ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Strikes by railway workers and aircrews paralyze France

இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் பிரான்ஸை முடக்குகின்றன

By our correspondents
4 April 2018

இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பிரான்ஸ் செவ்வாயன்று முடங்கிப் போனது, பாரிஸின் துப்புரவுத் தொழிலாளர்கள், மின் நிலையத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

1,50,000 தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்ததாக அரசின் இரயில்வே நிறுவனமான SNCF தெரிவித்தது. இரயில்போக்குவரத்துக்கு தவிர்க்கவியலாத, இரயில்வண்டியில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் மத்தியில், இந்த பங்கேற்பு, கணிசமாய் அதிகமாக, கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருந்தது.


பாரிஸ் Saint-Lazare நிலையத்தில் வேலைநிறுத்தம் செய்யும் இரயில்பாதைத் தொழிலாளர்கள்

இரயில்வண்டி ஓட்டுநர்களில் எழுபத்தியேழு சதவீதம் பேரும் பயணச்சீட்டு பரிசோதகர்களில் 69 சதவீதம் பேரும் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர். இதன் காரணத்தால், எட்டுக்கு ஏழு நீண்ட தூர இரயில்வண்டிகளும் (TGV), பிராந்திய இரயில்கள் ஐந்தில் நான்கும் மற்றும் உள்ளூர் இரயில்களில் மூன்றில் இரண்டும் இரத்து செய்யப்பட்டன.

இரயில்வண்டி இரத்துக்கள் புதனன்றும் அதிகமாகவே இருக்கும் என்று SNCF கருதுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு, இரயில்பாதை தொழிலாளர்கள் தமது போராட்டத்தை தொடர்வதற்கு விரும்புகின்றனர். இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நடவடிக்கை அடுத்த மூன்றுநாட்களுக்கு வேலைக்குச் செல்வது என இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.

வேலைநிறுத்தத்தின் காரணத்தால் ஏர் பிரான்ஸ் அதன் நீண்ட தூர மற்றும் மத்திய தூர விமானங்களில் மூன்றில் ஒரு பகுதியை இரத்து செய்ய நேரிட்டது, உள்நாட்டு விமானங்களில் பாதியும் இரத்தாயின. ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளுக்கு மேலதிக வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்படுகின்றன.

ஏர் பிரான்சிலான வேலைநிறுத்தம் ஊதிய உயர்வில் கவனம் குவித்திருக்கும் நிலையில், இரயில்பாதை தொழிலாளர்கள் ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கத்துடன் நேரடியான ஒரு அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்ரோன் இரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கும், இரயில் பாதைகளை மூடுவதற்கும், வேலைகளைக் குறைப்பதற்கும், இரயில் தொழிலாளர்களை வேலைநீக்கத்தில் இருந்து பாதுகாக்கின்ற மற்றும் அவர்களுக்கு ஒரு ஓய்வூதியத்தை உத்திரவாதம் செய்கின்ற சட்டப்பிரிவை ஒழிப்பதற்கும் முனைந்து வருகிறார்.

“இது எங்களது வேலைகளை மேலும் மேலும் பாதுகாப்பற்றதாக ஆக்கும், எங்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை நாங்கள் இழந்து விடுவோம்; முதலாளிகளின் கருணையில் வாழும்படி விடப்படுவோம். இது ஏற்கமுடியாததாகும்!” என்று பாரிஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் யூசெஃப் என்ற ஒரு இரயில்வண்டித் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

இது வெறுமனே அவர்களது நலன்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக சாதனைகளையும் பொதுச் சேவைகளையும் பாதுகாப்பது குறித்ததாகும் என்பதை இரயில்வே தொழிலாளர்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.

கியோம் என்ற இன்னுமொரு இரயில்வே தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் இவ்வாறு கூறினார்: “சமூகத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் எதிராக அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது என்பதால்தான் நான் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறேன். இரயில்வண்டித் தொழிலாளர்கள், உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொது மற்றும் தனியார் துறைகளின் மீதும் தாக்குதல் நடக்கிறது.”

கியோம் தொடர்ந்தார், “இப்போது இரயில்வண்டித் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு நேரடித் தாக்குதல் நடக்கிறது, அதற்குத் தான் அத்தொழிலாளர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள், இது அவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான அணிதிரட்டலை எழுப்பிக் கொடுத்திருக்கிறது. ஏதாவதொன்று நடந்தாக வேண்டும், அது இப்போது தான் நடக்க முடியும். ஒருவர், இன்னொரு சமூகம் குறித்து சிந்திக்க வேண்டும், பிரதிபலிக்க வேண்டும், பிரச்சினையை ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் இருந்து சிந்திக்க வேண்டும். பிரான்சில் நமக்கு மட்டுமான பிரச்சினைகள் அல்ல, மாறாக ஐரோப்பா முழுவதிலும், உலகெங்குமான நாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகளாகும் இவை. நமது அரசாங்கத்தை எதிர்த்து நாம் போராட முடியும் எனக் காட்டுவதன் மூலமாக மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுவதற்கு நம்மால் உத்வேகமளிக்க முடியும். அனைவரும் ஒன்றுபடும்போது, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், நம்மால் வெற்றி காண முடியும்.”


