ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron threatens Syria, pledges to make no concessions to French workers

மக்ரோன் சிரியாவை மிரட்டுகிறார், பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாது என உறுதியளிக்கிறார்

By Alex Lantier
13 April 2018

வியாழக்கிழமையன்று TF1 தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு மணி நேர நேர்காணலில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சிரியா மீது வெகுசீக்கிரத்தில் போர் தொடுக்க மிரட்டியதோடு, உள்நாட்டில் அவரது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் பெருகிச் செல்லும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு எந்த சலுகைகளும் அளிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.

இந்த நேர்காணல், மக்ரோன் நிர்வாகத்தினதும் அதன் நேட்டோ கூட்டாளிகளினதும் அரசியல் திவால்நிலையை எடுத்துக்காட்டியது. சிரியாவை மட்டுமல்லாது சிரியாவில் இருக்கும் ரஷ்யப் படைகளுக்கும் மிரட்டல் விடுகின்ற வகையில், எந்த ஆத்திரமூட்டலும் இல்லாதசமயத்தின் இராணுவத் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வெளியிட்ட மக்ரோன், பொதுக்கருத்தை குறித்து பொருட்படுத்தாமல் -அதனை “கருத்துக்கணிப்புகள்” என்று கூறி அவர் நிராகரித்தார்- தனது கொள்கைகளை வகுக்கவிருப்பதாகவும் அறிவித்தார். கட்டாய இராணுவச் சேர்ப்பை மீண்டும் கொண்டுவருவது உள்ளிட இராணுவவாதத்தில் இறங்குவதை அடிப்படையாகக் கொண்ட மோசமான மக்கள்விரோத திட்டநிரலை கொண்டிருக்கும் அவர், தேச ஒற்றுமையின் ஒரு சூழலுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசியல் அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தின் பாதையில் மக்ரோனின் அரசாங்கத்தை கீழிறக்குவதே சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான முனைப்பை தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே வழியாகும் என்பதை இந்த நேர்காணல் அடிக்கோடிட்டுக் காட்டியது.

டூமாவில் இஸ்லாமியப் போர்க்குழுவுக்கு எதிராக சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு சிரியாவுக்குள்ளாக சிரிய மற்றும் ரஷ்யப் படைகளின் மீது குண்டுவீசுவதற்கு மிரட்டி வந்திருக்கின்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் நெருக்கமாய் இணைந்து வேலைசெய்து வருவதாக மக்ரோன் தெரிவித்தார். “பல தடவை அவருடன் பேசியிருக்கிறேன்” என்ற அவர் இதனையும் சேர்த்துக் கொண்டார்: “ஆம், இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் எங்களது அணிகள் நெருக்கமாய் இணைந்து வேலைசெய்து வந்திருக்கின்றன. சரியான சமயத்தில், மிகவும் பயனளிக்கக் கூடியதாக நாங்கள் கருதுகின்ற முடிவுகளை நாங்கள் எடுப்போம்.”

தனது மிரட்டல்களை நியாயப்படுத்துவதற்கு, மக்ரோன் ட்ரம்ப் நிர்வாகத்தை எதிரொலித்தார்: “சிரியாவில் இப்போது நடக்கும் போர்கள், குறிப்பாக பஷார் அல்-ஆசாத்தின் சிரிய ஆட்சியானது, அது விரும்பும் எதனையும் செய்து விட முடியாது. ஒரு சர்வதேசச் சட்டத்தின் ஒரு வேலைமுறை இருக்கிறது. சென்ற வாரத்தில், இரசாயன ஆயுதங்கள், அல்லது குறைந்தபட்சம் குளோரின் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அவை பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சியால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.”

