ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As the unions continue talks with the government
French rail workers, students resume strike action against Macron

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்கின்ற நிலையில்

பிரெஞ்சு இரயில்வண்டித் தொழிலாளர்களும், மாணவர்களும் மக்ரோனுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை தொடர்கின்றனர்

By Kumaran Ira
9 April 2018

பிரெஞ்சு தேசிய இரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையின் நான்காவது நாளை இரயில்வண்டித் தொழிலாளர்கள் ஆரம்பிக்கின்ற நிலையிலும், பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் புதிய நுழைவு விதிகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிராக மாணவர்கள் வேலைநிறுத்தங்களையும் உள்ளிருப்புப் போராட்டங்களையும் தொடர்கின்ற நிலையிலும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிரான சமூக எதிர்ப்பு வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தின் பின்னர், இரயில் போக்குவரத்து மீண்டும் வேலைநிறுத்தத்தால் ஞாயிறு முதல் முடக்கத்தை சந்தித்திருக்கிறது. SNCF தொழிலாளர்களில் சுமார் 35 சதவீதம் பேர் ஞாயிறன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஐந்து உயர்-வேக இரயில்களுக்கு ஒன்றும், பிராந்திய வேக இரயில்களில் மற்றும் பாரிஸ் பகுதி இரயில்களில் மூன்றுக்கு ஒன்றும் ஓடிக் கொண்டிருந்தன. பாரிஸில் RERம் (பிராந்திய விரைவு வலையமைப்பு)  பெருமளவில் பாதிக்கப்பட்டது. திங்களன்று கட்டுப்பாட்டுத் தொழிலாளர்களில் 63 சதவீதம் பேர் மற்றும் இரயில் வண்டி ஓட்டுநர்களில் 74 சதவீதம் பேர் உள்ளிட 43 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருக்கலாம் என்று SNCF நிர்வாகம் மதிப்பிட்டது.

மாணவர் இயக்கம் பிரான்ஸ் எங்கிலுமான பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வளாகங்களில் செவ்வாயன்று ஒரு புதிய நடவடிக்கை தினத்தை மேற்கொள்வதற்கு தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு அமைப்பு (CNE) ஞாயிறன்று அழைப்பு விடுத்தது. “இரயில்வண்டித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துடன் ஏகசமயத்திலாய்” ஏப்ரல் 14 அன்று போராட்டங்கள் நடத்துவதற்கும் “ஏப்ரல் 1 அன்றான தேசிய வேலைநிறுத்த தினத்தில் இணைந்து கொள்வதற்கும்” மாணவர்களுக்கு அது அழைப்பு விடுத்தது.

இந்த இயக்கம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு கொண்டிருக்கும் பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஒரு நேரடியான அரசியல் மோதலுக்குள் கொண்டுவருகிறது. இந்த யுத்தத்தில், மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான ஒரு போராட்டம் மட்டுமே முன்னிருக்கின்ற ஒரே பாதையாகும். செல்வந்தர்களுக்கு வரி வெட்டுவதற்கும் 2024க்குள்ளாக இராணுவ செலவினத்திற்காக 300 பில்லியன் யூரோக்களை செலவிடுதற்குமான அதன் திட்டங்களுக்காக நிதியாதாரத்தை எதிர்நோக்கி நிற்கும் அரசாங்கம், வெட்டுகளை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானத்துடன் உள்ளது.

ஞாயிறன்று Le Parisien க்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பிரதமர் எட்வார்ட் பிலிப், அவர் பின்வாங்கப் போவதில்லை என்றும் என்ன விலை கொடுத்தேனும் SNCF ஐ தனியார்மயமாக்குவதை திணிக்கப் போவதாகவும் வலியுறுத்திக் கூறினார்.

அவர் கூறினார், “எனது அரசாங்கத்தை ஆதரிக்கின்ற, நாங்கள் இறுதிவரை கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறுகின்ற பிரெஞ்சு மக்களிடம் இருந்து எனக்கு செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. அதைத்தான் நாங்கள் செய்வோம். ஏற்கனவே பிப்ரவரி 26 அன்று, SNCF குறித்த எனது முதல் அறிக்கையில், இரயில்வேயை போட்டிக்குத் திறந்து விடுவது, நிறுவனத்தை மறுசீரமைப்பது மற்றும் இரயில்வண்டித் தொழிலாளர்களது சட்டவிதிமுறையின் அடிப்படையில் பணியமர்த்துவதை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் பேச்சுவார்த்தைக்கு இடமற்றவை என நான் கூறியிருக்கிறேன். அதில் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை, ஆனால் அதற்காக அதனை எவ்வாறு அமல்படுத்துவது என்ற விவாதத்திற்கு நான் தயாராக இல்லை என்று அர்த்தமல்ல.”

