ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Support grows for West Virginia teachers as unions, Democrats scramble to end strike

தொழிற்சங்கங்களும், ஜனநாயகக் கட்சியும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முயலுகையில், மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களுக்கு ஆதரவு அதிகரிக்கிறது

By Jerry White
3 March 2018

மேற்கு வேர்ஜீனியாவின் 30,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மற்ற பணியாளர்களின் பலமான வேலைநிறுத்தம் வெள்ளியன்று அதன் முதல் வாரத்தை நிறைவு செய்தது. ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கங்களும் மற்றும் அம்மாநில ஜனநாயகக் கட்சியும், ஏற்கனவே அந்த சாமானிய கல்வியாளர்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், அந்த வேலை வெளிநடப்பை முடிவுக்கு கொண்டு வந்து, ஆசிரியர்களைத் திங்களன்று காலை பணிக்குத் திரும்ப செய்ய முயன்று வருகின்றனர்.

செவ்வாயன்று இரவு, மேற்கு வேர்ஜீனிய கல்வித்துறை வாரியம் (West Virginia Education Association - WVEA), மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களுக்கான அமெரிக்க சம்மேளனம் (American Federation of Teachers-West Virginia - AFT-WV) மற்றும் மேற்கு வேர்ஜீனிய பள்ளி சேவை பணியாளர்களின் அமைப்பு (West Virginia School Service Personnel Association - WVSSPA) ஆகியவற்றின் தலைவர்கள் அம்மாநில பில்லியனர் ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ் உடன் ஓர் உடன்படிக்கையை அறிவித்ததுடன், வியாழனன்று காலை பணிக்குத் திரும்புமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த கல்வியாளர்கள், உத்தரவாதமில்லாத, ஒரே தவணையில் ஐந்து சதவீத உயர்வை நிராகரித்ததுடன், மாநில அரசு பணியாளர் காப்பீட்டு ஆணையத்தின் (Public Employee Insurance Agency - PEIA) நீண்டகால நிதி பற்றாக்குறையைச் சீர்செய்ய மற்றொரு பணிக்குழு அமைக்கப்படும் என்ற ஆளுநரின் வாக்குறுதியையும் நிராகரித்தனர். காப்பீட்டு ஆணையத்தின் இந்த நீண்டகால நிதி பற்றாக்குறையானது, ஆசிரியர்கள், பள்ளி சேவை பணியாளர்கள் மற்றும் மற்ற பொதுபணித்துறை பணியாளர்களின் மருத்துவச் செலவை சாத்தியமில்லாதளவில் அவர்களின் கைகளில் இருந்து செலவிடச் செய்கிறது.

வெள்ளியன்று, ஆயிரக் கணக்கான உயர்நிலை பள்ளி மாணவர்களும் பிற மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில தலைநகரில் ஒன்றுகூடினர். அந்த பேரணி தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில ஜனநாயகக் கட்சியிடமிருந்து சுயாதீனமாக சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) ஒரு பேச்சாளர், வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் தடை உத்தரவாணை சமயத்தில் ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கு தயாராவது உட்பட, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் ஆசிரியர்களுக்குப் பின்னால் அணித்திரள வேண்டுமென விடுத்த அழைப்பு, அக்கூட்டத்திடமிருந்து உற்சாகமான ஆதரவைப் பெற்றது.

மாநில தலைநகரில் தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்த 1000 என மதிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் பிற பணியாளர்களுடன் மாணவர்கள் இணைந்தனர். குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நம்பிக்கையில், புதனன்று 98-1 என்ற வாக்கில் ஐந்து சதவீத உயர்வுக்கு ஒப்புதல் வழங்கிய போதும், செனட் தலைவர் மிட்ச் கார்மிக்கெல் அந்த முன்மொழிவை செனட்டில் வாக்கெடுப்புக்கு கொண்டு வர அனுமதிக்கவில்லை.

மாணவர்களின் போராட்டம் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்துடன் இணைவதற்கான உணர்வுடன் நடத்தப்பட்டது, இதே உணர்வு கல்வித்துறை-சாரா அரசு பணியாளர்களிடையேயும் அதிகரித்திருந்தது —இவர்களுக்கு தொழிற்சங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்மொழிவின் கீழ் இன்னும் அதிகமாக அவமதிக்கும் வகையில் மூன்று சதவீத உயர்வே கிடைக்கும். “[அரசு தொழிலாளர்களிடையே] ஆசிரியர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது, நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய வேண்டும்,” என்று ஒரு அரசு தொழிலாளி WSWS க்கு தெரிவித்தார்.

செனட் இன்று மீண்டும் கூடும்போது, தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்கான அழைப்புகளை எதிர்கொள்வதற்காக, அதற்கு பதிலாக ஒரு பேரணியை இன்று முன்மொழிந்த தொழிற்சங்கங்கள், மாநில ஜனநாயக கட்சியுடன் செயல்பட்டு, வெள்ளியன்று மாலை, நிலைமையைத் தணிக்க முயன்றது.

