ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan prime minister narrowly survives no-confidence resolution

இலங்கை பிரதமர் நம்பிக்கை இல்லா பிரேரணையில் இருந்து சற்றே தப்பினார்

By K. Ratnayake 
6 April 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்பிரல் 4 புதன்கிழமை இடம்பெற்ற 12 மணி நேர பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் நடந்த வாக்கெடுப்பில் 122க்கு 76 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து தப்பினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஒரு பாராளுமன்றக் குழுவான கூட்டு எதிர்க் கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தக் குழு அரசாங்கத்தை வீழ்த்துவதாக பகிரங்கமாக சபதம் எடுத்தது.

2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர், மத்திய வங்கி பிணை முறி மற்றும் ஒரு நிதி நிறுவனமான பேர்பசுவல் றெசரீஸ் சம்பந்தப்பட்ட, பல நூறு கோடி ரூபா ஊழலே இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பிரதான சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஊழலில் உடந்தையாக இருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நியமித்து, அவரைப் பாதுகாத்ததாக விக்கிரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த சிங்கள-பெளத்த தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்-விரோத தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த விக்ரமசிங்க தவறிவிட்டார் என்றும் அவர் மீது பிரேரணையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் ஒரு பங்காளியாக உள்ளது.

ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை வாக்களிக்கும் முன் பிளவுபட்டிருந்தனர். 41 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். 54 பேர் இராஜபக்ஷவுடன் இருந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, கோஷ்டி பதட்டங்களை ஆழப்படுத்தி, மேலும் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தியது. புதன்கிழமை, சிறிசேனவுக்கு விசுவாசமாக இருந்த 16 ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். குறைந்தபட்சம் 20 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் கூட்டணி வேட்பாளர்களின் அவமானகரமான தோல்விக்கு பின்னர், சிறிசேன அரசாங்கத்திலிருந்த தனது ஸ்ரீ.ல.சு.க. விசுவாசிகளிடம் இருந்து தூர விலக முற்பட்டார். ஜனாதிபதி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பகிரங்கமாக எதிர்க்கவில்லை, ஆனால் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களை அவர்களது "மனசாட்சியை" பொறுத்து வாக்களிக்குமாறு அறிவுறுத்தினர். பாராளுமன்ற விவாதத்திற்கு முன்னர் விக்கிரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும் என சிரேஷ்ட ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கோரினார். இது சிறிசேனவின் செய்தியாக பரந்தளவில் குறிப்பிடப்பட்டது.

அவரது குழுவின் ஒரு பிரிவினர் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த பின், தான் என்ன செய்வார் என்று சிறிசேன பகிரங்கமாக விளக்கவில்லை. விக்ரமசிங்க, வெறுமனே ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின் ஐக்கிய அரசாங்கத்துடன் தொடர்வதாக அறிவித்தார். எவ்வாறாயினும், ஐ.தே.க. சிரேஷ்ட உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக்கு சார்பாக வாக்களித்த ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்களை அகற்றுமாறு கோரினர். விக்கிரமசிங்கவின் நெருக்கடியை கூட்டும் வகையில், ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் இராஜினாமா செய்ய மறுத்ததோடு, ஜனாதிபதியே அரசாங்கத்தின் தலைவர் என்று அறிவித்தனர்.

சிறிசேன, விக்கிரமசிங்க, இராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானவையாகும். ஆளும் வர்க்கத்தின் முக்கிய கவலை, பெருகி வரும் நிதிய நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அரசியல் எதிர்ப்புமே ஆகும்.

இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியின் மற்றும் சமூக உரிமைகள் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்கள் சம்பந்தமான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக் கொண்டு, விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் 2015ல் சிறிசேன ஜனாதிபதியாக தேர்வானார்.

ஆட்சிக்கு வந்த நிர்வாகம் சில ஒப்பனை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திய அதே நேரம், குவிந்து வந்த பொருளாதார பிரச்சினைகள் அதை சர்வதேச நாணய நிதியத்திடம் பிணை எடுப்புக் கடன்களுக்காகப் பேச்சுவார்த்தைக்கு செல்லவும் அதன் சிக்கன கட்டளைகளை அமுல்படுத்வும் நெருக்கியது. கொண்டு வருவதோடு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவும் பெருகிய பொருளாதார சிக்கல்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள், அதேபோல் யுத்தத்தால் வாழ்க்கை நிலைமைகள் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களதும் அதிகரித்துவரும் போராட்டங்களால் குறிக்கப்பட்டன.