சுருக்கமாய் சொல்வதானால், தொழிற்சங்கங்களின் சரணாகதிக்கான நிபந்தனைகள் தவிர்த்த வேறெதனையும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கிறது. SNCF ஐ தனியார்மயமாக்கவும், வாழ்நாள் வேலை உத்தரவாதம் மற்றும் ஓரளவுக்கு அனுகூலமான ஓய்வூதிய நலன்கள் ஆகியவை உள்ளிட இரயில்வே தொழிலாளர்களுக்கு இப்போதிருக்கக் கூடிய பாதுகாப்புகளை சுக்குநூறாக்குவதற்கும் அது தீர்மானத்துடன் உள்ளது. இரயில்வே தொழிலாளர்களின் சட்டரீதியான ஓய்வு வயதை, தனியார் துறையில் இருப்பதற்கு நிகரானதாய் -இப்போது 62 ஆக இருக்கிறது- ஆக்குகின்ற வகையில் உயர்த்துவதற்கும் அரசாங்கம் நோக்கம் கொண்டிருக்கிறது. சீர்திருத்தத் தொகுப்பு தேசிய நாடாளுமன்றத்தில் இன்று முதல் விவாதிக்கப்பட இருக்கிறது, முறைப்படியான வாக்கெடுப்பு ஏப்ரல் 17 அன்று நடைபெற இருக்கிறது.

இந்த ஆளும் வர்க்க மற்றும் அரசுத் தாக்குதலுக்கு முகம்கொடுக்கின்ற சமயத்தில், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. இரயில்வே வேலைநிறுத்தத்தின் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கும் மக்ரோனை வீழ்த்துவதற்கான ஒரு போராட்டத்தை தடுப்பதற்கும் அவை முனைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாத காலத்திற்கு சுழற்சி முறையில் இரண்டுநாட்கள் வேலைநிறுத்தங்கள் நடத்துவதற்கான தந்திரோபாயமானது ஆவேசத்தை வடியச் செய்வதற்கும், தொழிலாளர்களை களைப்படையச் செய்வதற்கும், நடுத்தர வர்க்க அடுக்குகளை பெருமளவில் அந்நியப்படுத்துவதற்குமாய் கணக்குப் போட்டு மேற்கோள்ளப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதன் மூலமாக, மக்ரோனுடன் ஒரு திருப்திகரமான சமரசத்தை எட்ட முடியும் என்பதான பிரமையை தொழிற்சங்கங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் திரைமறைவில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றன என்பதில் அதிக சந்தேகத்திற்கு இடமில்லை.

பிரதமர் பிலிப்பும் மறைமுகமாக இதனை சூசகம் செய்தார், தொழிற்சங்கங்கள் இறுதியில் அவரது நிலைப்பாடுகளை ஆதரிக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். “சில தொழிற்சங்க அமைப்புகளின் மனஉறுதியை நான் பார்த்திருக்கிறேன்” என்ற அவர், “ஆனால் அவர்களும் என்னுடைய மன உறுதியைப் பார்க்க வேண்டும்... எனது அரசாங்கத்தின் விருப்பத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறேன், எது விவாதத்திற்கு திறந்திருக்கிறது என்பதையும் கூறிவிட்டிருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

முன்னாள் வலது-சாரி பிரதமர் அலன் ஜூப்பேயுடன் -இவரது தாக்குதல்கள் 1995 நவம்பர்-டிசம்பர் இரயில் வேலைநிறுத்தங்களை தூண்டியது- தொடர்ந்து பேசிவருவதாகவும் பிலிப் மேலும் சேர்த்துக் கொண்டார். பல்கலைக்கழகங்களில் மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான ஒரு போலிஸ் ஒடுக்குமுறைக்கும் பிலிப் மிரட்டல் விடுத்தார்.

“தடையரண்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை” என்றார் அவர். “நாங்கள் கண்காணிப்புடன் இருக்கிறோம், காதுகொடுத்துக் கேட்கிறோம், பல்கலைக்கழகத் தலைவர்கள் இங்கே அங்கே என தலையீடுகளுக்காக எங்களைக் கேட்கும்போது, அவை நடக்கின்றன. அங்கேயும் கூட, அதி-அரசியல்மயமான மற்றும் சில சமயங்களில் வன்முறையான சிறுபான்மையை செயல்பட அனுமதிப்பதில்லை என்பதில் நாங்கள் மிகத் தீர்மானகரமாய் இருக்கிறோம்.”

