ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Students protest against Macron as strikes against austerity mount in France

பிரான்சில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் பெருகுகின்ற நிலையில், மக்ரோனுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier
11 April 2018

பிரான்சில் வேலைநிறுத்த இயக்கம் வளர்ந்து செல்வதன் மத்தியில், மாணவர்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துகின்றனர். மாணவர் ஆர்ப்பாட்டங்களின் மீதான கொடூரமான போலிஸ் ஒடுக்குமுறையால் தூண்டப்பட்ட 1968 மே-ஜூன் வேலைநிறுத்தத்தின் -அச்சமயத்தில் 10 மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தினர்- அரை நூற்றாண்டுக்குப் பின்னர் மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகங்கள், போலிஸ் மற்றும் அதி-வலது குண்டர்களின் மிரட்டல்களையும் மீறி மக்ரோன் நிர்வாகத்தை எதிர்த்து பல்கலைக்கழகக் கட்டிடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.

மக்ரோனுக்கு எதிரான தொழிலாளர்களின் தீவிரப்பட்டுச் செல்லும் வேலைநிறுத்த நடவடிக்கையானது பிரான்சின் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகங்களை ஆக்கிரமித்து போராடுகின்ற இயக்கத்துடன் கைகோர்த்து நடைபெறுகிறது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தொழிலாளர்களாகவே இருக்கின்றனர், கல்விக் கட்டணத்திற்கும் வாழ்க்கைச் செலவுகளுக்குமாய் அவர்கள் படித்துக் கொண்டே வேலைகளும் செய்து வருகின்றனர்.

நாடெங்கிலும், மாணவர்கள் கல்வி வளாகங்களை ஆக்கிரமித்துப் போராடுவதோடு பொதுஅணிதிரள்வு கூட்டங்கள் நடக்குமிடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். நேற்று 2,500க்கும் அதிகமான மாணவர்கள் Rennes பல்கலைக்கழகத்தில் பொதுஅணிதிரள்வு கூட்டத்தில் பங்கேற்றனர். கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற அல்லது முற்றுகையிடப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழகங்களில் Montpellier இல் உள்ள Paul-Valéry பல்கலைக்கழகம், துலூஸில் உள்ள Jean-Jaurès பல்கலைக்கழகம், Bordeaux-Montaigne பல்கலைக்கழகத்தின் Victoire கிளை, Lyon பல்கலைக்கழகத்தின் Lumière 2 வளாகம், Lille-3 பல்கலைக்கழகம், Rouen மற்றும் Strasbourg பல்கலைக்கழகங்கள், மற்றும் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Saint Denis, Tolbiac, Clignancourt மற்றும் Nanterre வளாகங்கள் ஆகியவை அடங்கும்.


பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றுவோம்”

நேற்று, ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து கால்வாசி விமானங்கள் பறக்க முடியாதபடி செய்யப்பட்ட நிலையிலும், இரயில்வண்டித் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்குவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த நிலையிலும், பல்கலைக்கழகக் கல்விக்கான மாணவர் அணுகலை சிரமமாக்குகின்ற வகையில் புதிய தேர்வு விதிகளை திணிக்கிற மக்ரோன் விநியோகித்திருக்கும் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு “நடவடிக்கை தின”த்தில் பேரணி நடத்தினர். மாணவர்களுக்கான நோக்குநிலைக்கும் வெற்றிக்குமான சட்டம் (ORE - Orientation et Réussite des Étudiants) என்ற இந்த புதிய சட்டமானது செப்டம்பரில் அமலுக்கு வரவிருக்கிறது.

பாரிஸில், 1,000க்கும் அதிகமான மாணவர்கள் சோர்போன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், பல்கலைக்கழகத்திற்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் குழு சோர்போன் ஆர்ப்பாட்டங்களில் தலையீடு செய்தது, “1968 மே-ஜூனுக்கு ஐம்பது ஆண்டுகளின் பின்னர், பிரான்சில் வர்க்கப் போராட்டம் வெடிக்கிறது” என்ற முன்னோக்கை விநியோகம் செய்து, மாணவர்களிடம் நேர்காணலும் செய்தது. மக்ரோனின் கல்விக் கொள்கைகள் உருவாக்கவிருக்கும் சமூக சமத்துவமின்மையின் பெருக்கத்திற்கு எதிராகவும் பெருகும் போர் அபாயத்திற்கு எதிராகவும் மாணவர்கள் பேசினர்.

சோர்போனில் வரலாறும் ஆங்கிலமும் பயிலும் லியோ WSWS யிடம் கூறுகையில், “நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் காரணத்தால்” அவர் போராடுவதாக தெரிவித்தார்.

