ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fearful of widening mass anger over police shootings

Indian authorities shut down polluting copper plant in Tuticorin

போலிஸ் துப்பாக்கிச்சூடு மீது பரவிவரும் பாரிய கோபத்திற்கு அஞ்சி,

இந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்

By Deepal Jayasekera
25 May 2018

தூத்துக்குடியில் வேதாந்தா ரிசோர்சஸ் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் குறைந்தபட்சம் 13 பேரைக் கொன்று, 100 க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்திய, செவ்வாய்கிழமை போலிஸ் படுகொலை மீதான மக்கள் கோபத்தை முகங்கொடுத்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அந்த மாசுபடுத்தும் ஆலையை மூடியுள்ளனர். அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி அளவான ஆண்டுக்கு 40,000 டன்களை இரட்டிப்பாக்கும் அதன் திட்டங்களுக்கும் மெட்ராஸ் நீதிமன்றம் ஒன்று தடைவிதித்தது.

புதன்கிழமை மாலை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அந்த உருக்காலைக்கான மின் வினியோகத்தைத் துண்டிக்குமாறும், அதை மூடுமாறும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வியாழனன்று அதிகாலை நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒரு சுற்றுச்சூழல் பொறியாளரைக் கொண்டு மே 18-19 இல் நடத்திய அதன் பரிசோதனையை அதன் தீர்மானத்திற்கான உத்தியோகப்பூர்வ காரணமாக எடுத்துக்காட்டியது. சுற்றுச்சூழல் அனுமதி நிலுவையில் இருப்பதால் உற்பத்தியை நிறுத்துவதற்கான அந்த ஆணையத்தின் ஏப்ரல் மாத முந்தைய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க தயாராகி வருவதாக அப்பொறியாளர் அறிக்கை அளித்திருந்தார். ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு, தெளிவாக, போலிஸ் தாக்குதல் மீதான மக்களின் சீற்றத்தைக் குறைப்பதற்கு அரசு அதிகாரிகளது ஒரு முயற்சியாகும்.

முந்தைய நாள் நடந்த போலிஸ் படுகொலைகள் மீது புதனன்றும் தூத்துக்குடியில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. போலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். வியாழனன்று, போராட்டங்கள் அண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு பரவியது, நூற்றுக்கணக்கானவர்கள் அந்த போலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஸ்டெர்லைட் உருக்காலை 1996 இல் தொடங்கப்பட்டதிலிருந்தே தூத்துக்குடிவாசிகள் அதை எதிர்த்து வந்துள்ளனர். இந்திய அதிகாரிகள் இக்கவலைகளைப் புறக்கணித்து விட்டு, அந்த ஆலை சுற்றுச்சூழலை விஷமாக்கி வருகிறது என்பதற்கு மறுக்கவியலாத ஆதாரங்கள் இருந்த போதும், அதை தொடர்ந்து செயல்பட அனுமதித்தன. நச்சுக்கழிவுகளைக் காட்டி அதிகாரிகள் அதை மூட உத்தரவிட்ட போதெல்லாம், அரசாங்கம் அதை விரைவிலேயே மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.

சமீபத்திய இந்த போராட்டங்களின் அலை பெப்ரவரியில் தொடங்கியது. அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆர்சனிக் இரசாயனம், ஈயம் மற்றும் சல்பர் ஆக்சைடு உட்பட நச்சுக்கழிவுகள் நிலத்தடி நீரை விஷமாக்கி, உயிருக்கு ஆபத்தான உடல்நல கேடுகளைத் தோற்றுவித்த நிலையில், அவற்றை கருத்தில் கொண்டு அதை நிரந்தரமாக மூடுமாறு அங்கே வசித்தோர் கோரினர்.

மாநில அஇஅதிமுக கட்சியின் (அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்), தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதனன்று எரிச்சலூட்டும் வகையில், அரசாங்கம் "ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக" தெரிவித்தார். இருப்பினும், போராட்டக்காரர்கள் மீதான போலிஸ் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாத்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கட்சிகட்சிகளால் தூண்டிவிடப்பட்டதாக வாதிட்டார்.

“அந்த தூண்டுதலால் தான் இத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த உயிரிழப்புகளுக்காக உண்மையிலேயே நாங்கள் வேதனை அடைகிறோம்,” என்றார். ஒரு நாளுக்கு முன்னர் தான், ஊடகங்களுக்கு கூறுகையில், “மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க" இந்த போலிஸ் காட்டுமிராண்டித்தனம் "தவிர்க்க முடியாததாய்" இருந்ததாக தெரிவித்திருந்தார்.

