ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Syria strikes, drumbeat grows for wider US war

சிரியா மீதான தாக்குதல்களுக்கு பின்னர், இன்னும் பரந்த அமெரிக்க போருக்கான முழக்கம் அதிகரிக்கிறது

By Will Morrow
19 April 2018

சிரியா மீதான கடந்த வாரயிறுதி அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு ஏவுகணை தாக்குதல்களை அடுத்து, அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தினுள், ரஷ்யாவுடன் ஓர் அணுஆயுத மோதலைக் கொண்டு அச்சுறுத்தும், இன்னும் பரந்த ஒரு போருக்கான பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.

செவ்வாயன்று, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சட்ட வல்லுனர்கள் அத்தாக்குதலின் "மட்டுப்படுத்தப்பட்ட" தன்மைக்காக ட்ரம்ப் நிர்வாகத்தைத் தாக்கியதுடன், அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியவும், ஈரான் மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்ள இன்னும் அதிகளவில் பரந்த இராணுவ நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை பொறுப்பேற்க வேண்டுமென்றும் கோரினர்.

பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஆகியோருக்கு பிரத்யேக விளக்கமளித்த பின்னர், குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸி கிரஹாம் செய்தியாளர்களுக்கு கூறுகையில், நிர்வாகத்திடம் மூலோபாயம் இல்லை, “சிரியாவை அசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு வழங்க" விரும்பமுற்றிருப்பதாக தெரிகிறது என்றார். அவர் கூறினார், “நான் நினைக்கிறேன், நாம் எல்லோரும் ட்வீட் செய்வோமே தவிர நடவடிக்கை எடுக்க மாட்டோமென, இத்தாக்குதலுக்குப் பின்னர், அசாத் நினைக்கக்கூடும்.”

சிரியாவின் சில பகுதிகளில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட நிரந்தர மண்டலங்களை ஏற்படுத்துவற்கு கிரஹாம் அழைப்புவிடுத்தார், இது தவிர்க்கவியலாதவாறு ரஷ்ய விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதை அவசியப்படுத்தும், அல் கொய்தா தொடர்பு கொண்ட பினாமி படைகள் மற்றும் குர்திஷ் பினாமி படைகளுடன் கூட்டு சேர்வதற்கு இன்னும் அதிக அமெரிக்க துருப்புகளை அம்மண்ணில் இறக்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார். தொடர்ந்து “எதிர்ப்பின்றி போர்க்களத்தை வெல்வதற்கு" ரஷ்யா மற்றும் ஈரானை அனுமதிக்கக்கூடாது என்றவர் அறிவித்தார்.

அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறும் ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை, ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் கூன்ஸ் விமர்சித்தார், அவர் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில், “சிரியாவில் நாம் ஈடுபட்டிருப்பது நமக்கு அவசியமானதாகும்,” என்றார். “நாம் முழுமையாக பின்வாங்கிவிட்டால், எந்தவொரு இராஜாங்க தீர்விலும் அல்லது மறுகட்டமைப்பிலும் அல்லது அசாத்திற்கு அடுத்து வருபவரின் எந்தவொரு நம்பிக்கையிலும் நமது செல்வாக்கு இல்லாமல் போய்விடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பொறுப்பற்றத்தன்மை நேற்று நியூ யோர்க் டைம்ஸில் சூசன் ரைஸ் எழுதிய ஒரு சிறப்பு-தலையங்க கட்டுரையில் வெளிப்பட்டது, இவர் ஐ.நா. சபைக்கான தூதராகவும், பின்னர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் சேவையாற்றியவர்.

அக்கட்டுரையில், ரைஸ் அமெரிக்க துருப்புகளை எந்தவிதத்திலும் திரும்ப பெறுவதை ஆணித்தரமாக எதிர்க்கிறார். சிரியாவின் பெட்ரோலிய ஆதார வளங்களை உள்ளடக்கிய, துருக்கி மற்றும் ஈராக்கின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லையோரத்தை ஒட்டியுள்ள சுமார் மூன்றில் ஒரு பங்கு சிரிய பகுதியைக் காலவரையின்றி ஆக்கிரமிக்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அப்பெண்மணி அழைப்புவிடுக்கிறார். இது அந்நாட்டை நிரந்தரமாக துண்டாடுவதற்காக அதிகரித்தளவில் அடிக்கடி பகிரங்கமாக அமெரிக்க ஊடகங்களால் விடுக்கப்பட்டு வரும் அழைப்புகளின் அதே தொனியில் உள்ளது.

வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் "சுதந்திரப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடைமுறையளவில் உள்ளாட்சி அரசு நிர்வாகத்தை ஸ்தாபிக்கவும், மறுக்கட்டுமானம் செய்யவும், பாதுகாக்கவும்" உதவ வேண்டுமென ரைஸ் எழுதுகிறார். இவையெல்லாம், அப்பிராந்தியத்தில் நவ-காலனித்துவ கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும், அதை அசாத் ஆட்சி மற்றும் ரஷ்ய மற்றும் ஈரானியப் படைகளுக்கு எதிரான செயல்பாட்டுத் தளங்களாக பயன்படுத்துவதற்குமான குறிச்சொற்களாகும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் குண்டுவீசியதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மோசடியான இரசாயன ஆயுத தாக்குதல்கள் என்ற சாக்குபோக்குகளைக் கைவிட்டு, ரைஸ் இதுபோன்றவொரு தலையீட்டின் நோக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறார்: “இது ஈராக், சிரியா மற்றும் லெபனான் வரையில் நீண்ட பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஈரானிய அபிலாஷைகளைத் தடுப்பதற்கும்; மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளில் செல்வாக்கை தக்க வைக்கவும்; மற்றும் ஓர் இராஜாங்க தீர்வு நிலுவையில் இருக்கின்ற நிலையில், சிரிய எல்லையின் ஒரு கணிசமான பகுதியை திரு. அசாத்திற்கு மறுக்கவும் அமெரிக்காவை அனுமதிக்கும்,” என்கிறார்.

இந்த மூலோபாயம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஏப்ரல் 16 தலையங்கத்துடன் அடிப்படை உடன்பாட்டைக் கொண்டுள்ளது, அது வடக்கு சிரியாவில், யூரேப்டஸ் நதியின் கிழக்கே அமெரிக்கா ஆக்கிரமித்த பகுதியையும் மற்றும் ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியையும் இரண்டு இடங்களிலும் "பாதுகாப்பு மண்டலங்களை" நிறுவுமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கிறது. இது "சிரியாவின் ஏனைய பகுதிகள் மீதான அசாத்தின் கட்டுப்பாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்,” அதேவேளையில் "அமெரிக்கா அப்பிராந்தியத்தை ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்காது என்பதற்கும் ஒரு சமிக்ஞை காட்டும்,” என்று அப்பத்திரிகை எழுதுகிறது. “இன அடிப்படையில் குடியேற்ற பகுதிகளாக அந்நாட்டை பிளவுபடுத்துவதன் அடிப்படையில், அமைதிக்காக" செயல்பட அத்தலையங்கம் அழைப்பு விடுக்கிறது.

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்திய போருக்கான ஒரு முன்னோக்கிய தளத்தை அமைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பகுதியாக வகை செய்யும் விதத்தில், சிரியாவையும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் நிரந்தரமாக துண்டாடுவது மற்றும் மறுகட்டமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சிரியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் Ryan Crocker மற்றும் ஜனநாயகக் கட்சி தரப்பில் அணி சேர்ந்த புரூகிங்ஸ் பயிலகத்தின் மூத்த ஆய்வாளர் Michael O’Hanlon ஏப்ரல் 15 அன்று ஜேர்னலில் எழுதிய ஒரு கட்டுரை, எதிர்கால விமானத் தாக்குதல்கள் "அரசியல் தலைமையை அனேகமாக திரு. அசாத்தின் கட்டுப்பாட்டை மற்றும் இராணுவக் கட்டளையையே கூட மீறி முண்டியடித்துக் கொண்டு செல்லும்... ஆத்திரமூட்டலைச் சார்ந்து ஈரானுக்குள் இலக்கு வைப்பதும் மட்டுப்படுத்தப்படக் கூடாது,” என்று குறிப்பிட்டது.

