ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Militarism and fascist demagogy in the German parliament

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இராணுவவாதம் மற்றும் பாசிசவாத வாய்வீச்சு

Johannes Stern
22 May 2018

ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) இரண்டு தலையாய இலக்குகளை விவாதிப்பதற்காக கடந்த வாரம் புதிய சட்டமன்ற அமர்வின் முதல் பொது விவாதத்தைக் கூட்டியது: ஒன்று, போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்ந்தோரைச் சிறையிலடைப்பது, வழக்கு தொடுப்பது மற்றும் நாடுகடத்துவது குறித்ததாகும், இரண்டாவது இராணுவ மீள்இராணுவமயமாக்கம் குறித்ததாகும்.

சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்திற்கும் (CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (SPD) இடையே ஒரு புதிய மாபெரும் கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டதால், 2017 தேர்தல்களில் 12.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்த பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மிகப் பெரிய எதிர்கட்சியாக ஆகியுள்ளது.

இதன் விளைவாக, பாரம்பரிய சம்பிரதாயப்படி விவாதத்தை பெரிய எதிர்கட்சி தான் தொடங்கி வைக்கும் என்பதால் துணை-தலைவர் அலிஸ் வைடெல் அதை செய்ய விடப்பட்டார்.

மேடையை அடைந்ததும், 39 வயதான அந்த பாசிசவாத வாய்வீச்சாளர் வெறித்தனமான, பொருத்தமற்ற வசைப்பேச்சுக்களைத் தொடங்கினார், குறிப்பிட்ட புள்ளிகளில் அவரின் சக கட்சி உறுப்பினர்கள் அவர்களின் ஒப்புதல்களை கூச்சலிட்டு வெளிப்படுத்தினர். அரசாங்கம் தேசத்தின் பலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும், “பழங்குடி" சமூகங்களின் மக்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் "நமது தேசத்தின் வீழ்ச்சியை" உறுதிப்படுத்துவதாகவும் கண்டித்தார்.

ஜேர்மன் அதிவலது

ஜேர்மன் குடும்பங்களின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு ஆளும் கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று அறிவித்த அவர், அதேவேளையில் "முஸ்லீம் புலம்பெயர்வு" “மக்களைப் பெரிதாக்கி வருகிறது,” என்றார், அவர்கள் அவர் "கண்ணைத்தவிர உடல்முழுவதையும் மறைக்கும் பர்க்காக்கள், கத்தி வைத்திருப்பவர்கள், வேறெதற்கும் இலாயக்கற்றவர்கள்,” என்று அழைத்தார்.

“உங்களின் அரசு-நிதி ஓய்வூதியங்களுக்கு யார் பணம் செலுத்துவார்கள்?” என்றவர் கோரினார், “திரு. Hofreiter [பசுமை கட்சி உறுப்பினர்] உங்களினதும் உட்பட, நீங்கள் இரச்சலோடு தொந்தரவு ஏற்படுத்துபவர்? நீங்கள் தங்கக்கட்டிகளையா இறக்குமதி செய்தீர்கள்?”

ஜேர்மனியர்களை வெளிநாட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களாக வீராவேசமாக சித்தரிப்பதில் இருந்து, யூத-விரோத சதி தத்துவங்களுக்கு (தங்க துண்டுகள்) அதன் இனவாத அநாகரீகத்துடன் பிரத்யேக-சமிக்ஞையிடும் முறையீடுகள் வரையில், அலிஸ் வைடெலின் ஆத்திரம் 1930 களின் தொடக்கத்தில் பழுப்பு-நிற சட்டையணிந்த நாஜி நாடாளுமன்றவாதி ஒருவர் வழங்கி இருக்கக்கூடிய ஓர் உரையாக இருந்தது.

