப் பயன்படுத்த ஏவுவது என்ற அவரது முடிவுடன் — இது அவரது முடிவுதான் என்பதே எங்களது பெரிவாரியான கருத்தாக இருக்கிறது” என்று அறிவித்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் வியாழக்கிழமையன்று ஒப்புதலளிக்கப்பட்டது, “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக ஐரோப்பாவில் ஒரு தாக்குதலாக நரம்பு வாயு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று அவை அறிவித்தன. “இதன் பின்னால் ரஷ்யர்கள் இருப்பதாகவே நிச்சயமாகத் தெரிகிறது” என்று ட்ரம்ப், அவரது நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்துக் கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று அறிவித்தார்.

பிரதான ஏகாதிபத்தியக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கைகளுக்கு கையெழுத்திட்டுள்ள நிலையில், ஒரு திட்டம் முன்னதாகவே தயாரிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதனை செயல்படுத்துவதற்கு பொருத்தமான ஒரு சந்தர்ப்பம் அவசியப்பட்டது.

ஐக்கிய இராஜ்ஜியத்தால் கூறப்படும் விவரிப்பு முரண்பாடுகள் நிரம்பியதாக, துளியளவும் விசாரணை ஆதாரங்களற்றதாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த விவரிப்பும், சாலிஸ்பரியில் இருந்து வெறும் 10 மைல்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற, பேரழிவு ஆயுதங்கள் உருவாக்க அர்ப்பணித்துக் கொண்ட உயிரிரசாயன போர் மையமான போர்ட்டன் டவுன் இல் இருந்தான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த நஞ்சு சரின் அல்லது VX போன்றதொரு நரம்பு வாயு என முதலில் திட்டவட்டமாகக் கூறியதன் பின்னர், இந்த முகமை இப்போது இந்த நச்சுப்பொருள் நோவிசோக் என்ற “ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒருவகை” நஞ்சு எனக் கூறுகிறது.

முன்னாள் இங்கிலாந்து தூதரும் எழுத்தாளருமான கிரேக் முர்ரே குறிப்பிட்டது போல, இந்த “ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான” என்ற வசனம் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. “இந்த நரம்பு வாயு ரஷ்ய உற்பத்தி என போர்ட்டன் டவுன் விஞ்ஞானிகளால் அடையாளம் காண முடியவில்லை, அவ்வாறு செய்வதற்கு அவர்கள் மீது அளிக்கப்பட்ட அழுத்தத்திற்கு அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்” என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள்ளான ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி அவர் ஊர்ஜிதப்படுத்தினார்.

நோவிசோக் பயன்படுத்தப்பட்டது குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவை ஒருவர் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் கூட —ரஷ்யாவுக்கு அல்லது வேறெவருக்கும் மாதிரிகளை வழங்க அது மறுத்து வருகிறது— ரஷ்யா தான் இந்தத் தாக்குதலை ஏவியது என்பதற்கான ஆதாரமாக அது ஆகிவிடாது. இந்த இரசாயனம் சோவியத் ஒன்றியத்தின் சகாப்தத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ரஷ்யா அதனை எப்போதாவது உற்பத்தி செய்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, அத்துடன் அது இலண்டனிலோ, லாங்க்லியிலோ, அல்லது ஒருகாலத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசுகளாய் இருந்து இப்போது ரஷ்யாவுக்கு கடும் குரோதம் கொண்டவையாக இருக்கும் ஏதேனும் ஒரு அரசின் மூலமாகவோ எளிதாக தயாரிக்கப்பட்டிருக்க முடியும்.

உண்மையில் ஒரு ரஷ்யர் சம்பந்தப்பட்டிருந்தாலுமே கூட, அது ரஷ்ய அரசாங்கத்தின் பொறுப்பை நிரூபணம் செய்வதில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.

