ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Maruti Suzuki workers hold protest demanding release of 13 framed-up colleagues

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட 13 சக தொழிலாளர்களை விடுவிக்க கோரி மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

By Saman Gunadasa 
21 March 2018

புது தில்லிக்கு அருகிலுள்ள குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதியைச் சார்ந்த தொழிலாளர்கள், மார்ச் 18 அன்று, ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு ஓராண்டிற்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்ததோடு, இது குறித்து கமலா நேரு பூங்காவில் ஒரு கூட்டத்தையும் நடத்தினர்.

“மாருதி தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்!” மற்றும் “13 மாருதி தொழிலாளர்கள், பிரைக்கோல், கிராஸியானோ தொழிலாளர்கள் மற்றும் வர்க்கப் போரின் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!” போன்ற சுலோக அட்டைகளை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கையிலேந்தியிருந்தனர். அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், இந்தியாவின் வாகன தொழில்துறையில் இரண்டு பிரைக்கோல் தொழிலாளர்களும் மற்றும் நான்கு கிராஸியானோ தொழிலாளர்களும் கூட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) இடைக்கால செயற்குழு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. அரசின் அடக்குமுறை மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் தாக்குதல் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்பையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. புது தில்லியில் ஹரியானா பவனில் மார்ச் 19 அன்று நடத்தப்பட்ட மறியலைத் தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.


புது தில்லியில் ஹரியானா பவனில் நடத்தப்பட்ட மறியல்

ஒரு வருடத்திற்கு முன்பு, குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி ஆலையின் 13 தொழிலாளர் தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி கண்டுவரும் இயக்கத்தை நசுக்கும் நோக்கம் கொண்டு, மாநில மற்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து இந்த நிறுவனம் ஒழுங்கமைத்த ஜோடிப்பு வழக்கின் உச்சக்கட்ட விளைவாகவே நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. 

மார்ச் 2012 இல், மாருதி சுசூகி தொழிலாளர்கள், நிறுவனம் நிர்வகிக்கும் தொழிற்சங்கத்தை நிராகரித்து MSWU ஐ ஸ்தாபித்தனர். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஊதிய உயர்வுகள் மற்றும் புதிய தொழிற்சங்கத்திற்கு நிர்வாகத்தின் அங்கீகாரம் கோருதல் ஆகியவற்றை உள்ளடக்கி தொழிலாளர்கள் ஒரு தொடர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  

நான்கு மாதகால போராட்டத்திற்கு பின்னர், நிறுவன நிர்வாகம், ஜூலை 18, 2012 அன்று தொழிலாளர்களுடனான ஒரு வன்முறைமிக்க மோதலை தொடங்கியது. இம்மோதலின் போது, தொழிலாளர்களிடம் அனுதாபமிக்க ஒரே மேலாளரான அவினேஷ் தேவ், அப்போது அங்கிருந்த சந்தேகத்திற்குரிய சூழலில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் உருவான புகையை உள்ளிழுத்ததன் விளைவாக இறந்துவிட்டார். 

எந்தவொரு ஆதாரமுமின்றி, தொழிலாளர்கள் தான் தீயை பற்ற வைத்தனர் என்றும், அவினேஷ் தேவின் மரணத்திற்கும் அவர்களே பொறுப்பு என்றும் பொலிஸ் தொழிலாளர்களை குற்றவாளிகளாக்கினர். அத்துடன், மாருதி சுசூகி நிர்வாகம் வழங்கிய ஒரு பட்டியலை அடிப்படையாக கொண்டு, MSWU தலைவர்கள் உட்பட தொழிலாளர்களை பொலிஸார் கைதுசெய்தனர். பொய்யான ஒப்புதல் வாக்குமூலங்களை அவர்களிடம் இருந்து பெறும் முயற்சியில் அவர்கள் பொலிசின் சித்திரவதைக்கு ஆளானதோடு அவமானப்படுத்தப்பட்டனர். 

