ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French students protest war, support striking rail workers

பிரெஞ்சு மாணவர்கள் போரை எதிர்க்கின்றனர், வேலைநிறுத்தம் செய்து வரும் இரயில்வே தொழிலாளர்களை ஆதரிக்கின்றனர்

By Alex Lantier
16 April 2018

இரயில்துறையின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை இரயில்வே தொழிலாளர்கள் இரண்டு மேலதிக நாட்களுக்கு தொடரும் நிலையில், வெள்ளியன்று பாரீசில் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஐந்தாம் வேலைநிறுத்த நாளன்று, சமூக மற்றும் சர்வதேச நிலைமையின் வெடிப்பார்ந்த தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சற்று முன்னர் தான் TF1 தொலைக்காட்சியில் தோன்றி, மக்கள் கருத்தை அவமதித்து அவரது சமூக தாக்குதலைத் தொடர உறுதியளித்ததுடன், அதேவேளை ஐரோப்பிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சிரியா மீதான விமானத் தாக்குதல்களைக் கொண்டு சிரிய மற்றும் ரஷ்ய படைகளை அச்சுறுத்தவும் செய்தார்.

“அனைவருக்குமான தேசிய சேவை" என்ற மூடுமறைப்பில் கட்டாய இராணுவச் சேவையைத் திரும்ப கொண்டு வருவதற்கான மக்ரோனின் அழைப்பை ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (La France insoumise – LFI) ஆதரித்திருந்த நிலையில், மக்ரோனின் அந்த அழைப்பையும் மற்றும் மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களது முற்றுகைகளை திட்டமிட்டு உடைக்கும் நகர்வுகளையும் மாணவர்கள் எதிர்த்தனர். வெளிநாடுகளில் இராணுவவாதத்திற்கும் உள்நாட்டில் ஒடுக்குமுறைக்கும் இடையிலான தொடர்பையும், அத்துடன் முதலாளித்துவத்தின் கீழ் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையையும் அவர்கள் வலியுறுத்தினர்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

மக்சிம் மற்றும் அவர் நண்பர் பாரீசில் உள்ள ரொல்பியாக் (Tolbiac) வளாகத்தில் WSWS செய்தியாளர்களுடன் பேசுகையில், மக்ரோனின் சீர்திருத்தங்கள் மீதும், வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸ் ஆல் சிரியாவில் தொடங்கப்பட்ட இராணுவ தீவிரப்பாடு மீதும் அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர் கூறினார், “நாம் இப்போதும் கூட ஒவ்வொரு இடத்திலும் அணுஆயுதங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அணுஆயுத தாக்குதலுக்கு செல்ல அச்சுறுத்தும் ஒரு தீவிர சுழற்சிக்குள் நாம் சிக்கியுள்ளோம். இது எங்கும் இட்டுச் செல்லப் போவதில்லை, ஆகவே இவ்விதத்தில் ஓர் உலகளாவிய மோதல் கொதிப்படைய அனுமதிப்பது முற்றிலும் முட்டாள்தனமானது.”

டூமாவில் சிரிய ஆட்சி தான் ஓர் இரசாயன தாக்குதல் நடத்தியதாக மக்ரோனின் குற்றச்சாட்டுகளைச் சந்தேகிப்பதாக மக்சிம் தெரிவித்தார். “பஷர் அல்-அசாத் அரசாங்கம் உண்மையிலேயே இரசாயான தாக்குதல்களை நடத்தி இருந்தாலும் கூட, ஐ.நா. ஒப்புதல் இல்லாமல் இவ்விதத்தில் தலையீடு செய்ய" பிரான்சுக்கு "உரிமை இல்லை. … எவ்வாறிருப்பினும், கடந்த 30 ஆண்டுகளில் மத்திய கிழக்கு முழுவதிலும், ஈராக், ஆப்கானிஸ்தான், இன்னும் பலவற்றில் மேற்கத்திய தலையீடுகள் அந்த நாடுகளில் வன்முறையை வளர்த்து விட்டதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்பதை நாம் கண்டுள்ளோம். முடிவில், அனேகமாக இது நமது இராணுவ வரவு-செலவு திட்டக் கணக்கை நியாயப்படுத்தவும் மற்றும் நமது ஆயுத விற்பனைகள் குறித்து பெருமைபீற்றவும் தான் செய்துள்ளது என்று நினைக்கிறேன்,” என்றார்.

தனியார்மயமாக்கல் அபாயத்தை முகங்கொடுக்கும் இரயில்வே தொழிலாளர்களுக்கு அவர் தனது ஆதரவை வலியுறுத்தினார்: “என்ன நடத்தப்பட்டு வருகிறது என்றால் எல்லா பொதுச்சேவைகளும் அழிக்கப்படுகின்றன. நாங்கள் இரயில்வே தொழிலாளர்களை ஆதரிக்கவில்லை என்றால், அந்த சீர்திருத்தம் அவசியமானது என்பதாக நிறைவேற்றப்பட்டுவிடும். அவர்கள் எங்களுடன் இருப்பது அவர்களுக்கும் நல்லது, போராட்டங்கள் இப்போது நிஜத்தில் ஒருங்கிணைந்து வருகின்றன, அரசுக்கு எதிரான நிஜமான எதிர்-பலம் மேலெழுந்து வருகின்றது.”