குண்டுவீசுவதற்கு காங்கிரஸில் ஒப்புதல் கோருமாறு பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் ட்ரம்பை வலியுறுத்தி இருப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டதாகவும் இராணுவ மற்றும் நிர்வாகத்தின் அநாமதேய அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் செவ்வாயன்று டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. “கடந்த வாரம் நடந்த வெள்ளை மாளிகை கூட்டங்கள் பலவற்றில், அவர் [மாட்டீஸ்] இராணுவ செயல்பாடுகளை பொதுமக்களின் ஆதரவுடன் இணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்—இந்த பார்வையை திரு. மாட்டீஸ் நீண்டகாலமாக பேணி வருகிறார்,” என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.

இதேபோல சமீபத்திய தலையங்கம் ஒன்றிலும் டைம்ஸ் குறிப்பிடுகையில், சிரியாவிலும் ஏனைய இடங்களிலும் கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் சட்டமசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

ரஷ்யா பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும் விதத்தில் சிரிய இலக்குகளை தேர்ந்தெடுக்குமாறு மாட்டீஸ் அறிவுறுத்தி இருப்பதாகவும் பரவலாக செய்திகள் குறிப்பிட்டன. இந்த பரிந்துரைகளுக்குப் பின்னால் இருப்பது என்னவென்றால், இராணுவமும் சரி அரசியலும் சரி இரண்டுமே, மிகப் பெரிய எண்ணிக்கையில் அமெரிக்க துருப்புகளை ஈடுபடுத்தும் மற்றும் ரஷ்யா அல்லது/மற்றும் ஈரானுடன் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லும் ஒரு விரிவாக்கப்பட்ட இரத்தந்தோய்ந்த போருக்குத் தயாரிப்பு செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளன. இதற்காக அமெரிக்காவுக்குள் நிலவும் போர்-எதிர்ப்பை ஒடுக்க வேண்டியுள்ளது, இதற்கு காங்கிரஸில் நிறைவேற்றப்படும் ஒரு மூடுமறைப்பு அவசியமென கருதப்படுகிறது.

ரைஸ் அவரின் டைம்ஸ் சிறப்புக்-கட்டுரையில், “ரஷ்யாவுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து வைக்குமாறும்", அதேவேளையில் "ரஷ்யா மற்றும் ஈரானுக்கு சுதந்திரமான ஆற்றலை" அனுமதிக்க வேண்டாமென்றும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கிறார். வாஷிங்டன் "இரசாயன ஆயுதங்கள் சம்பந்தமாகவோ அல்லது பிற ஆத்திரமூட்டல்களைக் கொண்டோ" ரஷ்யாவுக்கு எதிராக "உறுதியாகவும் சமயோசிதமாகவும் பின்புலத்திலிருந்து அழுத்தமளிக்க" வேண்டுமென அவர் எழுதுகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவின் ஏனைய இடங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதை நீக்கும் வாஷிங்டனின் முனைவை நியாயப்படுத்துவதற்காக, சிஐஏ முடிவில்லாமல் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை மற்றும் சாக்குபோக்குகளைத் தொடர்ந்து இட்டுக் கட்ட வேண்டும் என்பதாகும்.

இதுபோன்ற ஒரு சாக்குபோக்கைத் தான் திங்களன்று வெளியிடப்பட்ட அமெரிக்க-பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு கூட்டு அறிக்கை வழங்கியது, அது தெளிவின்றி மேற்கிற்கு எதிரான "இணையவழி போர்முறை" நடவடிக்கைகளைக் கொண்டு ரஷ்யாவை குற்றஞ்சாட்டியது. அந்த ஆவணம் ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கான ஒரேயொரு பிரத்யேக ஆதாரத்தையோ அல்லது சாட்சியத்திற்கான ஒரு துணுக்கையோ கூட வழங்கவில்லை என்றபோதும், அது அமெரிக்காவில் ஒரு விஷமப்பிரச்சார சூழலை உருவாக்கி மாஸ்கோவுடன் ஒரு மோதலை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஊடகங்கள் எங்கிலும் பரவலாக ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி வலையமைப்புகள் புதனன்று ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் மக்சிம் பொரோடினின் மரணம் குறித்த செய்திகளை அதிகளவில் அறிவிக்க தொடங்கின, இவரின் புலனாய்வுகளில் தனியார்துறை ரஷ்ய இராணுவ ஒப்பந்ததாரர் வாக்னரும் உள்ளடங்குவார். பொரோடின் ஞாயிறன்று Yekaterinburg இல் ஐந்தாம் மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். குறிப்பிட்டுக் கூறும் விதத்தில், எந்தவொரு விசாரணைக்கும் முன்னதாகவே எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், பொரோடினின் மரணத்தை ஊடகங்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உத்தரவிட்டதாக கூறப்படும் படுகொலைகளின் நீண்ட வரிசையில் சமீபத்தியது என்று பரவலாக அறிவித்து வருகின்றன.

