ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google workers demand end to company’s involvement in drone murder

ட்ரோன் படுகொலையில் நிறுவனம் சம்பந்தப்படுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கூகுள் தொழிலாளர்கள் கோருகின்றனர்

By Andre Damon
5 April 2018

அமெரிக்க இராணுவத்தின் சட்டவிரோத ட்ரோன் போர்முறைக்கான மென்பொருளை கூகுள் வடிவமைத்தது என்று கடந்த மாதம் வெளியான தகவல்கள், அந்நிறுவன பணியாளர்களிடையே சீற்றத்தைத் தூண்டியது. 3,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பென்டகனுடன் அது சம்பந்தப்படுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கோரி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை நிறுவன நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பினர்.

“மேவன் திட்டம்" (Project Maven) என்றழைக்கப்படும் இச் செயல்திட்டம் ட்ரோன் படங்களைப் பகுப்பாய்வு செய்யவும், சாத்தியமானளவுக்கு ட்ரோன் படுகொலைகளுக்கான இலக்குகளை அடையாளம் காண்பதில் பென்டகனுக்கு உதவவும் செயற்கை அறிவு முறைகளின் பயன்பாட்டை உள்ளடக்கி உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட இத்தகைய ட்ரோன் படுகொலைகளில் பத்தாயிரக் கணக்கானவர்கள், அதில் பெரும்பாலானவர்கள் வெறும் பார்வையாளர்களாக உடன் நின்றிருந்த அப்பாவி மக்கள், கொல்லப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கூகுள் சம்பந்தப்பட்டிருப்பதை கடந்த மாதம் கிஸ்மோடோ (Gizmodo) வலைத் தளம் அறிவித்தது.

தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு முகவரியிட்ட அந்த கடிதம் அறிவிக்கிறது, “போர் வியாபாரத்தில் கூகுள் சம்பந்தப்படக்கூடாதென நாங்கள் நினைக்கிறோம். ஆகவே இந்த மேவன் திட்டம் இரத்து செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம், மேலும் கூகுளோ அல்லது அதன் ஒப்பந்ததாரர்களோ ஒருபோதும் போர்முறை தொழில்நுட்பத்தைக் கட்டமைக்காது என்று குறிப்பிட்டு கூகுள் ஒரு தெளிவான கொள்கையை வரைந்து, பதிப்பித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.”

கூகுள் பணியாளர்களின் கடந்த மாத விமர்சனங்களுக்கு விடையிறுத்து அந்நிறுவனத்தின் கிளவ்ட் வணிகப் பிரிவு தலைமை செயலதிகாரி டயான் கிரீன் கூறுகையில், "ட்ரோன்களை செயல்படுவத்துவதோ அல்லது பறக்க விடுவதோ" மென்பொருள் கிடையாது, அது “ஆயுதங்களை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படாது" என்று கூறியிருந்தார்.

இத்தகைய மேலோட்டமான சாக்குபோக்குகளை நிராகரித்த அக்கடிதம், “குறிப்பிட்ட பல நேரடி பயன்பாடுகளில் இல்லை என்றாலும், இத்தொழில்நுட்பம் இராணுவத்திற்காக கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதோடு, இது முடித்து வழங்கப்பட்டதும் இத்தகைய பணிகளுக்கு உதவியாக இது சுபலமாக பயன்படுத்தப்படலாம்,” என்றும் அறிவிக்கிறது.

வழக்கு விசாரணையின்றி மக்களைப் படுகொலை புரியும் அமெரிக்க அரசின் ட்ரோன் படுகொலை திட்டம், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தையும் சரி சர்வதேச சட்டங்களையும் சரி இரண்டையுமே மீறுகின்றது, இந்நடவடிக்கையில் கூகுள் உடந்தையாய் இருப்பது அதை குற்றவியல் வழக்கிற்கு இட்டுச் செல்லும்.