பல்கலைக்கழகங்களில் அனுமதிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பாரிஸில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தை அதிகாரத்திற்கான ஒரு போராட்டமாக கருதியிருக்கிறது. “அரசாங்கமும் நாடாளுமன்றமும் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம் பூண்டிருக்கின்றன” என்று அரசாங்கத் தரப்பில் SNCF சீர்திருத்தத்திற்குப் பொறுப்பான Jean-Baptiste Djebbari தெரிவித்தார். “ஒரு கடுமையான தொழிலாளர் சச்சரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

மக்ரோனும் அவரது அரசாங்கமும் மிக அதிகமாய் பணயத்தில் இருப்பதாக பழமைவாத செய்தித்தாளான Le Figaro கருத்திட்டது. இதில் பின்வாங்கினால், ஏனைய துறைகளிலான சீர்திருத்தத் திட்டங்களும் கைவிடவேண்டிய நிலைதான் ஏற்படும்.

செவ்வாயன்று, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்கள் பிரெஞ்சு நகரங்கள் பலவற்றிலும் நடைபெற்றன. பொதுக் கல்வியில், கல்வித் துறை அமைச்சர் Frédérique Vidal பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுகின்ற ஏராளமான மாணவர்களும் இத்தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டனர். பல்கலைக்கழகங்களில் பதின்வயதினர் பலருக்கும் கல்வி கற்பதையே சாத்தியமற்றதாக்குகின்ற வகையிலான ஒரு தெரிவு அனுமதி நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.


“தேர்ந்தெடுப்பு வேண்டாம்”

இந்த Vidal சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏராளமான பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தங்களும் முற்றுகைப் போராட்டங்களும் இப்போது நடைபெற்று வருகின்றன. Montpellier நகரில், மார்ச் 23 அன்று, முகத்தை மறைத்துக் கொண்ட அடியாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்ட ஒரு விரிவுரை அரங்கில் ஊடுருவி, அந்த மாணவர்களை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவத்தை அடுத்து மோதல் மேலும் தீவிரப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர், டீனும் ஒரு சட்டப் பேராசிரியரும் தான் இந்த தாக்குதலை ஒழுங்கமைத்திருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.  

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய யூசெஃப், அரசாங்கம் தூக்கிவீசப்பட முடியும் என்று நம்புகிறார். “இந்த இயக்கத்தின் நோக்கம் அரசாங்கத்தை அகற்றுவதாகும். இந்த அரசாங்கத்தை வீழ்த்துகின்ற வரையில் நாம் ஒன்றுகூடி செயலூக்கத்துடன் இருக்க வேண்டும். பொதுச் சேவைகள் அனைத்திலும் பயன்படுத்துபவர்களுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி இரண்டு பேருக்குமே இது பயங்கர ஆபத்தாக நிற்கிறது.”

தொழிலாளர்களின் ஒரு பரவலான அணிதிரள்வின் மூலம் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் தெரிவித்தார். “நம்மால் இந்தப் போராட்டத்தில் வெல்ல முடியும்” என்றார் அவர். “மக்களை நாம் எவ்வாறு அணிதிரட்டுகிறோம் என்பதை மட்டுமே அது சார்ந்திருக்கிறது. நாம் அதிகமாய் அணிதிரளும் மட்டத்திற்கு, இந்த அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பும் நமக்கு அதிகமாய் இருக்கும்.”

"அது சாத்தியமே: நாம் ஏற்கனவே 1995 இல் கண்டிருக்கிறோம், அணிதிரள்வு மிகப் பெரிதாக இருக்கும்போது, அரசாங்கத்தை அகற்றுவது சாத்தியமானது. மக்ரோன் ஒன்றும் பூமியின் கடவுள் இல்லை. நாட்டை அவர் நடத்தலாம், ஆனால் மக்கள் தான் இறையாண்மையாக இருக்கிறார்கள். நாம் அணிதிரண்டு வலிமையுடன் இருக்கின்ற வரையில், நம்மால் விடயங்களை மாற்ற முடியும். மாணவர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், Carrefour தொழிலாளர்கள் என மற்றவர்களுடன் நாம் கரம் கோர்க்க வேண்டும். எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்: இன்று இரயில்வண்டி தொழிலாளர்கள், நாளை வேறொரு துறை பாதிக்கப்படும்.”