சிரியாவுக்கு எதிரான ஒரு ஆத்திரமூட்டலில்லாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு சர்வதேச சட்டத்தை மக்ரோன் சிடுமூஞ்சித்தனமாய் முன்நிறுத்துவது திகைப்பூட்டக் கூடியதாகும். ஆசாத் ஆட்சி டூமாவில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எந்த ஆதாரங்களையும் கொடுக்கவில்லை, மாறாக இஸ்லாமிய “கிளர்ச்சி” படைகளின் வாய்மொழியே இதற்கு மொத்த அடிப்படையாக இருக்கிறது. 2011 முதலாக, சர்வதேச சட்டங்களை மீறி, நேட்டோ அரசாங்கங்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பினாமிப் போரில் இஸ்லாமிய வலைப்பின்னல்களுக்கு ஆயுதமளித்து வந்திருக்கின்றன, இதே பின்னல்கள் தான் ஐரோப்பாவெங்கிலும், குறிப்பாக பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தின என்கிற நிலையிலும் கூட.

2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கான சாக்காக ஈராக் பேரழிவு ஆயுதங்கள் கொண்டிருந்ததாக அமெரிக்கா சொன்ன பொய்கள் நொருங்கிப் போய் 15 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னும் கூட, மக்ரோன், பிரெஞ்சு மக்கள் இஸ்லாமியவாதிகள் மற்றும் நேட்டோ அரசாங்கங்களின் வெறும் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் போருக்கான அவர்களின் திட்டங்களுக்கு தலையாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

சிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக போர் நடத்த தான் வைக்கும் வாதத்திற்கு, எந்த உண்மையின் அடிப்படையும் இல்லை என்பதை மக்ரோன் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டார். “நாங்கள் முடிவெடுத்து அத்தனை ஆதாரங்களையும் சரிபார்த்த பின்னர்”, “ஆட்சியின் இரசாயன ஆயுதத் திறனை அகற்றுவதற்கும்” “நாளைய சிரியாவை தயாரிப்பு செய்வதற்கும் -அதாவது சிரியா மீது குண்டு வீசுவதற்கு- அவர் உறுதியளித்தார்.

ரஷ்யா கணிசமான படைகளை நிலைநிறுத்தியிருக்கின்ற சிரியாவில் ஆத்திரமூட்டலற்று நேட்டோ தாக்குதல் ஒன்று நடப்பது, மத்திய கிழக்கு எங்கிலும், அத்துடன் ஒரு பெரும் அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடனும் முழு வீச்சிலான போராக தீவிரப்பட அச்சுறுத்துகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தனக்கு இருக்கின்ற உறவுகளின் காரணத்தால் எந்தவிதமான இராணுவ தீவிரப்படலையும் தான் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று கூறி, மக்ரோன் இந்த அபாயத்தை எளிதாக நிராகரித்தார்.

அவர் கூறினார், “ஜனாதிபதி புட்டினை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு வரவேற்றிருக்கிறேன், நாங்கள் பலமுறை தொடர்ச்சியாக சந்தித்திருக்கிறோம், தொடர்ச்சியாக பேசுகிறோம், உலகம் குழப்பம் நிலவுவதாக இருக்கிறது, ஏற்கமுடியாத சூழ்நிலைகள் இருக்கின்றன, அதனால் தான் எங்களது முன்னுரிமைகளில் தொடர்ந்து ஊன்றி நிற்பதற்காகவும் பிராந்தியத்தில் முடிந்த அளவுக்கு அதிக ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காகவும் சிரியாவில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை இன்று செய்து கொண்டிருக்கிறோம். ஒரு தீவிரப்படல் தொடங்குவதற்கோ பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தும் விதமான எதுவும் நடப்பதற்கோ பிரான்ஸ் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது.”

