ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

North Korean leader holds unannounced talks in China

வட கொரிய தலைவர் சீனாவில் அறிவிக்கப்படாத பேச்சுவார்த்தையை நடத்துகிறார்

By Peter Symonds
28 March 2018

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் பெய்ஜிங்கிற்கு இரண்டு நாள் விஜயம் செய்து முடித்துள்ளார். இவ்விஜயத்தின்போது அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார். 2011 இல் தலைவரான பின்னர் கிம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணமாக இது இருந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பெருமளவிலான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கையில், இரு அரசாங்கங்களுமே அவற்றிடையே அதிகரித்தளவில் உறைந்துபோயுள்ள உறவை சீர்செய்யும் அழுத்தத்திற்கு உள்ளாயின.

வட கொரியாவில் இருந்து ஒரு கவசமிடப்பட்ட ரயிலில் பயணித்து பெய்ஜிங்கிற்கு அவர் மேற்கொண்ட வருகையைச் சுற்றியுள்ள இரகசியம், வட கொரிய தலைவரின் விஜயம் என்பது எவ்வளவு கூருணர்திறன்மிக்கது என்பதற்கு ஆதாரமாக இருந்தது. முன்னாள் தலைவரும் கிம் இன் தந்தையுமான கிம் ஜோங்-இல் பயன்படுத்திய அதே அடையாளங்களைக் கொண்ட அந்த இரயில், வட கொரியாவில் இருந்து சீனாவிற்குள் நுழையும் எல்லையில் வெளிப்படையாக உள்ளூர்மக்களால் அதனைக் காணமுடிந்தது.

Australian பத்திரிகை பின்வருமாறு தெரிவித்தது: “சீனாவின் எல்லை நகரமான டான்டோங்கின் மையத்தில், இரு நாடுகளை பிரிக்கும் யாலு நதியில் அமைந்துள்ள Friendship Bridge ஐ இந்த சிறப்பு இரயில் கடந்தது, இரயில் பாதைக்கு எதிரே அமைந்துள்ள பகுதியில் உள்ள விடுதிகள் விருந்தினர்கள் தங்குவதற்கு அறைகளை எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தனர் என்று தெரிவித்தன. மேலும் அந்த பாதைக்கு நெருக்கமாக பாதுகாப்பு வேலி போடப்பட்டிருந்ததுடன், அவ்வழியில் செல்வோர் அங்கு நுழைய முடியாதபடி தடுக்கும் வகையில் டான்டோங் புகையிரதநிலையம் முழுமையாக பதாகைகளால் சூழப்பட்டிருந்தது.”

இது குறித்து Financial Times பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “சீனா அதன் விருந்தினர்களுக்கு முன்கூட்டி அறிவிக்காத நிலையில், மிக முக்கிய பார்வையாளர்களுக்கு மட்டுமே பொதுவாக வழங்கப்படும் உயர்வகை மோட்டார்வாகன பவனியுடன் திரு கிம் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்தமையால், அங்கு ஒரு முக்கிய பிரமுகர் விஜயம் செய்திருக்கும் உண்மையை அதனால் மறைக்க முடியவில்லை.” இதற்கு முன்பு வட கொரிய தலைவர்கள் வழமையாக தங்கிச் சென்றுள்ள அரசு விருந்தினர் விடுதியான Diaoyutai இல் தான், நேற்று இரயில் மூலம் திரும்பிய சிறப்பு விருந்தினரும் தங்கவைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

கிம் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்ததையும், அவர் ஜி ஐ சந்தித்ததையும் சீன அதிகாரிகள் இன்றுதான் உறுதி செய்தனர். Xinhua செய்தி ஊடகத்தின்படி, வட கொரிய தலைமை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை ஸ்தாபிப்பதில் “முழுமையாக பெரும் முக்கியத்துவத்தை உள்ளடக்கியுள்ள” நிலையில், இந்த விஜயம் “ஒரு சிறப்பான நேரத்திற்குரியதாகவும் மற்றும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாகவும் இருந்தது” என்று ஜி குறிப்பிட்டார்.

அமெரிக்க தலைமையிலான இராணுவ தலையீட்டை எதிர்த்து இரு நாடுகளும் ஒன்றுகூடி போராடியதான 1950-53 கொரியப் போரின் எழுச்சிக்குப் பின்னர், 1961 முதல் வட கொரியாவும் சீனாவும் முறையான கூட்டணி நாடுகளாக இருந்து வந்துள்ளன.

