ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Lessons of the West Virginia teachers strike

மேற்கு வேர்ஜினிய ஆசிரியர் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்

Jerry White and Joseph Kishore
8 March 2018

சுமார் 33,000 க்கும் அதிகமான மேற்கு வேர்ஜினிய ஆசியர்கள் மற்றும் அரசுப்பள்ளியின் இதர பணியாளர்களது ஒன்பது நாள் வேலைநிறுத்தம் புதனன்று காலை முடிவுற்றது. செவ்வாயன்று ஆளுநர் ஜிம் ஜஸ்டீஸ் கையெழுத்திட்டு, மாநில சட்டமன்றம் மூலமாக அவசரகதியில் கொண்டு வரப்பட்ட, தொழிற்சங்க ஆதரவு பெற்ற, ஓர் உடன்படிக்கையின் வரையறைகள் மீதிருந்த அதிகரித்த கோபத்திற்கு இடையே, ஆசிரியர்கள் அம்மாநில மாவட்டங்களில் வேலைக்குத் திரும்பினர்.

மேற்கு வேர்ஜினியாவில் இந்த தீர்க்கமான போராட்டம் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது, அவர்கள் கண்ணியமான சம்பளம் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆசிரியர்களின் போராட்டத்துடன் தங்களை அடையாளம் கண்டனர், அதை ஆதரித்தனர். சமூகத்தை அடிப்படையில் பிளவுபடுத்தி இருப்பது இனமோ அல்லது பாலினமோ அல்ல, மாறாக வர்க்கமே என்பதை வெளிப்படுத்தி காட்டிய இந்த போராட்டம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் போர்குணத்தின் ஒரு பலமான வெளிப்பாடாக இருந்தது.

ஆனால் தொழிற்சங்கங்கள் கூறுவதைப் போல அல்லாமல் அதற்கு முரண்பட்ட விதத்தில், அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை ஆசிரியர்களுக்கு வெற்றி அல்ல. அது ஆசிரியர்களின் மத்திய கோரிக்கையை — அதாவது, அரசு பணியாளர் காப்பீட்டு ஆணையம் (PEIA) மூலமாக அதிகரித்து வரும் மருத்துவ கவனிப்பு செலவுகள், எந்தவொரு சம்பள உயர்வையும் நடைமுறையளவில் ஒன்றுமில்லாது ஆக்கிவிடும் என்பதால், அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அனைத்திற்கும் மேலாக, அரசுத்துறை தொழிலாளர்களுக்கு ஒரே தவணையில் ஐந்து சதவீத உயர்வு என்பது சமூக வேலைத்திட்டங்களில் ஆழ்ந்த வெட்டுக்கள் செய்வது மூலமாகவே வழங்கப்படும்.

வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மீது, அரசைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் பெருநிறுவனங்களின் மனோபாவத்தை வலதுசாரி Charleston Daily Mail இன் ஒரு தலையங்கம் வெளிப்படுத்தியது, தொழிற்சங்கங்களின் உத்தரவுகளைப் பின்பற்றி வேலைக்குத் திரும்ப மறுத்ததற்காக கடந்த வாரம் அப்பத்திரிகை ஆசிரியர்களை சாடியிருந்தது. “அதிக வரி விதித்து, ஒரு கட்டுங்கடங்காத கூட்டத்தின் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுப்பு" வழங்காததற்காக, “மேற்கு வேர்ஜினிய செனட் குடியரசு கட்சியினருக்கு மும்மடங்கு வாழ்த்துக்கள்,” என்று அப்பத்திரிகை உற்சாகத்துடன் குறிப்பிட்டது.

அரசில் மேலாதிக்கம் செலுத்துகின்றதும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரைக் கட்டுப்படுத்துகின்றதுமான எரிசக்தித்துறை பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பதற்குப் பதிலாக, ஒரு சிறியளவிலான சம்பள உயர்வுகளுக்கான எந்தவொரு கூடுதல் நிதி ஒதுக்கீடும் கட்டணமில்லா சமூக கல்லூரி கல்வித்திட்டத்தை இரத்து செய்வதிலிருந்தும், குறைவூதிய மக்களுக்கான மருத்துவ சிகிச்சை திட்டத்தில் 10 மில்லியன் டாலர் குறைப்பு, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை மையங்களுக்கான புதிய நிதியுதவிகளை நீக்குதல் மற்றும் இன்னும் பிற வெட்டுக்களில் இருந்தும் உறிஞ்சப்படும்.

அனேகமாக "மாநில மற்றும் உள்ளாட்சி கல்வித்துறை அதிகாரத்துவமே சேமிப்புக்கான மிகப்பெரிய வாய்ப்பு" என்பதையும் Daily Mail எகத்தாளத்துடன் சேர்த்துக் கொண்டது—அதாவது அரசு வேலைகளை நீக்குவது.

