ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russian diplomats expelled over allegations of poisoning of ex-spy in UK

ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னாள்-உளவாளிக்கு நஞ்சூட்டிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்

By Bill Van Auken
27 March 2018

தெற்கு பிரிட்டன் நகரமான சாலிஸ்பரியில் முன்னாள் ரஷ்ய உளவாளியும், பிரிட்டனின் இரட்டை உளவாளியுமான சேர்ஜி ஸ்கிர்பால் மற்றும் அவர் மகளுக்கு மார்ச் 4 அன்று நஞ்சூட்டப்பட்டதற்கு மாஸ்கோ தான் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுக்கள் மீது வாஷிங்டன், 14 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உக்ரேன் மற்றும் கனடா ஆகியவற்றால் ஒருமித்து அறிவிக்கப்பட்ட ரஷ்ய தூதர்களின் மொத்த வெளியேற்றம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத சக்தியான ரஷ்யாவுக்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் ஒரு மிகப்பெரிய தீவிரமயப்படுத்தலை குறிக்கிறது.

பிரதம மந்திரி மால்க்கம் டர்ன்புல்லின் ஆஸ்திரேலிய அரசாங்கம், "தெரியப்படுத்தப்படாத உளவுத்துறை அதிகாரிகள்" என்று அது அறிவித்த இரண்டு ரஷ்ய தூதர்களை வெளியேற்ற தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அதுவும் அந்நடவடிக்கையில் இணைந்து வருகிறது என்பதை வியாழனன்று காலை வெளியான செய்திகள் தெரியப்படுத்தின.

பல்வேறு அரசுகளின் நடவடிக்கைகள் "முன்னொருபோதும் இல்லாதளவில் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய ஒருமித்த வெளியேற்றமாக வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதோடு, இது நாம் பகிர்ந்து கொள்ளும் கண்காணிப்புகளைப் பாதுகாக்க உதவும்” என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜோன்சன் புதனன்று பெருமைபீற்றினார். மாஸ்கோவுக்கு எதிராக மேற்கின் பழிவாங்கும் நடவடிக்கை முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மிக பதட்டமான பனிப்போர் காலங்களின் போது நடத்தப்பட்ட எல்லாவற்றையும் மிஞ்சி செல்கிறது என்பதையே அவர் அர்த்தப்படுத்தினார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளால் முடுக்கி விடப்பட்ட இந்த அபாயகரமான மற்றும் ஆத்திரமூட்டும் பிரச்சாரம், முற்றிலும் அடித்தளமற்ற குற்றச்சாட்டுக்களின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் இரட்டை உளவாளி மீது நரம்புகளைத் தாக்கும் விஷத் தாக்குதலாக கூறப்படுவதற்கு பின்புலத்தில் "பெரிதும் அனேகமாக" ரஷ்யா இருக்கக் கூடும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்சன் அறிவித்த ஆதாரமற்ற அறிக்கையைத் தவிர இந்த சமீபத்திய இராஜாங்க அதிகாரிகளின் வெளியேற்றத்திற்கு ஆதாரமாக வேறெந்த சான்றும் முன்வைக்கப்படவில்லை.

ஸ்கிரிபால் மற்றும் அவர் மகள் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நரம்புகளைப் பாதிக்கும் நஞ்சு சோவியத் ஒன்றியத்தில் ஒருகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த ஒரு “வகை" (நோவிசோக்) என்று பிரிட்டிஷ் அரசு வாதிட்டுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளோ, இரசாயன ஆயுதகளுக்கான ஒப்பந்தம் (CWC), அல்லது இரசாயன ஆயுத தடுப்புக்கான ஐ.நா. அமைப்பின் விதிமுறைகளின்படி, குற்றஞ்சாட்டப்படும் நஞ்சின் மாதிரியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும் கூட, அவர்கள் அதன் சிறு மாதிரியைக் கூட மாஸ்கோவுக்கு வழங்க மறுக்கின்றனர். அந்த "வகையானது" என்ற விவரிப்பே, பயன்படுத்தப்பட்ட அப்பொருள் நடைமுறையளவில் எங்கே வேண்டுமானாலும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

உண்மையில், இலண்டன் மற்றும் நேட்டோவுடன் "ஒத்திசைவாக" செக் குடியரசு மூன்று ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய போதும், நரம்புகளைப் பாதிக்கும் அந்த நஞ்சு ரஷ்யாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு விசாரணை நடத்த அது அதன் உளவுத்துறை சேவைக்கு உத்தரவிட்டது.

60 ரஷ்ய தூதர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் —48 பேர் வாஷிங்டனில் உள்ள மாஸ்கோ தூதரகத்தில் இருந்தும் 12 பேர் ஐக்கிய நாடுகளுக்கான ரஷ்ய குழுவிலிருந்தும்— ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதன் மூலம், பெரும்பான்மை இராஜாங்க அதிகாரிகளை ட்ரம்ப் நிர்வாகம் வெளியேற்றியது.

