ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Teachers’ rebellion spreads on four continents

ஆசிரியர்களின் கிளர்ச்சி நான்கு கண்டங்களுக்கும் பரவுகிறது

By Eric London
28 March 2018

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் பரவி வருகையில், உலகெங்கிலுமான ஆசிரியர்கள் உலகளாவிய தொழிலாளர் போர்குண அலையை முன்னெடுக்கின்றனர்.

அமெரிக்காவில், சம்பள உயர்வு கோரி வரும் அரிசோனா ஆசிரியர்கள் இன்று பியோனிக்ஸ் தலைமை செயலகத்தின் முன் போராடிய நிலையில், 41,000 ஓக்லஹோமா ஆசிரியர்கள் ஏப்ரல் 2 இல் மாநிலந்தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் கிளர்ச்சியால் தூண்டிவிடப்பட்ட இப்போராட்டங்கள் இவ்வாரமும் தொடர்ந்தன.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஓக்லஹோமா சென்ட் உறுப்பினர்கள், பெரிதும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது வரிகளை அதிகரிப்பதன் மூலமாக பள்ளி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் ஓர் உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு வாக்களித்ததும், திங்கள் மற்றும் செவ்வாயன்று ஆசிரியர்களின் கோபம் கொதிப்பேறியது.

சாமானிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு 10,000 க்கும் அதிகமானவர்களால் பின்தொடரப்படும் ஓக்லஹோமா ஆசிரியர் ஐக்கியம் (OTU) எனும் ஒரு பேஸ்புக் பக்கம் குறிப்பிட்டது, “பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய சட்டமசோதா மீது, ஆசிரியர்கள் ஏற்கனவே வேண்டாம் என்று கூறியதை, இவ்வாரம் செனட் வாக்களிக்க உள்ளது. ஆசிரியர்கள் வெறுப்படைந்து உள்ளனர்!!!!!! சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது மிகவும் குழம்பி உள்ளார்கள். “'உலகில் எது உங்களுக்கு தவறாக உள்ளது?' என்று கேட்டு, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து எனக்கு 100 அழைப்புகள் வந்துவிட்டன.” இருகட்சிகளது அந்த உடன்பாடு, ஆசிரியர்கள் கோரிய 10,000 டாலரை விட வெகு குறைவாக, 6,000 டாலர் சம்பள உயர்வுக்கு உறுதியளித்தது.

ஓக்லஹோமா ஆசிரியர்கள் உத்தியோகபூர்வ தொழிற்சங்கத்தின் மீது வெகு குறைவாகவே நம்பிக்கை வைத்துள்ளனர், ஏப்ரல் இறுதி வரையில் ஒரு வேலைநிறுத்தத்தைத் தள்ளிப்போட முயன்றதற்காக தொழிற்சங்கத்தை ஆசிரியர்கள் பட்டவர்த்தனமாக கண்டித்தனர். "ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளங்கள் கிடைப்பதற்கு முன்பே, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் அழுத்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் அடிபணிந்து விடும்" என ஆசிரியர்களில் சுமார் பாதிப்பேர் "நம்புகின்றனர்" என்பதை ஓக்லஹோமா ஆசிரியர் ஐக்கிய பேஸ்புக் பக்கம் பிரசுரித்த ஓர் இணைய வழி கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

நேற்றிரவு, OTU பேஸ்புக் பக்க நிர்வாகிகள், அமெரிக்க ஆசிரியர் சம்மேளம் (AFT) ஏற்பாடு செய்த ஓர் அழைப்பில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அழைப்பின் போது OTU பதிவிட்டது: “ஆசிரியர்கள் இந்த உடன்படிக்கையை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டுமென AFT சம்மேளனம் நகர அரங்க கூட்டத்தின் நடுவே விவரித்தது.” மேற்கு வேர்ஜினியாவில் AFT பயன்படுத்திய அதே மாதிரியான உத்திகளைப் பயன்படுத்திய அந்த தொழிற்சங்கம், தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்று அந்த தொழிலாளர்களுக்கு கூறுகிறது: “கடந்த ஒரு வாரகால இந்த போராட்டத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து இருக்க மாட்டார்களென அவர்கள் கூறுகிறார்கள்.” ஆசிரியர்களிடம் இருந்து வந்த கருத்துக்களோ, AFT இன் பயந்து பணிந்த உத்திகளுக்கு பெரும் விரோதமாக உள்ளன.

