ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Facebook codifies its censorship regime

பேஸ்புக் அதன் தணிக்கை முறையை கட்டமைக்கின்றது

By Andre Damon
25 April 2018

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், எந்தவொரு சட்டரீதியான கட்டுப்பாடோ அல்லது பொறுப்பேற்போ இல்லாமல், முற்றிலும் அதன் சொந்த விருப்பப்படி, முதல்முறையாக அதன் தளத்தில் பேச்சைத் தணிக்கை செய்வதற்கு பயன்படுத்தப்படும் அதன் நெறிமுறைகளை வெளியிட்டது.

நடைமுறையளவில் எந்தவொரு விமர்சனபூர்வ அரசியல் கண்ணோட்டத்தின் வெளிப்பாட்டையும், வன்முறையானதாக, அவதூறு பரப்புவதாக, “தீவிரமானதாக,” “மிரட்டுவதாக" அல்லது பெரும்பாலும் பொதுவாக "போலிச் செய்திகளாக" அகற்றுவதற்காக அடையாளப்படுத்தி மற்றும் ஆதாரம்காட்டமுடியாத தணிக்கைக்குக் உட்படுத்தப்பட்டதாக கூறி இவ்வரையறைக்குள் அதிகமான கட்டுரைகளை உள்ளடக்குவதற்கான, கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு அதன் "பொதுவான வழிமுறைகள்" மிகவும் பரந்தளவில் கடுமையாக உள்ளன.

மிகப்பெரியதும், எதற்கும் கணக்கு காட்டத்தேவையற்ற அந்த தொழில்நுட்ப ஏகபோக நிறுவனத்தால் நிராகரிக்கத்தக்கதாக கருதப்படும் தரவுகளை முடக்குவதற்கும் மற்றும் அரசியல் உரையாடல்களை வடிவமைப்பதற்கும் —அந்நிறுவன பணியாளர்களில் அறுதி பெரும்பான்மையினரால்— அதாவது, பேஸ்புக்கின் "பாதுகாப்பு" மற்றும் "நெறிப்படுத்தும்" துறையில் உள்ள 20,000 பேரால், இந்த "பொதுவான வழிமுறைகள்" பயன்படுத்தப்படும்.

"போலி செய்திகள்" தொடர்பான கொள்கைதான் பேஸ்புக்கினது இத்தணிக்கை எந்திரத்தின் மையப்பகுதியாக உள்ளது. இதுபோன்ற தணிக்கை "சிக்கலான விவகாரம்" என்பதால், பயனர்களின் தகவல்கள் வினியோகிக்கப்படுவதில் இருந்து "போலி செய்திகளாக" முடக்கப்பட்டிருப்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த சமூக ஊடக ஏகபோக நிறுவனம் புதிதாக வெளியிடப்பட்ட அதன் பொது வழிமுறைகளில் தெளிவுபடுத்துகிறது:

பேஸ்புக்கில் பொய் செய்திகள் பரவுவதைக் குறைக்கும் பொறுப்பை நாங்கள் முழு கவனத்தில் எடுத்துள்ளோம். இதுவொரு சவாலான மற்றும் சிக்கலான விடயம் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். பொதுமக்களின் ஆக்கப்பூர்வமான உரையாடல்களைத் திணறடிக்காமல், மக்களுக்கு தகவல் சென்றடைவதில் நாங்கள் உதவ விரும்புகிறோம். பொய் செய்திகளுக்கும் மற்றும் நையாண்டி தாக்குதல் அல்லது சுயக் கருத்துகளுக்கும் இடையே ஒரு மிக மெல்லிய கோடு தான் உள்ளது. இந்த காரணங்களுக்காக, நாங்கள் பொய் செய்திகளைப் பேஸ்புக்கில் இருந்து நீக்க போவதில்லை, அதற்கு பதிலாக, செய்தி ஓடைகளில் அதை குறைவாக காட்டி அது பரவுவதைக் கணிசமானளவுக்கு குறைக்க இருக்கிறோம்.

அமெரிக்க உளவுத்துறை முகமைகள், ஜனநாயக கட்சி மற்றும் பிரதான தொழில்நுட்ப பெருநிறுவனங்களால், 2016 தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக, நவம்பர் 2016 இல் "போலி செய்திகளுக்கு" எதிரான பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இராணுவம்/உளவுத்துறை எந்திரத்தின் விருப்பத்திற்குரிய வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் தோல்வியாலும், மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கான பரந்த ஆதரவில் பிரதிபலித்த சோசலிச சிந்தனைகள் மீதான பரந்தளவிலான ஆதரவாலும் அதிர்ந்து போன இந்த சதிக்கூட்டம், "போலி செய்திகள்" என்றழைக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறையற்ற, அரிதாகவே வரையறுக்கப்பட்ட, ஒரு கருத்துருவைக் கொண்டு சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் ஓர் ஊடக தாக்குதலைத் தொடங்கின.

