ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French immigration bill attacks right to asylum

பிரெஞ்சு குடிவரவு மசோதா அடைக்கலம் கோரும் உரிமையை தாக்குகிறது

By Athiyan Silva 
1 May 2018

ஏப்ரல் 22 அன்று, பிரெஞ்சு தேசிய சட்டமன்றம், அடக்குமுறையான அடைக்கலம்-குடிவரவு மசோதாவை 228-139 வாக்குகளால் நிறைவேற்றியுள்ளது, இதில் 24 பேர் வாக்களிக்கவில்லை. அரசியல் ரீதியாக இந்த குற்றவியல் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு, ஏழு நாட்களாக  தேசிய சட்டமன்றம் இது குறித்து விவாதித்தது. அடைக்கலம் கோரும் அடிப்படை ஜனநாயக உரிமையை காலில் போட்டு நசுக்கும் இந்த நடவடிக்கை, அடைக்கலம் கோருவோர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமலேயே அவர்களை நான்கு மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்க பொலிஸை அனுமதிக்கிறது, அவர்களது மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்ய மறுக்கிறது, மேலும் போரில் அழிவுற்ற அவர்களது நாடுகளுக்கே அவர்களை திருப்பியனுப்புகிறது.

குறிப்பாக, நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஒட்டுமொத்தமாக மசோதாவுக்கு எதிராக வாக்களித்த போதிலும், அது நாடுகடத்தலுக்கு எதிரான முறையீடுகளைத் தடைசெய்யும் விதிமுறைக்கு வாக்களித்தது.

இந்த மசோதா, பரந்தபட்ட மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரிஸ், லியோன், ரென்ஸ், மொன்ட்பீலியே, வாலென்ஸ், துலூஸ், கிரெனோபில், பூர்ஜ், பிரைன்கோன், அவிஞான், லில் மற்றும் கலே உள்ளிட்ட நகரங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டனர். மேலும் இது குறித்து, தேசிய அடைக்கல நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களும், நிர்வாக அலுவலர்களும் கூட பல நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த மசோதா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போர்களுடனும் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சர்வாதிகார வடிவிலான ஆட்சிக்கு திரும்புவதுடனும் பிணைந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் லண்டன் உடன் இணைந்து பாரிஸ் சிரியாவிற்கு எதிராக சட்டவிரோத ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கி வெறும் இரண்டு நாட்களுக்கு பின்புதான் உள்துறை மந்திரி ஜெரார் கொலோம்ப் முதலில் இந்த மசோதாவை சட்டமன்றத்தில் முன்வைத்தார். தற்போது ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தற்காலிக தடை விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்துகின்ற நிலையில், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன் மற்றும் பிற நாடுகளில் அவர்கள் நிகழ்த்திய போர்களினால் பத்து மில்லியன்கணக்கானோர் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதை தொடர்ந்து, இன்னும் பரந்த அகதிகள் இடம்பெயர்வு நிகழக்கூடுமென நேட்டோ சக்திகள் எதிர்பார்க்கின்றன.

இந்த மசோதா, அகதிகள் மற்றும் நாடற்ற மக்களின் பாதுகாப்பிற்கான பிரெஞ்சு அலுவலகம் (French Office for the Protection of Refugees and Stateless Persons-OFPRA) அடைக்கலம் கோருவோர் விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் காலத்தை 120 இல் இருந்து 90 நாட்களாக குறைக்கிறது. இன்னும் முக்கியமாக, அடைக்கலம் கோருவோர் ஒரு எதிர்மறையான முடிவை எதிர்த்து தேசிய புகலிட நீதிமன்றத்திற்கு (National Asylum Court-CNDA) முறையீடு செய்யும் காலத்தையும் 30 இல் இருந்து 15 நாட்களாக இது குறைக்கிறது. பொலிஸ் தலைமையகங்கள் பொதுவாக மேல்முறையீட்டு விசாரணைகளை நடத்த ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும் நிலையில், ஒரு எதிர்மறையான OFPRA வின் உத்தரவுக்கு பின்னர், அகதிகளை விரைவாக வெளியேற்ற இது பொலிஸை அனுமதிக்கும். அத்தோடு, வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் தேவையான நிதியை அகதிகள் பெறுவதற்கான போதுமான நேரமும் இதன்மூலம் மறுக்கப்படும்.

