ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Capitalism and the artificial intelligence revolution

முதலாளித்துவமும், செயற்கை நுண்ணறிவு புரட்சியும்

Andre Damon
6 April 2018

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா எங்கிலும் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொன்றதும், ஊனமாக்கியதுமான அமெரிக்காவின் டிரோன் (ஆளில்லா விமானம்) படுகொலை திட்டத்துடன் கூகுள் கூட்டு வைத்திருப்பதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, கடந்த மாதம், 3,000 க்கும் அதிகமான கூகுள் பணியாளர்கள் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

அந்நிறுவனம், அமெரிக்க டிரோன் போர்முறை திட்டத்துடன் ஒருங்கிணைந்த மக்களை டிரோன் கொண்டு கண்காணிக்கும் நடைமுறையான “மேவன் திட்டம்" (Project Maven) என்பதில் கூகுள் பங்களிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கூகுள் பணியாளர்கள் கோரியதுடன், “கூகுள் போர் வணிகத்தில் சம்பந்தப்படக்கூடாதென நாங்கள் நினைக்கிறோம்” என்று அறிவித்தனர். “கூகுளோ அல்லது அதன் ஒப்பந்ததாரர்களோ போர்முறை தொழில்நுட்பத்தை ஒருபோதும் கட்டமைக்க கூடாது,” என்று குறிப்பிடும் ஒரு கொள்கையை ஏற்குமாறு அக்கடிதம் அழைப்புவிடுத்தது.

டிரோன் படுகொலை திட்டத்தில் கூகுளின் கூட்டு, அமெரிக்க இராணுவத்துடன் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்தளவில் ஒருங்கிணைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது, அமெரிக்க இராணுவமோ ரஷ்யா மற்றும் சீனாவுடன் "வல்லரசு போட்டியின்" ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்துள்ளதுடன், அதன் போர் திட்டங்களுக்குள் நுழைக்க சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு அழுத்தமளிப்பதே உலக அரங்கில் அதன் இராணுவ பலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாக காண்கிறது.

இதேயளவுக்கு உள்நாட்டு மக்கள் மீதான கண்காணிப்பு மற்றும் தணிக்கையில் கூகுள் வகிக்கும் பாத்திரமும் பட்டவர்த்தனமாக உள்ளது. ஏப்ரல் 2017 இல், கூகுள் "மாற்று கண்ணோட்டங்களை" விட "அதிகாரபூர்வ தகவல்களை" ஊக்குவிக்குவிப்பதற்காக —"ஆழமாக படித்துப் பார்த்தல்" மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளை நடைமுறைப்படுத்தி— அதன் தேடல் மென்பொருள் வழிமுறைகளில் மாற்றங்களை அறிவித்தது. இந்த மாற்றங்கள், உலக சோசலிச வலைத் தளத்ததை ஒரு மத்திய இலக்கில் வைத்திருந்ததுடன், இடதுசாரி வலைத்தளங்களைக் காட்டும் கூகுள் தேடல் முடிவுகள் ஏறத்தாழ 75 சதவீத அளவுக்கு கூர்மையாக சரிவதற்கு இட்டுச் சென்றன.

மிகப் பரவலாக, கூகுள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் ஆகியவை மக்கள் இணையத்தில் என்ன கூறுகிறார்கள் மற்றும் என்ன வாசிக்கிறார்கள் என்பதை தணிக்கை செய்ய மற்றும் கண்காணிக்க ஏற்ற விதத்தில் அவற்றின் செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பயிற்றுவிக்கவும் மற்றும் மாற்றியமைக்கவும், இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளின் பின்புலம் கொண்ட பலருடன், பத்தாயிரக் கணக்கான தொழில்ரீதியிலான தணிக்கையாளர்களை நியமித்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களை இராணுவம் நியமிப்பதும் உளவுத்துறை முகமைகளுடன் இந்த நிறுவனங்கள் பங்காண்மை கொள்வதும் இரண்டினது மத்திய நோக்கமும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேகமாக அபிவிருத்தி செய்வதாகும். செயற்கை நுண்ணறிவு சக்தியைப் பயன்படுத்தி, கூகுள் ஒரு இலக்கில் வைக்கப்பட்ட பகுதியில் தனிநபர்களையும் பொருள்களையும் அடையாளம் காண்பதற்காக டிரோன் காட்சிகளை ஒன்றுகலந்து பார்ப்பதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு உதவி வருகிறது.

பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் இந்தாண்டு தொடக்கத்தில் அறிவிக்கையில், சமூக ஊடகங்களின் செய்தி ஓடைகளில் கைப்புரட்டு செய்வதன் பாகமாக, “பேஸ்புக்கில் வரும் அனைத்து தகவல்களின் அர்த்தத்தையும் செயற்கை நுண்ணறிவை கொண்டு புரிந்து கொள்ளவதே [அதன்] நோக்கம்" என்றார்.

