ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Senate Intelligence Committee approves “black site” torturer to head CIA

செனட் உளவுத்துறை குழு "நிழலுலக" சித்திரவதையாளரை சிஐஏ தலைவராக்க ஒப்புதல் வழங்குகிறது

Barry Grey
17 May 2018

மத்திய உளவுத்துறை முகமையின் ஓய்வூபெற்ற முன்னாள் செயல்பாட்டாளர் ஜினா ஹாஸ்பெல் ஐ வாஷிங்டனின் பிரதான உளவுமுகமைக்கு தலைவராக்க செனட் சபை வரவிருக்கும் நாட்களில் உறுதிபடுத்த இருப்பது, அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவில் ஒரு புதிய மைல்கல்லாகும்.

மொத்த செனட்டும் ஹாஸ்பேலை உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்க 10 க்கு 5 என்ற கணக்கில் செனட் உளவுத்துறை குழு புதன்கிழமை வாக்களித்தது. வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் புதிய வெளியுறவுத்துறை செயலராக ட்ரம்பால் தேர்வு செய்யப்பட்ட மைக் பொம்பியோவை உறுதிப்படுத்த ஒப்புதல் அளித்த அக்குழுவில், மொத்தம் எட்டு குடியரசு கட்சியினருடன் இரண்டு ஜனநாயக கட்சியினரும் சேர்ந்து ஒப்புதல் வாக்களித்தனர். அவர்கள் பொம்பியோவை உறுதிப்படுத்திய அதேபோல, இந்த வாரத்திற்குள் முழு செனட்டும் ஹாஸ்பெல்லை உறுதிப்படுத்துவதை உத்தரவாதப்படுத்த, ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் "ஆம்" வாக்குகளை வழங்கியுள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்பாக சந்தேகத்திற்குரியவர்களுக்கு எதிராக புஷ் நிர்வாகம் பயன்படுத்திய "விரிவாக்கப்பட்ட விசாரணை உத்திகளை", அதாவது சித்திரவதைகளை, பாதுகாத்தவர் என்றரீதியில் பொம்பியோ இழிபெயரெடுத்துள்ள அதேவேளையில், ஹாஸ்பெல்லோ இரண்டு ஆண்டுகள் தாய்லாந்தில் ஓர் இரகசிய சிஐஏ சித்திரவதை சிறைக்கூடத்தை நிர்வகித்து வந்தார். இதற்கும் கூடுதலாக, தாய்லாந்து "நிழலுலக" சிறைக்கூடங்களில் சித்திரவதை நடவடிக்கைகள் சார்ந்த காணொளிகளை ஆதாரங்களாக நாடாளுமன்ற விசாரணையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முகங்கொடுத்தபோது, இப்பெண்மணி அவற்றை அழிக்க 2005 இல் ஒரு சுற்றறிக்கை எழுதி அனுப்பினார்.

நிராயுதபாணியான நூற்றுக்கணக்கான பாலஸ்தீன போராட்டக்காரர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததையும், காயப்படுத்தியதையும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் நடைமுறையளவில் ஒருமனதாக பாதுகாத்ததன் மூலமாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசில் மேலோங்கியுள்ள குற்றத்தனம் அம்பலமாகி வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், உளவுத்துறை குழுவின் இந்த வாக்குகள் அவருக்கு ஆதரவாக வந்துள்ளன. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் பாரியளவில் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதையும், சித்திரவதைகளைப் பயன்படுத்துவதையும் வெளிநாட்டு கொள்கை மற்றும் உள்நாட்டு கொள்கை இரண்டுக்குமான கருவிகளாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஓய்வூபெற்ற முன்னாள் சிஐஏ அதிகாரியான 33 வயதான ஹாஸ்பெல், தாய்லாந்து சித்திரவைத் கூடத்தில் அப்த் அல்-ரஹீம் அல்-நஷிரியை மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கடித்த சித்திரவதைகளை நேரடியாக மேற்பார்வை செய்தவாராவார்.

வெளியிடப்பட்ட உயர்மட்ட இராஜாங்க ஆவண தகவல்களின்படி, 2014 டிசம்பரில் வெளியிடப்பட்ட சித்திரவதை திட்டம் மீதான செனட் உளவுத்துறை குழு அறிக்கையில் பெரிதும் திருத்தங்கள் செய்யப்பட்ட பதிப்பில், பயங்கரவாதம் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட உத்திகளில், தலைகீழாக கட்டி நீரில் முக்கியெடுக்கும், நீரில் மூழ்கடிக்கும் சித்திரவதைக்கு கூடுதலாக, பின்வருவனவும் உள்ளடங்கி இருந்தன: கைதிகளை சுவரை நோக்கி நிற்க நிர்பந்தித்து வாரக்கணக்கில் சங்கிலியால் கட்டிப்போடுவது, ஒரு வாரத்திற்கும் அதிகமாக அவர்களைத் தூங்கவிடாமல் செய்வது, சவப்பெட்டி அளவிலான பெட்டியில் அவர்களை அடைத்து வைப்பது, உடல்குளிர்ந்து மரணிக்கும் வரையில் கடுங்குளிர்நீர் தொட்டிகளில் அவர்களை நிறுத்துவது, அவர்களைச் சுவரைப் பார்த்து நிறுத்தி மீண்டும் மீண்டும் அடிப்பது ஆகியவை உள்ளடங்கி இருந்தன.

