ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Merkel, Macron meet in Berlin as Syrian strike deepens conflicts inside NATO

சிரிய தாக்குதல் நேட்டோவுக்குள் மோதல்களை ஆழப்படுத்துகையில், மேர்க்கெலும் மக்ரோனும் பேர்லினில் சந்திக்கின்றனர்

By Alex Lantier
20 April 2018

ஏப்ரல் 14 இல் சிரியா மீதான அமெரிக்க-பிரிட்டன்-பிரெஞ்சு தாக்குதல்களுக்குப் பின்னர், அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் வாஷிங்டன் பயணங்களுக்கு முன்னதாக, நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கல் உடனான ஒரு சந்திப்புக்காக பேர்லின் பயணித்தார். ஒரு சிறிய கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவர்கள் சிரியாவுக்கு எதிரான அந்த தூண்டுதலற்ற சட்டவிரோத தாக்குதலை ஆமோதித்ததுடன், அவர்கள் பிரிட்டனுடன் சேர்ந்து, ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையைப் பேணுவதை ஆதரிப்பதாகவும் வலியுறுத்தினர்.

ஆனால் நிரந்தரமாக போரில் தங்கியுள்ள நேட்டோ கூட்டணிக்குள் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே போட்டிகள் தீவிரமடைந்து வருவதால், அந்த கூட்டமைப்பில் விரிசல்கள் கண்டு வருகின்றன. ஈரானிய உடன்படிக்கையை பேர்லின் மற்றும் பாரீஸ் ஆதரிப்பதானது அதை இரத்து செய்ய அச்சுறுத்தி உள்ள ட்ரம்ப் நிர்வாகத்துடன் அவற்றை ஒரு மோதலில் கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல, ஆனால் அந்த இரண்டு முன்னணி ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுமே அதிகரித்தளவில் முரண்பட்டுள்ளன. பேர்லினும் பாரீஸூம் நிதியியல் கொள்கை மீதும் ஏப்ரல் 14 சிரியா தாக்குதல் தொடர்பாகவும் மோதிக் கொள்கின்றன என்ற செய்திகளுக்கு இடையே, யூரோ மண்டலத்தில் ஒரு புதிய நிதியியல் கட்டமைப்புக்கான மக்ரோனின் அழைப்பு பற்றி மேர்க்கெல் மவுனமாக உள்ளார்.

ஐரோப்பாவைச் சுற்றி அதிகரித்து வரும் நேட்டோ போர்களின் பேரலையைக் குறிப்பிட்டும் மற்றும் ஓர் எச்சரிக்கை ஒலி எழுப்பியும், ஜேர்மன் சான்சிலர் ஒரு பலமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை கோரி ஆரம்பித்தார். “ஐரோப்பாவே சமாதானத்திற்கான ஒரு திட்டம்தான் என்ற உண்மைக்கு இடையே, உலகெங்கிலும் நாம் நமது நலன்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது,” என்று தெரிவித்த மேர்க்கெல், “ஒரு பொதுவான வெளியுறவு கொள்கைக்கான திட்டங்களுக்கு" அழைப்புவிடுத்து எச்சரிக்கையில், “நாம் பேரழிவுகரமான போர்களால் சூழப்பட்டுள்ளோம்,” என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி அவர் பங்கிற்கு கூறுகையில், ஐரோப்பிய நாடுகளின் "பொதுவான இறையாண்மை" அச்சுறுத்தலில் இருப்பதாக கூறியதுடன், ஒரு பொதுவான பொருளாதார மற்றும் நிதிய கொள்கையையும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை மீது கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கையாளும் வகையில், வரவிருக்கும் ஜூனில் பிராங்கோ-ஜேர்மன் அமைச்சர்கள் மட்டத்திலான உச்சிமாநாட்டுக்கு அழைப்புவிடுத்தார்.