செயற்கை நுண்ணறிவை இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகள் பயன்படுத்துவதன் நோக்கம் ஒவ்வொரு சர்வாதிபத்திய ஆட்சியின் புனித சாசனத்தில் உள்ளது: தேசிய பாதுகாப்பு முகமை இதை "ஒட்டுமொத்த தகவல்கள் மீதான புரிதல்,” என்றழைக்கிறது, அல்லது, அதன் உத்தியோகபூர்வமற்ற செயல்திட்ட அறிக்கை குறிப்பிடுவதைப் போல, “அனைத்தையும் சேகரித்து, அனைத்தையும் அறிந்து… அனைத்தையும் சாதகமாக்கி கொள்,” என்றிருக்கிறது.

மற்றொரு உள்ளடக்கத்தில் ஒரு சர்வாதிகாரியின் பைத்தியக்காரத்தனமான தற்பெருமை கற்பனையாக தெரியக்கூடிய இந்த செயல்திட்ட அறிக்கை, செயற்கை நுண்ணறிவின் சக்தி மூலமாக விரைவிலேயே நிகழவிருக்கும் யதார்த்தமாக மாறி வருகிறது.

ஜனவரி 16 இல் உலக சோசலிச வலைத் தளத்தின் "இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைப்போம்" இணையவழி கலந்துரையாடலுக்கான அவர் அறிக்கையில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் எச்சரிக்கையில் செயற்கை நுண்ணறிவின் துஷ்பிரயோகத்தால் மனிதயினத்திற்கு ஆழ்ந்த அபாயங்கள் முன்வைக்கப்படுவதாக எச்சரித்தார்.

“எந்திரங்களைக் கட்டுப்படுத்தும் மனிதர்களுக்கும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களுக்கும் இடையிலான, தகவல் தொடர்பை ஜனநாயகமயப்படுத்துவதற்கும் மற்றும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தகவல் தொடர்பின் உரிமையைக் கைப்பற்றுவதற்கும் இடையிலான போராட்டம் தான் மனிதயினத்தின் எதிர்காலம்,” என்று அசான்ஜ் எச்சரித்தார். “செயற்கை அறிவு சக்தியைக் கொண்டு பாரிய மக்கள் சமூகத்தின் மீது கண்டறியவியலாதவாறு செல்வாக்கு செலுத்துவது மனிதயினத்தின் உயிர்வாழ்விற்கே ஓர் அச்சுறுத்தல். மனித தகைமைகளை விஞ்சிய அளவிலும், வேகத்துடனும் மற்றும் அதிகரித்தளவில் வஞ்சகமாகவும் செயல்படுவதன் மூலம், கலாச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்வுபோக்கை மாற்றுவதற்கான பாரம்பரிய முயற்சிகளில் இருந்து இந்த நிகழ்வுபோக்கு மாறுபடுகிறது,” என்றார்.

செயற்கை நுண்ணறிவை மக்களைக் கண்காணிப்பதற்கும் மற்றும் போர்-நடத்துவதற்கும் பயன்படுத்துவது என்பது, முதலாளித்துவத்தின் கீழ் இந்த மாற்றமிகு தொழில்நுட்பத்தை நாசகரமாக பயன்படுத்துவதற்கான நோக்கங்களில் ஒன்றே ஒன்று மட்டுந்தான்.

ஏற்கனவே பணியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க அமசன் பண்டகசாலைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமசன் அமைப்புகள் எவ்வளவு முறை தொழிலாளர்கள் கழிவறைகளுக்கு சென்று வருகிறார்கள் என்பதை கணக்கிடுகின்றன என்பதோடு, ஒரு பணிமுறையில் 15 மைல்கள் நடக்கும் தொழிலாளர்கள் நின்று இளைப்பாறி மூச்சுவிடுவதைக்கூட கண்காணிப்பாளருக்கு எச்சரிக்கை அளிக்கின்றன. உபர் (Uber) மற்றும் லைஃப்ட் (Lyft) போன்ற நிறுவனங்களில், ஓட்டுனர்களை நீண்ட நேரத்திற்கும் கடுமையாகவும் வேலை செய்ய வைக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கேடு விளைவிக்கிறது.

