ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The lies of the imperialist powers over the Skripal affair unravel

ஸ்கிரிபால் விவகாரத்தில் ஏகாதிபத்திய சக்திகளின் பொய்கள் கட்டவிழ்கின்றன

Robert Stevens
5 April 2018

1939 செப்டம்பர் 1 அன்று, ஜேர்மன் வானொலி நாடாளுமன்றத்தில் அடோல்ஃப் ஹிட்லர் வழங்கிய உரையைக் கூறி இரண்டாம் உலகப் போர் வெடித்திருந்ததை அறிவித்தது, அந்த உரையில் அந்த சர்வாதிகாரி தெரிவித்திருந்தார், “இன்றிரவு முதன்முறையாக போலந்தின் வழமையான படைவீரர்கள் நமது சொந்த பிராந்தியத்தின் மீது சுட்டுள்ளனர். காலை ஏழு மணி முதலாக நாமும் பதிலுக்கு சுட்டு வருகிறோம். இனி, குண்டுகள் குண்டுகளால் எதிர்கொள்ளப்படும்.”

பிரச்சார அமைச்சரான ஜோசப் கோயபல்ஸின் வழிகாட்டலின் கீழ், போலந்தின் மீதான படையெடுப்பு ஒரு தற்காப்பு நடவடிக்கையாக சித்தரிக்கப்பட்டது.

ஒரு முன்கூட்டித் திட்டமிடப்பட்ட போர்த் திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக பொய்களிலும் பூதாகரப்படுத்துவதிலும் குற்றவியல்தனமாக இறங்குவதென்பது இன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தாலும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உடந்தையாளர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இங்கிலாந்தின் சாலிஸ்பரியில் மார்ச் 4 அன்று முன்னாள் ரஷ்ய இரட்டை முகவரான சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு நஞ்சூட்டப்பட்ட விவகாரத்தில் புனையப்பட்ட ஆத்திரமூட்டலின் அளவுக்கு, சம்பவங்களை இத்தகைய வெட்கமற்று மற்றும் பகிரங்கமாய் பொய்மைப்படுத்தியது நாஜி ஜேர்மனியின் காலத்திற்குப் பிந்தைய உலகம் இதுவரை கண்டிராததாக இருந்தது.

இம்மியளவு ஆதாரமும் இல்லாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் ரஷ்யா தான் பொறுப்பு என குற்றம் சாட்டி வந்திருக்கிறது. முன்பு ஈராக் விடயத்தில் செய்ததைப் போல ரஷ்யாவை ஒரு “ரவுடி அரசு” என கண்டனம் செய்த ஐக்கிய இஇராஜ்ஜியம் மற்றும் அமெரிக்க இராணுவ/உளவு எந்திரம் மறுபடியும் பொய்மைப்படுத்தல்களையும் அப்பட்டமான பொய்களையும் பரவச் செய்து கொண்டிருக்கிறது, இந்த முறை ஒரு அணு ஆயுத சக்திக்கு எதிராக.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பகுதியும், அவற்றுடன் ஐரோப்பாவிலிருக்கின்ற அவற்றின் வலது-சாரி சுற்றுக்கோள்களும், மனிதகுலத்திற்கு மிக மரணகரமான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு போரின் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவு.

ஸ்கிரிபால்களுக்கு நஞ்சூட்டியதற்கு ரஷ்யா மீது பொறுப்பு சுமத்திய தெரசா மேயின் வெறுக்கப்படுகின்ற மற்றும் நெருக்கடியால்-நிரம்பிய பழமைவாத அரசாங்கத்தின் கூற்றுக்கள் இட்டுக்கட்டல்கள் என்பது இப்போது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியிருக்கிறது.

செவ்வாய்கிழமையன்று, ஐக்கிய இராஜ்ஜியத்தின் இரசாயன ஆயுதங்கள் மையமான, போர்ட்டன் டவுன் பாதுகாப்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் தலைமை நிர்வாகியான காரி ஏய்ற்கென்ஹெட் (Gary Aitkenhead), மார்ச் 4 அன்று சாலிஸ்பரியில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருளின் “துல்லிய மூலத்தை” விஞ்ஞானிகள் சரிபார்த்திருக்கவில்லை என்று ஸ்கை நியூஸ் இடம் தெரிவித்தார்.

ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கத்தின் தரப்பை அம்பலப்படுத்தியிருக்கக் கூடிய விதத்தில் மாஸ்கோவின் வேண்டுகோளின் பேரில் தி ஹேக் நகரில் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பின் (OPCW) கூட்டம் கூட்டப்படவிருந்ததை ஒட்டி ஏய்ட்கென்ஹெட்டின் வசனம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் இந்த சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஐரோப்பிய ஆதரவாளர்களும் எத்தனை பிரம்மாண்டமான புரளியை உண்டாக்கினர் என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மார்ச் 12 அன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் மே, ஸ்கிரிபால்கள் மீது பயன்படுத்தப்பட்ட “நரம்பு வாயு” ரஷ்யாவில் இருந்துதான் வந்திருந்தது என்பதில் போர்ட்டான் டவுன் “முற்றிலும் திட்டவட்டமாக” இருந்தது என்று கூறினார். “போர்ட்டன் டவுன் இல் இருக்கும் உலகின் முன்னிலை நிபுணர்களால் இந்த இரசாயன பொருள் சாதகமாக அடையாளம்காணப்பட்டதன் அடிப்படையில்” பிரிட்டிஷ் மண்ணில் ஒரு “கொலைமுயற்சி”க்கு “ரஷ்யா பொறுப்பாக இருப்பதற்கே அநேக வாய்ப்பிருப்பதான முடிவுக்கு அரசாங்கம் வந்திருக்கிறது” என்று அவர் தெரித்தார்.

மார்ச் 20 அன்று ஜேர்மன் ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle இடம் பேசிய வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜோன்சன், ஸ்கிரிபால்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட நரம்பு வாயு, ரஷ்ய மூலம் கொண்டது என்பதில் “போர்ட்டன் டவுன் மனிதர்கள்” “முற்றிலும் திட்டவட்டமாய்” இருக்கிறார்கள் என்றார். “நானே அந்த மனிதரை நேராகக் கேட்டேன், அவர் அதில் சந்தேகமேயில்லை என்றார்” என்றார் அவர்.

பிரிட்டனின் பொய்கள் அம்பலமானது அரசியல்ரீதியாக எந்த அளவுக்கு நாசகரமாய் இருக்கிறதென்றால், வெளியுறவுத் துறை அலுவலகம் “போர்ட்டன் டவுனில் இருக்கும் பாதுகாப்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருக்கும் உலகின் தலைசிறந்த நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, இது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இராணுவ-தர நோவிசோக் என்னும் நரம்பு இரசாயனம் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது” என்று அறிவித்து மார்ச் 22 அன்று அது அனுப்பியிருந்த ஒரு செய்தியை நேற்று அழித்து விட்டது.

இந்தப் பொய்யின் அடிப்படையில், மே மற்றும் ஜோன்சனின் வார்த்தையைத் தாண்டி வேறெந்த ஆதாரமும் கேட்காமல், அமெரிக்கா, 14 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், உக்ரேன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மூன்று பிற கூட்டாளி நாடுகள் சேர்ந்து 100க்கும் அதிகமான ரஷ்ய தூதரக அதிகாரிகளை தமது நாடுகளில் இருந்து வெளியேற்றின. நேட்டோ இராணுவக் கூட்டணியும் அதனைப் பின்பற்றி “ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக அது விலை கொடுக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான மற்றும் மிக வலிமையான செய்தியை” அனுப்புவதற்காக ஏழு ரஷ்ய அலுவலர்களை வெளியேற்றியது.

ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போரை நியாயப்படுத்துவதற்கான ஒரு மோசடி என்பது இந்த அரசுகள் அத்தனைக்குமே ஆரம்பத்தில் இருந்தே நன்கு தெரியும்.