தொழிற்சங்கங்கள் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்றாலும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களுடன் ஒரு மோதலைத் தூண்டவும், நீதிமன்ற தடை உத்தரவாணை மற்றும் சாத்தியமானால் மொத்தமாக வேலையிலிருந்து நீக்குவது, அபராதங்கள் மற்றும் கைது நடவடிக்கைகளையும் கூட கார்மிக்கெல் பயன்படுத்த விரும்பக்கூடும். 1981 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 13,000 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை ரீகன் வேலையிலிருந்து நீக்கியதைப் போல, வேலைநிறுத்தக்காரர்களை முடக்குவதே இதன் நோக்கமாக இருக்கும்.

அதுபோன்றவொரு மோதல் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டிவிடுமென ஆளுநரும், மாநில ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன, மேலும் வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் பாரிய எதிர்ப்பையும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பாதுகாப்பிற்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளையும் கொண்டு வரக்கூடும்.

ஆளுநர் ஜஸ்டிஸ் கூறியதாக Charleston Gazette-Mail மேற்கோளிட்டது, “நாளை [சனிக்கிழமை] அவர்கள் அதை கைவிடவில்லை என்றால், நாம் மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிடுவோம். முழு நேர்மையோடு அது நாளை நடந்தாக வேண்டும்,” என்றார். இது அவரது கடந்த வார கருத்துக்களைப் பின்தொடர்ந்து வந்திருந்தது, அப்போது அவர், “நான் உண்மையிலேயே DEFCON 15 க்கு செல்ல விரும்பவில்லை,” என்று கூறி, முழு அளவிலான போருக்கு இராணுவ தயாரிப்பு செய்வதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளியன்று இரவு, WVEA ஓர் அறிக்கை வெளியிட்டு, கார்மிக்கெல் கல்வியாளர்களின், பெற்றோர்கள் மற்றும் மற்ற பிரஜைகளின் "எரிச்சலை கிளறி விட்டு", “கோபம், அவநம்பிக்கையை" ஏற்படுத்தி விட்டதாக குறை கூறியது. அந்த தொழிற்சங்கம் குறிப்பிட்டது, இது "ஏற்கனவே கொந்தளிப்பான ஒரு நிலைமையை தீவிரமாக்கி" உள்ளது. “ஒரு தலைவராக முன்நகருமாறு" செனட்டருக்கு அனுதாபகரமான ஒரு முறையீட்டுடன் அந்த அறிக்கையை முடிந்திருந்தது.

தொழிற்சங்க அதிகாரிகளும், மாநில ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் மாநில குடியரசுக் கட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொள்ள, அவர்களுக்கு ஐந்து சதவீத உயர்வும் மற்றும் PEIA க்கு சில எதிர்கால தீர்வுகளுக்கான வெற்று வாக்குறுதிகளும் போதுமானது என்று நம்புகின்றனர்.

உள்ளூர் மற்றும் தேசிய செய்தி ஊடகங்களோ, கிளர்ச்சிகரமாக உள்ள கல்வியாளர்களை விட WVEA மற்றும் AFT-WV இன் அதிகாரத்தை மீளவலியுறுத்த முயன்று வருகின்றன. குடியரசுக் கட்சிக்கு அடிபணிந்த பத்திரிகை Charleston Daily Mail இன் ஒரு தலையங்கம் வியாழனன்று இவ்வாறு தொடங்கியது: “Daily Mail கருத்துரை பக்கத்தில் மிகபெரும்பாலும் காண முடியாத சில வார்த்தைகள் இங்கே வேலைநிறுத்தம் செய்யும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சேவை பணியாளர்களுக்காக வழங்குகிறோம்: உங்கள் தொழிற்சங்க தலைவர்கள் கூறுவதைக் கேட்டு, வேலைக்குத் திரும்புங்கள்,” என்று குறிப்பிட்டது.

“PEIA ஐ ஒரே நாளில் சீர்படுத்தி விட முடியாது என்ற சிக்கலான பிரச்சினைக்கு ஒரு 'நிரந்தர தீர்வு'” அறிந்துள்ளவர்களும் மற்றும் "நீண்டகாலத்திற்கு காலங்கடந்தும் நிற்கும் ஒரு மறைமுக வேலைநிறுத்தம் சரியானது, தற்போதையது மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பொதுக் கல்விக்கும் முன்பார்த்திராத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை வேலைநிறுத்தம் செய்யும் கூட்டத்தின் உளவியலுக்கு தெரியாததை" புரிந்து வைத்துள்ளவர்களான தொழிற்சங்க தலைவர்களை அந்த தலையங்கம் பாராட்டியது.