ஒரு பெரும் போரை தூண்டிவிடாத வகையில் பிரான்ஸ் சிரியா மீது குண்டுவீசும் என்பதான மக்ரோனின் உத்தரவாதங்கள் பயனற்றவையும் அபாயகரமானவையுமாகும். ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலத்தின் தீவிரப்பட்ட போர்களின் பாதையில், நேட்டோ சக்திகள் ஈராக் தொடங்கி ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் இப்போது சிரியா வரையிலும் மத்திய கிழக்கையே நாசம் செய்திருக்கின்றன. ட்ரம்புக்கும் வெள்ளை மாளிகைக்கு எதிரான ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்துக்கு முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது எதிரிகளுக்கும் இடையில் ஒரு வெடிப்பான அரசியல் போர் நடைபெற்று வருவதன் மத்தியில், அமெரிக்கா சிரியாவை மட்டுமல்லாது ஈரான் மற்றும் ரஷ்யாவையும் போரைக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கிலான நேட்டோவின் மூர்க்கத்தனமானது, ஒரு போராகவும் பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு அணுஆயுதப் பற்றவைப்பாகவும் தீவிரப்படக் கூடிய அபாயத்திற்கு கவனம்கொடுக்கா வண்ணம் பிரெஞ்சு மக்களை தாலாட்டு பாடி தூங்கச் செய்வதுதான் மக்ரோனின் கருத்துக்களது நோக்கமாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் திட்டநிரலுக்கு எதிராக பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் போராட்டத்திற்குள் நுழைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும். மக்ரோனின் சமூக வெட்டுக்களுக்கும் பல்கலைக்கழக சீர்திருத்தங்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு வருவதன் மத்தியில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் குறித்த விவாதம் பிரான்சில் வளர்ந்து வருகிறது; அப்போது ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து, ஊதியச் சலுகைகள் மற்றும் புதிய தேர்தல்களுக்கு ஆதரவாய் வேலைநிறுத்தத்தை விற்று விட்டது. ஆயினும், இன்று வர்க்கப் போராட்டத்தில் எந்த “சீர்திருத்த” விளைவும் வரப் போவதில்லை.

கால் நூற்றாண்டு காலப் போர்களுக்கும் மற்றும் ஒரு தசாப்த கால ஆழமான பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர், ஒட்டுமொத்தமாக பிரெஞ்சு ஆளும் வர்க்கமானது சொந்த நாட்டில் வர்க்க உறவுகளை ஒரேயடியாக மீள்கட்டுமானம் செய்வதற்கும் போருக்கான உலக ஏகாதிபத்திய முனைப்பில் தனது நலன்களைத் திட்டவட்டம் செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. 2024க்குள்ளாக இராணுவத்தில் 300 பில்லியன் யூரோக்கள் செலவிடுவதற்கான திட்டங்களை பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதற்கும் செல்வந்தர்களுக்கு பல பில்லியன் யூரோக்களை வரிவெட்டுகளாக மக்ரோன் கையளிப்பதற்குமான பணம் ஆழமான சமூக சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்களை சூறையாடுவதன் மூலமே திரட்டப்பட இருக்கிறது.

இரயில்துறை தொழிலாளர்கள் மற்றும் மற்றும் விமான அலுவலர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு பெருகிச் செல்வதற்கு எந்தவித சலுகைகளும் அளிக்கப் போவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய விதிகளைக் காட்டி, அவர், இரயில்துறை தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவை தொழிலாளர்களது பாதுகாப்பு சட்டப்பிரிவை ஒழிக்கும் அவரது திட்டங்களை தொடர உறுதியளித்தார், இப்போதிருக்கும் தொழிலாளர்களின் இடத்தில், தற்காலிகத் தொழிலாளர்களின் மட்டத்திற்கு ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகள் குறைக்கப்பட்ட புதிய நியமனங்களை பிரதியிடுவதற்கு இது அவரை அனுமதிக்கும்.

“பொதுக் கருத்தின் ஆதரவை இழக்க வேண்டியிருந்தாலும் கூட” அவரது மக்கள்விரோதக் கொள்கைகளை தொடர்வாரா என்று TF1 இன் Jean-Pierre Pernaut கேட்டதற்கு பதிலளித்த மக்ரோன், செய்வேன் என்றார். “பொதுக் கருத்துடன் எல்லாம் முடிந்து போய் விடாது” என்று மக்ரோன் அறிவித்தார். “வெளிப்படையாகப் பேசுவதற்கு மன்னிக்கவும், பொதுக் கருத்து என்பது என்ன? அதற்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும், இதைச் செய்ய வேண்டுமா அல்லது அதைச் செய்ய வேண்டுமா என்பதற்கும் நான் கருத்துக்கணிப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமா?”

