ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union backs UK in accusing Russia of nerve agent attack

நரம்பு வாயு தாக்குதல் குறித்து ரஷ்யாவை குற்றம்சாட்டும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கிறது

By Chris Marsden 
24 March 2018

சாலிஸ்பரி நரம்பு வாயு தாக்குதலுக்கு ரஷ்யா தான் “கூடுதல் சாத்தியமான” பொறுப்பேற்க வேண்டியதாகயிருந்தது என்ற அவரது குற்றச்சாட்டை எதிரொலிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union-EU) ஆதரவைப் பெற பிரதம மந்திரி தெரசா மே மேற்கொண்ட முயற்சிகளுக்கு வியாழனன்று இரவு வெற்றி காணப்பட்டது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒருமுறை உற்பத்தி செய்யப்பட்ட “ஒரு வகை” (நோவிசோக்) நரம்பு வாயு தான் இரட்டை முகவர் சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவையும் படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது போன்ற ஆதாரமற்ற கூற்றுக்களின் அடிப்படையில், மாஸ்கோவை குற்றம்சாட்டும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராஜதந்திர மற்றும் ஊடக பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக இந்த கருத்துருவாக்கம் உள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து வரும் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுடன் ஐக்கிய இராஜ்ஜியத்தை கூட்டு சேர்க்கும் வகையில் இந்த ஸ்கிரிபால் விவகாரத்தை மே பயன்படுத்துகிறார். இவ்வாறு, “சிறப்பு உறவை” வலுப்படுத்துவதானது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் அவருக்கு வலுவூட்டுவதாக அமையும். மேலும், உள்நாட்டைப் பொறுத்தவரை, Brexit குறித்து ஆழமாக பிளவுபட்டுள்ள அரசாங்கத்தை ஒன்றுபடுத்த உதவுவதோடு, கிரெம்ளினின் எடுபிடியாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் தொழிற் கட்சித் தலைவர் ஜேர்மி கோர்பினுக்கு எதிராக கையாளத்தகுந்த ஒரு பெறுமதியான ஆயுதமாகவும் இது செயலாற்றியுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து கணிசமான எதிர்ப்பையே இதுவரை மே எதிர்கொண்டுள்ளார். விளாடிமிர் புட்டின் அரசாங்கத்துடனான உறவுகள் இன்னும் மோசமடைவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து கவலையுற்று, ஐக்கிய இராஜ்ஜியத்தின் கருத்துருவாக்கலை ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் ஐக்கிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் திங்களன்று நடந்தது. ரஷ்யாவை குற்றவாளியாக அடையாளம் காண்பதை ஆஸ்திரியா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பவில்லை, மேலும், பிரிட்டன் உடனான “ஒருமைப்பாட்டை” ஜேர்மனியும் பிரான்சும் வெளிப்படுத்துகின்ற போதிலும், இந்த பிரச்சினை குறித்து பிளவுகளே அங்கு காணப்பட்டன.

உச்சிமாநாடு தினத்தன்று CNBC இல் வெளியான ஒரு கட்டுரை, “முன்னாள் உளவாளி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவைப் பற்றிய குழப்பமான செய்திகளை ஜேர்மனி ஏன் அனுப்பி வருகிறது?” என்று கேள்வி எழுப்பியது. வெளிப்படையான அக்கறையுடன், “ரஷ்யாவின் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் தேவை அதிகரித்தது” தொடர்பான குறிப்பிட்ட முக்கியத்துவத்தையும், “ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கான எரிவாயு விநியோகத்தை இரு மடங்காக்கும்” Nord Stream II குழாய்த்திட்டத்திற்கு இருக்கும் ஜேர்மனியின் ஆதரவையும் மேற்கோள்காட்டி, “ரஷ்யா கிரிமியாவை அதனுடன் இணைத்துக் கொண்டமைக்கு அதன் மீதான சர்வதேசத் தடைகளும் மற்றும் உக்ரேனில் ஒரு ரஷ்ய சார்பு எழுச்சியில் அதனது உணரப்பட்ட பாத்திரமும் ஒருபுறம் இருந்தாலும், 2017 இல் ஜேர்மனி மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது” எனக் குறிப்பிட்டது.

