ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Halt the thuggery of non-academic union bureaucrats against WSWS reporters

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு எதிரான கல்விசாரா தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் குண்டர் தாக்குதலை நிறுத்து

By the Socialist Equality Party (Sri Lanka) 
4 April 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களுக்கும் எதிராக கல்விசாரா தொழிலாளர் சங்கங்களின் அதிகாரிகள் மேற்கொள்ளும் வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் கடுமையாக கண்டனம் செய்கின்றது.

கிட்டத்தட்ட 16,000 பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் பெப்ரவரி 28 அன்று காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். 20 சதவிகித ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பிற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்த பிரச்சினை சம்பந்தமாக பரந்த அளவிலான செய்திகளை வெளியிட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தி அவர்களின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை பாதுகாத்து வந்துள்ளது.

மார்ச் 27 அன்று, WSWS பத்திரிகையாளரும் மற்றும் நிழற்படவியலாளருமான ஒருவர், வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்களின் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்து சேகரிக்க சென்றபோது, அவர் அச்சுறுத்தப்பட்டு, தள்ளிவிடப்பட்டு வேலையை செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள நுகேகொடவில் ஆனந்த சமரக்கன் திறந்த வெளி அரங்கிலேயே இந்த கூட்டம் நடைபெற்றது.

WSWS நிருபர் அரங்குக்குள் நுழைந்து சில நிமிடங்களுக்குள், அவரை பல தொழிற்சங்க அதிகாரிகள் பிடித்து மேடையை நோக்கி இழுத்துச் சென்றனர். அவரைச் சுற்றி வளைத்த சுமர் 20 தொழிற்சங்க அதிகாரிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார்.

தான் WSWS நிருபர் என்றும் கூட்டத்தில் செய்தி சேகரிக்க தனக்கு உரிமை உள்ளது என்றும் வலியுறுத்திய போது, அவரை மிரட்டிய ​​மற்றொரு தொழிற்சங்க அதிகாரி, நிருபரின் கழுத்தை பிடித்து இழுத்து, அவரது புகைப்படக் கருவியை அபகரிக்க முயன்றார். மேடையில் நின்ற மற்றொரு அதிகாரத்துவவாதி அவரது கழுத்தின் மீது உதைத்தார். WSWS நிருபர் பின்னர் இரண்டு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டத்திற்கு வெளியில் தள்ளப்பட்டார்.

இந்த ஜனநாயக விரோத மற்றும் வன்முறைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரில் கே. எல். டி. ஜே. ரிச்மண்ட், சிசிரா பெரேரா மற்றும் எச்.எம். ஆர். பி. ஹேரத் ஆகியோர் அடங்குவர். கூட்டத்தில் கலந்து கொண்ட சாதாரண தொழிலாளர்கள் இந்த கோழைத்தனமான தாக்குதலை ஆதரிக்கவில்லை.

தொழிற்சங்க குண்டர்கள் இதற்கு முன்பும் WSWS செய்தியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். மார்ச் 20, கல்விசாரா தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டுக் குழுவான பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்களின் கூட்டணி (UTUJC), இலங்கை பாராளுமன்றத்தை நோக்கி ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பாராளுமன்றத்திற்கு அருகே பத்தரமுல்ல சந்தியில் பொலிஸ் வீதித் தடைகளைப் போட்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியது.

பேரணியை செய்தியாக்க சென்றிருந்த WSWS நிருபர்கள் மற்றும் துண்டுப்பிரசுரம் விநியோகித்த சோ.ச.க. உறுப்பினர்களும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் முக்கிய உறுப்பினரான எச்.எம்.ஆர்.பி. ஹேரத் தலைமையிலான தொழிற்சங்க அதிகாரிகளால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஒரு கல்விசாரா ஊழியரும் முன்னணி சோ.ச.க. உறுப்பினரான தேஹன்ந் வசந்தவிடம் இருந்து துண்டுப் பிரசுரங்களை ஹேரத் பறிமுதல் செய்தார். ஐ.வை.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிய தொழிற்சங்க அதிகாரிகள், “WSWS பொய்களை எழுதுவதாகவும் தங்களை விமர்சிப்பதாகவும்” கூறினர்.

ஹேரத்தின் ஆத்திரமூட்டலின் போது அங்கு வந்த பொலிஸார், தொழிற்சங்க அதிகாரிகளுக்கு ஆதரவளித்து, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு சோ.ச.க. உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டனர். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

WSWS "பொய்களை எழுதுகிறது" என கல்விசாரா தொழிற்சங்க அதிகாரிகளின் கூற்று அப்பட்டமான பொய்யாகும். அவர்கள் "பொய்கள்" என்று கூறுபவையே உண்மையானவை -அவை தொழிற்சங்கங்கள் ஆற்றும் போலித்தனமான பாத்திரத்தை நியாயமாக மற்றும் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் அதன் சிங்கள மொழி பக்கத்தில் வேலைநிறுத்தம் பற்றி 9 கட்டுரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இரண்டு பிரதான கட்டுரைகளும் பிற செய்திகளும் மற்றும் தமிழில் நான்கு கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் பற்றி வேறு எந்த ஊடகமும் இவ்வளவு பரவலாக செய்தி வெளியிடவில்லை.