இந்த உடன்படிக்கையின் வடிவமைப்பே ஓர் ஆத்திரமூட்டலாக உள்ளது. ஆசிரியர்கள், மற்ற தொழிலாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் இன்றியமையா சேவைகள் அழிக்கப்படுவதைப் பார்ப்பதற்காக வேலைநிறுத்தம் மேற்கொள்ளவில்லை. தங்களின் மாணவர்களை இன்னும் கூடுதலாக வறுமைக்கு உட்படுத்துவதன் மூலமாக, அற்ப சம்பள உயர்வுகளுக்கான நிதியைப் பெறவும் அவர்கள் போராடவில்லை.

மேற்கு வேர்ஜினியாவின் போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை. அவர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்க பயன்படுத்தப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை குறித்து ஆசிரியர்கள் கூடுதலாக தெரிந்துகொள்ளும் போது, ஆத்திரமே விடையிறுப்பாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக, இந்த வேலைநிறுத்தம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் அதிகரித்து வரும் மீளெழுச்சியை முன்னறிவிக்கிறது.

இது, அனைத்தினும் மேலாக, மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகளை நனவுபூர்வமாக உள்வாங்கி கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.

அமெரிக்க ஆசிரியர்களின் சம்மேளனம் (AFT), தேசிய கல்வித்துறை கூட்டமைப்பு (NEA) மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள மாநில துணை அமைப்புகள், அத்துடன் ஐக்கிய சுரங்கத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UMW), மற்றது AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றம் ஆகிய இந்த தொழிற்சங்கங்களின் திட்டமிட்ட, நனவுபூர்வமான, பெரும்பிரயத்தனத்துடன் நடத்தப்பட்ட துரோகத்தின் விளைவே இந்த வேலைநிறுத்த ஒடுக்குமுறை.

தொழிலாளர்களின் சந்தா பணத்ததைப் பெற்று, பெருநிறுவனங்கள் மற்றும் அரசுக்கு மத்தியஸ்தம் செய்யும், தங்களைத் தொழிற்சங்கங்கள் என்றழைக்கும் இந்த அமைப்புகளையும் தொழிலாள வர்க்கத்தைப் பிரிக்கும் பிளவை இப்போராட்டம் மிக ஆரம்பத்தில் இருந்தே எடுத்துக்காட்டியது. இந்த வேலைநிறுத்தம், WVEA மற்றும் AFT-WV இன் அலுவலகங்களில் இருந்து தொடங்கப்படவில்லை, நிலக்கரி சுரங்கம் நிறைந்த தெற்கு உள்ளாட்சி ஆசிரியர்களால், பள்ளி ஓய்விடங்களிலும் மற்றும் சந்திப்பு அறைகளிலும், சமூக ஊடகங்களிலும் நடந்த விவாதங்கள் மூலமாக தொடங்கப்பட்டது.

அம்மாநிலம் முழுவதும் போராடுவதற்கான உணர்வு மேலெழுந்ததும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போர்குணத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு நாள் மாநிலந்தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன, அதன் பின்னர் அதை மேலும் இரண்டு நாட்கள் நீடித்தன. பின்னர், பெப்ரவரி 27 இல், ஆளுநர் ஜஸ்டிஸ் உடன் திடீரென ஓர் உடன்படிக்கையை அறிவித்த தொழிற்சங்கங்கள், மார்ச் 1 இல் ஆசிரியர்களை வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டன.

ஆனால் ஆசிரியர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அவர்கள் ஆர்ப்பாட்ட இடங்களிலும், தலைமை அலுவலகத்திலும் மற்றும் இணையம் மூலமாகவும் கூட்டங்களை ஒழுங்கமைத்தனர். வேலைநிறுத்தத்தைத் தொடர்வது பிள்ளைகளின் பெற்றோர்களிடம் இருந்து அன்னியப்படுத்தி விடும் என்றும், தடை உத்தரவாணைகள் பிறப்பிப்பதிலும் அபராதங்கள் விதிப்பதிலும் போய் முடியும் என்ற அச்சுறுத்தல்களுடன் தொழிலாளர்களை அடிபணிய செய்ய முயன்ற தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் வாதங்களை, அவர்கள் அவ்விடங்களில் நிராகரித்தனர். மாவட்டம் மாறி மாவட்டமாக, பள்ளித் தொழிலாளர்கள் WVEA, AFT-WV மற்றும் பள்ளி சேவைத் தொழிலாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் உத்தரவுகளை எதிர்த்து வாக்களித்து, தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கிளர்ச்சியில் ஈடுபட்டதன் மூலமாக, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் திணித்திருந்த இரும்பு கவசங்களில் இருந்து, குறைந்தபட்சம் தற்காலிகமாக, உடைத்துக் கொண்டிருந்தனர் என்பதோடு, இந்த ஆரம்பகட்ட தொழிலாள வர்க்க இயக்கம் அம்மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சக்தி வாய்ந்த ஈர்ப்பு துருவமாக மாறியது.