ஆனால் வைடெல் ஏறத்தாழ அவரை ஒரு "முட்டாள்" என்று குறிப்பிட்டிருந்த போதும், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் விவாதத்தைத் தொடங்கி வைத்த அந்த ஆத்திரமூட்டும் வசைப்பேச்சைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தார். மேர்க்கெல் வைடெலைச் சிறிதும் கண்டிக்காமல், இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மூலமாக உலக அரங்கில் ஜேர்மனியின் அதிக ஆக்ரோஷமான பாத்திரம் குறித்த அவர் கண்ணோட்டத்தை விவரிக்க நகர்ந்தார். அவர் புலம்பெயர்வோர் மீதான AfD இன் பாசிசவாத ஆத்திரத்தைக் குறித்து எதுவும் கூறவில்லை ஏனென்றால் அவர் அரசாங்கமே பெரிதும் AfD இன் புலம்பெயர்வு கொள்கைகளைத் தழுவியுள்ளது.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பாசிச துர்நாற்றத்தின் காட்சிப்படுத்தலால் பீதியடைந்த பலரும், யூத-இனப்படுகொலையின் கொடூரங்களுக்குப் பின்னர், இதுபோன்ற வெறிப்பேச்சுக்கள் எவ்வாறு மீண்டுமொருமுறை ஜேர்மனியின் நாளாந்த அரசியல் வாழ்வின் பாகமாக மாறியது என்று ஆச்சரியப்படுகின்றனர். சமீபத்திய வாரங்களில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் AfD இன் பாணியில் அகதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, அகதிகள் நிவாரண அமைப்புகளை "நாடு கடத்துவதற்கு எதிரான தொழில்துறை" என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இனவாதமும் பாசிசமும் மீண்டுமொருமுறை ஆளும் உயரடுக்கின் அரசியல் கருவிகளாக ஆகியுள்ளன என்ற உண்மையை ஜேர்மனி நாடாளுமன்ற விவாதம் அம்பலப்படுத்துகிறது. பகுப்பாய்வின் இறுதியாக, 1930 களின் ஒரு பேரழிவுக்கு இட்டுச் சென்ற இதே கேள்விகள் இன்றும் முன்நிற்கின்றன. ஐரோப்பிய மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடிக்கு, உலகளவில் இராணுவவாதம் மற்றும் போரின் வளர்ச்சி, மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே ஆழமடைந்து வரும் போட்டிகள் என இவற்றிற்கு, ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைகளை ஏற்பதன் மூலமாகவும் பரந்த மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும் ஜேர்மனியின் உயரடுக்குகள் விடையிறுப்பு செய்கின்றன.

பாதுகாப்பு செலவினங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கூடுதல் பில்லியன்கள் எவ்விதத்திலும் போதுமானளவுக்கு நெருக்கத்தில் கூட இல்லையென்று மேர்க்கெல் அறிவித்தார். ஜேர்மனி "நேட்டோவின் வேல்ஸ் உச்சி மாநாட்டின் இலக்குகளுக்கு… பொறுப்பேற்றுள்ளது. இது நமது கூட்டணி உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ளது,” என்றார்.

உறுதியாக, இதன் அர்த்தம் இராணுவ செலவுகளை 2024 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதாகும், எண்ணிக்கை அர்த்தத்தில் தற்போதைய 37 பில்லியன் யூரோ என்பதிலிருந்து 75 பில்லியன் யூரோவுக்கு செலவுகளை அதிகரிப்பது என்பதே இதன் அர்த்தம். இது ஜேர்மனியை காலாகாலத்திற்கும் ஐரோப்பாவின் மிகவும் பலமான இராணுவ சக்தியாக ஆக்கும்.

மேர்க்கெல் தெரிவித்தார், “வெளிநாட்டு தலையீடுகளுக்கு பக்கவாட்டில்,” “தேசிய எல்லை பாதுகாப்பு கூட்டணியின் முக்கியத்துவம் மீண்டுமொருமுறை அதிகரித்து வருகிறது.” அவர் இதையும் சேர்த்துக் கொண்டார்: “நமது சிப்பாய்களை ஆயுதமயப்படுத்த வேண்டியதன் அவசியம் அவர்கள் வெளிநாட்டு தலையீடுகளைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மாறாக… அதேயளவுக்கு அவர்களுக்கு உள்நாட்டிலும் மிகவும் பரந்த உபகரணங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் வழங்கப்பட வேண்டும், அதைக் கொண்டு அவர்கள் இன்று நாம் செய்ய வேண்டிய கூடுதல் பணிகளைச் செய்ய முடியும்,” என்றார்.