மார்ச் 2017 இல், நீதியை பரிகசிப்பதாக, MSWU இன் ஒட்டுமொத்த 12 நிர்வாக உறுப்பினர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் மீது “படுகொலை செய்ததாக குற்றம்” சுமத்தப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய 18 தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டது. எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் மிருகத்தனமான அரசு ஒடுக்குமுறையையே சந்திக்க நேரிடும் என்ற வகையிலான ஆளும் உயரடுக்கின் ஒரு சமிக்ஞையாகவே இந்த உத்தரவு இருந்தது.      

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம், உலக சோசலிச வலைத் தளம், ஹரியானா மாநில தலைமை வழக்கறிஞர் 13 தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றிடுமாறு உயர் நீதிமன்றத்தை வலியுறுத்த தயாரிப்பு செய்து வருவதாக தெரிவித்தது. அதேபோல, முன்பு நீதிமன்றத்தால் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு 117 தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குகளை புத்துயிரூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   


குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

மார்ச் 18 கூட்டத்தில் பேசுகையில், MSWU இன் இடைக்கால செயற்குழு உறுப்பினரான குஷிராம், மாருதி சுசூகி தொழிலாளர்களின் நீடித்த போராட்டம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர், “காங்கிரஸ் மற்றும் பிஜேபி (Bharatiya Janata Party-BJP) ஆகிய இரு கட்சிகளின் தொழிலாளர் எதிர்ப்பு பாத்திரம் குறித்தும், நீதித்துறையின் தொழிலாளர் எதிர்ப்பு மனப்பாங்கு குறித்தும் கண்டனம் செய்தார்.

மாருதி சுசூகி காம்கர் தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் குல்தீப் ஜங்கு, குர்கான்-மானேசர் தொழிற்துறை பகுதியில் இயங்கிவரும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஐக்கியப்பட்ட செயல்பாட்டிற்கு அழைப்புவிடுத்தார். மேலும், மாவோயிஸ்ட் கிராந்திகாரி நவ்ஜ்வான் சபாவில் (Maoist Krantikari Naujawan Sabha-KNS) இருந்து நாயன்ஜோதி என்பவர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி பேசினார்.

2012 மாருதி சுசூகி போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில், நிரந்தர ஊதிய விகிதத்திற்கு சமமான நிலையை எட்டும் வகையில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்தை இருமடங்காக்குவது குறித்த கோரிக்கையும் ஒன்றாக இருந்தது.

மேலும், மாருதி சுசூகி பவர்டிரெய்ன் தொழிற்சங்கம், சுசூகி மோட்டார்சைக்கிள் தொழிற்சங்கம், ஹோண்டா தொழிலாளர் தொழிற்சங்கம், டாய்க்கின் தொழிற்சங்கம், இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions-CITU), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு மையம் (Workers Cooperation Centre) ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சேர்த்து, MSWU இன் ஒரு தலைவரும் மற்ற பேச்சாளர்களில் அடங்குவர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிற்சங்கங்கள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதில் தலையீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கும் ஒரு ஒப்பந்தத்தை சமர்ப்பித்தனர். எனினும், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை இன்னும் மோசமடைய செய்யவும், சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஆதரவளிக்கும் என்பதையே தொழிலாளர்களின் கசப்பான அனுபவங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்திய வாகன சந்தையை கிட்டத்தட்ட பாதியளவு கட்டுப்படுத்தும் மாருதி சுசூகிக்கு அரசாங்கம் அதன் சிவப்பு கம்பள வரவேற்பை விஸ்தரித்துள்ளது. ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வெறும் ஆறே மாதங்களில், ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயும், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் குஜராத்தில் ஒரு புதிய மாருதி சுசூகி ஆலையை தனிப்பட்டமுறையில் தொடங்கிவைத்தனர். 