“முன்பு பல்கலைக்கழகம் அடிப்படையில் அனைவருக்குமானதாய் இருந்தது, உங்களிடம் ஒரு இளங்கலை (baccalaureate) சித்தியெய்தி இருந்தால் போதும், ஆனால் இப்போது சில முன்நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன” என்று அவர் விளக்கினார். “உதாரணமாக, நீங்கள் புவியியல் படிக்க விரும்பினால் நீங்கள் பயணம் செய்தாக வேண்டும், நீங்கள் ஆங்கிலம் படிப்பதாக இருந்தால் ஆங்கிலத்தில் நீங்கள் இன்டர்ன்ஷிப் (ஒரு வேலைவாய்ப்பு ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் வேலை அனுபவத்தின் காலம்) செய்தாக வேண்டும். பொருளாதாரரீதியாக எல்லாராலும் செய்ய முடியாத சில விடயங்களை நீங்கள் செய்தாக வேண்டும், ஆக இப்போது பல்கலைக்கழகம் அனைவருக்குமானதாய் இல்லை, மாறாக மக்களின் மிகவும் வசதியுடைய பகுதிகளுக்கு மட்டுமானதாய் மாற இருக்கிறது.

பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்குவதற்கு எதிராய் பெருகும் வேலைநிறுத்தங்களுக்கு லியோ தனது ஆதரவை தெரிவித்தார். “நாங்கள் SNCF வேலைநிறுத்தத்துடன் உடன்படுகிறோம். நாங்கள் மாணவர் பிரச்சினைகளுக்காகத் தான் போராடுகிறோம், என்றாலும் அகதிகளிடம் அரசாங்கம் இப்போது நடந்து கொள்ளும் முறை குறித்ததாகவும் அது இருக்கிறது. மாணவர்களை அடிப்பதற்கென்றே போலிஸ்காரர்களை அனுப்புவது. நாங்கள் உடன்படாத சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டேயிருக்கின்ற இந்த அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம்.”


பொதுக் கல்வியை அழிப்பதை நிறுத்து

இந்த இயக்கத்தால் என்ன நடக்குமென்று நம்புகிறீர்கள் என்று கேட்டபோது லியோ கூறினார்: “அழுத்தமளிப்பதற்கு நாங்கள் ஏன் இங்கே நிற்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளச் செய்வதற்கும் முயலுகின்றோம். இன்னும் நாங்கள் நிறையப் பேர் வெளியில் வந்தால், அரசாங்கம் அது செய்வதில் இருந்து பின்வாங்கலாம். எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது என்றாலும், குறைந்தபட்சம் நாங்கள் முயற்சி செய்கிறோம்.”

மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதோடு நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை போர்த் தயாரிப்புக்காக இராணுவத்தின் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர் பின்வாங்கப் போவதில்லை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை WSWS செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதும் லியோ கூறினார். “அது உண்மை தான். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் தாராளமயமாக்கத்தை விரும்புவதால் தான் SNCF சீர்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. முன்னதாக ஜேர்மன் அரசாங்கம் இதனைச் செய்தது. ஆனால் பிரான்ஸ் பொதுச் சேவைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அனைவருக்குமானதாய் இருக்க வேண்டும். கடந்த காலப் போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் அகற்றி விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதாய் உணர்கிறோம், அதனால் தான் நாங்கள் இங்கே நிற்கிறோம்.”

போருக்கு ஐரோப்பிய இளைஞர்களிடையே எதிர்ப்பு பெருகிச் செல்வதை லியோ சுட்டிக்காட்டினார்: “இராணுவத்திற்கு நான் எதிரானவன். உதாரணத்திற்கு மாலியிலும் பிறவெங்கிலும் அவை முன்னாள் பிரெஞ்சு காலனிகள் என்பதால் அங்கே பிரெஞ்சு துருப்புகள் இருக்கின்றன. நமக்கு உரிமையில்லாத நாடுகளின் விவகாரங்களில் நாம் தொடர்ந்து தலையீடு செய்து கொண்டிருக்கிறோம், அது வெறுப்பூட்டுவதாக இருக்கிறது, நாம் அதனை நிறுத்தியாக வேண்டும்.”

கட்டாய இராணுவ சேர்ப்பை மறுஅறிமுகம் செய்வதற்கான திட்டங்களை மக்ரோன் அறிவித்துள்ளது குறித்துக் கேட்டபோது லியோ கூறினார்: “2017 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் இந்தப் பேச்சு வந்தது, ஏனென்றால் மெலோன்சோன் இதேமாதிரியான ஒன்றைக் குறித்து பேசினார், ஆனால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள். நான் அதற்கு எதிரானவன், அரசியல் விடயத்தில் என் ஒத்த சிந்தனை நண்பர்களும் இதற்கு எதிரானவர்களே.”

அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “மறுபடியும் போர்களில் சாவதற்கு நாங்கள் தயாரிப்புடன் இல்லை, அது எங்களுக்கு விருப்பமும் இல்லை. சோர்போனில், கட்டிடத்தின் உள்ளே சென்றால், போருக்குச் சென்று இறந்தவர்களின் ஒரு பட்டியல் பெயர்களை அங்கே நீங்கள் பார்க்கலாம். இதுபோன்று ஆயிரக்கணக்கான பெயர்கள் எங்கெங்குமாய் இருக்கின்றன. இதை நீங்கள் அன்றாடம் பார்க்கிறீர்கள். எனவே கட்டாய இராணுவச் சேர்க்கை குறித்து காதில் கேட்கும்போது, அது வெறுப்பூட்டுவதாக இருக்கிறது.