திட்டமிடப்பட்ட இந்த இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு நிதி ஒதுக்க, இந்த மாபெரும் கூட்டணி கடுமையான சமூக தாக்குதல்களின் மற்ற சுற்றை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது என்பதை மேர்க்கெல் தெளிவுபடுத்தினார். "வெறுமனே ஐரோப்பிய தரங்களுக்கு ஒத்த விதத்தில் மட்டுமல்ல, மாறாக உலகளவில் என்ன அவசியமோ அத்துடன் ஒப்பிடக்கூடியளவுக்கு, நமது போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு பங்களிப்பு செய்வது" அவசியமாகிறது என்றவர் அறிவித்தார். இது “ஐரோப்பாவின் போட்டித்தன்மையில் மிகவும்" அக்கறை கொண்டிருப்பதாக இருந்தாலும், அது "அதிகமாக ஜேர்மனியின் போட்டித்தன்மையையும்" உள்ளடக்கி உள்ளது.

சான்சிலர் தனது இராணுவ காலணிகளை அணிந்து கொண்டு, ஆளும் உயரடுக்கிற்கு சார்பாக சிக்கன நடவடிக்கைகளைக் கட்டளையிட தயாரிப்பு செய்கின்ற அதேவேளையில், அவர் அதிவலதின் அகதிகள் கொள்கையையும் ஏற்கிறார். மேர்க்கெல் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் ஆதரிக்கும் தடுப்புக்காவல் மையங்களை வெளிப்படையாக புகழ்ந்துரைத்தார், இவை தஞ்சம் கோருவோரை தடுத்து, அடைத்து வைக்க சேவையாற்றும். “தாயகத்திற்கு திரும்ப அனுப்பும் ஒரு நடைமுறை கலாச்சாரத்தை உருவாக்குவதே" பிரச்சினை, “தங்குவதற்கு யாருக்கெல்லாம் உரிமை இல்லையோ, அவர்கள் வெளியேற வேண்டும்,” என்றவர் பிரதிநிதிகளிடையே தெரிவித்தார்.

மாபெரும் கூட்டணியின் இந்த வலதுசாரி திட்டநிரல் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கருத்தொருமித்த ஆதரவைப் பெற்றுள்ளது. மேர்க்கெல் உரையாற்றிய போது ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளோடு சேர்ந்து சுதந்திர ஜனநாயக கட்சி (FDP), பசுமை கட்சி மற்றும் இடது கட்சியின் பிரதிநிதிகளும் கைத்தட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இடது கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாரா வாகன்கினெக்ட், “ஒரு சுதந்திரமான மற்றும் ஆக்ரோஷமான ஐரோப்பிய வெளியுறவு கொள்கைக்கு" முறையிட்டார், மேலும், AfD இன் கைத்தட்டலுடன், அமெரிக்கவாத-எதிர்ப்பை உபதேசித்தார். சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னர், “தலைமை கொடுங்கள்! இந்நாட்டிற்கு தலைமை கொடுங்கள்!” என்று மேர்க்கெலுக்கு அழைப்புவிடுத்தார்.

1933 இல் எழுதப்பட்ட “தேசிய சோசலிசம் என்றால் என்ன” என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் கட்டுரையிலிருந்து அவரின் அறிவார்ந்த சொற்களை மேற்கோளிடுவதானால், “அவநம்பிக்கை அடைந்த ஒவ்வொரு குட்டி-முதலாளித்துவவாதியும் ஹிட்லராக ஆக மாட்டார், ஆனால் அவநம்பிக்கை அடைந்த ஒவ்வொரு குட்டி-முதலாளித்துவவாதிக்கு உள்ளேயும் ஹிட்லரின் துகள் தங்கியிருக்கும்.”