கடந்த டிசம்பரில், ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள் தலைவர் ஒசாமு சுசூகி, அடுத்தக்கட்ட முதலீடு குறித்து விவாதிக்க மோடியை சந்தித்தார்.


கமலா நேரு பூங்காவில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்

மார்ச் 18 ஆர்ப்பாட்டத்தில் AITUC மற்றும் CITU வின் இரு தலைவர்களும் பேசிய போதும், இவ்விரு தொழிற்சங்கங்கள் மற்றும் இவை இணைந்துள்ள ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPI) மற்றும் இந்திய-மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-Marxist-CPM) ஆகிய கட்சிகள் என அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மாருதி சுசூகி ஜோடிப்பு வழக்கு பற்றி முழுமையாக மௌனம் சாதித்துள்ளன.

கடந்த ஏப்ரலில், பரந்தளவிலான கோபத்தை தணிக்க முனையும் விதமாக அவர்கள் ஒரு அடையாள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், AITUC மற்றும் CITU ஆகிய இரு தொழிற்சங்கங்களுமே சிறையிலிடப்பட்ட தொழிலாளர்களை கைவிட்டுவிட்டன.

ஏப்ரல் 2017 இல், WSWS விடுத்த எச்சரிக்கையை இது உறுதிப்படுத்தியது: “மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தீவிர நடவடிக்கை எடுக்க ஸ்ராலினிசக் கட்சிகள் கொஞ்சம் கூட எந்த எண்ணமும் *கொண்டிருக்கவில்லை என்பதோடு, இந்திய தொழிலாளர்கள் மத்தியில் உள்ள போர்க்குணமிக்க மற்றும் வர்க்க ஒற்றுமை உணர்வை தணிக்கவும் கைவிடவும் முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் எந்தவொரு போராட்டத்தையும் ஆரம்பித்தவுடனேயே நிறுத்திவிடுவார்கள்.     

இந்திய-மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), ஏப்ரல் மாதம் வரவிருக்கும் கட்சி மாநாட்டிற்காக வெளியிட்டுள்ள 50-பக்க தீர்மானத்தில் மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜோடிப்பு வழக்கு பற்றி வெளிப்படுத்துவது என்பது ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுடனான அதன் நெருங்கிய உறவுகளை பாதிப்படையச் செய்யும் என்பதை சிபிஎம் நன்கறியும்.

ஸ்ராலினிச கட்சிகளின் மௌனத்திற்கு நேர் மாறாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (Internation Committee for Fourth International-ICFI), உலக சோசலிச வலைத் தளமும் இணைந்து மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலான ஒரு சர்வதேச பிரச்சாரத்தைத் தொடங்கின.

ஜோடிப்பு வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் WSWS டசின் கணக்கிலான கட்டுரைகளை பிரசுரித்துள்ளது, மேலும் கடந்த வருடம், தொழிலாளர்களை விடுவிக்க கோரும் ஒரு இணையவழி மனுவையும் தொடங்கி வைத்தது, இம்மனு உலகெங்கிலும் இருந்து பரந்தளவிலான ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள சமூக சமத்துவக் கட்சியும் மற்றும் இந்தியாவிலுள்ள ICFI ஆதரவாளர்களும், மறியல் பிரச்சாரங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருவதானது, மாருதி சுசூகி தொழிலாளர்களின் அவல நிலையை இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஆயிரக் கணக்கானவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

மாருதி சுசூகி தொழிலாளர் ஒருவர், அவர்கள் பற்றிய செய்தி வெளியீட்டை WSWS அக்கறையுடன் செய்தமை குறித்து அதற்கு பாராட்டு தெரிவித்து சமீபத்தில் ஒரு குறிப்பை அனுப்பினார் ; “நீங்கள் எழுதியது மிகவும் நன்றாக உள்ளது,” என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியா, தெற்காசியா மற்றும் உலகெங்கிலுமென பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியம். உங்களது முயற்சிக்கு நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.