ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In Washington, Macron calls for renegotiation of nuclear deal with Iran

வாஷிங்டனில், மக்ரோன் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்த அழைப்பு விடுக்கிறார்

By Alex Lantier
25 April 2018

மூன்று நாள் வாஷிங்டன் பயணத்தில் இரண்டாம் நாளான செவ்வாய்கிழமையன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் மத்திய கிழக்கு மற்றும் உலக வர்த்தகம் தொடர்பாக நடந்த அவர்களிடையேயான பேச்சுவார்த்தைகளை விவரிப்பதற்காக ட்ரம்ப் உடன் இணைந்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில், மக்ரோன், 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை தூக்கிவீசுவதற்கான ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு தகவமைத்துக் கொள்ள முனைந்ததோடு மத்திய கிழக்கிலான அமெரிக்காவின் போர்களுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் வாக்குறுதியளித்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் இல்லையேல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பிருந்த வர்த்தகத் தடைகள் புதுப்பிக்கப்படுவதற்கும் மற்றும் இராணுவத் தாக்குதலின் சாத்தியத்திற்கும் முகம்கொடுக்க வேண்டும் என்று ஈரானிடம் சொல்வதில் பாரிஸ் வாஷிங்டனுடன் கரம்கோர்த்துக் கொண்டிருக்கிறது. சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான ஏழாண்டு கால நேட்டோவின் பினாமிப் போர் படுதோல்வி கண்ட போதிலும், அமெரிக்காவுக்கும் சிரியாவின் முன்னாள் காலனிய எஜமானான பிரான்சுக்கும், ரஷ்யாவுடன் சேர்ந்து சிரிய ஆட்சிக்கு முக்கியமான ஆதரவை வழங்கி வருகின்ற ஈரானின் நிலை எந்த நிலையிலும் வலுவடைவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறாக, சிரியாவில் அமெரிக்க-ஐக்கிய இராஜ்ஜிய-பிரெஞ்சு ஏவுகணைத் தாக்குதல் நடந்து 10 நாட்கள் கூட முடிந்திராத நிலையில், இவை சிரியா, ஈரான் அத்தோடு அணு-ஆயுத வல்லமையுடைய ரஷ்யாவுடன் ஒரு புதுப்பித்த இராணுவ மோதலுக்கு பாதையமைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கை மக்ரோனிடம் இருந்தான முக்கியமான ஒரு மாற்றமாகும், ஈரான் அணு ஒப்பந்தத்தை இவர் பகிரங்கமாக ஆதரித்து வந்திருக்கிறார் என்பதோடு, தனது பயணத்துக்கு முன்பாக Fox News க்கு அளித்த ஒரு நேர்காணலில், இதனை பிரதியிடுவதற்கு எந்த “இரண்டாம் திட்டமும்” இல்லை என்று கூறியிருந்தார். அந்த நிலைப்பாடு உலகெங்கிலும் அரசாங்கங்களிடம் இருந்து ஆதரவு அறிக்கைகளைப் பெற்றது. பெய்ஜிங் பயணம் சென்றிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ், இந்த ஒப்பந்தத்தை அகற்றுவதற்கான எந்த முயற்சியையும் தானும் தனது சீன சகாக்களும் எதிர்க்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளும் கூட இந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை எதிர்த்தன. பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான போரிஸ் ஜோன்சன் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக தனது “வலுவான கண்ணோட்டத்தை” வலியுறுத்தினார், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஹய்கோ மாஸ், ஈரானிய அணு ஒப்பந்தத்தை தூக்கிவீசுவது மத்திய கிழக்கிலான இராணுவ சூழலில் மிக ஆபத்தான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று எச்சரித்தார். “இந்த ஒப்பந்தத்தை உறுதிசெய்வது மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் அறிவித்தார். “அது தோல்வியடைந்தாலோ அல்லது அமெரிக்கா அதைக் கைவிட்டாலோ, நமக்கு அதனுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கான வேறெதுவும் இருக்காது, அத்துடன் சூழ்நிலை கணிசமாக மோசமடைவதோடு, அதனுடன் சேர்ந்து எல்லாம் மோசமடையும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.”