42,000 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு மாநிலமான கென்டக்கி இல், இவ்வாரம் “ஓய்வூதிய விழிப்புணர்வுக்கான உள்நுழைவு" போராட்டம் நடந்தது, அதேவேளையில் இன்று பிரான்ங்போர்ட் தலைமை செயலகத்தில் ஆசிரியர்கள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். குடியரசுக் கட்சி ஆளுநர் மட் பேவின், ஆசிரியர்களை "சுயநலவாதிகள்" என்றும், “இம்மாநிலத்திற்கு எது நல்லதோ அதை அழிக்க விரும்பும் ஆத்திரக்காரர்கள்" என்றும் கண்டித்துள்ளார். “அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ" ஓய்வூதியங்கள் வெட்டப்படுமென அவர் சூளுரைத்தார், அதேவேளையில் அம்மாநில செனட் சபை, இரண்டாண்டு கால வரவு-செலவு திட்டக்கணக்கில் ஆசிரியர்களின் ஓய்வூதிய திட்டத்திலிருந்து 1.1 பில்லியன் டாலரை வெட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியது.


அரிசோனா ஆசிரியர்கள் கல்விக்காக அவர்கள் கார்களுக்கு சிவப்பு நிற வர்ணமிடுகிறார்கள்

அரிசோனாவில், வேலைநிறுத்தத்திற்கான விருப்பம் அதிகரித்து வருகின்ற நிலையில், 51,000 ஆசிரியர்களுடன், இவ்வாரம் “மருத்துவ விடுப்பு" போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆசிரியர் சங்கங்களில் இருந்து சுயாதீனமான அண்டைஅயலாரும் பெற்றோர்களும் 2008 இல் இருந்து அரசு கல்விக்கான நிதியில் 371 மில்லியன் டாலர் வெட்டியுள்ளதாக விவரிப்பதற்காக துண்டறிக்கைகள் வினியோகித்தும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

பென்சில்வேனியாவின் நியூ டல்லாஸ், நான்கு நகரங்களான லோவா-இலினோய், டென்வெர், கொலொராடோ என இம்மாவட்டங்களின் ஆசிரியர்கள் அடுத்து வேலைநிறுத்தத்தில் இறங்கக்கூடும். டென்வர் ஆசிரியர்கள் 1990 களில் இருந்து முதல் மாவட்டந்தழுவிய வேலைநிறுத்தத்தை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பைக் கோரி வருவதாக Denver Post குறிப்பிட்டது. நிறுவனத்திற்கு-சார்பான செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளமுறை மீதான கோபத்தால், ஆங்காங்கே மருத்துவ விடுப்பு போராட்டங்களும் மறியல்களும் நடந்துள்ளன, இந்த முறையானது நாட்டிலேயே கொலொராடோ ஆசிரியர்களின் சம்பளத்தை மிகக் குறைந்தளவில் வைத்துள்ளது.

அதிகரித்து வரும் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள டென்வர் வகுப்பறை ஆசிரியர் சம்மேளனம் மாவட்ட கல்வித்துறையிடம் இருந்து எந்த வாக்குறுதிகளும் இல்லாமல் நடப்பு ஒப்பந்த பேரம்பேசல்களை விரிவாக்கியது. கோழைத்தனத்திற்கு முன்னுதாரணமாக, அந்த தொழிற்சங்கம் நவம்பர் மாத வாக்களிப்பு நடவடிக்கையில் பொதுக்கல்விக்கு நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படுமென அதில் நம்பிக்கை வைக்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவித்தது.

அரசு பள்ளிக்கூடங்களில் பாரியளவில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக கடந்த சனியன்று நடந்த நாடுதழுவிய போராட்டங்களின் போது, நூறாயிரக் கணக்கான இளைஞர்களுடன் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர், பள்ளி ஆசிரியர்களை ஆயுதபாணியாக்க வேண்டாம், பள்ளிக்கூடங்களுக்கும், பாடப்புத்தகங்கள் மற்றும் ஏனைய வினியோகங்களுக்கும் நிதியுதவிகளை அதிகரிக்குமாறு போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைந்திருந்தன.