இதைப் போலவே வரலாறு படிக்கும் ஒரு மாணவியும், கட்டாய இராணுவ சேர்ப்பை மீண்டும் கொண்டுவருவதற்கு ஆலோசனையளித்து மக்ரோனும் ஜோன்-லூக் மெலோன்சோனும் கூறி வருகின்ற கருத்துக்கள் குறித்து அவரும் அவரது நண்பர்களும் கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் போரில் ஈடுபடப் போகிறோம் என்பதாக நாங்கள் உணரவில்லை, ஆனால் எல்லாருக்கும் இராணுவ பயிற்சி விடயத்திலான சீர்திருத்தம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இது எனக்கு மன உளைச்சலளிப்பதாக இருக்கிறது, ஏனென்றால் ஒரு மோதல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்று படுகிறது.”

மக்ரோனின் பொருளாதாரக் கொள்கைகளானது, சமூக செலவினங்களையும் ஊதியங்களையும் வெட்டுவதற்கும் தொழிலாளர் படையின் பெரும்பகுதியை தற்காலிகத் தொழிலாளர்களது அந்தஸ்திற்கு இறக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில், அவரது கல்வித்துறை திட்டநிரல் சமூக சமத்துவமின்மையை இன்னும் அதிகரிக்கவிருப்பதைக் குறித்த தமது கவலையை மாணவர்கள் பலரும் வெளிப்படுத்தினர்.


ஒரு போலிஸ் அரசு வேண்டாம்

மிஷேல் WSWS இடம் கூறினார்: “தொழிலாளர் போராட்டங்களுக்கு நான் ஆதரவானவன், அதில் நானும் சம்பந்தப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அவர்களது வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கும் நான் ஆதரவாய் நிற்கிறேன். முதலில், இரயில்வே தொழிலாளர்களைக் கண்டனம் செய்வதற்கும் சீர்திருத்தத்தை நியாயப்படுத்துவதற்குமான ஒரு பிரச்சாரம் அங்கே இருக்கிறது. இது வெறுப்பூட்டுவதாக இருக்கிறது, ஏனென்றால் நியாயமற்ற ஒரு சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக பல்வேறு மக்களின் பொறாமைக்கு விண்ணப்பம் செய்வதாக இது இருக்கிறது. மேலும் இது இரயில் துறை தொழிலாளர்கள் எல்லாம் சலுகை பெற்ற மக்கள் என்பதான பொய்களை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கிறது; அது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும்.”

மக்ரோனின் கல்விக் கொள்கைகள், பெரும் செல்வந்தர்களுக்கும் உழைக்கும் மக்களின் பரந்த எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்பதை மிஷேல் வலியுறுத்தினார். “சமூக சமத்துவமின்மையை வலுப்படுத்துவது தான் ஒட்டுமொத்தமாக இந்த சீர்திருத்தத்தின் தாக்கமாக இருக்கும். ஏனென்றால் என்ன காணக் கூடியதாக இருக்கிறதென்றால், மக்களில் சில குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே பொதுவான, கல்விப் பிரிவு படிப்புகளை தேர்வுசெய்ய முடியும், தொழிலாளர் சந்தையை விட்டு தற்காலிகமாக அகல முடியும். அதற்கும் மேலே, இந்த வாரத்தில் தேசிய நாடாளுமன்றத்தின் ஒரு ஆணையம், கல்விக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான ஒரு மசோதாவை ஆராயத் தொடங்கவிருக்கிறது.”

மக்ரோனின் கல்விச் சட்டம் எவ்வாறு சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும் என்பதை எமிலியும் விமர்சனம் செய்தார். “என்ன படிப்பு படிக்க வேண்டும், எந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டும், எந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே யோசித்து நீண்ட-கால திட்டங்கள் கொண்டிருக்கக் கூடிய குடும்பங்களுக்கு இது உண்மையிலேயே அனுகூலமளிக்கும். இத்தகைய கணக்குகள் போடுவதில் அனுகூலம் பெறக் கூடிய ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளது குடும்பங்கள்தான் இந்த வகையில் பலன்பெறும்.... நிதிப் பிரச்சினைகளை சமூக மற்றும் கல்வித் தெரிவின் ஒரு கொள்கையைக் கொண்டு தீர்ப்பது என்பது சரியான வழியல்ல. அது நல்லதல்ல என்றே நான் நினைக்கிறேன்.”

மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு அவர் ஆதரவளிக்கிறாரா என்று கேட்டபோது எமிலி கூறினார்: “ஆம், நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அநேக மாணவர்களுக்கு அணிதிரளுகின்ற அவர்களது முடிவின் ஒரு பிரிக்கவியலாத பாகமாக அது இருப்பதாகவும் கூட நான் நம்புகிறேன்.... குறைந்த கால இலாப நோக்குத்தான் எப்போதும் அரசின் கொள்கையாக இருக்கிறது. அது சரியான அணுகுமுறை அல்ல.”