ஈரானிய வெளியுறவு அமைச்சரான ஜாவத் ஷரிஃப், அவர் இப்போதைய ஒப்பந்தத்தை சிரத்தையுடன் மதிக்கின்ற அதேநேரத்தில், வாஷிங்டன் அதனை உதறித் தள்ளுமேயானால், ஈரானும் அதனை “கிழித்தெறியும்” என்று எச்சரித்தார். “இருந்தால் எல்லாம் இருக்கும் அல்லது எதுவும் இருக்காது. ட்ரம்ப் வெறுமனே அணு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு மட்டுமல்ல, அதைவிட முக்கியமாய், பேரத்தில் அவரது தரப்பை நல்ல நோக்கத்துடன் அவர் அமல்படுத்தத் தொடங்குவதற்கும் ஐரோப்பிய தலைவர்கள் அவரை ஊக்குவிக்க வேண்டும்” என்று அவர் ட்விட்டரில் எழுதியிருந்தார்.

செவ்வாய்கிழமை காலை, ட்ரம்ப்புடன் தனியாகப் பேசுவதற்கு முன்பான புகைப்படமெடுக்கும் நிகழ்வின் சமயத்தில் மக்ரோன் இந்த ஒப்பந்தத்திற்கான தனது ஆதரவை மீண்டும் தெரிவித்தபோது, அமெரிக்க ஜனாதிபதி வெடித்துப் பொங்கி, இந்த நிலைப்பாடு ஏற்பில்லாதது என்று சுட்டிக்காட்டினார்.

மக்ரோன் அறிவித்தார், “நான் என்ன கூறினேன் என்றால் ஈரான் ஒப்பந்தம் ஒரு முக்கியமான விடயம் என்பதாகும். நாங்கள் அதை விவாதிப்போம். ஆனால் நாம் அதை, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு என்ற விரிந்த சித்திரத்தின் பாகமாகப் பார்க்க வேண்டும். சிரிய சூழ்நிலையைப் பார்க்கிறோம், ஈராக்கில் தேர்தல் வரவிருக்கிறது, பிராந்தியத்தில் நமது கூட்டாளிகளுக்காக ஸ்திரத்தன்மையை அங்கே நாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. பிராந்தியத்தில் ஈரானின் பிரசன்னத்தை நாங்கள் மட்டுப்படுத்தி வைக்க விரும்புகிறோம், [ஈரான் அணு ஒப்பந்தம்] அந்த பரந்த சித்திரத்தின் பாகமாகும்.”

ட்ரம்ப் பதிலளித்தார்: “நீங்கள், குறிப்பாக மத்திய கிழக்கில், எங்கே சென்றாலும் ஈரான் பின்னாலிருப்பதாகப் படுகிறது, எங்கே பிரச்சினை என்றாலும்: ஏமன், சிரியா. எங்கே வேண்டுமானாலும் போங்கள், ஈரான் பின்னால் நிற்கிறது. இப்போது, துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யா மேலும் மேலும் அதிகமாய் சம்பந்தப்பட்டு வருகிறது. ஆயினும் பிரச்சினை எங்கே இருந்தாலும் பின்னால் ஈரான் இருக்கின்ற நிலைமை இருக்கிறது.... ஈரான் ஒப்பந்தம் ஒரு நாசம். அவர்கள் ஏவுகணைகளை சோதிக்கிறார்கள். அது என்ன? வெடிப்பு ஏவுகணைகளை சோதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள், எல்லா இடத்திலும் ஏவுகணைகளை சோதிக்க அனுமதிக்கப்படும் விதமாய் என்ன விதமான ஒப்பந்தம் இது?”