தொழிற்சங்கங்கள் முதலில் முந்தைய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தின. அதன்பின் சென்ற வருடத்தில், அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை ஒருதரப்பாகத் திணித்து பிரான்சில் வர்க்க உறவுகள் மிகப்பெருமளவில் மறுகட்டுமானம் செய்யப்படுவதற்கு வழிவகையளித்த உத்தரவாணைகளை வரைவு செய்வதில் மக்ரோனுடன் சேர்ந்து வேலைசெய்தன.

வெள்ளிக்கிழமையன்று, பல தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் போக்குவரத்து அமைச்சரான எலிசபெத் போர்ன் ஐ சந்தித்தன. அரசாங்கம் அதன் நடவடிக்கைகளில் பின்வாங்க மறுப்பதாக, சந்திப்புக்குப் பின்னர் அவை புகார் கூறின. விடயத்திலான “பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை” என்று CGT-இரயில்வே பொதுச் செயலரான லோரோன்ட் பிரன் தெரிவித்தார். வேலைநிறுத்த நடவடிக்கை “ஜூன் மாதத்தை கடந்தும் செல்லக் கூடும்” என்று CGT தெரிவித்தது.

தொழிற்சங்கங்கள், மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் போன்ற போலி-இடது அரசியல் கட்சிகளில் இருக்கும் அவற்றின் கூட்டாளிகளின் பேச்சுக்களில் தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாது. வேலைநிறுத்த இயக்கத்தை தொழிற்சங்கங்களின் கைகளில் இருந்து மீட்டு மக்ரோனுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை தொடக்குவதே தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மையமான பிரச்சினையாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான PES (The Parti de l’égalité socialiste), தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு குழிபறிப்பதற்காக நனவுடன் வேலை செய்கின்ற பெருவணிக PS உடன் வரலாற்றுரீதியாக பிணைந்திருக்கின்ற இப்போதிருக்கும் கட்சிகளுக்கு எதிராய், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய அரசியல் தலைமையை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.

அந்தக் கட்சிகள் தொழிற்சங்கங்களுடன் கூட்டணி கொண்டிருக்கின்றன, மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அவற்றின் அடிப்படையான ஆதரவைப் பகிர்ந்து கொள்கின்றன. ஒரு சமூக வெடிப்பின் சாத்தியம் குறித்து அவை மிரண்டு போயுள்ளன, ஆகவே அரசாங்கத்தை வீழ்த்தும் ஒரு போராட்டத்திற்கு கடுமையான குரோதம் காட்டுகின்றன.

அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் ஜோன் லூக் மெலோன்சோன் தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற அளவு முயன்று கொண்டிருக்கிறார். அவர் அறிவித்தார், “இன்று தொழிற்சங்கங்கள் அவற்றின் அடித்தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. அவை சரியான திசையில் செல்கின்றன. நாம் இந்த குறிப்பான ஆற்றல்மிக்க வடிவத்தை மதிக்க வேண்டும். அது நம் முக்கிய கடமையாகும்.”

அதேசமயத்தில், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளை “செல்ஃபி இடது” என்று கேலி செய்வதன் மூலம் அவர்களுக்கு எதிராய் பெருகிச் செல்லும் மக்கள் கோபத்தை கைப்புரட்டு செய்வதற்கு அவர் முயற்சி செய்கிறார்.

இது அரசியல்ரீதியாக ஒரு நேர்மையற்ற கருத்துரையாகும், ஏனென்றால் அவர் விமர்சிப்பதாகக் கூறிக் கொள்ளும் NPA நிர்வாகி ஒலிவியே பெசன்ஸநோ மற்றும் PS இன் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான பெனுவா அமோன் போன்ற மனிதர்களது அதே வட்டத்தின் பகுதியாகவே மெலன்சோனும் கூட இருக்கிறார். அவர்களை தாக்கிவிட்டு பின் உடனடியாக, வரவிருக்கும் போராட்டங்களில் அவர்கள் இவருடன் கைகோர்ப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்: “அவர்களது உள்ளூர் அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதால் ஒலிவியே பெசன்ஸநோவும் பெனுவா அமோனும் அங்கே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.”

மனச்சாட்சியின்றி மெலன்சோன் இதையும் சேர்த்துக் கொண்டார், “பிரெஞ்சு மக்கள் ஒருவிடயத்தில் அதிர்ஷ்டசாலிகள்: அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்... நாங்கள் விலைமதிப்பற்ற ஒருவகையினர்”.