இன்னொரு பக்கத்தில், தொழிற்சங்கங்கள், அவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்திருந்த மக்ரோனின் அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கு தீர்மானத்துடன் இருக்கின்றன.

இரயில்பாதை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த CFDT  பொதுச் செயலரான லோரோன்ட் பேர்ஜே, இரயில்வே தொழிலாளர்களின் சட்டப்பிரிவில் மாற்றம் தொடர்பாக SNCF உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார். “இரயில்வே தொழிலாளர்களின் சட்டப்பிரிவை அபிவிருத்தி செய்வதற்கு உங்களுக்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், ஆனால் அவர்களைக் குற்றம் சாட்டுவதின் மூலமும் ஒதுக்கி வைப்பதன் மூலமுமாய் அல்ல” என்றார் அவர்.

ஒரு பெரும் மோதலை தவிர்ப்பதற்கு அரசாங்கம் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று FO சங்கத்தின் தலைவரான ஜோன் குளோட் மைய்யி  அறிவுறுத்தினார். “சமூக காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது, புல் காய்ந்து இருக்கிறது, அதைப் பற்ற வைப்பதற்கு அதிக நேரம் பிடிக்காது” என்றார் அவர். “பிரச்சினையான பகுதிகள் நிறைய இருக்கின்றன.”

போட்டிச் சங்கமான CGT இன் “போராட்டங்களின் ஒருங்கிணைப்பு” என்பதாக சொல்லப்படுவதை மைய்யி கடுமையாக எதிர்த்தார். யாரும் “மேம்படுத்திக் கொண்டு” போகக் கூடாது என்றார் அவர். “சமூக காலநிலை”யை கணிக்க முடியாது. “பல்வேறு பிரச்சினைப் பகுதிகள் இருப்பதன் அர்த்தம் அவை அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பதல்ல” என்று பல்வேறு போராட்டங்களையும் தனிமைப்படுத்துகின்ற தனது நோக்கத்தை நியாயப்படுத்துகின்ற விதமாய் அவர் தெரிவித்தார்.

பொதுவாக “போர்க்குண” சங்கமாக காட்டிக்கொள்ளும் CGTயும் கூட வேலைநிறுத்த இயக்கத்தை விரிவுபடுத்துவதற்கு மறுக்கிறது. பத்து நாட்களுக்கு ஒரேயொரு இரயிலும் கூட நகராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு இரயில்பாதை தொழிலாளியின் கோரிக்கையை சங்கம் வேலைநிறுத்தங்களை மேலிருந்து உத்தரவிட முடியாது என்ற சிடுமூஞ்சித்தனமான முகாந்திரத்தின் பேரில் லீல் என்ற இடத்தில் ஒரு CGT நிர்வாகி மறுத்து விட்டதை Le Monde மேற்கோளிட்டது.

ஏற்கனவே நாம் குறிப்பிட்ட இரயில்பாதை தொழிலாளியான கியோம் தொழிற்சங்கங்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார். “தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, சில சமயங்களில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கலாம்” என்றார் அவர். “ஆனால் பின்னர் அவர்கள் தொடர்பாக நாம் எந்தப் பிரமைகளையும் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் அவர்கள் தமது அதிகாரத்துவ சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். நாம் தொழிற்சங்கங்களைத் தாண்டி, இன்னும் முன்னேறிப் போவதற்கு தயாராக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் முன்னேறிச் செல்ல உடன்படுகின்ற தூரம் வரையில், நாம் அதைச் செய்தாக வேண்டும். தொழிற்சங்கங்களோ அல்லது சீர்திருத்தவாதக் கட்சிகளோ அல்லது அரசாங்கமோ, யாரும் நமது பாதையில் முட்டுக்கட்டைகள் போட நாம் அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர்கள் தமக்காக தாமாகவே ஒழுங்கமைவதன் மூலமாகவே இந்த முட்டுக்கட்டைகளை நம்மால் தாண்டிச் செல்ல முடியும்.

அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “எதையும் பெறுவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதல்ல வழி என்பது நிச்சயம். வீதிகளிலும் தொழிற்சாலைகளிலும் அணிதிரளுவதன் மூலமாக மட்டுமே அதிகமாய் மக்ரோனை வெல்ல முடியும். நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், பிளவுபடக் கூடாது. ஒட்டுமொத்தமான தொழிலாளர்களது போராட்டத்தின் மூலமாக மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும்.”