ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump lauds “declaration for peace” on Korean Peninsula

கொரிய தீபகற்ப "சமாதான பிரகடனத்தை" ட்ரம்ப் பாராட்டுகிறார்

By James Cogan
28 April 2018

வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜா-இன் ஆகிய இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள், “சமாதானம், செழுமை மற்றும் கொரிய தீபகற்ப ஐக்கியத்திற்கான" ஒரு கூட்டு "பிரகடனம்" வெளிவிடப்பட்டதுடன் நிறைவடைந்தது.

அந்த ஆவணம் ஒருவருக்கு எதிராக ஒருவர் "விரோத நடவடிக்கைகளை" நிறுத்திக் கொள்ளவும்; குடும்ப மறுஐக்கியங்கள் மற்றும் கலாச்சார பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்தவும்; ரயில் மற்றும் சாலை இணைப்புகளை மீளமைக்கவும்; 1950-53 கொரிய போரை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்த ஒப்பந்தத்தைத் தொடரவும்; மற்றும், மிகவும் கவனமான வார்த்தைகளில், “ஒரு அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பமாக, முழுமையாக அணுஆயுதமயமாதல் இல்லாத நிலைமையை" அடைவதையும் உடன்படிக்கைகள் விவரித்திருந்தது.

ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டின் பொருளாதாரத்தை மேற்கொண்டும் முடக்கும் கடுமையான தடையாணைகளுடன் சேர்ந்து, வட கொரியாவை "முற்றிலுமாக அழிப்பதற்கான" ட்ரம்ப் நிர்வாக அச்சுறுத்தல்களால் அந்த பேச்சுவார்த்தைகள் தூண்டப்பட்டிருந்தன. கிம் ஜொங்-யுன் தலைமையிலான இராணுவ ஆட்சி, அதன் உயிர்பிழைப்புக்கும், பியொங்யாங்கில் உள்ள ஆளும் குழுவின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதமளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்ள முயன்று வருகிறது. இதேபோல தென் கொரிய முதலாளித்துவ வர்க்கமும் தீபகற்பத்தில் ஒரு பேரழிவுகரமான போரைத் தவிர்த்து, முதலீடு மற்றும் சுரண்டலுக்கு வட கொரியாவின் மூல-வளங்கள், மலிவு உழைப்பு மற்றும் போக்குவரத்து பாதைகளைத் திறந்துவிடும் ஓர் ஏற்பாட்டை விரும்புகிறது.

நேற்றைய பிரகடனத்தின் உள்ளடக்கம் ஏறக்குறைய நிச்சயமாக, பெரிய வெள்ளி காலகட்டத்தில், இப்போது ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலராக உள்ள மைக் பொம்பியோவின் வட கொரியாவுக்கான இரகசிய விஜயத்தின் போது அவரால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. அதன் மிக முக்கிய வகைமுறை குறிப்பிட்டது: “வட கொரியா எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் அர்த்தமுள்ளவை என்பதோடு, கொரிய தீபகற்பத்தின் அணுஆயுதமயமாக்கலை நிறுத்துவதற்கு முக்கியமானவை… என்ற கண்ணோட்டத்தை தென் கொரியாவும் வட கொரியாவும் பகிர்ந்து கொண்டன,” என்று குறிப்பிட்டது.

ட்ரம்ப் மற்றும் கிம் ஜொங்-யுன் க்கு இடையிலான ஒரு சந்தப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த நிபந்தனை, “அணுஆயுதமயமாக்கல் தவிர்ப்பை முழுமையாக மெய்ப்பிப்பதை" நோக்கிய "அர்த்தமுள்ள" படிகளாக வட கொரியாவுக்கு இருந்தது. மேற்கொண்டு எந்த அணுஆயுத மற்றும் நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளும் செய்யப்படப் போவதில்லை என்று தான் இதுவரையில் பியொங்யாங் ஆட்சி அறிவித்துள்ளது. ஆனால் அதன் அணுஆயுத ஏவுகணைகள் இப்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டுள்ள நிலையில் அதற்கு பரிசோதனைகள் தேவைப்படாது என்ற அடித்தளத்தில் தான் அது அவ்வாறு செய்தது. அதன் சிறிய அணுஆயுத தளவாடங்களை அப்புறப்படுத்தவோ அல்லது அதன் இராணுவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆலைகளை சர்வதேச கண்காணிப்பாளர்கள் அணுகுவதற்கு அனுமதிப்பதற்கோ அது எந்த பொறுப்புறுதியும் கொடுக்கவில்லை.