அணுவாயுத ஏவுகணைகளை கட்டமைக்கும் வட கொரிய ஆட்சியின் உறுதிப்பாட்டினால் சீனா ஒரு கட்டுக்குள் சிக்குண்டுள்ளது. ஒரு புறம், சீனாவுடனான போருக்கான தயாரிப்பில், வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்கா அதன் இராணுவ படைகளை பராமரிப்பதற்கும் விஸ்தரிப்பதற்கும் ஒரு சாக்குப்போக்கை வழங்கும் பியோங்யாங்கின் அணுவாயுத திட்டத்தை பெய்ஜிங் எதிர்த்துள்ளது. மேலும் ஜப்பானும் தென் கொரியாவும், அவர்களது சொந்த அணுசக்தி ஆயுதங்களை கட்டமைப்பதை முன்னிட்டு, வட கொரியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தி ஆயுதங்களை தங்களுக்கு சாதகமாக பாவிக்கக்கூடும் என்ற அச்சமும் அதற்கு உள்ளது.

மறுபுறம், உலகிலேயே பொருளாதார ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வட கொரியா மீது அதிகரித்தளவிலான மிருகத்தனமான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளையும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டுள்ளது. இச்சூழ்நிலையில், சீனாவிற்கு விரோதமாகவோ, அல்லது சீனாவின் நுழைவாயிலில் ஒரு ஆக்கிரோஷமான போருக்கு வித்திடும் வகையிலோ, பியோங்யாங்கில் ஒரு தலையாட்டி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் உந்துதலில், அங்கு நிலவும் ஒரு அரசியல் உள்வெடிப்பை வாஷிங்டன் சுரண்டக்கூடும் என்பதுதான் பெய்ஜிங்கின் ஆழ்ந்த கவலையாக உள்ளது.

வட கொரிய ஆட்சி அதன் பங்கிற்கு, அமெரிக்க இராணுவ தாக்குதல்களை முறியடிக்க முனைந்து வருகின்றது, அதேவேளையில், கொரியப் போரைத் தொடர்ந்து அமெரிக்காவால் அதன் மீது திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர பேரம் பேசுவதற்கான மையமாக அதன் அணுவாயுத படைக்கலத்தை பயன்படுத்தவும் முனைகிறது. வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர 1994 மற்றும் 2007 இல் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை உண்மையில் முறித்தது பியோங்யாங் அல்ல, வாஷிங்டன் தான் என்பதை வைத்து, அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகள் குறித்து இது குறிப்பாக சந்தேகிக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம், பியோங்யாங்கிற்கு எதிராக போர்வெறிமிக்க இராணுவ அச்சுறுத்தல்களை விடுத்துள்ள நிலையிலும், மற்றும் வட கொரியா மீதான ஒரு பொருளாதார முற்றுகையை பெருமளவு அதிகரிக்க செய்வதற்கு சீனாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையிலும், கடந்த வருடம் முழுவதும் சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான பதட்டங்கள் மட்டும் தான் தீவிரமடைந்துள்ளன.

ஐ.நா. பொருளாதாரத் தடைகளை நெருக்குவதற்கு அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்திற்கு கடந்த வருடம் பல சந்தர்ப்பங்களில் தலைவணங்க செய்த அதன் கூட்டணி நாடுகளை வட கொரிய ஆட்சி கடுமையாக விமர்சித்தது. நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி ஊடகத்தில் மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு விவரணம், பெய்ஜிங் இன் “நேர்மையற்ற தன்மையையும் காட்டிக்கொடுப்பையும்” குற்றம்சாட்டி, வட கொரிய (DPRK) சீன உறவுகளின் தூணை அதன் பொறுப்பற்ற நடவடிக்கையால் வெட்டிவீழ்த்தியதால் ஏற்பட்ட கடுமையான விளைவுகள்” குறித்து எச்சரிக்கவும் செய்தது.

வட கொரிய தலைவரை சந்திக்க விருப்பம் கொண்டிருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்தே சீனாவுக்கு கிம் ஜோங்-உன் விஜயம் செய்துள்ளார். அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதிப்பை நிறுத்திவிடப் போவதாகவும், மற்றும் கொரிய தீபகற்பத்தின் அணுவாயுத ஒழிப்பு குறித்து விவாதிக்க விருப்பம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுக்காட்டிய கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூத்த தென் கொரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பயணத்திற்குப் பின்னரே இந்த வாய்ப்பு உருவானது.