இந்த மசோதா, நிர்வாக தடுப்புக்காவல் காலத்தை 16 லிருந்து 24 மணிநேரங்களுக்கு அதிகரிப்பதோடு, மேலும் இழிபுகழ்பெற்ற நிர்வாக தடுப்புக்காவல் மையங்களில் அகதிகளை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகபட்ச காலத்தை 45 லிருந்து 135 நாட்களாக அதிகரிப்பதற்கு அனுமதிக்கிறது. குழந்தைகளும் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து இத்தகைய மையங்களில் காவலில் வைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு, 275 குழந்தைகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

இந்த மசோதா ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் பிரெஞ்சு குடிவரவு சட்டத்தை இன்னும் பலப்படுத்துவதோடு, மேலும் இது, பிரான்சுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதற்கு, நடமாடுவதற்கு அல்லது அவர்கள் வசிப்பதற்கான வழிகளை எளிதாக்க உதவும் மக்களையும் தண்டிக்கிறது. தவறான அடையாள ஆவணங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை அளிக்கவும் மற்றும் இந்த குற்றத்திற்கு 30,000 யூரோ வரையிலான அபராதம் விதிக்கவும் இந்த மசோதா அனுமதிக்கிறது.

புலம்பெயர்ந்த மற்றும் வீடில்லாது வாழும் புலம்பெயர்ந்தவர்களை, சுரங்கப்பாதை போக்குவரத்து நிலையங்கள் மற்றும் வீதிகளில் வைத்து சோதிப்பதற்கு எல்லை ரோந்து மற்றும் சுங்க அதிகாரிகளின் சோதனையையும் இது தீவிரப்படுத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில் அவசரகால நிலைமை திணிக்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான துருப்புக்களும், கடுமையான ஆயுதமேந்திய பொலிஸ்காரர்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பு நிறுவனமான ப்ரொன்டெக்ஸ் கூட (European Border and Coast Guard Agency -Frontex) கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தரை மற்றும் கடல் பகுதிகளில் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு அரண்மிக்க ஐரோப்பாவை அடைவதற்கு முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்துபோகும் தண்டணையையும் வழங்குகிறது.

அகதிகளும் ஆவணமில்லா புலம்பெயர்ந்தோரும், அவர்களது வசிப்பிடங்களாக கூறப்படும் இடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இது அவர்களை கண்காணிக்கவும், மேலும், தேவைப்பட்டால், அவர்கள் எங்கிருந்து தப்பியோடி வந்தனரோ அந்நாடுகளுக்கு அவர்களைத் திருப்பியனுப்பவும் பொலிசாருக்கு உதவும்.

ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மாலியில் போர்களை நடத்திவரும் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், கடந்த மாதம் BFMTV க்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆணவத்துடன், “உலகின் அனைத்து துன்பங்களையும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார். ஊடக மதிப்பீட்டின்படி, பிரான்ஸ் கடந்த ஆண்டு சுமார் 26,000 புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக நாடுகடத்தியது, இது முந்தைய ஆண்டை விட 14 சதவிகித அதிகரிப்பாகும்.

இந்த சட்டத்தின் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் வாய்வீச்சுக்களை, நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) குடியேற்ற விரோத வாய்வீச்சுக்களில் இருந்து வேறுபடுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கின்றது. உள்துறை மந்திரி ஜெரார்ட் கொலோம்ப், தேசிய சட்டமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, "இது அவசியமானது, ஏனென்றால் புகலிடம் கோருவோர் வெள்ளத்தால் பிரெஞ்சு பிராந்தியங்கள் மூழ்கடிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்து வருகின்றன” என்று கூறியதுடன். மேலும், இது தொடர்ந்து நிகழுமானால், “நாளை நம் நாட்டில் சில அத்துமீறல்கள் நிகழும் பட்சத்தில் நாம் ஆச்சரியப்படக்கூடாது” என்றும் கூறினார்.

