ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Democratic Party and the confirmation of Mike Pompeo

ஜனநாயகக் கட்சியும், மைக் பொம்பியோவின் பதவி உறுதிப்படுத்தப்படுதலும்

Patrick Martin
27 April 2018

முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும் சிஐஏ இயக்குனருமான மைக் பொம்பியோ வியாழக்கிழமை மதியம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக உறுதிப்படுத்தப்பட்டார். இராணுவ பீரங்கிப்படையின் முன்னாள் தளபதியும், சித்திரவதை மற்றும் எல்லையில்லா உள்நாட்டு உளவுபார்ப்புக்கு ஓர் ஆதரவாளருமான அவர், ட்ரம்ப் மந்திரிசபையின் இந்த உயர்மட்ட பதவியை, அத்துடன் ஜனாதிபதிக்கு கீழே பதவி படிநிலைகளில் நான்காவதாக உள்ள ஒரு பதவியை இப்போது வகிக்க உள்ளார்.

றெக்ஸ் ரில்லர்சனின் இடத்தில் வெளியுறவுத்துறை தலைவராக பொம்பியோவை நியமித்திருப்பது, ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டரை பிரதியீடு செய்து முன்னாள் புஷ் நிர்வாக அதிகாரியும் ஈராக் போர் சூழ்ச்சியாளருமான ஜோன் போல்டனை ஜனாதிபதி ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்ததைப் பின்தொடர்கிறது. பொம்பியோவும் சரி போல்டனும் சரி இருவருமே ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு எதிரான போருக்கு அழைப்புவிடுத்துள்ளனர். அவர்கள் இப்போதிருக்கும் வெளியுறவுக் கொள்கை குழுவை விட இன்னும் அதிக பொறுப்பற்ற புதிய ஒன்றை உருவாக்குகின்றனர். அவர்களின் நியமனம் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலுக்கும் வேகப்படுத்தப்பட்டுள்ள முனைவை சமிக்ஞை செய்கிறது.

ஏகாதிபத்திய போர்வெறிக்கும் அமெரிக்காவுக்குள் அரசியல் ஒடுக்குமுறைக்கும் இடையிலான தொடர்புக்கு பொம்பியோ உருவடிவானவர். நீரில் மூழ்கடிக்கும் சித்திரவதை மற்றும் புஷ் நிர்வாகத்தின் சிஐஏ சித்திரவதை திட்டத்தை அவர் பாதுகாத்துள்ளார். அவர் கடந்த ஆண்டின் ஓர் உரையில், விக்கிலீக்ஸை "அரசு-சாரா எதிர்விரோத உளவுத்துறை சேவை" என்று குறிப்பிட்டார். இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டனை வழக்கில் இழுத்து தண்டிக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்ததுடன், தேசிய கண்காணிப்பு முகமையின் (NSA) மக்கள் மீதான சட்டவிரோத உளவுவேலை திட்டத்தை விரிவாக்குவதற்கும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

பொம்பியோ உச்ச நீதிமன்றத்தின் அதிதீவிர வலது நீதிபதி சாமுவேல் அலிடோவினால் உடனடியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அந்த புதிய வெளியுறவுத்துறை செயலர் இரவோடு இரவாக புரூசெல்ஸ் செல்ல விமானம் ஏறியதோடு, அங்கே அவர் நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமெரிக்க அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்வார். இந்த ஒன்றுகூடல் முன்னாள் பிரிட்டிஷ் இரட்டை உளவாளி, சேர்ஜி ஸ்கிரிபால் க்கு நஞ்சூட்டப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் மீது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும், இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஏவுகணை தாக்குதல்களின் இலக்கில் வைக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு ரஷ்யாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கும்.

ரஷ்யா மற்றும் சிரியா இரண்டு நாடுகளும் எதிர்வரவிருக்கும் மோதல்களின் வரிசையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பொம்பியோ ஒரு மத்திய பாத்திரம் வகிப்பார்:

மே 12 அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் அதிகாரபூர்வமாக ஈரான் உடனான அணுசக்தி உடன்படிக்கையை மறுத்தளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது, இது குற்றங்கூறவியலாத அளவுக்கு அந்த உடன்படிக்கையை மதிந்து வந்த ஈரானுடனும் மற்றும் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஏனைய ஐந்து நாடுகளுடனும் ஒரு மோதல் போக்கில் அமெரிக்காவைக் கொண்டு வரும்.

மே 14 இல், இப்போது பொம்பியோ தலைமை கொடுக்கும் வெளியுறவுத்துறை டெல் அவிவ் இல் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை அதிகாரபூர்வமாக ஜெருசலேமுக்கு மாற்றும். இது கிழக்கு ஜெருசலேமை தனது வரலாற்று தலைநகராக கருதும் மேற்கு கரை மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே தூண்டிவிடப்படும் ஓர் ஆத்திரமூட்டலாகும்.