இது சர்வாதிகாரத்தின் மொழியாகும், தேசியவாதத்திற்கும் இராணுவ சேவையை அனைவருக்கும் கட்டாயமாக்குவதை மீண்டும் கொண்டுவருவது உள்ளிட்ட இராணுவவாதத்திற்கும் விண்ணப்பங்கள் செய்து, தனது கொள்கைகளுக்கு ஒரு சமூக அடித்தளத்தை கட்டியெழுப்பிக் கொள்ள மக்ரோன் உறுதியளித்தார். அவர் தெரிவித்தார், “நமது நாடு அது ஒரு தேசம் என்பதையும், அப்படியானால் பொதுக் கல்வி, மதசார்பின்மை, அனைவருக்கும் தேசிய சேவை, தேசத்தின் ஒரு உண்மையான அரசியல் என்று அர்த்தமாகும் என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.” சிரியா முதல் மாலி வரையில் மக்ரோன் போர் நடத்துகின்ற நிலையிலும், ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் “மதசார்பின்மை” என்பதை முஸ்லீம்-விரோத இனவெறிக்காக விண்ணப்பங்கள் செய்வதற்கான அரசியல் குறியீடாக பயன்படுத்துகின்ற நிலையிலும், மக்ரோன் பேசுவது என்ன என்பது முன்னெப்போதினும் மிகத் தெளிவாக இருக்கிறது.

சகலருக்கும் இராணுவ சேவையை கட்டாயமாக்குவதற்கான திட்டங்களின் அர்த்தம் வெளிநாடுகளிலான ஏகாதிபத்தியப் போர்களுக்கு பீரங்கி இரையாக சேவை செய்வதற்கும், சொந்த நாட்டில் சமூக எதிர்ப்புக்கு எதிரான போலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கும் பாரிய எண்ணிக்கையிலான இளைஞர்களை எடுப்பதற்காக தேசியவாத வெறிக்கூச்சலை தூண்டுவதென்பதாகும். இந்தத் திட்டங்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவம், ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது சக்திகள் உள்ளிட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவும் இருக்கிறது. ஒடுக்குமுறைக்கான மக்ரோனின் திட்டங்களுக்கு இவர்களும் உடந்தையாக உள்ளனர்.

அவரது அரசாங்கம் Notre-Dame-des-Landes இல் சுற்றுசூழல் ஆர்ப்பாட்டக்காரர்களை துணைஇராணுவ போலிசைக் கொண்டும் இராணுவ வாகனங்களைக் கொண்டும் வன்முறையாக தாக்கியதும், Nanterre பல்கலைக்கழகத்தின் பகுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றம் செய்ததும் நடந்து ஒரு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மக்ரோன் மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களை மீண்டும் தனது நேர்காணலில் மிரட்டினார். மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை கொடுப்பது உண்மையில் மாணவர்களாக இல்லை, மாறாக “ஒழுங்குகுலைவதை தூண்டிவிடுவதை தொழிலாகக் கொண்டவர்கள்” தான் இருக்கிறார்கள் என அவர் கூறிக் கொண்டார்.

தொழிற்சங்கங்களும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் மக்ரோனுடன் சீர்திருத்தங்களைப் பேரம்பேசிக் கொண்டே அதேநேரத்தில், பிரான்சுக்குள்ளாக ஒழுங்கமைக்கின்ற அடையாள ஆர்ப்பாட்டங்களின் அடிப்படையில் தொழிலாளர்களும் மாணவர்களும் மக்ரோனை எதிர்த்துப் போராட முடியாது என்பதையே இந்தக் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான ஒரு போராட்டத்தில் ஒரு சர்வதேசிய மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்பையில் உலகெங்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே முன்நோக்கி இருக்கும் ஒரே பாதையாகும்.