ட்ரம்ப்பும் மக்ரோனும் தனியாகப் பேசிவிட்டு வந்த பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி, ட்ரம்ப்பின் நிலைப்பாடுகளுக்குப் பின்னால் தன்னை நிறுத்திக் கொண்டு விட்டதாய் தென்பட்டது.

சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்ததாக மோசடியான மற்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத கூற்றுகளின் அடிப்படையில் சிரியா மீது ஏப்ரல் 14 அன்று ஆத்திரமூட்டலின்றி நடத்தப்பட்ட அமெரிக்க-ஐக்கிய இராஜ்ஜிய-பிரெஞ்சு ஏவுகணைத் தாக்குதல்களைப் பாராட்டி ட்ரம்ப் ஆரம்பித்தார். “ஜனாதிபதி மக்ரோன், இந்த முயற்சியில் உங்களது தலைமைத்துவத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் அவர். “அணு ஆயுதப் பரவல் தடுப்பிலும் அமெரிக்காவும் பிரான்சும் ஒத்துழைத்து வருகின்றன. வட கொரிய ஆட்சியின் மீது அதிகப்பட்ச அழுத்தமளிக்கும் எமது பிரச்சாரத்தில் பிரான்சின் முக்கியமான பங்காளித்துவத்திற்கு நாங்கள் நன்றி உடையவர்களாய் இருக்கிறோம்.”

பிரான்சில் புலம்பெயர்ந்தவர்களின் மீதான மக்ரோனின் ஒடுக்குமுறையையும் ட்ரம்ப் பாராட்டினார், “கட்டுப்பாடில்லாத குடியேற்ற”த்திற்கு எதிரான ஒரு யுத்தமாக இதனை அழைத்த அவர் இவ்வாறு சேர்த்துக் கொண்டார், “திரு.ஜனாதிபதி அவர்களே, இதனை, எப்போதும் மக்கள்விரும்பும்படியான வகையாய் இல்லாமல், ஒரு மிக நேர்மையான மற்றும் நேரடியான விதத்தில் எதிர்கொள்வதில் நீங்கள் காட்டியிருக்கும் தலைமைத்துவத்தை நான் போற்றுகிறேன்.”

அதன்பின் மக்ரோன், ஈரான் அணு ஒப்பந்தத்திற்கான ட்ரம்ப்பின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள தான் தயாரிப்புடன் இருந்ததாகத் தெரிவித்தார்: “இது விடயத்தில் நாங்கள் வெளிப்படையாக விவாதித்தோம் என்பதை என்னால் கூற முடியும், நாங்கள் இரண்டு பேர் மட்டும் பேசியிருக்கிறோம். ஈரானிய ஒப்பந்தம், ஈரானுடன் 2015 இல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட JCPOA (திறம்பட்ட கூட்டு நடவடிக்கைத் திட்டம்), ஒரு மோசமான ஒப்பந்தம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்... ஆகவே, நாங்கள் இப்போதிருந்து ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்திற்காக வேலை செய்வதற்கு விரும்புகிறோம்.”

ஈரானுடனான ஒரு புதிய ஒப்பந்தமானது எவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்: “நமக்குத் தேவை...நான்கு விடயங்களை அது பேச வேண்டும். முதலாவது, 2025 வரை ஈரானிடம் இருந்து எந்த அணு நடவடிக்கையையும் தடுப்பது. JCPOA இன் பலனால் இது சாத்தியமாகக் கூடியதே. இரண்டாவது, நீண்டகாலப் போக்கில், ஈரானிடம் இருந்து எந்த அணு நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்வது. மூன்றாவது அடிப்படையான விடயம், பிராந்தியத்தில் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெடிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலுவது. நான்காவது, பிராந்தியத்தில் -ஏமனில், சிரியாவில், ஈராக்கில், மற்றும் லெபனானில்- ஈரானை மட்டுப்படுத்தி வைப்பதற்கான ஒரு அரசியல் தீர்வுக்கான நிலைமைகளை உருவாக்குவது.”