இந்த குடியேற்றச் சட்டம், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் FN வேட்பாளர் மரின் லூ பென்னுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்புல ஆதரவு பெற்ற மக்ரோனுக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டுமென வாதிட்டவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகின்றது. உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் மீது சமூக தாக்குதல்களை நிகழ்த்துவது, சிரியாவை குண்டு வீசி தாக்குவது, மற்றும் பரந்த போர்களுக்கு தயாரிப்பு செய்வது ஆகியவற்றின் மூலமாக மக்ரோன் மோதல் நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில், முன்னூகிக்கக்கூடிய வகையில் அவர் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக மேலும் வலது நோக்கி திரும்புகிறார்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் இராணுவத்திற்கு 300 பில்லியன் யூரோ செலவிட வகை செய்யும் கட்டாய இராணுவ சேர்க்கை மற்றும் திட்டங்களுக்குத் திரும்ப அவர் அழைப்பு விடுக்கிறார். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவவாத கொள்கையை கொண்டு செல்ல, ஒரு பாசிச, குடியேற்ற விரோத சூழ்நிலையை நம்புவது ஒன்றே வழி எனக் கருதும் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளுடன் அவர் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

குறிப்பாக, இந்த குடியேற்ற சட்டம், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France - LFI) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (New Anti-capitalist Party-NPA) போன்ற பல சக்திகளை அம்பலப்படுத்துகிறது. இவை, லூ பென்னை விட மக்ரோன் "குறைவான தீமை” எனக் கூறி தங்களை ஊடகங்களுடன் இணைத்துக்கொண்டன. புலம்பெயர்ந்தோர்களின் உரிமைகள் மீதான மக்ரோனின் தாக்குதலில் அவை அரசியல் ரீதியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன.

தேசிய சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்த புதிய மசோதா “காட்டுமிராண்டித்தனமானது” என்று குறை கூறி மெலோன்சோன் முதலைக் கண்ணீர் வடித்தார். இது, மெலோன்சோனின் அரசியல் போலித்தனத்தையே நிரூபிக்கிறது, இவர், சிரியா மற்றும் மாலியில் போருக்குச் சென்ற, சிக்கன நடவடிக்கைகளை திணித்த, மற்றும் பிரான்சில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரோமா மக்களை நாடுகடத்திய, சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டுக்கு 2012 தேர்தலில் வாக்களிக்க அழைப்புவிடுத்தார்.

2017 ஜனாதிபதி தேர்தலில், முதல் சுற்றில் 7 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும், தேர்தலில் வெற்றிபெற மக்ரோனுக்கு மெலோன்சோன் உதவினார். ஆனால் இராண்டாவது சுற்றில், FN வேட்பாளர் மரின் லூ பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் வாக்களிக்க வேண்டுமா என்பது குறித்து ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவரும் NPA உம் மறுத்துவிட்டனர்.

மக்ரோனுக்கு தமது இடதுசாரி எதிர்ப்பை வெளிப்படுத்தி வாக்களித்த மில்லியன் கணக்கான மக்கள் குறித்த அவர்களது அரசியல் பொறுப்புகளை அவர்கள் கைவிட்டமையானது, லூ பென்னுக்கு ஒரு ஜனநாயக மாற்றீடாக மக்ரோன் இருந்தார் என்ற கிட்டத்தட்ட சவால் செய்யமுடியாத பொய்யை ஊக்குவிப்பதற்கு ஊடகங்களை அனுமதித்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவ கட்சி (Parti de l’égalité socialiste) மட்டுமே ஒரு செயலூக்கமிக்க இரண்டாவது சுற்று தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்புவிடுத்த ஒரே கட்சியாகும். இந்த புறக்கணிப்பானது, வெற்றி பெற்ற எந்தவொரு வேட்பாளரின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தினை ஒரு போராட்டத்திற்கு தயார் செய்வதற்கான ஒரே சிறந்த வழி என்பதை இது வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.