ஆனால் இதைவிட தீவிரமான மாற்றங்கள் முன்நிற்கின்றன. பயண-பகிர்வு நிறுவனங்களும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களும் ஓட்டுனர் இல்லாத கார்கள், டிரக்குகள் மற்றும் படகுகளை நடைமுறைப்படுத்த முண்டியடித்து கொண்டிருக்கையில், பத்தாயிரக் கணக்கான வேலைகள் நீக்கப்படும். ரோபோட் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்படுவது பாரியளவில் தானியங்கி முறை அலையை விரிவாக்கும், இது கட்டிட வணிகங்களில் இருந்து உணவு தயாரிப்பு வரையில், பாதுகாப்புப்பணி வேலை மற்றும் சில்லறை விற்பனை வரையில், ஒவ்வொரு துறையிலும் ஆயிரக் கணக்கில் எண்ணற்ற தொழில்துறை தொழிலாளர்களை ஏற்கனவே இடம்பெயர்த்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் 2013 ஆய்வுகளின்படி, அடுத்த இருபது ஆண்டுகளில் மட்டும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட் தொழில்நுட்பம் மூலமாக அமெரிக்க வேலைகளில் அண்மித்து பாதி அழிக்கப்பட்டிருக்கும்.

தொழில்துறை புரட்சிக்குப் பின்னர், தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு அபிவிருத்தியையும் முதலாளித்துவத்தால் மனிதயின ஒடுக்குமுறை மற்றும் படுகொலைக்குரிய கருவியாக மாற்றிக் கொள்ள முடிந்தது. நெசவுத் தறி இயந்திரத்தின் அறிமுகமானது இலண்டன் மற்றும் மான்செஸ்டர் சேரிகளது கொடூரமாக 19 ஆம் நூற்றாண்டு சமூக அவலத்திற்கு கட்டியம் கூறியது. பருத்தி நூல் நூற்பு இயந்திரம் அமெரிக்க அடிமைத்தனத்தை மீண்டும் கொண்டுவந்தது. விமானங்களோ, “மூலோபாய குண்டுவீச்சு" கோட்பாடு மூலமாக, பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதற்குரிய ஒரு முறையாக மாற்றப்பட்டது. அணுசேர்க்கையால் உருவாக்கப்பட்ட அண்மித்து எல்லையில்லா எரிசக்தியானது, ஒட்டுமொத்த சமூகங்களையே, அனேகமாக மனிதயினத்தையே அழிப்பதற்கான கருவியாக மாற்றப்பட்டது.

ஆனால் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை தரங்களைப் புறநிலைரீதியாக பாரியளவில் விரிவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கும் இந்த தொழில்நுட்பங்கள், ஏன் இதுபோன்ற கொடூரமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன? 1926 இல் ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

தொழில்நுட்பங்களும் விஞ்ஞானமும் அவற்றின் சொந்த தர்க்கத்தை — அதாவது, இயற்கையை அறிவதற்கும் மற்றும் மனிதனின் நலன்களுக்காக அவற்றை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான தர்க்கத்தை கொண்டுள்ளன. ஆனால் தொழில்நுட்பங்களும் விஞ்ஞானமும் வெற்றிடத்தில் அல்ல மாறாக வர்க்கங்களாக பிளவுபட்டுள்ள மனித சமூகத்தில் உருவாகின்றன. சொத்துக்களை உடைமையாக கொண்டுள்ள வர்க்கமான ஆளும் வர்க்கம், தொழில்நுட்பத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதுடன், அதன் மூலமாக இயற்கையைக் கட்டுப்படுத்துகிறது. தொழில்நுட்பங்களை இது இராணுவத்திற்குரியது அல்லது இது சமாதானத்திற்குரியது என்று குறிப்பிட முடியாது. ஆளும் வர்க்கம் இராணுவமயப்பட்டதாக இருக்கும் சமூகத்தில், தொழில்நுட்பம் இராணுவவாதத்திற்கு தான் சேவையாற்றும். (பார்க்கவும்: “ரேடியோ, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சமூகம்")

முதலாளித்துவத்தின் கீழ் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் ஆளும் உயரடுக்குகளின் கரங்களில், ஒவ்வொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், இராணுவ வன்முறை மூலமாக அவர்கள் வெற்றி கொண்டு ஒடுக்க விரும்பும் நாடுகளுக்கு எதிராகவும் தாக்கும் குண்டாந்தடியாக மாறுகிறது.

வெவ்வேறு கரங்களில், அதே தொழில்நுட்பம் வேறு வேறு விளைவுகளை உருவாக்கும். ஒரு சோசலிச சமூகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட் தொழில்நுட்ப புரட்சியானது மக்களின் பொருளாதார நல்வாழ்வை மட்டுமல்ல, மாறாக அதன் கலாச்சார வாழ்வையும் பாரியளவுக்கு உயர்த்தும் சூழலை உருவாக்கும். இந்த சலிப்பூட்டும் மற்றும் முதுகு உடைக்கும் வேலைகளைப் பிரதியீடு செய்வதானது, பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் கொடிய வறுமையை அர்த்தப்படுத்தாது, அதற்கு பதிலாக நிறைய ஓய்வு நேரம், கல்வி, குடும்ப வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் வளத்திற்கான தொழிலாளர்களது வாய்ப்புகளை விரிவாக்கும்.