“போலி செய்திகள்" என்றால் என்ன என்பதற்கு வரையறை இல்லையே என்ற தலைப்பில் பிரதான பத்திரிகைகளில் நூறாயிரக் கணக்கான விபரங்கள் அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், ஹிலாரி கிளிண்டன் 2016 தேர்தல் குறித்து நினைவுகூர்கையில், விக்கிலீக்ஸையும் மற்றும் 2016 ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வு தேர்தலில் சூழ்ச்சி செய்த கிளிண்டன் பிரச்சாரக் குழுவின் ஆவணங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் உடன் அதன் ஊழல் உறவுகள் குறித்த ஆவணங்களை அது வெளியிட்டதையும் "போலி செய்திகளின்" தோற்றுவாயாக குறிப்பிட்டார்.

விக்கிலீக்ஸ் வெளியீடுகளில் எந்தவொரு தவறுகளையும் யாரொருவரும் குறிப்பிட்டதில்லை என்கிற நிலையில், தெளிவாக இதன் உள்நோக்கம் என்னவென்றால் அரசை மதிப்பிழக்க செய்யும் அல்லது சேதப்படுத்தும் எந்தவொரு தகவலும், அது உண்மையோ அல்லது பொய்யோ, அதுவே "போலி செய்திகள்" என்று வரையறைப்படுத்துவதாக உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் சார்பாக செயல்படும் மிகப்பெரிய தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் "போலி செய்திகள்" எனப்படுபவற்றை தடுப்பதானது, அரசியல் தணிக்கை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்த உண்மையைக் கொண்டு பார்த்தால், பேஸ்புக்கின் வார்த்தைகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால் "போலி செய்திகளை" ஒடுக்குவது, அதாவது தணிக்கை செய்வது, ஒரு “சிக்கலான விவகாரம்", செய்தி ஓடைகளில் இருந்து அவற்றைக் குறைப்பதன் மூலம், அவை வினியோகிக்கப்படுவதைக் கணிசமாக குறைக்கும்" நடவடிக்கையை நிறுவனம் இரகசியமாக செய்யும்.

“நேர்மையை விலை கொடுத்து தவறை பாராட்டுவதுதான் பாசாங்குத்தனம்,” என்ற La Rochefoucauld இன் பொன்மொழி தான் இங்கே பொருத்தமாக உள்ளது. பத்திரிகையாளர்களும், பதிப்பாளர்களும் மற்றும் பயனர்களும் தங்களின் உள்ளடக்கம் தணிக்கை செய்யப்படுவதைக் குறித்து ஆரவாரத்துடன் ஓலமிடுவார்கள் என்பதால், பேஸ்புக் சர்வ சாதாரணமாக அதன் தணிக்கையை இரகசியமாக செய்யும். பேஸ்புக் செய்தி ஓடைகளில் தென்படுவதைத் முடக்குவதன் மூலமாக, தனது பயனர்களின் முதல் அரசியல் சாசன உரிமைகளை மீறுவதைக் குறித்த எந்த சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லாமல், அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள், தரவுகளை அழிப்பதற்கு இணையான அதே விளைவுகளை கொண்டிருக்கும்.

பேஸ்புக் மட்டுந்தான் இந்தளவுக்கு நேரடியாக இத்தகைய நடவடிக்கைகளை வெளிப்படையாக கூறியுள்ள ஒரே தொழில்நுட்ப நிறுவனம் என்றாலும், கூகுள் மற்றும் ட்வீட்டர் இரண்டுமே "போலி செய்திகளை", அதாவது எதிர்ப்பு கண்ணோட்டங்களை, ஒடுக்குவதற்கு இதேபோன்ற கொள்கையையே பின்பற்றுகின்றன என்பதை காங்கிரஸ் விசாரணை விளக்கவுரையில் அவற்றின் சட்டப்பூர்வ பிரதிநிதிகள் மூலமாக ஒப்புக் கொண்டுள்ளன.

“எதேச்சதிகார பாணியில் நேரடியாகவே, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வதில்” அந்நிறுவனம் ஈடுபடுகிறது என்பதை உலக சோசலிச வலைத் தளம் அதன் ஆகஸ்ட் 25 பகிரங்க கடிதத்தில் குற்றஞ்சாட்டி, கூகுள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பெருநிறுவனங்களது அரசியல் தணிக்கையை அம்பலப்படுத்துவதற்காக WSWS தொடங்கிய பிரச்சாரத்திற்கு, பேஸ்புக்கின் இந்த ஒப்புதல் மற்றொரு சாட்சியமாக அமைகிறது.

கூகுள் நிறுவனம் அதன் தேடுபொறி முறைகளை "மேம்படுத்தும்" நடவடிக்கைகளை அறிவித்த பின்னர், முன்னணி இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்களுக்கு கூகுள் தேடுபொறி மூலமாக வரும் பயனர்களின் எண்ணிக்கை 75 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததை அம்பலப்படுத்தியதற்கு விடையிறுப்பாக, உலக சோசலிச வலைத் தளம் அதன் கடிதத்தை வெளியிட்டது.