தொழிற்சங்க நிர்வாகிகள் ஆளுநருடன் விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போதே அது உயிரிழந்து விட்டதாக அறிவித்து, பல நாட்கள் வேண்டுமென்றே அந்த வேலைநிறுத்தத்தைப் புறக்கணித்து வந்த நியூ யோர்க் டைம்ஸ் உம், WVEA மற்றும் AFT-WV நிர்வாகிகளுக்கான பாராட்டுடன் ஒத்துப் பாடியது. “மேற்கு வேர்ஜீனிய ஆசிரியர்கள் தொழிற்சங்க அதிகாரத்திற்கு ஒரு படிப்பினை வழங்குகிறார்கள்,” என்றவொரு தலையங்கத்தில், டைம்ஸ் வேலைநிறுத்தத்தை முறிப்பதில் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்தைப் புறக்கணித்து விட்டு, தொழிற்சங்கங்களுக்கு எதிராக வெடித்துள்ள இந்த வேலைநிறுத்தத்தை, அவற்றின் தலைமையிலான ஒரு போராட்டமாக சித்தரிக்க முயன்றது.

தொழிற்சங்கங்களில் இல்லாத பொதுப்பணித்துறை தொழிலாளர்களும் அதேயளவுக்கு சந்தா செலுத்த வேண்டும் என்று சில மாநிலங்களில் உள்ள சட்டங்கள் மீது கவலையை வெளியிட்டு, டைம்ஸ் Janus vs. AFSCME இன் உச்சநீதிமன்ற வழக்கை மேற்கோளிட்டு காட்டியது. “பொதுப்பணித்துறை தொழிற்சங்கங்கள் தொழிலாளர் பலத்தின் இறுதி காப்பு அரணாக உள்ளன" என்பதையே மேற்கு வேர்ஜீனிய வேலைநிறுத்தம் எடுத்துக்காட்டுவதாக அது வாதிட்டது.

“வேலைநிறுத்தங்கள் இன்றி பேரம்பேசுவதே தொழிற்சங்க பாதுகாப்பு" என்று AFSCME வழக்கறிஞர் டேவிட் பிரெட்ரிக் அந்த நீதிமன்றத்தில் கூறியதை டைம்ஸ் குறிப்பிடவில்லை. மேற்கு வேர்ஜீனியாவிலும் சரி நாடெங்கிலும் சரி, தொழிற்சங்கங்களின் உண்மையான பாத்திரம் தொழிலாளர்களின் போராட்டங்களுக்குத் தலைமை கொடுப்பதில்லை, மாறாக அவற்றை ஒடுக்குவதாகும்.

மேற்கு வேர்ஜீனியா வேலைநிறுத்தம் நாற்சந்தியில் உள்ளது. மேற்கு வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையிலான விவாதத்தில் இருந்து என்ன வெளியானாலும், அது ஆசிரியர்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யப் போவதில்லை. ஆளும் வர்க்கத்தின் அந்த அரசியல் பிரதிநிதிகள் ஆசிரியர்களுக்கு ஒரு "வாய்ப்பு" அளிக்கிறார்கள்: அதுவாவது, நீங்கள் ஏற்கனவே நிராகரித்து விட்ட இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது தடை உத்தரவாணைகள், அபாராதங்கள் மற்றும் சாத்தியமானால் சிறைவாசத்தை முகங்கொடுங்கள் என்பதே அது.

சாமானிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மற்ற பணியாளர்களது நடவடிக்கைகள் ஏற்கனவே முற்றிலும் வித்தியாசமான போக்கை எடுத்துக் காட்டியுள்ளது. ஜஸ்டிஸ் உடனான தொழிற்சங்கம் ஆதரிக்கும் உடன்படிக்கையை நிராகரித்து, வேலைநிறுத்தத்தை தொடர்ந்துள்ள அவர்கள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினது நலன்களையும் பாதுகாப்பதில் ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

பெருவணிக அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளைத் தோற்கடிக்க, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் போராட்டம் விரிவாக்கப்பட வேண்டும். இதற்கு, சுரங்க தொழிலாளர்கள், பொதுப்பணி பணியாளர்கள், எரிசக்தித்துறை தொழிலாளர்கள், மருத்துவத் தொழிலாளர்கள், ஆலை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மற்றவர்கள் என தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் முறையீடு செய்யவும், வேலைநிறுத்தம் செய்து வரும் பள்ளி பணியாளர்களை ஆதரிக்க தொழிலாள வர்க்கத்தின் முழு பலத்தை அணித்திரட்டவும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய வேலைநிறுத்த குழுக்களை உருவாக்குவது அவசியமாகும்.

மிகப்பெரியளவிலான கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் மற்றும் தடை உத்தரவாணைகள் மற்றும் வேலைநீக்கங்கள், அபராதங்கள் மற்றும் சிறைவாச அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆசிரியர்களைப் பாதுகாக்க ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தரமான பொதுக்கல்வி உரிமையைப் பாதுகாக்க போராடி வருகின்ற பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, ஓக்லஹோமா, அரிசோனா மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் முறையீடுகள் செய்தாக வேண்டும். இந்த போராட்டம் சிக்கன கொள்கைகளுக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக தொழில்துறைரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் எதிர்தாக்குதலுக்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும்.