மக்ரோன் "முற்றிலும் யதார்த்தத்திலிருந்து விலகிவிட்டார்", அவர் "பொலிஸ் ஒடுக்குமுறை கொண்டு விடையிறுக்கிறார். ரென், மொன்பெலியே, லியோன் மற்றும் நாந்தேரில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மக்ரோன் மக்களிடமிருந்தும், இளைஞர்களிடம் இருந்தும், இரயில்வே தொழிலாளர்களின் சிந்தனைகளில் இருந்தும், ஒவ்வொருவரிடம் இருந்தும் அன்னியப்பட்டுள்ளார்,” என்று குறிப்பிட்டு, மக்சிம் பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்பினும் அதிக வன்முறை மற்றும் எதேச்சதிகார கொள்கையைச் சுட்டிக்காட்டினார்.

சமூகவியல் துறை மாணவனான லிவியோவும் வரவிருக்கும் போர் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார்: “அங்கே மூன்றாம் உலகப் போர் தொடங்கி உள்ளது அல்லது அதன் தொடக்கமாக இருக்கலாமென பலரும் கருதுகின்றனர். நாம் சாத்தியப்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சூழல் மிகவும் அதிபயங்கரமாகி உள்ளது என்பதே உண்மை,” என்றார்.

அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை "சில ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்டது, 2018 இல் அதை மீண்டும் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. … இந்தக் கால இளைஞர்கள் இப்போது இராணுவத்தில் சேரும் மனோநிலையில் இல்லை, ஒருவர் அரசாங்கத்தையே ஆதரிக்காத போது, முக்கியமாக அது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது,” என்றார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்ந்தெடுப்பை அதிகரிப்பதற்கான அவரது திட்டங்களை மக்ரோன் திணித்தால், “அது தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்துவதைப் போல, ஒரு சமநோக்குக்கு-விரோதமான முறையாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, அது நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் நிறைய பணம் வைத்திருப்பவர்களே பல்கலைக்கழகத்திற்கு செல்வதாக இருக்கும். அது இப்போது நிலவும் வர்க்க பிளவுகளை வெளிப்படுத்துகிறது என்பதோடு, முன்பினும் அதிகமாக முக்கியத்துவம் அளிக்கும். இது ஆபத்தானது,” என்று லிவியோ எச்சரித்தார்.

மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சம்பந்தப்பட்டுள்ள சமநோக்குக்கு-எதிர்ப்பு கோட்பாடுகளுக்கு அடெலைட் என்ற மாணவி தனது எதிர்ப்பை வலியுறுத்தினார்: “என்னைப் பொறுத்த வரையில், ஒவ்வொருவருக்கும் கல்வி வழங்குவது தான் இப்பல்கலைக்கழகத்தின் கோட்பாடு. ஆனால் இந்தச் சட்டம் … பரந்த மக்கள் கல்லூரி மற்றும் கல்வியை அணுகுவதைத் தடுக்கும். கல்வி பெறுவது என்பது ஒரு பட்டப் படிப்பு முடித்து வேலை தேடுவது போன்ற விடயமல்ல, அது புத்திஜீவித வளர்ச்சி சம்பந்தப்பட்டது. எங்களின் கல்விப் பாதையில் தவறுகள் செய்யவும், துறைகளை மாற்றிக் கொள்ளவும், நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்கவும், எங்களுக்கு உரிமை உண்டு,” என்றார்.

மக்ரோனின் சீர்திருத்தங்கள், “பெற்றோர்களால் படிப்புக்கு நிதியுதவி வழங்கி உதவ முடியாத வறிய மாணவர்களை நிச்சயமாக பாதிக்கும். வேலை செய்து வரும் மாணவர்களும் முக்கியமானவர்கள் தான், தங்களின் படிப்பைத் தொடர்வதற்காக வாழ்வின் பிந்தைய நாட்களில் படிப்பதற்காக மீண்டும் திரும்பி வந்த பழைய மாணவர்களின் எடுத்துக்காட்டை நான் எண்ணிப் பார்க்கிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அவர் வேலைநிறுத்தம் செய்து வரும் இரயில்வே தொழிலாளர்களை ஆதரிக்குமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்தார்: “ஆம், ஒரு சுரங்கப் பாதையில் 40,000 பேர் இரயிலுக்காக காத்திருப்பது வெறுப்பாக தான் இருக்கிறது, ஆம் இரயில்கள் இரத்து செய்யப்பட்டிருப்பது வெறுப்பாக தான் இருக்கிறது, ஆனால் முடிவில் இதெல்லாம் ஒரு நல்ல நோக்கத்திற்காக தானே. … நான் புறநகர் பகுதியில் வாழ்கிறேன், என்றாலும் இரயில்வே தொழிலாளர்கள் வெறுமனே உற்சாகத்திற்காக இதை செய்யவில்லையே. இது அவர்களின் வேலை நேரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் வேலைக்கு செல்லாத போது அவர்கள் பணத்தை இழக்கிறார்கள், இது அவர்கள் செய்யும் தியாகம், அவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமென நினைக்கிறேன்.”