சிரியா, ஈரான் மற்றும் உலக வர்த்தகம் தொடர்பாக டொனால்ட் ட்ரம்புக்கு அவர்கள் என்ன சேதிகளைக் கொண்டு செல்வார்களென வினவிய போது, மேர்க்கெல் பதிலளித்தார்: “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விவாதிப்பது முக்கியமானது என்பதை நான் அமெரிக்காவுக்கு எடுத்துக்காட்ட விரும்புவேன்.” மக்ரோன் அவர் பங்கிற்கு, 2015 அணுசக்தி உடன்படிக்கையை மதிக்க வேண்டியதன் அவசியம், சிரியா மீதான ஏப்ரல் 14 தாக்குதலின் "சட்டபூர்வத்தன்மை", உருக்கு மற்றும் அலுமினியம் மீதான சீன ஏற்றுமதிகளுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ட்ரம்ப் வர்த்தக வரி அச்சுறுத்தல்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவை ஆகியவற்றை மேற்கோளிட்டு, அவரும் மேர்க்கெலும் ட்ரம்புக்கு "ஒரு பொதுவான சேதியைக்" கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

சிரிய தாக்குதல் குறித்து மக்ரோன் வாதிடுகையில், ஜேர்மனி அந்நடவடிக்கையில் சேரவில்லை ஏனென்றால் ஜேர்மன் அரசியலமைப்பு ஒரு நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் ஒரு தாக்குதலை அனுமதிக்காது என்றார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் அத்தாக்குதல் மீது, மக்களிடையே நிலவும் எதிர்ப்பை அலட்சியப்படுத்தும் ஓர் அப்பட்டமான ஜனநாயக-விரோத அறிக்கையில், அவர் கூறுகையில், விரைவாகவும் திடீரென்றும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததால், அத்தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்தாலோசிக்க முடியாமல் போய்விட்டது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ மண்டலத்தின் நிதியியல் கட்டமைப்பு மீதான சீர்திருத்தங்கள் குறித்து வினவிய போது, மேர்க்கெலும் மக்ரோனும் யூரோ மண்டல பிணையெடுப்புகள் மற்றும் முதலீட்டு கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்தை ஏற்பதற்கு, மக்ரோன் கடந்த இலையுதிர் காலத்தில், சோர்போன் பல்கலைக்கழகத்தில் இருந்து பேர்லினுக்கு அழைப்பு விடுத்ததைக் குறித்து எதையுமே வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் அவர்களின் கருத்துக்கள், மக்ரோனின் முன்மொழிவுகள் மீது அதிகரித்து வரும் பகிரங்கமான கருத்து வேறுபாடுகளைக் கடந்து செல்ல முடியவில்லை.

அந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) செயலாளர், யூரோ மண்டல பொருளாதாரங்களில் பாரியளவிலான பொது முதலீடுகள் செய்வதற்கு மக்ரோன் விடுத்த அழைப்புகள் மீது பரவலாக கவனிக்கப்பட்ட ஒரு தாக்கலைத் தொடுத்தார். “இதுவொரு நல்ல யோசனையாக நான் கருதவில்லை,” என்று அன்னகிரே கிராம்ப் காரன்பவர் தெரிவித்தார், இதை மக்ரோனின் முன்மொழிவுகள் வருவதற்கு முன்னரே மரணித்து விட்டதற்கான ஓர் அறிகுறியாக பிரெஞ்சு ஊடகங்களில் பரவலாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், மேர்க்கெலின் நேற்றைய கருத்துக்கள் ஏதோவிதத்தில் கிராம்ப் காரன்பவர் கண்ணோட்டத்தின் மென்மையான பதிப்பாக மட்டுமே இருந்தன.

யூரோ மண்டல வங்கி பிணையெடுப்புகளை மேற்பார்வை செய்ய, சர்வதேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பதிப்பைக் கட்டமைப்பதற்கான மக்ரோனின் அழைப்பை வெளிப்படையாகவே குறிவைத்து, மேர்க்கெல் அறிவித்தார், “எங்களால் IMF ஐ பெரிதும் சார்ந்திருக்க முடியாது. ஆனால் IMF க்கு எதிராகவும் செயல்பட முடியாது,” என்றார். “ஒரு நெருக்கடியைத் தாங்குவதற்கு” யூரோ மண்டலம் “போதுமானளவுக்கு உறுதியாக இல்லை” என்று எச்சரித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஸ்பெயின், கிரீஸ் மற்றும் அயர்லாந்துக்கு கட்டளையிடப்பட்ட சிக்கன பொதிகளை நடைமுறைப்படுத்துவதில் "பொறுப்பாக" இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். “சின்னஞ்சிறிய கருத்துக் கூட நிஜமான பிரச்சினைகளை உருவாக்கி விடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“ஒருவர் முன்மொழிந்த நடவடிக்கை மீது கருத்துரைக்காமல் இருப்பதும், ஆனால் ஒரே இலக்குகளை நாம் கொண்டிருக்கிறோமா என்பதை ஆராய்வதும் மிகவும் முக்கியம்,” என்று மக்ரோன் பதிலுரைத்தார். பலமான ஜேர்மன் பொருளாதாரத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய பொருளாதார நிலைமைகளுக்கும் மற்றும் ஓர் ஐரோப்பிய வங்கியியல் ஒன்றியத்திற்கும் அழைப்பு விடுத்த மக்ரோன், “ஒருமித்த அம்சங்கள் இல்லாமல் எந்தவொரு நிதிய ஒன்றியமும் உயிர்பிழைக்காது. நாம் மற்ற அங்கத்துவ நாடுகளுடன் ஒருமித்து செயலாற்ற வேண்டும்,” என்றார்.