கட்டிட வணிகத்தை தானியங்கி முறைக்கு மாற்றுவதும் கட்டுமானத்திற்கான கலவை உற்பத்தியை (3டி அச்சுமுறை) விரிவாக்குவதும், வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு அவசியமான உழைப்பின் அளவைப் பாரியளவில் குறைக்கும் என்பதோடு, அனைவருக்கும் சாலச்சிறந்த வீடுகளை உத்தரவாதப்படுத்தும். மரபணு வரிசைமுறைப்படுத்தல், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி என இவற்றில் செயற்கை நுண்ணறிவை விரிவாக்குவதானது, உயர்ந்து வரும் மருந்து விலைகளுக்கு செலவிடக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனிதயினத்தின் உடல்நலத்திலும் முன்னொருபோதும் இல்லாத முன்னேற்றங்களைக் கொண்டு வரும்.

விவசாயம் மற்றும் போக்குவரத்தை ரோபோட் தொழில்நுட்பமயப்படுத்தல் உணவு விலைகளைப் பாரியளவில் குறைக்கும், ஊட்டச்சத்து குறைபாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் அத்துடன் அனைவருக்கும் உயர்தரமான உணவு உத்தரவாதம் கிடைக்கும்—இது விவசாய பாரிய நிறுவனங்களால் சிறு விவசாயிகளை நாசமாக்க செய்யாது.

மனிதயினத்திற்கான இந்த சாத்தியக்கூறை வைத்து தான், மார்க்சிஸ்டுகள் மனிதயினத்தின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வரையறுக்கின்ற, அறிவொளியின் பாரம்பரியத்தில் தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். சமூகத்தைப் பகுத்தறிவார்ந்தரீதியில் புரிந்து கொள்வதற்காக தான், ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் இயற்கையின் இரகசியங்களை விடுவித்தார்கள். அதை புரிந்து கொண்டதும், சமூகம் அதனை சிறப்பானதாக மாற்றமடைய செய்ய முடிந்தது.

இந்த கண்ணோட்டம் பிராங்க்பேர்ட் சிந்தனைகூடத்தின் நடுத்தர-வர்க்க அவநம்பிக்கைவாதிகளுடன் நேரடியாக முரண்படுகிறது, இவர்கள், அறிவொளியை நிராகரிப்பதற்காக, ஈர்ப்புவிசை தத்துவம் அவுஸ்விட்ச் விஷவாயு கூடங்களுக்கு வழிவகுத்ததாக வாதிட்டார்கள். ஹெர்பேர்ட் மார்கூஸ மற்றும் மக்ஸ் ஹோர்கைமெர் போன்ற புத்திஜீவிகள் —கார்ல் மார்க்சின் மாணவர்கள் என்று பொய்யாக கூறிக்கொண்ட இவர்களின் தத்துவங்கள் பல்கலைக்கழகங்களில் இன்னமும் மார்க்சிசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது— துல்லியமாக புறக்கணித்தது ட்ரொட்ஸ்கியின் இந்த புள்ளியை தான்: அதாவது "தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வெற்றிடத்தில் உருவாகவில்லை, மாறாக வர்க்கங்களைக் கொண்ட மனித சமூகத்தில் உருவாகின்றன.”

கேள்வி இதுதான்: உற்பத்தி கருவிகளும், அவ்விதத்தில் சமூகமும் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

மனிதயினத்திற்கு இரண்டே பாதைகள் தான் உள்ளன. முதலாளித்துவ பாதையானது, போர், வறுமை, மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோல் சர்வாதிகாரத்தின் இடைவிடாத தீவிரப்படலை வழங்குகிறது. சோசலிசத்திற்கான பாதையானது, அத்தகைய பயங்கரங்களில் இருந்து விடுதலையை மட்டுமல்ல, மொத்த மனிதயினத்திற்கும் ஒடுக்குமுறை மற்றும் தேவைப்பாடுகளில் இருந்து சுதந்திரத்தை வழங்குகிறது.

மனிதயினம் எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறது என்பதை வர்க்கப் போராட்டம் தான் முடிவு செய்யும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களுக்கு இடையே, வெவ்வேறு தொழில்துறை மற்றும் வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர்களது கடுமையான போராட்டங்களை சோசலிச சமூகமாக மாற்றும் ஒரு பொதுவான அரசியல் இயக்கத்திற்குள் ஐக்கியப்படுத்துவது தான் மிக முக்கிய கேள்வியாகும். அவ்வாறு செய்தால் மட்டுந்தான் வரவிருக்கும் பாரிய தொழில்நுட்ப புரட்சியை, மனிதயின அடிமைப்படுத்தலுக்கான புரட்சியாக அல்லாமல் மனிதயினத்தை விடுதலைப்படுத்தும் ஒரு புரட்சியாக மாற்ற முடியும்.