சிரியாவில் குண்டுவீசுவதில் பிரான்ஸ் மற்றும் நேட்டோவின் நோக்கமே சிரிய மக்களுக்கு உதவுவதுதான் என்ற ஊடகங்களின் வாதங்களை எலா என்ற மாணவி விமர்சித்தார். அவர் கூறினார், “பிரான்சில் என் நகரில் அங்கே சிரியர்களைக் கொண்ட மிகப்பெரிய முகாம் உள்ளது. அவர்கள் ஒரு நல்வாழ்வு வாழ நாங்கள் உதவுகிறோம்; போரில் இருந்து தப்பி வரும் சிரியர்கள், எதுவுமின்றி, அப்படியே, வந்தடைகிறார்கள். என்னால் இது குறித்து மணிக்கணக்கில் பேச முடியும். பிள்ளை பெறுவதற்கு தயாராவதற்குத் தேவைப்படும் எதுவும் கிடைக்காத கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களோ அந்நகரின் மின்சாரத்தை வெட்டுகிறார்கள், எங்கள் நகர முதல்வர் சிரிய குழந்தைகளுக்கு கல்வி வழங்க மறுக்கிறார். … சிரிய மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த போரை ஒருபோதும் விரும்பியதில்லை. இப்போது அவர்கள் ஒடுக்கப்படும், பாரபட்சமாக நடத்தப்படும், தனிமைப்படுத்தப்படும் ஒவ்வொருவராலும் நிராகரிக்கப்படும் பிரான்சில் தங்களைக் காண்கிறார்கள்.”

அனைவருக்குமான தேசிய சேவை குறித்து அவர் கூறுகையில், இளைஞர்கள் "இறுதியில் முற்றிலுமாக அதற்கு எதிராக நிற்பார்கள், ஏனென்றால் அது ஒருவருக்கு சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும். நாங்கள் ஏற்கனவே எங்கள் படிப்புக்கு போதிய நிதி இல்லாமல் இருக்கையில், ஏதோசில புதிய இராணுவச் சேவை விடயங்களுக்கு அவர்கள் நிறைய பணத்தைச் செலவிடுவார்கள். அது இராணுவச் சேவை செய்ய இளைஞர்களைப் பயிற்றுவிப்பதாக இருக்கலாம், அப்பட்டமாக சொல்வதானால், போருக்கு அவர்களைப் பயிற்றுவிப்பதாக இருக்கலாம். … 18 இல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், வெறுமனே போர்க்கள பலிப்படைகளாக பார்க்கின்ற இராணுவத்தால் மூளைச்சலவை செய்யப்படுவார்கள், போருக்காக நாங்கள் பயிற்றுவிக்கப்படுவது எங்களுக்கு தேவையில்லை,” என்றார்.


ஒரு பதாகை மே-ஜூன் 1968 மேலெழுச்சிகளை எடுத்துக்காட்டுகிறது

அவர், பிரான்சின் மிகப் பணக்கார பெண்மணியான லில்லியான் பெத்தான்கூர் விடயத்தைச் சுட்டிக்காட்டி, மக்ரோனின் பிற்போக்குத்தனமான சமூக முன்னுரிமைகளையும் விமர்சித்தார், அப்பெண்மணி ஏறத்தாழ 36 பில்லியன் யூரோ மொத்த மதிப்புடன் கடந்த ஆண்டு இறந்து போனார்: “உண்மையில் நான், அனைவருக்கும் செல்வவளத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக இருக்கிறேன். … லில்லியான் பெத்தான்கூர் கதை ஒன்று உண்டு. அவர் வைத்திருந்த அந்த மொத்த செல்வத்தையும் உங்கள் சம்பளம் மூலமாக சேர்க்க உங்களுக்கு 2 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், இது நிஜமாகவே ஏதோவொன்று தவறாக இருப்பதைத் தெளிவாக காட்டுகிறது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், “பல இரயில்வே தொழிலாளர்கள், மருத்துவ பராமரிப்பு தொழிலாளர்கள் என பலரும் எங்களைப் பார்க்க வருகிறார்கள். இது எல்லாமே ஒரே போராட்டம் தான். ஒரு சமயத்திற்குப் பின்னர், நாம் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இருப்போம் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன். நமது போராட்டங்கள் ஒருங்கிணையும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைப் போலவே, நாம் 10 மில்லியன் கணக்கான மக்களுடன் வீதியில் இறங்குவோம்,” என்றார்.