மே மாதத்தில் நடைபெறவுள்ள ட்ரம்ப்-கிம் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்வதைத் தொடங்க, பியோங்யாங் உடனான அமெரிக்க இராஜதந்திர விடயங்களை கையாளும் ஸ்வீடனுக்கு வட கொரிய அதிகாரிகள் பயணித்துள்ளனர். வட கொரிய, தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் பின்லாந்தில் அணுவாயுத ஒழிப்பு தொடர்பான “இரண்டாம் கட்ட” பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றது. கிம் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையே ஏப்ரலில் ஒரு உச்சிமாநாட்டை நடத்துவதை முன்னிட்டு அதற்கான திட்டங்களுடன் தென் கொரியாவும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், தற்போதைய அபாயகரமான மோதல் நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான ஒரு பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் சாத்தியமில்லை. மேலும், அமெரிக்க வெளியுறவு செயலராக மைக் போம்பேயோவையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜோன் போல்டனையும் நியமிக்கும் ட்ரம்பின் சமீபத்திய பரிந்துரைகள், வாஷிங்டன் போருக்கு தயார் செய்து வருகிறதேயன்றி, சமாதானத்திற்காக அல்ல என்று பியோங்யாங்கும் பெய்ஜிங்கும் முடிவுக்கு வருவதற்கு மட்டுமே இட்டுச்செல்லும்.

போல்டன் மற்றும் போம்பேயோ இருவருமே வட கொரியாவை நோக்கிய அவர்களது போர்வெறிமிக்க, இராணுவவாத நிலைப்பாட்டை நன்கறிவர், அத்துடன் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட 2015 அணுவாயுத உடன்படிக்கைக்கு எதிரான அவர்களது விரோத போக்கையும் அறிவர். இறுதியாக ட்ரம்ப் மே இல் கிம் ஐ சந்திப்பாரானால், அச்சந்திப்பு, வட கொரியா அதன் அணு ஆயுத படைக்கலங்களை இல்லாதொழிப்பதற்கு ஒரு இறுதிக்கெடு விதிப்பதாகவே இருக்கும், மேலும் அதற்கு ஏதேனும் தயக்கமோ, அல்லது மறுப்போ வட கொரியா காட்டுமானால் அதை இராணுவ ரீதியாக தாக்குவதற்கான சாக்குப்போக்காகவும் அச்சந்தர்ப்பம் சுரண்டப்படும்.

ஆகவே, வட கொரியாவும் சீனாவும் அவர்களது அழுத்தம் நிறைந்த உறவை சீர்செய்ய விரும்புவார்கள் என்பது தான் மிகுந்த ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. வட கொரியா மீது பகுதியளவிலான கூடுதல் பொருளாதாரத் தடைகளை திணிக்க சீன தலைமைத்துவம் ஒப்புக்கொண்டது, ஏனென்றால் பெய்ஜிங் அவ்வாறு செய்யும்பட்சத்தில் தான், வர்த்தகத்தின் மீதான சலுகைகளை வழங்க அவர் தயாராக இருப்பார் என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பியோங்யாங் மீதான முடக்கும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் தனது வாக்குறுதியை மீறுவதையும், குறிப்பாக சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதையும் பெய்ஜிங் இப்போது கண்டுகொண்டது.

அமெரிக்க தலைமையிலான போர் குறித்த உடனடி அச்சுறுத்தலுக்கு வட கொரிய ஆட்சி முகம்கொடுக்கிறது. போம்பேயோ, சிஐஏ தலைவராக இருந்தபோது ஜனவரியில் பேசுகையில், அமெரிக்க கண்டத்தை சென்று தாக்கும் திறன்வாய்ந்த அணுவாயுதம் தாங்கிய ஏவுகணையை வட கொரியா உருவாக்குவதற்கு வெறும் “ஒருசில மாதங்களே” உள்ளன என்று அறிவித்தார். இந்த ஆதாரமற்ற கூற்றின் மீது ஆயுத வல்லுனர்கள் வலுவாக கேள்வி எழுப்பியுள்ள போதும், ட்ரம்ப், சிவப்புக் கோடு ஒன்றை வகுத்து, வட கொரியா அதைத் தாண்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ளார்.