இதற்கு கூடுதலாக, வாஷிங்டனின் சியாட்டில் நகரின் ரஷ்ய தூதரகத்தை மூடுமாறும் வாஷிங்டன் உத்தரவிட்டது. அது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தளம் மற்றும் போயிங் விமானத்தளத்திற்கு மிக நெருக்கமாக உள்ளதால், அவ்விதத்தில் ஏதோவொருவித இராணுவ அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி இட்டுக்கட்டப்பட்ட சாக்குப்போக்கில் இந்நடவடிக்கையை அது நியாயப்படுத்தப்பட்டது.

“ஐக்கிய இராஜ்ஜியத்தின் மண்ணில் இராணுவ-தரத்திலான இரசாயன ஆயுதம் ஒன்றை" ரஷ்யா பயன்படுத்தியது என்பதை உண்மையைப் போல வலியுறுத்தி, புதனன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கை குற்றஞ்சாட்டப்படும் இந்த நடவடிக்கையை "உலகெங்கிலும் நடந்து வரும் அதன் ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கையின் சமீபத்திய வடிவம்" என்பதாக விவரித்தது.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் அரசாங்கத்தை மாஸ்கோ ஆதரிக்கிறது என்பதும் "ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கைகளில்" ஒன்றாகும், சிரியாவில் ஏழாண்டு கால பழைய அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற போரைப் பெரிதும் தலைகீழாக்குவதைச் சமிக்ஞை செய்த வகையில், இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களின்" கடைசி இரும்புபிடிகளில் ஒன்றாக இருந்த டமாஸ்கஸ் புறநகரமான கிழக்கு கூத்தாவைக் கைப்பற்றுவதில் சிரிய அரசு படைகளுக்கு ரஷ்யா விமானப்படை ஒத்துழைப்பை வழங்கி உள்ளது.

கடந்த வாரம், ஆப்கானிஸ்தானின் உயர்மட்ட அமெரிக்க தளபதி ஜெனரல் ஜோன் நிக்கோல்ஸ் கூறுகையில், ரஷ்யா தாலிபான்களுக்கு உதவியும் ஆயுதங்களும் வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டினார், இந்த குற்றச்சாட்டுக்களை மாஸ்கோ "முற்றிலும் அடித்தளமற்றது" மற்றும் "அர்த்தமற்றது" என்று விவரித்து.

மத்திய கிழக்கில் இருந்து கிழக்கு ஐரோப்பா வரையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியா வரையில், ரஷ்யாவின் தொடர்ச்சியான இருப்பு இராணுவ வழிவகைகள் மூலமாக தனது உலகளாவிய மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலுக்கு ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது என்பது யதார்த்தமாகும். இதனால் தான் வாஷிங்டன் ஸ்கிரிபால் மற்றும் அவர் மகள் மீதான படுகொலை முயற்சி என்று குற்றஞ்சாட்டப்படும் பிரச்சினையில் தலைநுழைத்து கொண்டு, அதே போக்கில் மற்ற ஐரோப்பிய சக்திகளையும் கொண்டு வர அழுத்தமளிப்பதில் இலண்டனுடன் இணைந்துள்ளது.

ரஷ்யாவின் 23 தூதர்களை அந்நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டு, இலண்டன் தான் வெளியேற்றங்களைத் தொடங்கியது. மாஸ்கோ 23 பிரிட்டிஷ் தூதர்களை வெளியேற்றியதன் மூலம் பதிலடி கொடுத்தது. ஆனால் மற்ற ஐரோப்பிய சக்திகள் உத்தரவிட்ட வெளியேற்றங்கள் பெரிதும் அடையாளத்திற்கான தன்மையில் இருந்தன, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஒவ்வொன்றும் நான்கு ரஷ்ய தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டன, கனடாவும் அதே எண்ணிக்கையை இலக்கில் வைத்தது. இதில் விதிவிலக்காக இருந்தது உக்ரேனின் தீவிரமான ரஷ்ய-விரோத அரசாங்கமாகும். அது 13 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது.

ரஷ்யாவின் குற்றங்கள் எனக்கூறப்படுபவற்றிற்கு எதிராக நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்திற்கான வெளிப்பாடுகள் இருந்தாலும், அங்கே மாஸ்கோ உடனான உறவுகள் தொடர்பாக நேட்டோ கூட்டணிக்குள் ஆழ்ந்த பிளவுகள் நிலவுகின்றன. ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு வினியோகங்களை இரட்டிப்பாக்கும் Nord Stream II எரிவாயு குழாய் திட்டத்திற்கான ஜேர்மனியின் ஆதரவுடன், குறிப்பாக ரஷ்ய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தொடர்பாக, ஜேர்மனி ரஷ்யாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க செல்வாக்கு பெற்ற நேட்டோவுக்கு எதிராக நிலைநிறுத்தும் வகையில், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ கூட்டணியை அபிவிருத்தி செய்வதை நோக்கிய பாரீஸ் மற்றும் பேர்லின் நகர்வுகளை எதிர்கொள்ள, வாஷிங்டனும் இலண்டனும் இந்த ஸ்கிர்பால் விவகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இங்கிலாந்துடனான நல்லிணக்கம் குறித்த சம்பிரதாய அறிக்கைகள் ஒருபுறம் இருக்க, ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு மீது ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டுக்குள்ளும் பிளவுகள் ஆழமாக தங்கியுள்ளன.