பயன்படுத்தப்பட்ட கொடூரமான மற்றும் வக்கிரமான முறைகளில், “மலத்தை உண்ண வைப்பது,” மற்றும் "மலம் கலந்த நீரை பலவந்தமாக புகட்டுவது" —அதாவது மலம் கலந்த திரவ மற்றும் திட உணவை பலவந்தமாக திணிப்பது ஆகியவை உள்ளடங்கி இருந்தன.

அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டம் இரண்டுமே முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன. ஹாஸ்பெல் உட்பட இதை செய்த குற்றவாளிகள், உயர் அரசு அலுவலங்களில் அல்ல, சிறைக்கூடத்தில் இருக்க வேண்டியவர்களாவர்.

ஹாஸ்பெல்லை மேலுயர்த்தியமை இருகட்சியின் ஒருமித்த நடவடிக்கையாகும். ஆரம்பத்தில் இருந்தே, அவர் நியமனத்தைத் தடுக்க வேண்டுமென்ற எந்த நோக்கமும் ஜனநாயகக் கட்சி தலைமைக்கு இருக்கவில்லை. ஜனநாயகக் கட்சியினரின் பெயரளவிற்கான எதிர்ப்பு ஒரு நாடகம் தான், அதற்கு பின்னால் வாக்காளர்களைக் கருத்தில் கொண்டு, அப்பெண்மணியை உறுதிப்படுத்துவதற்கு வாக்களிக்க எந்தெந்த செனட்டர்களை அனுமதிக்க வேண்டும், சித்திரவதைக்கு எதிர்ப்பு வேஷம் போடுவதில் வாக்களிக்க யாரை அனுமதிக்க வேண்டும் என்பதையெல்லாம் அக்கட்சி தலைமை முன்கூட்டியே முடிவு செய்திருந்தது.

உளவுத்துறை குழுவில் இரண்டாம் நிலை உயர்பதவியில் உள்ள ஜனநாயக கட்சியாளர் மார்க் வார்னர், ஹாஸ்பெல்லுக்கான அவர் ஆதரவை மூடிமறைக்கும் நாடகபாணியிலான முயற்சியில் செவ்வாயன்று அறிவிக்கையில், அந்த முன்னாள்-சித்திரவதையாளர் அதுபோன்ற முறைகளை மீண்டும் புதுப்பிக்க மாட்டார் என்று சமாதானப்படுத்தி அந்த வேட்பாளரிடம் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்ததாக தெரிவித்தார். உண்மையில் வார்னருக்கு ஹாஸ்பெல் எழுதிய கடிதத்தில், உறுதிமொழி விளக்க விசாரணையில் அத்திட்டத்தை அவர் நியாயப்படுத்தியதில் இருந்தும், அதில் அவர் வகித்த பாத்திரம் மீதும் அவரிடம் எந்த மாற்றமும் இருக்கவில்லை என்பதையும், நடுநிலையோடு பார்த்தால் அது ஆக்கபூர்வமற்றதாக இருந்தது என்று அவர் முன்கூட்டியே முடிவு செய்திருந்ததாகவும் மட்டுமே எழுதியிருந்தார். அவர் வார்னருக்குத் தெரிவித்தார்: “இதுமாதிரியான கடுமையான பேச்சுக்கள் பேசுவோரை நான் கண்டனம் செய்யமாட்டேன், மதிப்பார்ந்த உளவுத்தகவல்களைச் சேகரித்திருந்ததை நான் குறிப்பிட்டுள்ளேன், அதேவேளையில் அத்திட்டம் இறுதியில் நமது அதிகாரிகளுக்கும் மற்றும் உலகில் நமது இடத்தையும் சேதப்படுத்தியது,” என்றார்.

புதன்கிழமை வாக்கெடுப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அவரின் சொந்த அறிக்கையில், வார்னர், “நமது தேசத்தின் உளவுத்துறை சமூகத்திற்காக தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மற்றும் நிற்கும் ஒரு சுதந்திர குரலாக” ஹாஸ்பெல்லை பாராட்டினார்.