மேர்க்கெல் மற்றும் மக்ரோன் இருவரது ஆக்ரோஷமான கருத்துக்களும் ரைன் ஆற்றின் இருதரப்பிலும் உள்ள ஆட்சிகளது பிற்போக்குத்தனமான குணாம்சத்தைப் பிரதிபலிக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்கு பின்னர் இருந்தும் மற்றும் 1945 இல் பாசிச ஆட்சி தோல்வியடைந்ததற்கு பின்னர் இருந்தும் தத்தமது நாடுகளில் மிகவும் வலதுசாரி ஆட்சிகளுக்கு இவ்விரு அரசியல்வாதிகளும் தலைமை தாங்கி வருகின்றனர், மேர்க்கெல், ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை மீளஇராணுவமயப்படுத்த அழுத்தமளித்து வருகின்ற நிலையில், மக்ரோன் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை அடைந்ததும் பிரான்சில் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளைத் திரும்பப் பெற நகர்ந்து வருகின்றார்.

பத்திரிகையாளர் கூட்டத்தில் மேர்க்கெல் மற்றும் மக்ரோன் இருவரது கருத்துக்களும் ஓர் எச்சரிக்கையை உள்ளடக்கி உள்ளன, அதாவது ஐரோப்பிய ஒன்றியம் இம்மியளவுக்கு கூட பொதுமக்களால் வெறுக்கப்பட்ட இராணுவவாதம் மற்றும் சமூக செலவின வெட்டு கொள்கைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவை மத்திய கிழக்கில் பல பத்தாண்டு காலப் போர் முனைவில் அதன் இராணுவத்தைத் தீவிரமாக ஈடுபடுத்த முழுமையாக பொறுப்பேற்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான 2016 வாக்கெடுப்புடன் மற்றும் இத்தாலியின் சமீபத்திய தேர்தலில் வலதுசாரி, ஐரோப்பிய ஒன்றிய விரோத கட்சிகள் முன்னணி பதவிகளை வென்றுள்ள நிலையில், அதிகரித்து வரும் சமூக அதிருப்திக்கு இடையே, ஐரோப்பிய ஒன்றியம் நிலைகுலைந்து வருகின்ற போதும் கூட, பேர்லின் மற்றும் பாரீசிடம் புதிதாக முன்மொழிவதற்கு ஒன்றுமில்லை.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே கூட மோதல்கள் அதிகரித்து வருகின்றன, ஐரோப்பிய பண்டங்கள் மீது வர்த்தக தடை விதிப்பதற்கும் மற்றும் ஈரான் உடனான அணுசக்தி உடன்படிக்கையை இரத்து செய்து அந்நாட்டுடன் போருக்கு தயாரிப்பு செய்வதற்குமான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பேர்லினும் பாரீசும் காட்டும் எதிர்ப்பில் அது மிகவும் வெளிப்படையாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக, இந்த மோதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் என்ன எஞ்சியுள்ளதோ அவற்றை வழிநடத்தவதாக கூறப்படும் ஜேர்மன்-பிரெஞ்சு கூட்டணியை வேகமாக பலவீனப்படுத்தி வருகின்றன. திரைக்குப் பின்னால், பதட்டங்கள் அதிகரித்தளவில் கடுமையாக உள்ளன.