மே 20 இல், வெனிசூலா அதன் ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறது. இப்போது பதவியிலிருக்கும் நிக்கோலா மாதுரோவின் வெற்றி எதிர்நோக்கப்படும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அத்தேர்தலை மோசடியென்று அறிவித்து அவரை கண்டிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது, இது பொருளாதார தடையாணைகளுக்கோ அல்லது அந்நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளரான அமெரிக்காவால் வெனிசூலாவின் எண்ணெய் ஏற்றுமதிகள் புறக்கணிக்கப்படுவதற்கோ கூட களம் அமைக்கக்கூடும்.

மே இறுதியில் அல்லது ஜூன் ஆரம்பத்தில், ட்ரம்ப் வட கொரியா தலைவர் கிம் ஜொங்-யுன்னைச் சந்திக்க உள்ளார், இது இம்மாத தொடக்கத்தில் பியொங்யாங்கிற்கான பொம்பியோவின் இரகசிய விஜயத்தால் தயாரிப்பு செய்யப்பட்டது. அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டால், அல்லது முன்செல்ல இயலாதவாறு முறிந்து போனால், அமெரிக்க அரசு வட கொரிய ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனை தளங்களுக்கு எதிராக ஓர் இராணுவ தாக்குதல்களுக்கான அதன் திட்டத்தையோ அல்லது ஒட்டுமொத்தமாக அந்த ஆட்சிக்கு எதிரான ஒரு தாக்குதலையோ தீவிரப்படுத்தும்.

ஆறு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு பெற்றிருந்த வேட்பாளர் தேர்வு தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை ஆகியோருடன் சேர்ந்து, பொம்பியோவின் நியமனத்தை செனட் சபை 57 க்கு 42 என்ற வாக்குகளுடன் ஒப்புதல் அளித்தது. ஆனால் ஜனநாயகக் கட்சியினர் வகிக்கும் பாத்திரம் இந்த எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதை விட பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கிய தருணங்களில் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு இல்லாமல், பொம்பியோவின் பதவியை உறுதிப்படுத்தென்பது தீவிர கேள்விக்கு உள்ளாகி இருந்தது.

ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு எதிரான அவரது முந்தைய போர்நாடும் முன்நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்ட ஒரு "மிதவாதியாக" தோரணை ஏற்று, ஏப்ரல் 12 இல் அவர் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான செனட் சபை குழுவுக்கு முன் தோன்றியதும், அவர் வேட்புமனு தோற்கடிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக செனட் வாக்கு எண்ணிக்கைகள் காட்டின.

குடியரசுக் கட்சியினர் 51 க்கு 49 என்று சிறிய வித்தியாசத்தில் மட்டுமே இருக்கின்ற நிலையில், செனட்டர் ஜோன் மெக்கெயின் மூளை புற்றுநோயால் கலந்து முடியாது என்கின்ற நிலையில், பொம்பியோ சித்திரவதையைப் பாதுகாப்பவர் என்பது நன்கறியப்பட்டது என்பதால் தாம் அந்த சிஐஏ இயக்குனரை எதிர்க்கக்கூடும் என்று கென்டக்கியின் சுதந்திரவாதி ராண்ட் போல் பொம்பியோவுக்கு எதிரான சமநிலையைச் சரிக்க அச்சுறுத்தினார். பொம்பியோவை எதிர்ப்பதில் 49 ஜனநாயகக் கட்சியினருடன் போல் இணைந்தால், அவர் நியமனம் 50 க்கு 49 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்று போயிருக்கும்.

இந்த முக்கிய கட்டத்தில், வெள்ளியன்று, ஏப்ரல் 20 இல், வடக்கு டகொடாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஹெய்டி ஹெய்ட்காம்ப் அறிவிக்கையில் அவர் வெளியுறவுத்துறை செயலராக பொம்பியோவின் நியமனத்தை ஆதரிப்பதாக அறிவித்தார், அவ்விதத்தில் அவரது பதவியை உறுதிப்படுத்தப்படுவதற்கு தேவையான 50 வாக்குகளுக்கு உத்தரவாதமளித்தார். திங்களன்று, ஏப்ரல் 23 இல், இன்னும் இரண்டு வலதுசாரி ஜனநாயகக் கட்சியினரான, இன்டியானாவின் ஜோ டொன்னெல்லி மற்றும் மேற்கு வேர்ஜினியாவின் ஜோ மன்சின் ஆகியோரும் அதையே பின்தொடர்ந்தனர்.

நியமனம் உறுதியானதும், ராண்ட் போல் அவரது அடையாள எதிர்ப்பைக் கைவிட்டு, அவரும் பதவியை உறுதிப்படுத்துவற்கான ஆதரவு வாக்களிக்க இருப்பதாக அறிவித்தார். உண்மையில் பொம்பியோ அவருக்கு முன்பிருந்த ரில்லர்சனை விட சற்று அதிக பெரும்பான்மையில் தான் வென்றார், ரில்லர்சன் 56 க்கு 43 என்ற விகிதத்தில் பதவியில் உறுதிப்படுத்தப்பட்டார்.