இதற்கிடையே மாஸ்கோ, அதன் இராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ஒவ்வொரு நாட்டிற்கு எதிராகவும் பதிலுக்கு பதில் எதிர்நடவடிக்கை எடுக்க அச்சுறுத்தி உள்ளது.

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் பல நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கு எடுத்த முடிவின் மீது நாங்கள் ஒரு தீர்க்கமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அதேபோன்ற பதிலிறுப்பு இருக்கலாம். அதுகுறித்து நாங்கள் வரவிருக்கும் நாட்களில் தீர்மானித்து, ஒவ்வொரு நாட்டையும் பொறுத்து அதற்கேற்ப நாங்கள் விடையிறுப்போம் … இந்நடவடிக்கையை சிநேகிதபூர்வமற்றதாகவும், சாலிஸ்பரியில் மார்ச் 4இல் நடந்த சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கண்டறிவதிலும் காரணங்களை ஸ்தாபிப்பதற்குமான பணிகள் மற்றும் ஆர்வங்களுக்கு இவை சேவையாற்றவில்லை என்பதையும் நாங்கள் காண்கிறோம்,” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் திங்களன்று ஊடகங்களுக்கு கூறுகையில், “இன்று அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் ரஷ்ய-அமெரிக்க உறவுகளில் என்ன கொஞ்ச-நஞ்சம் எஞ்சியிருக்கிறதோ அதையும் அழித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய-அமெரிக்க உறவுகள் அழிக்கப்படுவதன் விளைவுகளுக்கான மொத்த பொறுப்பும் அமெரிக்காவையே சாரும்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், “உள்ளவாறே அந்த விடயத்தின் புலனாய்வில் ரஷ்ய கூட்டாட்சியின் தலையீட்டிற்கான, அல்லது சாலிஸ்பரியில் நடந்த துயரத்தில் ரஷ்யா சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்கான ஒரேயொரு சிறிய ஆதரமும் அங்கே இல்லை,” என்றார்.

ரஷ்யா "வாய் மூடி விலகி நிற்க" வேண்டுமென ஊடகங்களுக்கு கூறி ஐக்கிய இராஜ்ஜியத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு மாஸ்கோவின் மறுப்புரைகளுக்கு சமீபத்தில் விடையிறுத்திருந்த பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன், திங்களன்று எஸ்தோனியாவில் ஓர் ஆத்திரமூட்டும் உரை வழங்கினார், அங்கே ரஷ்யாவின் எல்லையை ஒட்டி நேட்டோவினது இராணுவ கட்டியெழுப்பலின் பாகமாக பிரிட்டிஷ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. “ஜனாதிபதி புட்டினாலும் அவரது நடவடிக்கைகளாலும் உலகின் பொறுமை மங்கி வருகிறது,” என்றார்.

இதற்கிடையே, வாஷிங்டனில், முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மாஸ்கோவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஜனாதிபதி போதுமானளவுக்கு முன்நகரவில்லை என்று கண்டித்து, ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த சமீபத்திய ரஷ்ய-விரோத நடவடிக்கைகளுக்கு விடையிறுத்தனர்.

பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாம் நிலை அதிகாரியான காங்கிரஸில் உள்ள எலியாட் ஏஞ்சல், ரஷ்யா தூதர்களின் வெளியேற்றம் "மேற்கின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒரு முதல் எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டதோடு, “வரவிருக்கும் நாட்களில் ரஷ்ய ஆக்ரோஷத்திற்கு எதிராக திரும்பி அழுத்தமளிக்கும் நிறைய கூட்டு முயற்சிகளை நாம் காணலாம்,” என்றவர் நம்புவதாக தெரிவித்தார்.

ஆனால் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா "தலையிட்டது" என்ற குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, ஏஞ்சல் கூறுகையில், “இங்கே அமெரிக்காவிற்குள் ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்த நிர்வாகத்தின் பலவீனமான விடையிறுப்பை" மட்டுந்தான் அமெரிக்க நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சிஐஏ மற்றும் மற்ற அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுக்குள் உள்ள தீர்மானகரமான பிரிவினரின் சார்பாக பேசும் ஏஞ்சல் போன்ற ஜனநாயகக் கட்சியினரது ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பு பிரதானமாக அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயம் மீதான அவர்களது கருத்துவேறுபாடுகளில் வேரூன்றியுள்ளது. அவர்கள் உடனடியாகவே சற்று தாமதமாகவோ ரஷ்யாவுடன் ஓர் இராணுவ மோதலுக்கு அழுத்தமளித்து வருகின்றனர்.