இந்நிலையில், வியாழனன்று மாலை, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், ஜேர்மன் சான்சலர் மேர்க்கெல் மற்றும் மே ஆகியோருக்கு இடையே ஒரு முவ்வழி விவாதத்தை மையமாகக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற உடன்பாடுகளுக்கும் கை முறுக்கலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அது இருந்தது. அதன் விளைவாக, சாலிஸ்பரி தொடர்பாக, “ரஷ்ய கூட்டமைப்பு தான் அநேகமாக அதிகளவு பொறுப்பாகும் என்பதைத் தவிர வேறு நம்பத்தகுந்த மாற்று விளக்கம் எதற்கும் அங்கு வழியில்லை” என்ற 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் விடுத்த அறிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஆலோசனைக் குழுவின் ஜனாதிபதி டொனால்ட் டஸ்க், கண்டங்களின் “அரசியல் இயல்பு…. 28 நாடுகளையும் ஒருங்கிணைத்து வைப்பதை அவ்வளவு எளிதாக்காது” என்று பத்திரிகைக்கு தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இன்னும் உடன்பாடின்மைகள் நிலவுவதை சுட்டிக்காட்டினார்.

ஆனால் அடுத்த நாளிலேயே, “இலண்டன் மற்றும் வாஷிங்டனின் தூண்டுதலில் தான், ஒரு ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்தை” நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் சென்றுகொண்டிருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குறிப்பாக கூறியபோது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணமுடிந்தது.

சாலிஸ்பரி தாக்குதல் குறித்த “ஆலோசனைகளுக்கு” மாஸ்கோவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

“அனைத்து ஐரோப்பிய இறையாண்மை மீதானதொரு தாக்குதலுக்கு” எதிராக “பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளின்” ஒரு “ஒருங்கிணைந்த” பிரதிபலிப்பிற்கு இட்டுச்செல்லக்கூடிய மக்ரோனின் உறுதியளிப்புடன், வெள்ளியன்று மேர்க்கெலும் மக்ரோனும் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினர்.

பொருளாதாரத் தடைகள் “அவசியமானவையே,” ஆனால் அவைகள் என்னவாக இருக்குமென குறிப்பிட வேண்டாம் என்று மேர்க்கெல் அறிவித்தார். பிரான்ஸ், அதுவாகவே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்பது “தெளிவானதாக” இருந்தது என்று மக்ரோன் கூறினார்.

கூட்டுத் தடைகள் ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு ஜூலை வரை காலம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முக்கிய ஐக்கிய இராஜ்ஜிய கூட்டணி தலைமையிலான, குறைந்தபட்சம் 10 ஐக்கிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், அயர்லாந்து குடியரசு ஆகியவை திங்கட்கிழமைக்கு முன்பாகவே ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டினர். ரஷ்ய தூதர்களை “முகவர்களாக” விவரிப்பது போன்ற ரஷ்யாவிற்கு எதிரான பிரிட்டனின் குற்றச்சாட்டுக்களை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்கிறது என்பதை முன்மொழிவதில் மக்ரோனின் பக்கபலத்துடன், ஐரிஷ் பிரதம மந்திரி லியோ வாராட்கார், ஒரு முக்கிய நபராக விளங்கினார். டென்மார்க், பல்கேரியா, மூன்று பால்டிக் நாடுகள், செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு செய்தி அறிக்கையில், ஐக்கிய இராஜ்ஜியம், “சாலிஸ்பரி நகர வீதியில் நடந்த நிகழ்வுக்கு, ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஒரு வகையான இராணுவ நரம்பு வாயு பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த விசாரணையின் ஒரு மேம்ப்பட்ட விளக்கத்தை” வழங்கியுள்ள மே உடன் ஐரோப்பிய ஆலோசனைக் குழு “ஒன்றாக இணைந்து நிற்கிறது” என்று கற்பிதம் செய்தனர். மேலும், “நரம்பு வாயுக்களின் நோவிசோக் வகையின் பகுதியாக பயன்படுத்தப்படும் இரசாயனம் தான் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று போர்ட்டன் டவுனில் உள்ள நமது உலகின் முன்னணி விஞ்ஞானிகளால் சாதகமாக அடையாளம் காணப்பட்டுள்ளது” என மே கூறினார்.