செனட் சபை சிறுபான்மை தலைவர் சார்லெஸ் ஸ்கூமெரும் செனட் வெளியுறவுத்துறை குழுவின் இரண்டாம் நிலை ஜனநாயக கட்சியாளருமான பென் கார்டினும் பொம்பியோவுக்கு பகிரங்கமான எதிர்ப்பை காட்டி, பதவியில் அவர் உறுதிப்படுத்தப்படுவதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இது ஓர் எரிச்சலூட்டும் அரசியல் நாடகமாக இருந்தது. ஸ்கூமெரும் கார்டினும் உண்மையில் பொம்பியோவின் மிகவும் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகள் சிலவற்றுடன், ஈரான் அணுசக்தி உடன்படிக்கையைக் கிழித்தெறிவது போன்றவற்றுடன், உடன்படுகின்றனர்.

மிக அடிப்படையாக, ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தின் இராணுவவாத வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர், ஆனால் ரஷ்யா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை நோக்கி போதுமானளவுக்கு போர்வெறியோடு இல்லை என்பது போன்றவற்றைக் கொண்டு அதை வலதிலிருந்து மட்டுமே விமர்சிக்கின்றனர். இது தான், சிறப்பு வழக்கறிஞர் ரோபர் மியுல்லெரால் நடத்தப்பட்டு வரும், 2016 தேர்தல்களில் ரஷ்யா தலையிட்டது என்ற பொய் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு ஜனநாயகக் கட்சி ஆதரவளிப்பதற்கான உந்துசக்தியாக உள்ளது.

தனிப்பட்டரீதியில் ஜனநாயகக் கட்சியினர், ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையில் ஓர் இழிவார்ந்த "போர்வெறியராக" விளங்கும் பொம்பியோவின் நியமனத்தை வரவேற்றனர். இது, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஜனநாயகக் கட்சி பிரிவினது பிரதான குரல்களில் ஒன்றும், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு எதிராக ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்கு முன்னிலை வகித்ததுமான வாஷிங்டன் போஸ்டால் ஏப்ரல் 12 தலையங்கத்தில் உச்சரிக்கப்பட்டது.

“மைக் பொம்பியோவின் பதவியை உறுதிப்படுத்துங்கள்" என்று தலைப்பிட்ட போஸ்டின் அந்த தலையங்கம் குறிப்பிடுகையில், அந்த வேட்பாளர் "ரஷ்யாவை நோக்கி கடுமையாக இருந்தார், அதனுடனான மோதல்கள் 'ரஷ்யாவின் மோசமான நடவடிக்கை' ஆல் ஏற்பட்டது என்று கூறியிருந்தார் … விளாடிமீர் புட்டின் ஆட்சிக்கு எதிரான தடையாணைகள் போதுமானதாக இல்லை என்பதை ஒப்புக் கொண்ட திரு. பொம்பியோ, 'முன்னேற்பாடுகளை …மீட்டமைக்கவும்" உறுதியளித்தார்,” என்றது குறிப்பிட்டது.

அதனுடன் சேர்ந்து போஸ்ட் ஆசிரியர் குழு உறுப்பினர் ஜோஸ் ரோஜின் எழுதிய கருத்துரை, வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை குழுவுக்கு பொம்பியோ அளித்த அறிக்கையை புகழ்ந்துரைத்துடன், அதில் அவர் அறிவிக்கையில், “ஜனாதிபதி ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம், மிகச் சரியாகவே, ரஷ்யாவை நம் நாட்டிற்கான ஓர் ஆபத்தாக அடையாளம் கண்டுள்ளது என்பதை இந்த நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன,” என்றார்.

அக்குழுவுக்காக தயாரிப்பு செய்யப்பட்டிருந்த பொம்பியோவின் கருத்துக்களில், சிரியாவை நோக்கி அமெரிக்கா அதிக பொறுப்பேற்க வேண்டுமென கூறியிருந்ததை ரோஜின் சுட்டிக்காட்டினார். “சிரியாவின் தோல்வியடைந்த அரசு, மனித உரிமைகளுக்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரப்பாட்டிற்கும் அதிகரித்த ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது—அதற்கு அதிகரித்தளவில் ஒரு கடுமையான விடையிறுப்பு அவசியப்படுகிறது,” என்று பொம்பியோ தெரிவித்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான், சிரிய ஆட்சி மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்த போர்வெறியரை மற்றும் ஜனநாயக உரிமைகளின் எதிரியை மேலுயர்த்தியமை, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகளுமே தணிக்கைக்கும், அரசியல் அதிருப்தியை குற்றகரமாக்கவும் மற்றும் உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைப் பொறுப்பின்றி தீவிரப்படுத்தவும் பொறுப்பேற்றுள்ளதை மட்டுமே உறுதிப்படுத்துகின்றது, இது அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு புதிய உலக போர் அபாய அதிகரிப்பையும் அதனுடன் கொண்டு வருகிறது.