நிறுவனத்தின் நடவடிக்கைகள் "கூகுளின் பெயரை சரிசெய்யவியலாதளவுக்கு சேதப்படுத்தும்,” என்று எச்சரிக்கின்ற அக்கடிதம், “கூகுள் இந்த ஒப்பந்தத்தில் நுழைவதன் மூலம், Palantir, Raytheon மற்றும் General Dynamics போன்ற நிறுவனங்களில் வரிசையில் சேரும். மைக்ரோசாப்ட் மற்றும் அமசன் போன்ற மற்ற நிறுவனங்களும் தான் பங்கெடுத்து வருகின்றன என்ற வாதம், கூகுளுக்கான அபாயத்தை எந்தவிதத்திலும் சிறிதும் குறைத்துவிடாது. கூகுளின் தனித்துவமான வரலாறு, தீயவராக இருக்காதே என்ற அதன் உத்வேக வாசகம் மற்றும் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வில் அது நேரடியாக இடம் பெற்றிருப்பது அதை பிரத்யேகமாக பிரித்து வைக்கிறது,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.

“இராணுவ கண்காணிப்பில் —உயிராபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில்— அமெரிக்க அரசுக்கு உதவுவதற்காக இத்தொழில்நுட்பம் கட்டமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவியலாது,” என்று அக்கடிதம் நிறைவு செய்கிறது.

உண்மையில் இராணுவத்துடனான கூகுளின் உறவு புதியதல்ல. 2001 இல் இருந்து 2007 வரையில் கூகுளுக்கான நிர்வாக தலைவராக இருந்த எரிக் ஷிமித், கூகுளின் துணை தலைவர் மிலொ மெடின் உடன் சேர்ந்து, பென்டகனின் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.

உலகில் வேறெந்த இடத்தையும் விட மிகவும் உயர்-திறன் நிபுணத்துவ தொழிலாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களது பணியாளர்களுக்கும் —இவர்களில் பலர் அதிகாரம், கண்காணிப்பு மற்றும் இராணுவம் ஒன்றுதிரட்டப்படுவதை எதிர்க்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள நிலையில்— கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றை இராணுவ/உளவுத்துறை எந்திரத்திற்குள் ஒருங்கிணைக்க தீர்மானகரமாக உள்ள முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிளவை இக்கடிதம் எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறுபவர்களில் சிலராக தொழில்நுட்ப நிறுவன தொழிலாளர்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் அனைவருமே கடினமான வேலை நேரங்களில் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, வழமையாக வாரத்திற்கு குறைந்தபட்சம் 60 மணி நேர வேலைகளை எதிர்கொள்கின்றனர், இது குடும்பம் நடத்துவதையே அண்மித்து சாத்தியமில்லாது செய்துவிடுகிறது. அவர்களின் சம்பளத்தில் பெரும்பகுதியை வீட்டுவசதி செலவுகளே உறிஞ்சிவிடுகின்றன. அமெரிக்காவில் மிகவும் செலவு மிகுந்த ரியல் எஸ்டேட் சந்தையான சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் வாடகைகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டன. சராசரியான ஒரு படுக்கையறை அடுக்குமாடி வீட்டின் வாடகை மாதத்திற்கு 3,390 டாலராக உள்ளதால், இது சில தொழிலாளர்களை அவர்களின் கார்களிலேயே வாழ நிர்பந்திக்கிறது.

மேற்கு வேர்ஜினியா மற்றும் ஒக்லஹோமா ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்ய இட்டுச்சென்ற தேசியளவிலான வேலைநிறுத்த அலை அதிகரித்து வருவதற்கு இடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி எங்கிலுமான மற்றும் உலகெங்கிலுமான தொழில்நுட்ப தொழிலாளர்கள், ஐயத்திற்கு இடமின்றி, விஞ்ஞான தொழில்வாய்ப்புகளைக் கொண்டு சிறப்பாக "உலகை மாற்றுகிறோம்" என்ற வாக்குறுதிகளில் இருந்து விலகி சென்றுவிட்ட தங்களின் தொழில் வழங்குனர்களுடன் தாங்கள் அதிகரித்தளவில் கருத்து வேறுபட்டிருப்பதாக உணர்கின்றனர்.