இருந்தாலும், கொரிய பேச்சுவார்த்தைகளும் அந்த பிரகடனத்தின் மொழியும் தொடர்ந்து வந்த ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் அறிக்கைகள் ட்ரம்ப்-கிம் சந்திப்பு திட்டமிட்டவாறு தொடருமென சுட்டிக்காட்டி உள்ளன. “கொரிய போர் முடிய இருக்கிறது!” என்று ஒரு ட்வீட் சேதியில் அறிவித்து, ட்ரம்ப் ஏறத்தாழ முட்டாள்த்தனமான பாணியில் அந்த பிரகடனத்தைப் பாராட்டினார்.

வட கொரியா மீது பாரியளவிலான ஓர் அமெரிக்க இராணுவ தாக்குதல் குறித்த அபாயகரமான அச்சுறுத்ததல்களில் இருந்து கொரிய தலைவர்கள் கை கோர்த்து ஒருவரையொருவர் தழுவி கொள்வது வரையில், இந்த அரசியல் மாற்றம் வெறும் இரண்டு மாதங்களில் நடந்திருப்பதானது, அதிகரித்து வரும் அமெரிக்க-சீன பதட்டங்களால் தோற்றுவிக்கப்பட்ட கொந்தளிப்புக்கு ஓர் அளவீடாக உள்ளது.

பெய்ஜிங்கைப் பொறுத்த வரையில், வட கொரியாவில் உள்ள பெரிதும் இராணுவமயப்பட்ட அரசு நிச்சயமாக அதன் நோக்கங்களுக்கு சேவையாற்றுகிறது. 1953 க்குப் பின்னர், அது சீனாவின் வடக்கு எல்லைகளுக்கும் தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் இடையே ஓர் இடைத்தாங்கியாக செயல்பட்டுள்ளதுடன், அதேவேளையில் அவற்றை நிரந்தரமாக அச்சுறுத்தியும் வந்துள்ளது.

சீனாவின் மூலோபாய மற்றும் இராணுவ நிலைப்பாடுகளைப் பலவீனப்படுத்துவதே அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மேலோங்கிய நோக்கமாகும், அது அதன் ஜனவரி 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் வாஷிங்டனின் பிரதான உலகளாவிய "வல்லரசு" போட்டியாளராக சீனாவை முத்திரை குத்தியது. போர் மூலமாகவோ அல்லது வட கொரியாவுடன் ஓர் உடன்பாட்டை செய்து கொள்வதன் மூலமாகவோ, அதை அமெரிக்க செல்வாக்கு மண்டலத்திற்குள் உள்ளிழுப்பதே, அடுத்தடுத்து அதிகாரத்திற்கு வந்த நிர்வாகங்களின் அபிலாஷையாக இருந்துள்ளது.

2009 க்குப் பின்னர், வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளும் சிறிய ரக அணுஆயுத தளவாடங்களை அது அபிவிருத்தி செய்தமையும் பியாங்யொங் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ படைகளை அதிகரிப்பதற்கும் சாக்குபோக்குகளை வழங்கி உள்ளன. அமெரிக்கா அதன் மிகவும் அதிநவீன போர்விமானங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணை-தடுப்பு முறைகளை தென் கொரியாவிலும் ஜப்பானிலும் நிலைநிறுத்தி உள்ளது, இவை பிரதானமாக சீனா உடனான ஒரு போரில் பயன்படுத்தும் உத்தேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வட கொரியா நிலைநிறுத்திய "அச்சுறுத்தல்", ஜப்பானில் இராணுவ செலவினங்களைப் பெரிதும் அதிகரிப்பதற்கும் மற்றும் போர் அரங்கங்களில் ஆயுத படைகளை நிலைநிறுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்திற்கு உள்ள அரசியலமைப்புரீதியிலான தடைகளை மறுத்தளிக்க நகர்வதற்கும் ஜப்பானாலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வட கொரியாவுக்கு எதிரான வாய்சவுடால்கள் மற்றும் தடையாணைகளைத் தீவிரப்படுத்தியமை, சீனா உடனான அதன் எல்லையோர தீவிரப்பாட்டின் ஒரு கூறுபாடாக இருந்தது, பகிரங்கமான வர்த்தக போரை நோக்கிய நகர்வுகள் மற்றும் தெற்கு சீனக் கடலில் சீன எல்லை உரிமைகோரல்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சவால்கள் ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

அந்த உள்ளடக்கத்தில், சீனா, அதன் சொந்த காரணங்களுக்காக, வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தவும் மற்றும் அணுஆயுத அழிப்புக்கான கோரிக்கைக்கு அடிபணிய செய்யவும் அதன் மீது அதன் சொந்த அழுத்தத்தைச் செலுத்தியது. அது தடையாணைகளை அமுலாக்கியது, இது வட கொரிய ஏற்றுமதிகள் பொறிவதற்கு காரணமாக இருந்தன. இதன் விளைவாக, பெய்ஜிங் மற்றும் பியாங்யொங்கிற்கு இடையே ஒரு பகிரங்கமான வெடிப்பு அதிகரித்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் வட கொரியா இராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பியதன் விளைவு பெரிதும் நிச்சயமின்றி உள்ளது. சீன மூலோபாய நலன்களுக்குத் தீங்கு செய்யும் உடன்படிக்கைகளை செய்ய வேண்டாமென்பதில் பெய்ஜிங்கிடம் கிம் ஜொங்-யுன் ஆட்சி கணிசமான அழுத்தத்திற்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், வட கொரிய ஆளும் உயரடுக்கு, அமெரிக்க கோரிக்கைகளைப் பூர்த்தி செய்தால், தென் கொரிய முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அதற்கு பெரியளவிலான முதலீடு மற்றும் நிதியியல் விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்கும், அதன் உயிர்பிழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வழி வகுத்து கொடுக்கப்படும்.