வேதாந்தா ரிசோர்சர்ஸ் இல் 71 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள இந்திய பில்லியனர் அனில் அகர்வால் அந்த உருக்காலையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக இந்திய தேசியவாதத்தை முடுக்கி விட முனைந்தார். அவர் அறிவித்தார், இந்த பிரச்சாரமானது இந்தியா இறக்குமதிகளைச் சார்ந்திருக்குமாறு செய்வதற்கான ஒரு "வெளிநாட்டு சதி" என்றார்.

இந்த உருக்காலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பானது, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராகவும் மற்றும் வேலைகள், வேலையிட நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான நிறுவனங்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பாட்டாளிகளிடையே இந்தியா எங்கிலும் அதிகரித்து வரும் சமூக போராட்டங்களின் பாகமாகும்.

தூத்துக்குடியில் வன்முறையான அரசு ஒடுக்குமுறை, ஏற்கனவே கொந்தளித்து போயுள்ள சமூக பதட்டங்களைக் கட்டுப்படுத்தவியலா மட்டங்களுக்கு தீவிரப்படுத்துமென இந்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் அஞ்சுகின்றன.

மே 23 இல் வெளியான Hindustan Times தலையங்கம் எச்சரித்தது: “இந்நிலைமையை தமிழ்நாடு கையாண்ட விதம், மக்களின் மனநிலையை அளவிட முடியாத அதன் திராணியற்றத்தன்மை மற்றும் அவர்களின் கவலைகளுக்கு அது மதிப்பளிக்காததும் கவலையளிக்கிறது … இப்போதும் கூட அரசாங்கம் நிலைமையின் தீவிரமத்தன்மையைக் குறைத்துக் காட்டவும், போராட்டங்கள் வன்முறையாக திரும்பியது தான் காரணம் என்பதைப் போல போலிஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தவும் முயன்று வருகிறது.”

இதே கவலைகள் நேற்று The Hindu பத்திரிகை தலையங்கத்திலும் உயர்த்தப்பட்டது. “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முற்றிலும் தடுக்கத்திருக்கக்கூடியதே,” என்று தலைப்பிட்ட அந்த ஆங்கில-மொழி பத்திரிகை அறிவித்தது: “தமிழ்நாடு அரசாங்கம், ஏற்படவிருந்த தீவிரத்தை அளவிட தவறியது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அந்த ஆலையை செயல்படுத்துவதற்கான அதன் ஒப்புதலைப் புதுப்பிக்க மறுத்த பின்னர், ஆலை செயல்படாத ஒரு நேரத்தில் இதுபோன்றவொரு கோபமும் வன்முறையான ஆர்ப்பாட்டமும் நடந்திருப்பது துயரகரமாக முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.”

இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி போன்ற உத்தியோகப்பூர்வ நாடாளுமன்ற கட்சிகளும், தமிழ்நாட்டின் மாநில எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) போலிஸ் தாக்குதல்கள் மீதான பொதுமக்கள் மனக்குமுறலைச் சுரண்ட முயன்று வருகின்றன. அவர்களின் முயற்சிகளுக்கும், அங்கே வசிப்போரின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் ஆளும் அஇஅதிமுக மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும், அடுத்த ஆண்டு தேசிய தேர்தல்களை முகங்கொடுக்கும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் தங்களது எதிர்கால தேர்தல் வாக்குகளைப் பெருக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர்.

நேற்று, திமுக தலைவர் எம். கே. ஸ்டாலின் தமிழ்நாட்டு தலைநகரான சென்னையில் தலைமை செயலகத்திற்கு வெளியே பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் இணைந்து போராடினார், அவரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் போலிஸால் காவலில் எடுக்கப்பட்டனர்.

திமுக மற்றும் பிற கட்சிகளும் போலிஸ் படுகொலை மீது இன்று ஒரு பந்த் (பொது அடைப்பு) க்கு அழைப்புவிடுத்தன. தமிழ்நாடு எங்கிலுமான தொழிலாளர்களும், இளைஞர்களும், கிராமப்புற பாட்டாளிகளும் இன்றைய ஆர்ப்பாட்டங்களிலும், மாநிலந்தழுவிய வேலைநிறுத்தத்திலும் இணைவார்கள் என்பதால், திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் ஏனைய எதிர்கட்சிகளும் மக்களின் கோபத்தைப் பாதிப்பில்லாத அரசியல் வழித்தடங்களுக்குள் திருப்ப முயன்று வருகின்றன.