ரஷ்ய அரசாங்கம் தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை என மிக திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. ஜனாதிபதி மாளிகை ஊடகச் செயலரான டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமையன்று கூறினார், “இதுபோன்று ’புலப்படக் கூடியதாக’ 'அநேகமாக’ என்பன போன்ற வார்த்தைகளைக் கொண்டு மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் ஒரு நாட்டுக்கு எதிராக —இந்த சந்தர்ப்பத்தில் எங்களது நாடு— கொண்டுவரப்படுவதைப் போன்ற இத்தகைய நடத்தையை சர்வதேச நடைமுறையில் அரசு மட்டத்தில் இதுவரை நாங்கள் எதிர்கொண்டதில்லை.” இத்தகைய அணுகுமுறை “சர்வதேசச் சட்டத்திற்கு முரண்படுவதோடு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பொதுவான தன்மைக்கே முரண்படுவதாக இருக்கிறது.”

புட்டின் ஆட்சி ஆழமான பிற்போக்குத்தனமான ஆட்சி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களை சூறையாடியதன் மூலமாக பணக்காரர்களாய் வளர்ந்த ஒரு குற்றவியல்தனமான நிதியப் பிரபுத்துவத்தின் சார்பாக அது ஆட்சி செய்கிறது. ஆனால் ஸ்கிரிபால் மீதான தாக்குதலில் அது சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, அத்துடன் மூர்க்கத்தனத்திற்கான ஒரு ஆயத்தநிலையிலான சாக்குப்போக்கினை இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வழங்கும் என்ற நிலையில், அவ்வாறு செய்வதற்கு ரஷ்யா ஏன் விரும்ப வேண்டும் என்ற பகுத்தறிவான கேள்வியும் எழுகிறது.

ஆதாயமடைவது யார் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால், ஸ்கிரிபால் விவகாரத்தில், மாஸ்கோவைக் காட்டிலும், இலண்டனும் வாஷிங்டனும் தான் அதிக குற்றக்குறுகுறுப்பு கொண்டவையாக இருப்பவையாகும். சிரியாவில் அசாத் அரசாங்கத்தை அகற்றி அங்கே ஒரு கைப்பாவை ஆட்சியை அமைக்கின்ற தங்களது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதற்காக ரஷ்ய அரசாங்கத்தின் மீது அவை ஆவேசமான கோபம் கொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு வார கால நிகழ்வுகளுக்கு முன்பாக சிரியாவில் கணிசமானதொரு தீவிரப்படல் இருந்து வந்திருக்கிறது. பிப்ரவரி 7 அன்று, தாக்குதலுக்கு இலக்காவோரில் பெரும்பான்மையோர் ரஷ்ய ஒப்பந்தப்படையினர்களாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்தே, அமெரிக்க போர் விமானங்களும் ஆட்டிலறி டாங்கிகளும் வடகிழக்கு மாகாணமான Deir Ezzor இல் ஒரு படுகொலையை நிகழ்த்தின. சிரியா மற்றும், ஈரான் உள்ளிட்ட அதன் கூட்டாளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கு மேலதிக ஒப்புதல் எதுவும் இனியும் தேவையில்லை என பிப்ரவரி 25 அன்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கும் கூட தயாரிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. “பயங்கரவாதம் அல்ல, பெரும் சக்திக்கான போட்டி தான் இப்போது அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் பிரதான கவனக் குவிப்பு புள்ளியாகும்” என அறிவித்த ஒரு புதிய தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தை ஜனவரி 19 அன்று தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் அறிவித்திருந்தார்.

இப்போதைய பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசாங்கங்கள் அத்தனையுமே, இராணுவ-உளவு முகமைகளால் நடத்தப்படுகின்ற போர்வெறிக்கூச்சல் ஆட்சிகளாகும். மேலும் இவை ஆழமான உள்முக நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்கின்றன. ஐக்கிய இராஜ்ஜியம் பிரெக்ஸிட் தொடர்பான உள்முக மோதல்கள் பின்னிக் கிடக்கிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம், நெருக்கடி மாற்றி நெருக்கடியாய் தடுமாறிக் கொண்டிருக்கிறது, இப்போது அது அரசாங்க உயர் அதிகாரிகளது ஒரு வெளியேற்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் செப்டம்பரில் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர், பெரும் கட்சிகள் ஒருவழியாய் ஒரு அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றன, இப்போது செயல்பாட்டில் இருக்கும் அமெரிக்க தலைமையிலான ரஷ்ய-விரோதக் கூட்டணியை ஏற்படுத்துவதற்கு தேவையான அரசியல் எந்திரத்தின் கடைசித் துண்டாகும் இது.

ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரமானது, வெளிநாட்டில் போரை விரிவுபடுத்துவதற்கான நியாயத்தை வழங்குவதுடன் சேர்த்து, சொந்த நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கான ஒரு சப்பைக்கட்டையும் வழங்குகிறது. அமெரிக்காவில், இணையத்தை தணிக்கை செய்வதற்கான ஒரு சாக்காக, “ரஷ்ய தலையீடு” குறித்த பிரச்சாரம் —ஜனநாயகக் கட்சி மற்றும் சிஐஏ இன் தலைமையில்— ஏற்கனவே ஆளும் வர்க்கத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 20, பொய்களின் ஒரு வரிசையை அடிப்படையாகக் கொண்டு 2003 இல் ஈராக் போர் தொடங்கப்பட்டதன் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக “நிரூபிப்பதற்கான” ஒரு ஒன்றுபட்ட பிரச்சாரத்தின் பகுதியாக, அமெரிக்காவும் ஐக்கிய இராஜ்ஜியமும் பல மாதங்கள் செலவிட்டு உளவு விவரங்களை உற்பத்தி செய்வதிலும், இரண்டு “ஆபத்து ஆவணங்களை” தயாரிப்பதிலும், இன்னும் ஈராக்கிற்கு ஆயுத சோதிப்பாளர்களை அனுப்புவதிலும் ஈடுபட்டன. இந்த சோதிப்பாளர்கள் ஒரு அணு ஆயுத அல்லது இரசாயன ஆயுத திட்டம் குறித்த எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை என்றதன் பின்னர், பிப்ரவரி 5 அன்று, அமெரிக்க வெளியுறவுச் செயலரான கோலின் பவெல், ஐக்கிய நாடுகள் சபையின் முன் தோன்றி, ஈராக் மரபுசாரா ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதற்கான புகைப்பட “ஆதாரம்” எனக்கூறி, தனது இழிபுகழ் பெற்ற மற்றும் முற்றிலும் உற்பத்தி செய்யப்பட்ட பட காட்சியை வழங்கினார். இந்த அடிப்படையில், மார்ச் 18 அன்று, டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கம் அமெரிக்க தலைமையிலான போருக்கு ஐக்கிய இராஜ்ஜியம் ஆதரவு தர உறுதியளித்தது.

அதே உத்திக்கையாளல் தான் இப்போது மறுபடியும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஸ்கிரிபால் தொடர்பான சித்தரிப்பு, ஈராக்கிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்கு வழங்கப்பட்டதை விடவும் நாடகத்தனமாக இருக்கிறது என்பது மட்டுமே வித்தியாசம்.

சம்பந்தப்பட்ட அத்தனை ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் ஸ்தாபகங்களுக்குள்ளுமே, இப்போதைய அழிவுகரமான பாதைக்கு எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லை. பிரிட்டனில் உள்ள தொழிற் கட்சியும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியைப் போலவே, ரஷ்ய-விரோத நடவடிக்கைகளுக்கான மிகவும் மூர்க்கத்தனமான வக்காலத்துவாதியாக இருப்பதாகும். ஊடகங்களில், ஒரேயொரு பெரிய ஊடகமும் இந்த சாக்கடைப் பிரச்சாரத்திற்கு எதிராக பிரசுரிப்பதற்கு முன்வரவில்லை, ஏனென்றால் வெறுமையான இந்த “சுதந்திர ஊடகங்கள்” நிதியப் பிரபுத்துவத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகெங்கிலும் சந்தைகளையும் வளங்களையும் கைப்பற்றுவதற்கான அதன் முனைப்பின் ஊதுகுழலாக இருப்பதற்கு மேலாக எதுவுமில்லை.

தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கத்தின் அத்தனை கட்சிகளுக்கும் எதிராக தனது சொந்த சுயாதீனமான அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே போரின் பெருகும் அபாயத்திற்கு எதிராகப் போராட முடியும். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாரிய உழைக்கும் மக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் உருவாக்குவது, மிக அவசரமான அரசியல் கடமையாகும்.