“மறுஐக்கியம்" என்பது வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே எல்லையை நீக்கிவிடுவது என்று அர்த்தமில்லை. 1990 களின் போது தென் கொரியாவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட "சூரிய உதய கொள்கை" என்றழைக்கப்படுவது, சீனாவின் "ஒரே நாடு, இரண்டு அமைப்புமுறைகள்" என்ற மாதிரியின் ஒரு வகையாக இருந்தது. வட கொரிய பொலிஸ் அரசு வட கொரிய தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு பாதிப்பொன்றுமில்லாமல் வைக்கப்படும், ஆனால் அந்த தொழிலாள வர்க்கம் தெற்கு செல்வதிலிருந்து தடுக்கப்படும் என்பதோடு, தென் கொரிய பெருநிறுவனங்களுக்கு மலிவு உழைப்பாக கிடைக்க வகைச் செய்யப்படும். வட கொரியாவின் இராணுவ எந்திரம் அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டு, சீனாவின் வடக்கு எல்லையில் அச்சுறுத்துவதற்கு மாற்றி திசைதிருப்பப்படும்.

ஓர் அதிகாரப்பூர்வ சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவது என்ற ஒரு பிரிவில் உள்ள வார்த்தைகள் தான் பெய்ஜிங்கில் எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்திருக்கக்கூடிய கொரிய பிரகடனத்தின் ஒரு அம்சமாக உள்ளது. இதுபோன்றவொரு அசம்பாவிதத்தை நோக்கி அமெரிக்காவுடன் ஒரு கூட்டத்தை நடத்த, அல்லது, அமெரிக்கா மற்றும் சீனா இரண்டுடனும் ஒரு கூட்டத்தை நடத்த கொரியர்கள் செயலூக்கத்துடன் செயல்படுவார்கள் என்று அது குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீன ஈடுபாடு இல்லாமலேயே ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்படும் என்பதற்கு பியாங்யொங் ஒரு சமிக்ஞை அனுப்பியது.

அதுபோன்றவொரு சமரசத்தை நோக்கி நகரும் வழியில் நிற்கும் மிகப்பெரிய பிரச்சினை வட கொரியாவின் அணுஆயுத தளவாடங்களாகும். வட கொரிய அணுஆயுதங்களை அழிப்பதற்கு பியாங்யொங்குடன் ட்ரம்ப் நிர்வாகம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் என்ற வாதம் மீதான நம்பகத்தன்மையை ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டில் பணயம் வைத்துள்ளார். “அணுஆயுதங்களை அழிக்கும்" நிகழ்முறை பல ஆண்டுகளுக்கு நீளும் என்பதால், சமாதானத்திற்கான முன்நிபந்தனையாக அமெரிக்காவினால் ஏதோவொரு வகை உடன்பாடும் செய்யப்படலாம்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடனான நேற்றைய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ட்ரம்ப் வலியுறுத்தினார்: “நாங்கள் கடந்த நிர்வாகத்தின் தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம். அணுஆயுதங்கள் அழிக்கப்படும் வரையில் நாங்கள் அதிகபட்ச அழுத்தத்தைத் தொடர்வோம்,” என்றார். சமீபத்திய வாரங்களில் பல சந்தர்ப்பங்களில், அமெரிக்காவின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அமெரிக்கா வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து "வெளியேறும்" என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வட கொரியாவை "முற்றிலுமாக அழிப்பதற்கான" அவரின் அச்சுறுத்தலை அவர் நிர்வாகம் திரும்பவும் ஏற்கும் என்பதற்கு ஒரு பகிரங்க அறிகுறியாக, ட்ரம்ப் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், “நாங்கள் இப்போது சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறோம். [அணுஆயுத அழிப்பை] என்னால் செய்ய முடியுமா என்பதை காணும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. என்னால் முடியாவிட்டால், அது பல நாடுகளுக்கும், பலருக்கும் மிகவும் கடுமையான நேரமாக இருக்கும்,” என்றார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

North and South Korea hold “peace” summit
[27 April 2018]

வடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம்

[19 April 2018]

போர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர்

[18 April 2018]