மார்ச் 27 நுகேகொடவில் நடந்த வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டத்தில், முதலாளித்துவ ஊடங்களில் செய்திகள் வரவில்லை என்பதையிட்டு ஒரு தொழிற்சங்க பேச்சாளர் கவலை வெளியிட்ட அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஒரு கல்விசாரா ஊழியர் சங்கத்தின் யாழ்ப்பாண தலைவரான எஸ். கலாராஜ், மார்ச் 22 நடத்திய பொதுக் கூட்டத்தில் சோ.ச.க. அவர்களது போராட்டத்தை ஆதரிக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டார். மார்ச் 24 அன்று சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையானது, பல்கலைக்கழக நுழைவு வாயிலில் வேலைநிறுத்தக்காரர்கள் போராட்டம் செய்வதை தடை செய்யும் நீதிமன்ற உத்தரவு ஒன்றை, பொலிசார் யாழ்ப்பாண துணை வேந்தரின் தூண்டுதலின் பேரில் பெற்றுக் கொண்டதை கண்டனம் செய்தது.

வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை அல்லது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினரின் கோரிக்கைகளை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருவதற்கான அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முறையாக விவரித்துள்ளது. பெருகிய கடன் மற்றும் அந்நிய செலாவனி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் உழைக்கும் மக்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிராக கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைகளை தினிக்கின்றனர்.

கல்விசாரா தொழிலாளர்களும் ஏனைய தொழிலாள வர்க்க பிரிவினரும், சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகளது அரசாங்கத்திற்காக கொழும்பு நிர்வாகத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் ஊடாக மட்டுமே, தமது சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியும் என்பதை சோ.ச.க. அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த முன்னோக்கிற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் முற்றிலும் விரோதமானது. ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்க அதிகாரிகள் தொழிலாளர்களை பாதிப்பில்லாத எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு பரிதாபமான வேண்டுகோள்களை விடுக்கும் நடவடிக்கைகளுக்கு வரையறுத்துக்கொள்ள முயற்சித்து வந்தனர்.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள தேசிய தொழிலாளர் சங்கத்தின் கிளை தலைவர் கயன் பீரிஸ், மார்ச் 20 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரிவித்ததாவது: "[அரசாங்க] அதிகாரிகள் எங்களுக்கு ஒரு சதமும் கிடைக்காது என்று கூறினர். ஆனால், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஏதாவது ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்று கௌரவ அமைச்சர் கூறவேண்டிய ஒரு கட்டத்துக்கு அவரை தொழிற்சங்கத் தலைவர்களாகிய நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.”

எவ்வாறாயினும், தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக, இந்த "ஏதாவது" என்ற முழு மோசடியை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர பயன்படுத்திக்கொள்ளும். இது, அரசாங்கத்துக்கும் வணிகர்களுக்கும் ஒரு தொழிற்துறை பொலிசாக செயற்படுகின்ற தொழிற்சங்கங்கள் சம்பந்தமாக இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள அனுபவமாகும்.

WSWS வெளியிட்டுள்ள சோ.ச.க. அறிக்கைகளும் கட்டுரைகளும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக வேலைநிறுத்தம் செய்பவர்களால் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கை நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பொறுமையாக விளக்கியுள்ளன. இந்த கமிட்டிகள் கல்விசாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும், போராட்டத்தை விரிவுபடுத்தி ஏனைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடமிருந்து ஆதரவை திரட்ட வேண்டும். இது கல்விசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படை படிப்பினைகளில் ஒன்றாகும்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தமானது இலங்கையில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் கல்வித் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் வளர்ந்து வரும் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும்.

WSWS நிருபர்கள் மற்றும் சோ.ச.க. ஆதரவாளர்களுக்கு எதிரான தொழிற்சங்க அதிகாரிகளின் குண்டர் மிரட்டல், எங்கள் பகுப்பாய்வுகளைப் பற்றி வேலைநிறுத்தக்காரர்கள் கலந்துரையாடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டதுடன் இந்த தொழிற்சங்கங்கள் மற்றொரு காட்டிக்கொடுப்புக்கு தயாரித்து வருகின்றன என்ற தெளிவான சமிக்ஞையாகும்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோ.ச.க., தொழிற்சங்க அதிகாரத்துவம் அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோருகின்றன. தொழிலாளர்களுக்கு உண்மையைக் கூறுவது மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் இருந்து நாம் தடம்புரளப் போவதில்லை. தொழிற்சங்கங்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்குமாறும், எமது சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை படிக்குமாறும், சோ.ச.க.யில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.