வேலைநிறுத்தம் பலமடைந்து, அதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளை உத்வேகமூட்டிய அந்த சரியான தருணத்தில், தொழிற்சங்கங்கள் அதை நிறுத்துவதற்கான அவற்றின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி விடையிறுத்தன. கடந்த வாரயிறுதியில் மேற்கு வேர்ஜினியா மற்றும் வேர்ஜினியாவின் 1,400 ஃப்ரொன்டியர் தொலைதொடர்பு தொழிலாளர்களின் வெளிநடப்பு, தொழிற்சங்க நிர்வாகிகளின் நிலைப்பாட்டில், வேலைநிறுத்ததை முடிவுக்குக் கொண்டு வர அனைத்தையும் விட அதிக அவசியமாக செய்துவிட்டதாம்.

தொழிற்சங்கங்கள் பார்க்க விரும்பியிருந்த கடைசி விஷயம் தொழிலாளர் இயக்கத்தின் விரிவாக்கமாகும், இது 1981 க்குப் பின்னர் இருந்து வர்க்க போராட்டத்தை ஒடுக்க அவை செய்துள்ள ஒவ்வொன்றையும் தகர்க்கும். 1981 இல் அப்போதைய PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் வேலைநிறுத்தத்தை சிதைத்தபோது, ஓர் இடைவிடாத தொடர் காட்டிக்கொடுப்புகளை இயக்கத்திற்கு கொண்டு வந்தது. அரசுத்துறை பணியாளர் தொழிற்சங்களுக்கு "சங்க நிதி" செலுத்த வேண்டுமென ஏற்படுத்தப்பட்டதன் மீதான Janus vs. AFSCME வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னால் நிலுவையில் இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்களோ ஆளும் உயரடுக்கிற்கு அவை உபயோகமானவை என்பதை எடுத்துக்காட்ட பேராவலுடன் இருந்தன, இது கடந்த மாதம் தொழிற்சங்க வழக்கறிஞர் ஒருவரின் வார்த்தையிலேயே கூறப்பட்டது: “தொழிற்சங்க பாதுகாப்பு என்பது வேலைநிறுத்தங்கள் இல்லாத சமாதானம்,” என்றார்.

முக்கியமாக ஆசிரியர்களால் நிராகரிக்கப்பட்ட அதே உடன்படிக்கையை மீண்டும் தொகுத்துள்ள செவ்வாய்கிழமை புதிய உடன்படிக்கை, ஆசிரியர்கள் அது குறித்து விவாதிக்கவோ மற்றும் வேலைக்கு திரும்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அனுமதிக்காமல் அவசர அவசரமாக திணிக்கப்பட்டடது. ஜனநாயக கட்சியின் துணை அமைப்புகள் அனைத்தும் —அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், ஜாகோபின் சஞ்சிகை, சர்வதேச சோசலிச அமைப்பு, இன்னும் பலவும்— இந்த வேலைநிறுத்தத்தை ஒரு வெற்றியாக அறிவிக்க அணிதிரண்டன.

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் நடவடிக்கை அவற்றின் இன்றியமையா செயல்பாட்டுடன் பிணைந்துள்ளது. அவை தொழிலாள வர்க்க அமைப்புகள் இல்லை, மாறாக பெருநிறுவன மற்றும் அரசின் முகமைகள். ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களுக்கும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்திற்கும் (UAW) எந்த வித்தியாசமும் கிடையாது. நிறுவனத்திற்கு சார்பான உடன்படிக்கையைத் திணிப்பதற்கு பிரதிபலனாக வாகனத்துறை நிறுவனங்களிடம் இருந்து UAW நேரடியாக கையூட்டு பெற்றது அம்பலமானது.

மேற்கு வேர்ஜினிய ஆசிரியர் வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கத்தின் போக்கை எடுத்துக் காட்டுகிறது. வர்க்க போராட்டத்தின் மீள்வருகை, இன்னும் நேரடியாக மற்றும் பகிரங்கமாக தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்களை மோதலுக்குக் கொண்டு வரும். எங்கெல்லாம் ஒரு போராட்டம் தொடங்குகிறதோ, அங்கே தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரம் குறித்த புரிதலுடன் தொழிலாளர்கள் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். அவை முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீது பொலிஸ் வேலை செய்வதற்கும் இருக்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் முழுவதிலும், உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துடன் ஆசிரியர்களை இணைப்பதற்காக, ஆசிரியர்களை சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க அழைப்புவிடுத்தது. மேற்கு வேர்ஜினியாவில், அதுபோன்ற குழுக்களை அமைப்பது, சம்பளங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு மீதான தாக்குதலுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாரிப்பு செய்ய அவசியமாகும். நாடெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆலை மற்றும் வேலையிட குழுக்களை அமைப்பது, அரசு எந்திரம், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள், மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றுக்கு எதிரான ஓர் அரசியல் இயக்கத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான கட்டமைப்பை வழங்கும்.

தொழிலாளர்களின் சுயாதீனமான அமைப்பையும் முன்முயற்சியையும் ஊக்குவிக்கின்ற, தொழிலாளர்களின் வர்க்க நனவை உயர்த்துகின்ற, ஒவ்வொரு வெவ்வேறு போராட்டத்திலும் முன்வரும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துகின்ற, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்காக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை வழிநடத்துகின்ற, ஒரு சோசலிச தலைமையைக் கட்டமைப்பதே, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மிக முக்கிய கேள்வியாக உள்ளது.