ஜனநாயகக் கட்சி எந்த பிற்போக்கான அடித்தளத்தில் ட்ரம்பை எதிர்த்து வருகிறது என்பதை வார்னரின் வாக்கு உயர்த்திக் காட்டுகிறது. பிரதிநிதிகள் சபையில் உள்ள அவரது ஜனநாயகக் கட்சி நபரான ஆடம் ஸ்கிஃப் உடன் சேர்ந்து, பல கோடி மில்லியனரும் தொழில்நுட்பத்துறை செயலதிகாரியுமான இவர், ரஷ்ய-விரோத வேட்டை நடத்துவதிலும், இணைய தணிக்கைக்கான முனைவு தொடர்பானவற்றிலும், மற்றும் "போலி செய்திகளை" எதிர்க்கிறோம் என்ற மோசடியான சாக்குபோக்கில் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதிலும் முன்னணியில் இருந்துள்ளார்.

ஆனால் ஹாஸ்பெல்லுக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டிருந்த ஜனநாயகக் கட்சியினர், சித்திரவதையை எதிர்ப்பாக அவர்கள் கூறிக்கொள்வதில் குறைந்த பாசாங்குத்தனம் ஒன்றும் காட்டவில்லை. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி தலைமைக்கும், அத்துடன் அவர்களின் குடியரசுக் கட்சி சமபலங்களுக்கும், அந்த சித்திரவதை திட்டம் குறித்து சிஐஏ மற்றும் புஷ் அதிகாரிகள் முழுமையாக விவரித்திருந்தனர். அவர்கள் அவற்றிற்கு மறைமுகமான ஆதரவை வழங்கியதுடன், அமெரிக்க மக்களை இருட்டுக்குள் வைத்தனர்.

அனைத்திற்கும் மேலாக, ஒபாமாவும் அவர் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னென்னும் செனட் சித்திரவதை அறிக்கை வெளிவராதவாறு இரண்டு ஆண்டுகளுக்கு அதை முடக்கி, அதன் இறுதிப் படிவத்தை வரைந்த உளவுத்துறை குழு பணியாளர்களின் கணினிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அதை ஒழித்துவிட முனைந்தனர். அந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பிரென்னென் சிஐஏ தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார், அதில் அவர் அந்த அறிக்கையைக் கண்டித்ததுடன், சிஐஏ சித்திரவதைகளை நியாயப்படுத்தினார். புஷ்ஷின் கீழ் துணை சிஐஏ இயக்குனராக சேவையாற்றிய பிரென்னென், ஹாஸ்பெல்லின் மேலதிகாரியாக இருந்தார் என்பதோடு, அந்த சித்திரவதை திட்டத்தில் நேரடியாக உடந்தையாக இருந்தார்.

அந்த அறிக்கைக்கு விடையிறுப்பாக, ஒபாமா, அந்த குற்றகரமான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த சிஐஏ முகவர்கள் "அர்ப்பணிப்புமிக்க ஆண்கள், பெண்கள்" “தேசபற்றாளர்கள்" என்றும், அவர்களை ஒட்டுமொத்த தேசமும் பாராட்ட வேண்டுமென்றும் அழைப்புவிடுத்தார். அவர் அத்திட்டத்தை மேற்பார்வை செய்த சிஐஏ அதிகாரிகள் மீதும் மற்றும் புஷ் மீதும் எந்தவொரு வழக்கு தொடுப்பதையும் தடுத்தார். அவர் பிரென்னெனை அவரின் முதல் பதவிக்காலத்தின் போது பயங்கரவாத-தடுப்பு இயக்குனராகவும், இரண்டாவது பதவிகாலத்தின் போது சிஐஏ இயக்குனராகவும் வைத்து அவரது டிரோன் படுகொலை திட்டத்தை மேற்பார்வையிட நியமித்தார்.

புஷ் அதிகாரிகளைப் பாதுகாத்த அதேவேளையில், ஒபாமாவின் நீதித்துறை நீரில் மூச்சுதிணறடித்தலை சிஐஏ பயன்படுத்தியது குறித்து அம்பலப்படுத்தியதற்காக அம்முகமையின் இரகசியங்களை வெளியிட்ட ஜோன் கிரியேகொவை (John Kiriakou) வழக்கில் இழுத்தது. சிறைக்குச் சென்ற ஒரே சிஐஏ செயல்பாட்டாளர் கிரியெகொ மட்டுந்தான், இவர் அந்த குற்றகரமான திட்டத்தைக் குறித்து அமெரிக்க மக்களுக்கு தகவல் அளித்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