குறைந்தபட்சம் “இந்த முறையாவது”, இத்தகைய அரக்கத்தனங்கள் ஆயுத விரோதங்களில் முடிந்திருக்கவில்லை என்று எண்ணி தொழிலாளர்களும் இளைஞர்களும் முட்டாள்களாக்கப்பட்டு விடக்கூடாது. ரஷ்யாவுக்கு எதிராய் பிரிட்டன் முன்னெடுத்த புரட்டுவழக்கு நொருங்கிப் போனபோதும் கூட, அது அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளிடம் இருந்து பெற்றிருக்கின்ற ஆதரவில் எந்த பாதிப்பையும் கொடுத்திருக்கவில்லை.

ரஷ்யாவின் வேண்டுகோளின் பேரில் அழைக்கப்பட்ட OPCW இன் அவசரகால அமர்வில் பிரிட்டன் பதிலளிக்க வேண்டி மாஸ்கோ வலியுறுத்திய முக்கிய கேள்விகள் எதற்கும் எந்த பதிலும் கிட்டவில்லை. அதற்கு பதிலாக, ஸ்கிரிபால் விவகாரத்தில் பிரிட்டனுடனான ஒரு கூட்டு விசாரணையில் ரஷ்யா பங்கெடுக்க முடியாது, ஏனென்றால் அதுவே “அநேகமான குற்றவாளி”யாக இருக்கிறது என்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதிநிதி தெரிவித்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய செய்தித்தொடர்பாளரின் நாணயமற்ற ஆதரவும் கிட்டியது, ரஷ்யா நோவிசோக் உற்பத்தியை அது தொடர்ந்ததாக குற்றம்சாட்டப்படுவது குறித்த ஐக்கிய இராஜ்ஜியத்தின் “முறையான கேள்விகளுக்கு” ரஷ்யா பதிலளிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

இந்த குற்றவியல் விவகாரத்தில், ஊடகங்களின், எல்லாவற்றையும் விட நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் கார்டினியனின் சம்பந்தம் கொஞ்சநஞ்சமல்ல, இவை கடந்த மாதத்தை இலண்டன் மற்றும் வாஷிங்டனால் விடுக்கப்பட்ட அப்பட்டமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் செலவிட்டன என்பதுடன் மாஸ்கோ தண்டிக்கப்படுவதற்கும் கூச்சலிட்டு வந்தன. இப்போது அவை ஏய்ட்கென்ஹெட்டின் கூற்று பொருத்தமற்றது என்றும், பிரிட்டனின் இரசாயன ஆயுத மையமான போர்ட்டன் டவுன் குற்றம்சாட்டப்பட்ட நரம்பு இரசாயனத்தின் மூலங்களில் தீர்ப்பளிக்க முடியும் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை என்றும் ஒரேகுரலில் ஒப்பிக்கின்றன.

ஸ்கிரிபால் ஆத்திரமூட்டலில் ”ஆவண செய்தித்தாள்” மற்றும் “உலகின் முன்னணி தாராளவாதக் குரல்” ஆகியவற்றின் பாத்திரம், அவை முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கும் “பொய்ச் செய்தி”க்கு எதிரான வெறிக்கூச்சல் பிரச்சாரத்தின் மற்றும் சமூக ஊடகங்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும், மட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கண்காணிக்கப்பட வேண்டும் என்றான அவற்றின் வலியுறுத்தலின் அரசியல் நோக்கத்தை ஊர்ஜிதம் செய்கிறது. வறுமை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஒரு எதிர்காலத்திற்காய் நிதி அதிகாரத்துவம் போடும் திட்டங்களுக்கு எதிரான உலகெங்குமான மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் விமர்சனக் குரல்கள் வாய்மூடச் செய்யப்படாமல் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னேற முடியாது என்பதை அவை நன்கு அறிந்து வைத்துள்ளன.

ஊடகங்களும் செய்திப் பின்னல்களும் அரசின் பிரச்சார அங்கங்களுக்கு மேல் எதுவுமில்லை என்பதாக உருமாறி வருவதை இந்த ஒட்டுமொத்த மோசடியான “ரஷ்ய நோவிசோக்” பிரச்சாரம் ஊர்ஜிதம் செய்கிறது. உத்தியோகபூர்வ ஒப்புதலுடைய ஊடகங்கள் வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது எதனையும் அவற்றின் முகமதிப்பில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதற்கு ஸ்கிரிபால் விவகாரத்திற்குப் பின்னர் வேறு ஆதாரமும் தேவையா என்ன?