சிரிய தாக்குதலில் பங்கெடுப்பதில்லை என்று ஜேர்மனி முடிவெடுத்ததற்குப் பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களை Huffington Post இன் பிரெஞ்சு பதிப்பில் வெளியான ஒரு கட்டுரை உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகளை மேற்கோளிட்டு சுட்டிக்காட்டியது. “செப்டம்பரில் அவரது சோர்போன் உரையின் போது இமானுவல் மக்ரோன் நெறிப்படுத்திய நம்பிக்கைகள் படுமோசமாக நீர்த்து போயிருப்பதாக தெரிகிறது,” என்று குறிப்பிட்ட அது, “சிரியாவில் பிரெஞ்சு தாக்குதல்களின் எதிர்மறை விளைவுகளைச்" சுட்டிக்காட்டியது.

“சிரிய மோதலில், மக்ரோன் மேர்க்கெலை நோக்கி அல்ல, ட்ரம்பை நோக்கி திரும்புகிறார்" என்று ஜேர்மன் பத்திரிகை Die Welt இன் குறைகூறல்களை அது மேற்கோளிட்டதுடன், சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு பயிலகம் (IFRI) என்ற பிரபல சிந்தனை குழாமின் ஓர் அதிகாரி பார்பரா குன்ஸ் இன் கருத்துக்களையும் மேற்கோளிட்டது.

அப்பெண்மணி, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஏனைய பாரசீக ஷேக் ஆட்சிகளின் செல்வாக்கான வாடிக்கையாளர்களுக்கு கூட்டாக அபிவிருத்தி செய்த பிராங்கோ-ஜேர்மன் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜேர்மன் சட்டம் பிரான்சை தடுக்கின்ற நிலைமைகளின் கீழ், பிராங்கோ-ஜேர்மன் இராணுவ கூட்டுறவில் அதிகரித்து வரும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி இருந்தார். “நாம் கூட்டாக இணைந்து ஒரு போர் டாங்கியை உற்பத்தி செய்து, ஆனால் அதை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனால், அதுவொரு பிரச்சினை தான்,” என்று குன்ஸ் குறிப்பிட்டார்.

அனைத்திற்கும் மேலாக தொடர்ச்சியான நிதியியல் நெருக்கடிகளுக்கும் ஐரோப்பாவில் யூரோ பிணையெடுப்புகளுக்கும் இட்டுச் சென்ற 2008 பொறிவுக்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச பதட்டங்களில் எதுவுமே ஐரோப்பாவுக்குள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. இன்னும் அதிகளவில் பொது முதலீட்டுக்கான மக்ரோனின் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய கன்னைகளிடம் இருந்தும் மற்றும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியிடமிருந்தும் மேர்க்கெல் அதிகரித்த அழுத்தத்தின் கீழ் உள்ள நிலையில், பிரதான யூரோ நாடுகளோ இப்போது பரந்த வெவ்வேறு பொருளாதார மற்றும் நாணய கொள்கைகளை ஆலோசித்து வருகின்றன.

Deutschlandfunk பத்திரிகைக்கு கிறிஸ்துவ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றவாதி எஹ்கார்ட் றேபேர்க் கூறுகையில், “அவரின் முன்மொழிவுகள் மீதும் மற்றும் ஐரோப்பிய நாணய நிதியத்தை அபிவிருத்தி செய்வதற்காக கடந்த டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் … முன்மொழிவுகள் மீதும் நாங்கள் ஐயுறவுடன் உள்ளோம்,” என்றார். “விதிமுறைகள் இல்லாமல், நிபந்தனைகள் இல்லாமல், CDU கன்னையை பொறுத்தமட்டில் ஜேர்மன் வரி செலுத்துவோரின் பணத்தை வெளியில் பாய்ச்சுவது சாத்தியமே இல்லை,” என்றார்.

“மக்ரோன் மேர்க்கெலுக்கு அழுத்தமளித்து வருகிறார் என்பது, மேர்க்கெல் எந்த விதத்தில் நகர வேண்டுமென அவர் நினைக்கிறாரோ அவ்வழியில் மேர்க்கெல் நகரவில்லை என்பதும் எனக்கு தெரியும்,” என்று அநாமதேய உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் க்கு தெரிவித்தார், மக்ரோன் "ஜேர்மனியுடன் இன்னும் அதிக மோதல் தொனியை ஏற்க" வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.