மக்ரோன் எடுத்துரைக்கும் நிலைப்பாடு, ஈரானுக்கும் நேட்டோ சக்திகளுக்கும் இடையில் ஒரு வன்முறையான மோதலை தூண்டும் ஆபத்துகளைக் கொண்ட ஈரானுக்கு எதிரான ஒரு பொறுப்பற்ற மிரட்டலைக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியக் களத்தில் ஆட்சி-ஆதரவுப் படைகளுடன் சேர்ந்து சண்டையிடும் அதன் படைகள் வெற்றிகாண்கின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிபந்தனைகளுக்கு முழுமையாக அடிபணிய வேண்டும் என்று கெடு விதிப்பதற்கு நிகரானதாக இது இருக்கிறது. முன்னதாக ஈரானிய ஆட்சி அதன் வெடிப்பு ஏவுகணைத் திட்டத்தின் மீதான வரம்புகளை அது எதிர்க்கும் எனக் கூறியிருந்தது.

சிரியாவில் பெற்றிருக்கும் தோல்வியால் கலங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் பிரான்சின் ஜனாதிபதிகள், மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான எதிர்ப்பை நசுக்குவதில் இருந்து யாரும் தங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ராலினிஸ்டுக்களால் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இருந்த பிரதான எதிர்எடையை இல்லாது செய்துவிட்டதற்குப் பிந்தைய காலத்தில், மத்திய கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால்-நூற்றாண்டு கால போர்களில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடங்கி லிபியா, சிரியா மற்றும் ஏமன் வரையிலுமான போர்களில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர். நேட்டோ சக்திகள் ஈரானையும், மறைமுகமாக, அதன் கூட்டாளியான ரஷ்யாவையும் மிரட்டி வருகின்ற நிலையில், இன்னும் பெரியதொரு இராணுவத் தீவிரப்படலுக்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஈரான் அணு ஒப்பந்தம் விடயத்தில், இந்த ஒப்பந்தம் இரத்தானால் தன்னிடம் எந்த “இன்னொரு திட்டமும்” (Plan B) தயாராக இல்லை என்று Fox News இடம் கூறியதன் பின்னர், மக்ரோன் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என்று Agence France-Presse ஆல் கேட்கப்பட்ட போது, மக்ரோன் “இன்னொரு திட்டம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பாக தான் கூறவில்லை என்று கூச்சமின்றி மறுத்தார். “வாழும்பூமிக்கான ‘இன்னொரு திட்டம்’ இல்லை என்ற உண்மையை பொதுவாக நான் குறிப்பிடுவதுண்டு” என்றார் அவர். “அது காலநிலை சம்பந்தப்பட்டதே அன்றி ஈரான் சம்பந்தப்பட்டதல்ல”. அதன்பின் அவர் ஈரான் அணு ஒப்பந்தம் சம்பந்தமான இறுதி முடிவு வாஷிங்டன் வசமே இருப்பதாக வலியுறுத்தச் சென்றார்.

“ஈரான் தொடர்பாக” அவர் அறிவித்தார், “எப்போதும் நான் ஒரே மாதிரியாகவே கூறிவருகிறேன், செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நான் என்ன கூறினேன் என்பதை நீங்கள் சென்று பார்க்கலாம். JCPOA இருக்கிறது, ஆனாலும் 2025க்குப் பிந்தைய காலத்திற்காக வெடிப்பு ஆயுதங்கள் பிரச்சினை மற்றும் பிராந்திய செல்வாக்கு ஆகியவை உள்ளிட்ட மூன்று தூண்களை நாம் சேர்ப்பது அவசியமாக இருக்கிறது என்றே எப்போதும் கூறினேன். JCPOA தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் என்ன முடிவெடுப்பார் என்பது எனக்குத் தெரியாது, அது அவரது பொறுப்பு.”