அமெரிக்காவின் பல பகுதிகளில் ஏறத்தாழ அண்மித்து 150,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்களுக்கு அச்சுறுத்துகின்றனர், பொதுக்கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது.

ஆபிரிக்கா

வட ஆபிரிக்காவில், துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன. உலகெங்கிலுமான ஆசிரியர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் ஒருமாதிரியானதே: அதாவது, சம்பள உயர்வு, பாதுகாப்பாக ஓய்வூ பெறுதல் மற்றும் ஓய்வூதியங்கள், மற்றும் பொதுக்கல்விக்கான உரிமையின் பாதுகாப்பு ஆகியவை.

அல்ஜீரிய ஆசிரியர்களின் சங்கம் CNAPESTE ஜனவரி 30 இல் இருந்து பெப்ரவரி 28 வரையில் ஒரு மாதகால வேலைநிறுத்தத்தை முடக்கி வைத்த பின்னர், உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 9 முதல் தேசியளவில் வேலைநிறுத்தத்தை மீண்டும் அவர்கள் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர், “அரபு வசந்தம் மூலமாக 2011 இல் எகிப்து மற்றும் துனிசிய மேலெழுச்சிக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட தொந்தரவுகளுக்கு பிந்தைய அல்ஜீரியாவின் மிக முக்கிய போராட்டம்" என்று ராய்டர்ஸ் குறிப்பிடும் இது, அந்நாட்டையே அச்சுறுத்துகிறது.


பெப்ரவரியில் அல்ஜீரிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தம்

மருத்துவர்களும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் ஏற்கனவே சீரழிந்து வரும் பொது சுகாதார நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். உயர்நிலை பள்ளி மாணவர்களும் பெப்ரவரியில் ஆசிரியர் வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.

அரபு வசந்தத்தின் பிறப்பிடமான அண்டைபகுதி துனிசியாவில் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் நடத்தி, அவர்களின் அல்ஜீரிய சமதரப்பினருடன் இணைந்து வருகின்றனர். துனிசிய ஆசிரியர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பின் விளைவாக கடந்த ஆறு வாரங்களில் துனிசிய தொழிலாளர்களின் பொதுச்சங்கம் (UGTT) இரண்டாவது முறையாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்க நிர்பந்திக்கப்பட்டது.

துனிசியாவில், ஆசிரியர்கள் 15 சதவீத போனஸ் மற்றும் ஓய்வூதிய வயதை 55 ஆக குறைக்க கோரி வருகின்றனர். அல்ஜீரியாவில், ஆசிரியர் சம்பளம் மற்றும் அல்ஜீரிய அரசின் பொதுக்கல்வி மீதான வெட்டுக்கு எதிராக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். துனிசிய அரசாங்கமும் சரி அல்ஜீரிய அரசாங்கமும் சரி இரண்டுமே வேலைநிறுத்தக்காரர்களைப் பணியிலிருந்து நீக்கவும் மற்றும் அவர்களின் சம்பளங்களை முடக்கவும் அச்சுறுத்தி வருகிறது.

இலத்தீன் அமெரிக்கா

இவ்வாரம் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் பரவின. அர்ஜென்டினாவில், ப்யூனோஸ் எயர்ஸ் மாகாண ஆசிரியர்கள் ஏப்ரல் 5 இல் ஒரு நிரந்தர "வெள்ளை கொட்டார" முகாம் அமைக்க உள்ளார்கள், அவர்கள் 15 சதவீத பணவீக்கத்திற்கு ஈடாக 20 சதவீத சம்பள உயர்வைக் கோரி வருகின்றனர். இம்மாத ஆரம்பத்தில் தான் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்று தென் அமெரிக்காவை உலுக்கியது. மார்ச் 22 இல், அண்டையில் உள்ள உருகுவே ஆசிரியர்களும் 24 மணி நேர வேலைநிறுத்தம் நடத்தி இருந்தனர்.