செனட் சித்திரவதை அறிக்கையைப் பொறுத்த வரையில், அது வெளியிடப்பட்ட உடனேயே ஜனநாயகக் கட்சியினரால் கைவிடப்பட்டு, ஊடகங்களால் புதைக்கப்பட்டன. இப்போது, அந்த அறிக்கை அம்பலப்படுத்திய அக்குற்றங்களின் பிரதான குற்றவாளிகளில் ஒருவர் சிஐஏ தலைவராக மேலுயர்த்தப்பட்டு வருகிறார், அதுவும் உறுப்பினர் எண்ணிக்கையில் கட்சிகளுக்கு இடையே மிகச் சிறிய இடைவெளியே உள்ள செனட்டில் ஜனநாயகக் கட்சியினர் அவசியமான வாக்குகளை வழங்கியுள்ளனர், இவர்கள் வழங்கி இருக்காவிட்டால், குடியரசுக் கட்சியினர் ஜோன் மெக்கெயின் மற்றும் ராண்ட் பௌல் ஆகியோரின் எதிர்ப்பின் காரணமாக, ஹாஸ்பெல்லை உறுதிப்படுத்துவதற்கான வாக்குகள் கிடைக்காமல் போயிருக்கும்.

ஜனநாயகக் கட்சியில் சித்திரவதையை தீவிரமாக எதிர்க்கும் எந்த கன்னையும் கிடையாது. கடந்த வாரம், பேர்ணி சாண்டர்ஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறுகையில், அவர் ஹாஸ்பெல்லை எதிர்ப்பதாக தெரிவித்த அடுத்த மூச்சிலேயே, பிரென்னென் சிஐஏ இயக்குனராக இருந்து "நல்ல காரியங்கள் செய்ததாக" தெரிவித்தார்.

ஹாஸ்பெல் பதவி உறுதிப்படுத்தப்படுவது சித்திரவதை குறித்த விவாதங்களை முடிவுக்குக் கொண்டு வருமென அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒருமித்த நம்பிக்கை இருப்பதை நியூ யோர்க் டைம்ஸ் புதனன்று தொகுத்தளித்தது. அது எழுதியது, “மதிப்பார்ந்த ஹாஸ்பெல் வெளிப்படையாகவே உறுதிப்படுத்தப்படும் தெளிவான பாதையில் இருப்பது,” “இன்றியமையாதரீதியில் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அம்முகமை சித்திரவதையைப் பயன்படுத்தியது குறித்த விவாத சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறது...”

புஷ் நிர்வாகத்தின் சிஐஏ இயக்குனர் மைக்கெல் ஹேடெனுக்கு தலைமை பணியாளராக இருந்த லறி ப்ஐவெரால் ஆல் ஹில் வலைத் தளத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்துரை, ஹாஸ்பெல்லை ஆதரிப்பதற்கான உள்நோக்கங்களைக் குறித்து அதிக வெளிப்படையாக இருந்தது. அவர் தெரிவித்தார், ஹாஸ்பெல்லுக்கு ஒருமனதாக ஆதரவு வழங்கப்பட வேண்டும் ஏனென்றால் "இன்று புத்துயிர் பெற்றுள்ள ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக பயன்படுத்துவதற்குரிய அறிவை அவர் பெற்றுள்ளார்,” என்றார்.

அடையாள அரசியலுடன் ஊடுருவிய உயர்மட்ட-நடுத்தர வர்க்க ஜனநாயகக் கட்சி அடுக்குகளுக்கு முறையிடுகையில், அவர் முந்தைய நிழலுலக அதிகாரி கௌலைற்றர் (Gauleiter நாஜி ஆட்சிக்கால அதிகாரி) ஐ முதல் பெண் சிஐஏ இயக்குனருடன் ஒப்பிடுமளவுக்குச் சென்றார், அவர் எழுதினார்: “ஒரு நாள் CIA ஐ நிர்வகிக்க விரும்பும் இன்று நம் நாட்டில் உள்ள ஒரு அறிவார்ந்த பெண்ணுக்கு அவர் அன்னையோ அல்லது தந்தையோ இவ்வாறு கூறுவதை செனட் உறுதிப்படுத்த வேண்டும்: 'அதை நோக்கி செல்! ஜினா ஹாஸ்பெல்லைக் கவனி—இன்று அவர் அதை நிர்வகித்து வருகிறார், பார்.'”

அமெரிக்க முதலாளித்துவ "ஜனநாயகம்", இற்றுப்போன நாடாளுமன்ற நடைமுறைகளின் பொறிகளுக்குப் பின்னால், எந்தவொரு சட்ட கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்படும் இராணுவ/உளவுத்துறை/தொழில்துறை எந்திரத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சர்வாதிகாரமாக சுருங்கி போயுள்ளது. இந்த எந்திரம், சிஐஏ சித்திரவதையாளர்களை விட தனது நடவடிக்கைகளுக்காக பொறுப்புகூற வைப்பதில் இருந்து விலக்கீட்டுரிமை பெற்றுள்ள ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த அரசும், சர்வதேச அளவிலும் அமெரிக்காவுக்குள்ளும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு குற்றகரமான சதியில் உடந்தையாய் உள்ளது.