இந்த வெகுஜன எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், செவ்வாயன்று கொழும்பின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு திடீர் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டதுடன், வீதிகளை தடுத்து ஊதிய அதிகரிப்புக் கோரினர். வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கையை வழங்குவதற்கு அரசாங்க அமைச்சர் உடனடியாக வாக்குறுதி அளித்தபின்பே போர்க்குணமிக்க இந்த வெளிநடப்பு முடிவுக்கு வந்தது.

அதே சமயம், பெப்ரவரியில் வெளியேறிய 15,000 க்கும் அதிகமான பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியம் மற்றும் மருத்துவத் திட்டங்களை கோருகின்றனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தினத்துக்கு முதல்நாள், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, பொருளாதார நெருக்கடியையும், எஞ்சியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டினார். "தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலைமையிலிருந்து நாம் மீள வேண்டும், விரைவில் ஒரு உறுதியான முடிவை அடைய வேண்டும்" என்று அவர் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியம் முதலில் கோரியபடி –உதாரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு ஏற்ப- ஒரு புதிய எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் செயல்படுத்தியிருக்க வேண்டும், என்று குமாரசுவாமி கூறினார்.

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையால் காலக்கெடு தவறவிடப்பட்டுள்ளது," என குமாரசுவாமி கூறினார். "செப்டெம்பரில் மின்சார கட்டனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது, ஆனாலும் அரசாங்கம் அந்த இடத்தை அடையுமா என்பது தெளிவாக இல்லை."

மத்திய வங்கி பிணை முறி ஊழல் அல்லது முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலோடு இராஜபக்ஷ குழு கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எந்த தொடபும் கொண்டிருக்கவில்லை. முன்னாள் இராஜபக்ஷ ஆட்சியும் அதன் நெருங்கிய கூட்டாளிகளும் குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் சிங்கள பேரினவாதத்தில் மூழ்கிப் போயிருந்தனர்.

சிறிசேனவும் விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவைப் போலவே, அதிதீவிர வலதுசாரி சிங்கள-பௌத்த குழுக்களை வளர்ப்பதுடன், அவை தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத கலவரங்களைத் தூண்டுவதற்காக இடமளித்தனர். அண்மைக்கால தாக்குதல்களில் ஈடுபட்ட பொதுபல சேனா, மகா சொஹோன் பாலகாயா போன்ற இயக்கங்கள் இராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டவை. கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்-எதிர்ப்பு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதற்காக இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உள்ளூர் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி தேர்தல்களில் சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் மீதான பரவலான வெகுஜன எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்டு இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை வென்றது. இராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் உழைக்கும் மக்களுக்கு எதிராக செயற்படுவதற்காக இராணுவம், பௌத்த உயர் பீடம் மற்றும் ஏனைய வலதுசாரி சக்திகளுக்கு அழைப்பு விடுத்து, ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்புகின்றனர்.

பிரதான தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தனர். சிறிசேன ஜனாதிபதி ஆவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு கொடுத்ததுடன், அப்போதிருந்தே அது அமெரிக்கச்-சார்பு அரசாங்கத்தின் நெருக்கிய கூட்டாளியாக இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்யும் தமிழ் கூட்டமைப்பு, சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு உதவுவதே தமிழ் உயரடுக்கின் நலன்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழி என கணக்கிடுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இராஜபக்ஷ முகாமினால் "அரசியல் ரீதியாக உந்தப்பட்டுள்ளது" எனக் கூறிய போதிலும், அது "ஊழல் மற்றும் இனவெறிக்கு எதிரானது" என்று பொய்யாகக் கூறினார்.

ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளுக்கும் இடையில் ஜே.வி.பி. சூழ்ச்சிகளை செய்து வருகிறது. 2005ல் அது இராஜபக்ஷ பதவிக்கு வருவதற்கு உதவியதை அடுத்து, பத்து ஆண்டுகளுக்கு பின்னர், 2015ல் ஜே.வி.பி. சிறிசேனவை ஆதரித்தது. ஜே.வி.பி. சிறிசேனவின் ஆட்சியை நிலைநாட்ட உதவுவதற்காக சிறிசேனவின் தேசிய நிர்வாக குழுவில் நான்கு மாதங்கள் பணியாற்றியது.

இந்த போட்டிப் பிரிவுகளின் தீவிரமான வலதுசாரி தந்திரங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். ஆளும் வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளதோடு, வாழ்க்கை நிலைமைகளின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளது. ஒரு மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்கும் இந்த கன்னைகள் அனைத்தும், சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கின்றன.

தொழிலாள வர்க்கமானது ஏழை விவசாயிகளையும் இளைஞர்களையும் அணிதிரட்ட தனது சொந்த சுயாதீன சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்பி, சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள முன்னோக்கு ஆகும்.