மெக்சிகோவில், Chihuahua மாநிலத்தில் 16,000 ஆசிரியர்கள் சம்பள நிலுவைகளைக் கோரி மார்ச் 21 இல் போராடினர், இது Chihuahua இல் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்த ஒரு மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தில் போய் முடிந்தது. Oaxaca, Chiapas, மற்றும் Michoacán இன் வறிய தென் மாநிலங்களில், நடந்து வரும் ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் பதிவு செய்துள்ள ஒரு மில்லியன் மாணவர்களுக்கும் அதிகமானவர்களுடன் பள்ளிகளை மூடச் செய்தது. மாதத்திற்கு மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்யும் எந்தவொரு ஆசிரியரையும் வேலையிலிருந்து நீக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.


மார்ச்சில் வெனிசூலாவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வெனிசூலாவின் காராபோபோவில் கடந்த வாரம் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடந்தது, அங்கே ஆசிரியர்கள் அதிக சம்பள உயர்வுகளைக் கோரி இரண்டு நாட்கள் போராடினர், இது காராகஸ் க்கு இரண்டு மணி நேர தொலைவில் உள்ள வெலன்சியா நகரில் முன்னேற்பாடின்றி போராட்டங்களைத் தூண்டியது. சம்பளங்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு செலவு வெட்டுகள் தொடர்பாக பிரேசிய மாநிலமான அமேஜோனாஸில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் திங்களன்று தொடங்கியது. இந்த நடவடிக்கை ஓய்வூதியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஸா பாலோ ஆசிரியர்களின் நடந்து வரும் வேலைநிறுத்தத்துடன் பொருந்தி உள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா கண்டத்தில், பிரெஞ்சு ரயில்வே (SNCF) வழித்தடங்களைத் தனியார்மயப்படுத்துவதற்கான அரசின் திட்டங்களுக்கு எதிராக மார்ச் 22 ஆன்று பொதுவான அணித்திரள்வில் பத்தாயிரக் கணக்கான ஆசிரியர்கள் பங்கெடுத்தனர். ஸ்காட்லாந்தில், முன்மொழியப்பட்ட மூன்று சதவீத சம்பள உயர்வை பெரும்பான்மையாக நிராகரித்த ஆசிரியர்கள், அதற்கு பதிலாக 10 சதவீத உயர்வு கோரி வருகின்ற நிலையில், ஆசிரியர்களின் ஒரு தேசிய வேலைநிறுத்தம் முன் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக ஐக்கிய இராஜ்ஜியத்தில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சங்கம் (UCU) விற்றுத்தள்ளிய ஓர் உடன்படிக்கையை விரிவுரையாளர்கள் நிராகரித்த பின்னர், மாதக்கணக்கில் நீண்டு கொண்டிருக்கும் அவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள், இலண்டன் மற்றும் மிட்லாண்டில் மேலும் 12 கல்வியியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் பணியாளர்கள் சம்பள உயர்வு கோருவதற்கும் மற்றும் தற்காலிக பணியாளர்களை அமர்த்துவதை எதிர்த்தும் இவ்வாரம் மட்டுப்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தி உள்ளனர்.

உலகெங்கிலுமான ஆசிரியர்கள் ஒரே எதிரிகளைத் தான் எதிர்கொள்கிறார்கள்: அதாவது வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் இலாபங்களை அதிகரிப்பதற்காக சம்பளங்கள், ஓய்வூதியங்கள், கல்வி நிதிகளை வெட்டும் அரசுகளையும், வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி, பொதுக்கல்வி மீதான தாக்குதலுக்கு பொறுப்பாக உள்ள அதே முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களை நிர்பந்திக்கும் அடிமைத்தனமான தொழிற்சங்கங்களையும் முகங்கொடுக்கிறார்கள். பூமியில் வாழும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கண்ணியமான வருமானம் மற்றும் முழுமையான ஓய்வூதிய நிதிகளுடன் கல்வியெனும் சமூக உரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில், தங்களின் சக தொழிலாளர்களையும், மிக பரந்தளவில் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைப்பதில் தான் ஆசிரியர்களின் மிகப்பெரிய பலம் தங்கியுள்ளது.