ஏகாதிபத்திய விவரிப்பை சவால் செய்யும் எதனையும் “பொய்ச் செய்தி” என கண்டனம் செய்கின்ற அவை, அதேநேரத்தில் பொய்யான மற்றும் பொய்மைப்படுத்துகின்ற செய்திகளை வெளியிடும் செயலை மேற்கொள்கின்றன. ஆயினும், அவற்றின் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, “பேரழிவு ஆயுதங்கள்” குறித்த பொய்களின் அடிப்படையில் 2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த அவை செய்த முயற்சியின் சமயத்தில் போல, அவை கழிசடையான “வலது-சாரி” பொய்யர்களாக இருக்கின்றன என்பது இப்போது அனைவருக்குமே தெரிகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், ஏகாதிபத்திய சக்திகளின் இந்த பொய்மைப்படுத்தல் பிரச்சாரத்தின் வீச்சையும், அதன் சம்பந்தங்களையும் ஊர்ஜிதப்படுத்துகின்றவிதமான இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன.

முதலாவது: ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, ஈக்வடார் அரசாங்கம், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வலியுறுத்தலின் பேரில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்சை வெளியுலகுடன் கொண்டிருந்த தகவல்தொடர்பைத் துண்டித்தது. 2012 முதலாக இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகத் தள்ளப்பட்டிருக்கும் அசாஞ்ச் ஏகாதிபத்தியத்தின் போர்க் குற்றங்களுக்கான உலகின் மிகவும் உயர்-நிலை எதிரியாக இருக்கிறார்.

இரண்டாவது: ஸ்பெயினுடன் கூட்டுச் சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கமும் அதன் உளவு முகமைகளும் கட்டலோனியாவின் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான கார்லஸ் புய்க்டெமோன்ட்டை கைது செய்தன, 30 வருடம் வரை சிறைத் தண்டனை அளிக்கத்தக்க போலியான கலகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அவர் ஸ்பெயினுக்கு அனுப்பப்படுவதற்கான தயாரிப்பாக இது செய்யப்பட்டிருக்கிறது.

இத்தகைய ஒடுக்குமுறை சர்வதேச அளவில் ஏகாதிபத்தியத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகத் திகழும் தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கான தயாரிப்பில் செய்யப்படுகிறது. போருக்கான தனது திட்டங்களுக்கு, முதல் நிபந்தனையாக, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரான ஒரு உள்நாட்டுப் போர் அவசியமாயிருக்கிறது என்பதை ஆளும் உயரடுக்கு நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி 80 வருடங்களுக்கு முன்பாய் எழுதியதைப் போல, பொய் தான் சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு சித்தாந்த சீமேந்தாக ஆக இருக்கிறது. அன்றாட அடிப்படையில் உண்மையை வெளியிட்டு வருகின்ற உலக சோசலிச வலைத் தளம், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் அரசு-கட்டுப்பாடிலான பிரச்சார எந்திரங்களது பொய்களை எதிர்த்துப் போராடுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தவிர்க்கமுடியாத மற்றும் சக்திவாய்ந்த சாதனமாக உள்ளது.

ஜனவரி மாதத்தில், உலக சோசலிச வலைத் தளம் விடுத்த ஒரு பகிரங்கக் கடிதத்தில், இணையத் தணிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சர்வதேசக் கூட்டணியை உருவாக்க சோசலிச, போர்-எதிர்ப்பு, இடது-சாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அதிமுக்கியமான முன்முயற்சியின் முக்கியத்துவத்திற்கு சமீபத்திய நிகழ்வுகள் சான்றளிக்கின்றன. இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதில் உதவுவதற்காய் போராடுவது ஒவ்வொரு வர்க்க-நனவுள்ள தொழிலாளியும் இளைஞரும் முகம்கொடுக்கின்ற கடமையாகும்.