WSWS இன் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் சரியானவையே என்பது இப்போது தெளிவாகி உள்ளது. இந்த தொழில்நுட்ப பெருநிறுவனங்கள், அவற்றின் பயனர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், “மாற்று" செய்தி ஆதாரங்களை முடக்கி வருகின்றன என்பதோடு, இந்த வருட தொடக்கத்தில் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் கூறிய வார்த்தைகளில் கூறுவதானால், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் உள்ளடங்கலாக "நம்பத்தகுந்த" செய்தி நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன.

விமர்சனப்பூர்வ அரசியல் கண்ணோட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை மட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் இரகசியமான நடவடிக்கைகள், அதிக வெளிப்படையான தணிக்கை நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து நடக்கின்றன. கூகுள் திங்களன்று வெளியிட்ட அதன் காலாண்டு அறிக்கையில், யூ-டியூப்பில் இருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான காணொளிகளை அது நீக்கி இருப்பதாகவும், அவற்றில் மிகப் பெரும்பான்மை —சுமார் 6.7 மில்லியன்— "மனிதர்களால் அல்லாமல் முதலில் எந்திர மீளாய்வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்" சுயபெருமை பீற்றியது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு முறைகள் ஓரங்கட்டியுள்ள காணொளிகளில் மூன்றில் ஒரு கால்வாசி "அவை ஒரேயொருமுறை கூட பார்க்கப்படுவதற்கு முன்னரே நீக்கப்பட்டுள்ளன.”

அந்நிறுவனம் அறிவித்தது, “உண்மையில் எந்திரமூலமான வாசிப்பை நடைமுறைப்படுத்துவது என்பது தகவல்களை ஒரு சிலர் மீளாய்வு செய்வது போலன்றி, நிறைய பேர் மீளாய்வு செய்வதை போன்றது. தரவுகள் எங்களின் கொள்கைகளை மீறுகின்றதா என்பதை கண்காணிக்கக எங்கள் அமைப்பு முறைகள் மனித மீளாய்வைச் சார்ந்துள்ளன,” என்று அந்நிறுவனம் அறிவித்தது. பேஸ்புக் போலவே, கூகுளும் இந்தாண்டின் இறுதிக்குள் இத்துறையில் 10,000 நபர்களைப் பணியில் அமர்த்தும் நோக்கில், தணிக்கையாளர்களின் ஒரு படையை நியமித்துள்ளது.

பேஸ்புக்கும் சரி கூகுளும் சரி அதன் தரவுகள் மீது கண்காணிப்பதற்கு எந்த சட்டபூர்வ கடமைப்பாடுகளுக்கும் அடிபணிந்து இல்லை. தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போலவே, அவற்றின் தளங்களில் அவற்றின் பயனர்கள் என்ன கூறுகிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதற்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் அவை பொறுப்பாவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக, அவை அமெரிக்க பொலிஸ் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் ஓர் அங்கமாக மாறியுள்ளன, ஆனால் ஒரு விலக்கீட்டுரிமையுடன்: அதாவது, தனியார் பெருநிறுவனமாக, அவை, மிக முக்கியமாக, கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதில் இருந்து அரசைத் தடுக்கும் அரசியலமைப்பின் முதல் சாசன பாதுகாப்புகளில் இருந்து அவை விதிவிலக்குரிமை பெற்றுள்ளன.

பேச்சு சுதந்திரம் மீதான தொழில்நுட்ப பெருநிறுவனங்களது ஒடுக்குமுறையின் நிஜமான இலக்கு, "போலி செய்திகளோ", “தீவிரவாத கருத்துக்களோ,” அல்லது தணிக்கையை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இதர பிற பல கவர்ச்சிகரமான வாசகங்களோ கிடையாது. மாறாக எதிர்ப்பு செய்திகள் மற்றும் அரசியல் பகுப்பாய்வுகளின் ஆதார வளங்கள் வளர்வதும், அரசியல் எதிர்ப்பை ஒழுங்கமைக்க சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதும் தான் அவற்றின் இலக்கு. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த இயக்கம் தொடர்ந்து வளருகையில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கருத்து சுதந்திரம் மீதான அவற்றின் தாக்குதலை விரிவாக்க மட்டுமே செய்யும்.

கடந்த வாரயிறுதியில் வேய்ன் அரசு பல்கலைக்கழகத்தில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய கூட்டத்திற்கு தொழிலாளர்கள் பலமான விடையிறுப்பு காட்டியிருந்த நிலையில், தொழிலாளர்களின் அதிகரித்து வரும் ஒரு பிரிவு இணையத்தில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதை ஓர் அவசர பணியாக கருதுகின்றன. இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் இணைய, WSWS ஐ தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்!