முன்னாள் பிரிட்டிஷ் தூதர் கிரெய்க் மர்ரி வியாழனன்று, தனது வலைப் பக்கத்தில் இத்தகைய கூற்றுக்கள் தொடர்பாக பேரழிவு தரும் மறுப்புக்களை வெளியிட்டார். “பொறிஸ் ஜோன்சன், ஒரு திட்டவட்டமான பொய்யர்” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ஐக்கிய இராஜ்ஜிய இராணுவத்தின் போர்ட்டன் டவுன் உயிரிரசாயன ஆராய்ச்சிக் கூடம் நடத்திய ஆய்விற்கு எதிராக சோதனை செய்யும் பொருட்டு, இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான அமைப்பில் (OPWC) இருந்து புலனாய்வாளர்கள் சேர்ஜி மற்றும் யூலியாவின் இரத்த மாதிரிகளை எடுத்துக் கொள்ளலாம் என பிரிட்டிஷ் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்தது என்று மர்ரி குறிப்பிட்டார்.

Deutsche Welle க்கு புதனன்று அளித்த ஒரு பேட்டியில் மர்ரி, “அந்த நரம்பு வாயு ரஷ்ய தயாரிப்பு தான் என்று அவர்கள் சாதகமாக அடையாளம்” கண்டிருப்பதாக போர்ட்டன் டவுன் ஆராய்ச்சி மையம் அவரிடம் இப்பொழுது தான் தெரிவித்துள்ளதாக ஐக்கிய இராஜ்ஜிய வெளியுறவு அமைச்சர் ஜோன்சன் கூறியுள்ளதை குறிப்பிட்டார்.

அந்த நரம்பு வாயுவை ரஷ்யாவில் தயார் செய்யப்பட்ட நோவிசோக் உடன் அவர்கள் அடையாளப்படுத்தியது தொடர்பாக, அது “முற்றிலும் திட்டவட்டமானதா… ‘நீங்கள் இதை உறுதியாக கூறுகிறீர்களா?’ என்று நானே அந்த நபரிடம் கேட்டேன், அதற்கு அவர் சந்தேகமே இல்லை என பதிலளித்தார்” என்று ஜோன்சன் கூறினார்.

மர்ரி இதற்கான தனது பதிலில், போர்ட்டன் டவுன் “உண்மையிலேயே கூறியுள்ளது” என்ன என்பதன் சுருக்கம் உள்ளிட நீதிபதி வில்லியம்ஸ் வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பு, ஸ்கிரிபாலிடமிருந்து புதிய இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு அனுமதியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

போர்ட்டன் டவுன் இரசாயன மற்றும் உயிரியல் ஆய்வாளர் ஒருவர், ஸ்கிரிபாலிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள், “நோவிசோக் வகை நரம்பு வாயுடன் அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடைய நரம்பு வாயுவுடன் தொடர்புபட்டு இருந்ததாக” தெரிவிக்கிறார்.

“போர்ட்டன் டவுன் இதை ‘நெருங்கிய தொடர்புடைய வாயு’ என்பதற்கு மாறாக, இது ஒரு ‘நோவிசோக்’ வகையை சார்ந்தது என்று கூட உறுதியாக அடையாளம் காணவில்லை என்பதுதான் உண்மை… இதை நான் வலியுறுத்துகிறேன்…” என்று மர்ரி எழுதுகிறார். ஒருவேளை அது “நோவிசோக்” ஆக இருந்தாலும், ரஷ்யாவில் தான் அது தயார் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும், மேலும் ஒரு ‘நெருங்கிய தொடர்புடைய வாயுவாக” இருந்தாலும் அதனை உண்மையில் எண்ணற்ற அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்களால் தயார் செய்ய முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