இந்த ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் தீவிரத்தன்மை, சிரியா மீதான குண்டுவீச்சுக்கான அதிகாரபூர்வ சாக்குபோக்குகள் பொய்கள் என்று அம்பலமாகும் அதே விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. டூமாவின் கிழக்கு கூத்தா நகரில் சிரிய ஆட்சிதான் விஷவாயு தாக்குதலை நடத்தியது என்ற வாதத்தை ஊர்ஜிதப்படுத்த எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்கின்ற அதேவேளையில், அத்தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர், தலையீடு செய்வதற்கான ஒரு சாக்குபோக்கை வழங்குவதற்காக மேற்கத்திய உளவுத்துறை முகமைகளே அச்சம்பவத்தை நடத்தின என்பதற்கு ஆதாரங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.

உளவுத்துறை முகமைகளுக்கு ஊழல்பீடித்த மற்றும் அடிபணிந்த ஊடங்கள் ஒத்துழைத்து வருகின்றன. ஊடக கண்காணிப்பாளராக செயல்படும் Fairness in Accuracy and Reporting (செய்தி அறிவிக்கைகளது துல்லியத்தன்மையின் நேர்மை) எனும் அமைப்பு நேற்று வெளியிட்ட ஓர் ஆய்வு, பரவலாக வாசிக்கப்படும் முதல் 100 அமெரிக்க பத்திரிகைகளில் ஒன்றே ஒன்று கூட சிரியா மீதான குண்டுவீச்சை எதிர்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டியது.

சிரியா மீதான விஷவாயு தாக்குதல் சாக்குபோக்கைக் கேள்விக்குட்படுத்தும் பிரிட்டன் தளபதி ஷாவின் உரையாடலை ஸ்கை நியூஸ் இடையிலேயே துண்டிக்கிறது

மேற்கத்திய ஊடகங்கள் அரசின் பொய்களுக்கு ஒரு பிரச்சாரகராக பாத்திரம் வகிக்கின்றன என்பதை, ஏப்ரல் 13 அன்று குண்டுவீச்சுக்கான முன்னோக்கிய நகர்வுகள் தொடர்பாக முன்னாள் பிரிட்டிஷ் மேஜர்-ஜெனரல் ஜொனாதன் ஷோ உடன் பிரிட்டனின் ஸ்கை நியூஸ் சேனலின் ஒரு நேர்காணல் எடுத்துக்காட்டியது. அசாத்தின் அரசு படைகள் டூமாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களை" விரட்டியடிக்க உள்ள நிலையிலும் மற்றும் ஒரு விஷ வாயு தாக்குதல் மேற்கத்திய தலையீட்டை தூண்டிவிடும் என்ற நிலையிலும், ஒரு இரசாயன ஆயுத தாக்குதலை அசாத் அரசாங்கம் நடத்துவதற்கு என்ன சாத்தியமான உள்நோக்கம் இருந்திருக்க முடியுமென கேள்வி எழுப்பி, ஷோ உள்ளடக்கத்திலிருந்து திசைமாறியதும், ஸ்கை சேனல் நிகழ்ச்சி நெறியாளர் சமந்தா வாஷிங்டன், பேசிக் கொண்டிருக்கையிலேயே திடீரென இடையிலேயே அவர் இணைப்பைத் துண்டித்து, பேட்டியை நிறுத்தினார்.

மேலதிக வாசிப்புக்கு :

மூன்றாம் உலகப் போர் வேண்டாம்! சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்! [PDF]

அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டணியினரும் சிரியாவுக்கு எதிராய் தாக்குதல்களைத் தொடுத்தன [PDF]

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸூம் சிரியாவுக்கு எதிராக கடுந்தாக்குதலுக்கு தயாராகின்றன

போரும் பொய்களும் தணிக்கையும் [PDF]