AfD இன் துணைத் தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்ட், அவர் உரையில், ஜேர்மனி மீண்டும் ஓர் இராணுவவாத வல்லரசு வெளியுறவு கொள்கைக்குத் திரும்ப வேண்டுமென கோரியதில், நேரடியாக ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியரும் இந்த அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஹெர்பிரட் முன்ங்லெரை மேற்கோளிட்டார். ஹெர்பிரட் முன்ங்லெர் நம்மை காண்பதைப் போல, ஒரு மத்தியஸ்த அதிகாரமாக, “ஒரு 'மைய அதிகாரமாக'", ஜேர்மனி, ஐரோப்பிய கொள்கைக்கு ஒரு பொதுவான போக்கைக் கண்டறிய வேண்டியுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் அங்கீகரிக்கும் வகையில், முப்பதாண்டு கால போர் குறித்த அவரின் நூலில் முன்ங்லெர் "மதிப்புகளுடன் பிணைந்த வெளியுறவு கொள்கையை" நிராகரிப்பதை மேற்கோளிட்டார், அந்நூல் தொடக்கத்திலேயே அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை உள்ளடக்கி உள்ளது: “மதிப்புகளுக்கு நிபந்தனையின்றி பொறுப்பேற்பதன் நாசகரமான விளைவுகள் குறித்த சிறந்த விபரங்களை முப்பதாண்டு காலப் போரின் எடுத்துக்காட்டிலிருந்து கற்றுக் கொள்ள முடியும்.”

“மதிப்புகளுடன் பிணைந்த" வெளியுறவுக் கொள்கையை நிராகரிப்பது என்பது, நடைமுறையில் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் முன்ங்லெரின் சக-கூட்டாளி ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி நான்காண்டுகளுக்கு முன்னர் தெளிவுபடுத்தினார். “பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்க, கிராமங்களை எரிக்க, மக்களைத் தூக்கில் தொங்க விட, பயங்கரவாதிகள் செய்வதைப் போல, அச்சம் மற்றும் பீதியைப் பரப்ப ஒருவர் விரும்பவில்லை என்றால், பின் ஒருவரால் இதுபோன்றவொரு மோதலில் ஒருபோதும் ஜெயிக்க முடியாது, அவர் மொத்தத்தில் ஒதுங்கிக் கொள்வதே நல்லது,” என்று பார்பெரோவ்ஸ்கி மத்திய கிழக்கில் ஜேர்மன் இராணுவ தலையீடுகளுடன் தொடர்புபடுத்தி அக்டோபர் 2014 இல் தெரிவித்தார்.

அந்நேரத்தில், சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டுவதற்குப் பின்னால் இருந்த புறநிலை உந்துசக்திகளை பகுத்தாராய்ந்து, அந்நேரத்தில் எச்சரித்தது: ஜேர்மனி, நாஜிக்களின் படுபயங்கரமான குற்றங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, “மேற்குலகை வந்து அடைந்து,” அமைதியான வெளிவிவகாரக் கொள்கையை தழுவிக்கொண்டு, நிலையான ஜனநாயகத்தை வளர்த்தெடுத்திருந்தது, என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரங்கள் பொய்கள் என அம்பலப்பட்டுள்ளன. ஜேர்மன் ஏகாதிபத்தியம் அது வரலாற்றுரீதியில் எழுந்ததைப் போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் முழு ஆக்ரோஷத்தனத்துடன் மீண்டுமொருமுறை அதன் நிஜமான நிறங்களைக் காட்டி வருகிறது.”

இந்த மதிப்பீடு மாபெரும் கூட்டணியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளால் மற்றும் AfD அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒருங்கிணைந்திருப்பதன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆளும் உயரடுக்கு மீண்டுமொருமுறை பாசிச முறைகளை ஏற்று, அதன் இராணுவவாதம் மற்றும் போர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அதை தடுக்க வேண்டுமானால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பு ஒரு நனவுபூர்வமான அரசியல் அடிப்படையில் அணித்திரட்டப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான செயலூக்கமான போராட்டமே அவசர அவசியமாகும்.