“தாக்குதலின் உற்பத்தி ஸ்தானத்தை கண்டறிவதில் அவர்களது உறுதியற்ற நிலை பற்றி பாராளுமன்றத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, நேட்டோவிற்கு, ஐக்கிய நாடுகளுக்கு, மேலும் அனைத்திற்கும் மேலாக மக்களுக்கு, என அரசாங்கம் நேரடியாக பொய்யானதையே காட்டியுள்ளது என்பதற்கு மறுக்கவியலாத சான்றாகவே இது அமைகிறது.”

ஐக்கிய இராஜ்ஜியம் தங்களிடம் பொய்யுரைக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நன்கு அறிவர் என்பதுதான் உண்மை. அடிப்படை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பரிசீலனைகளை முன்னிட்டு, “மோதலுக்குரிய நடவடிக்கைகளாக” விவரித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர், சேர்ஜி லாவ்ரோவை நோக்கியே அவர்கள் நகர்ந்து கொண்டிருப்பதை இந்த பொய் சுட்டிக்காட்டுவதை ஆதரிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக, இந்த கணிப்புக்கள், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் முரண்பாடுகளை தடுப்பதுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.   

உச்சிமாநாட்டிற்கு தயாரிப்பு செய்யும் நேரத்தை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பொருந்தக்கூடியதான சீன எஃகு மற்றும் அலுமினியத்தை இலக்காகக் கொண்ட வர்த்தகத் தடைகளில் உள்ள 60 பில்லியன் டாலரை தடுப்பது தொடர்பாக, ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய சக்திகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்த தீவிரப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஆதிக்கம் செலுத்தின.

வியாழனன்று, ட்ரம்ப் நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என அறிவித்தது. வெள்ளியன்று, இந்த முக்கியமான அபிவிருத்தி பற்றி விவாதிக்க அவர் தற்போது உச்சிமாநாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக மே அறிவித்தார்.

ஆனால், அன்று காலையில் தான் அமெரிக்காவின் முடிவிற்கு அவர் தனது தனிப்பட்ட பாராட்டை தெரிவித்து, ஊடகத்தில், “அமெரிக்கா அறிவித்துள்ளபடி, எஃகு சுங்கவரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய அளவிலான விலக்கினை பெறுவதற்கு நாங்கள் மிக கடுமையாக வேலை செய்து வருகிறோம்… இத்தகைய எஃகு சுங்கவரிகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு நிரந்தர விலக்கினை நாங்கள் எப்படி பெற முடியும் என்பது குறித்து எனது சக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் இன்றிலிருந்து நான் என்ன செய்யவிருக்கிறேன் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Brexit க்கு பின்னர் ஐக்கிய இராஜ்ஜியம் உடனான எதிர்கால உறவுகள் பற்றிய பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டுதல்களை அங்கீகரிப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை திட்டநிரல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்கு அட்டவணை வகுத்தது. மார்ச் 2019 இல் ஐக்கிய இராஜ்ஜியம் விலகுவதற்கு முன்பாக அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கக்கூடிய, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிற பிரச்சினைகள் மீது முன்மொழியப்பட்ட உரையை ஒப்புக்கொள்வதற்கு 30 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தையே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுதலுக்கு ஆதரவான மற்றும் அதற்கு எதிரான ஆகிய இரு கடும் போக்காளர்களிடமிருந்து முன்மொழியப்பட்ட விதிமுறைகள் மீதான பரவலான விமர்சனத்திற்கு முகம்கொடுத்த மே, “ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்பு குறித்த ஒரு புதிய மனநிலை”, மற்றும் ஒரு “புதிய உந்துசக்தி” ஆகியவை பற்றியெல்லாம் பறைசாற்றிய அதேவேளையில், டஸ்க், ஒரு புதிய “சாதகமான உத்வேகம்” குறித்து பேசினார்.