அதே நிர்வாகிகளால் பாரிய படுகொலை, கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கான நடைமுறைகளை உருவாக்குமாறு இப்போது இந்த தொழிலாளர்களுக்கு கூறப்படுகிறது.

இக்கடிதம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், இந்த ஆவணம் குறித்து பேசுவதற்கு ஒரேயொரு பணியாளர் கூட கிடைக்கவில்லை என்றது, ஐயத்திற்கிடமின்றி நிறுவனத்திற்குள் நிலவும் மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறை சூழலுக்கு இது சான்று பகிர்கிறது.

இராணுவத்துடனான கூகுளின் உறவு, பேஸ்புக் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து அது ஈடுபட்டுள்ள இணைய தணிக்கைக்கான முயற்சியுடன் இணைந்துள்ளது. ஏப்ரல் 2017 இல் ஆரம்பத்தில், கூகுள் "அதிக அதிகாரபூர்வ தகவல்களை முன்னுக்கு கொண்டு வருவதற்காக" அதன் தேடல் மென்பொருள் வழிமுறைகளைத் திருத்தியது.

ஆகஸ்டில் WSWS கூகுளுக்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில் ஆவணப்படுத்தியவாறு, “சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் இடதுசாரி வலைத் தளங்களை மக்கள் அணுகுவதைத் தடுப்பதே" இந்த மாற்றங்களின் நோக்கமாக இருந்தது.” கூகுள் வழியாக WSWS ஐ எட்டியவர்களின் எண்ணிக்கை அண்மித்து 70 சதவீதமாக (இப்போது 75 சதவீதத்திற்கும் அதிகமாக) குறைந்ததும் இந்த மாற்றங்களின் விளைவுகளாகும்.

அதே நேரத்தில், இராணுவம்/உளவுத்துறை எந்திரத்தின் கோரிக்கைகளுக்கேற்ப கூகுள் அதன் நகர்வுகளை மாற்றிக் கொள்வது தவிர்க்கவியலாதவாறு அந்நிறுவனத்திற்குள்ளேயே எதிர்ப்பை தூண்டும் என்பதை WSWS குறிப்பிட்டது. இந்த எச்சரிக்கைகள் நிரூபணமாகி உள்ளன.

கூகுளின் கடந்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனவரியில் பேஸ்புக்கும் அதேபோன்ற நகர்வுகளை மேற்கொண்டது, அப்போது அது, நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் பிற பெருநிறுவன செய்தி பிரசுரங்களின் வழக்கு மொழியான "பரந்தளவில் நம்பகமான மற்றும் உயர்தரமான ஆதாரவளங்களில்" இருந்து வரும் தகவல்கள் என்பதை மட்டுமே அதன் செய்தி ஓடைகள் சார்ந்திருக்கும் என்ற வகையில் மாற்றங்களை அறிவித்தது.

பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் செய்தி பிரிவில் "அதிகாரபூர்வ தகவல்களை" முன்னுக்கு கொண்டு வரும் நோக்கில், கடந்த மாதம், கூகுள் ஒரு புதிய "செய்தி முன்னெடுப்பு செயல்திட்டத்தையும்" அறிவித்தது.

இராணுவத்துடன் கூகுள் சம்பந்தப்பட்டிருப்பதும் இணைய தகவல்களைத் தணிக்கை செய்வதில் உளவுத்துறை முகமைகளுடன் அது ஒத்துழைப்பதும் ஒரே நிகழ்ச்சிப்போக்கின் இரண்டு பக்கங்களாகும். ஆளும் வர்க்கம், போர் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையை ஆழமாக விரிவாக்க தயாரிப்பு செய்து வருவதால், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள அது முனைந்து வருகிறது.

போர், இணைய தணிக்கை மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையிலான இத்தகைய தொடர்புதான் மிச்சிகன், டெட்ராய்டில் ஏப்ரல் 22 WSWS கலந்துரையாடல் கூட்டத்தின் தலைப்பாக இருக்கப் போகிறது. அதில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு நாம் நமது வாசகர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறோம்.