ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose the repression of Polish socialists!

போலாந்து சோசலிஸ்டுகள் மீதான ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

By the WSWS Editorial Board
18 May 2018

வலைத் தள பிரசுரமான "சோவியத் அதிகாரம்" (“Władza Rad”) பத்திரிகைக்கு எதிராகவும், அத்துடன் போலாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மற்றும் கார்ல் மார்க்ஸ் பிறந்து 200 ஆம் நினைவாண்டு குறித்த ஒரு சமீபத்திய விஞ்ஞானபூர்வ கூட்டத்திற்கு எதிராகவும் எடுக்கப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளை விவரித்து, அப்பிரசுரத்தின் ஆசிரியர் குழுவிடமிருந்து WSWS பின்வரும் கடிதத்தைப் பெற்றுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவும், ஆளும் கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (PiS) பிற்போக்குத்தனமான போலாந்து அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிப்பதுடன், போலாந்தில் உள்ள இடதுசாரி, சோசலிச பிரசுரங்கள் மற்றும் அமைப்புகளைத் தொல்லைக்குட்படுத்தும் நடவடிக்கைகளை அது உடனடியாக நிறுத்துமாறும் கோருகிறோம்.

*********

போலாந்தின் பிற்போக்குத்தனமான அரசாங்கம், போலாந்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக பன்மைத்துவத்தை (pluralism) ஒடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கம்யூனிசத்தை பிரபல்யப்படுத்தியதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் வழக்கில் இழுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட போலாந்து கம்யூனிஸ்ட் கட்சியைத் தொல்லைக்குட்படுத்திய நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த ஒடுக்குமுறைகள் கம்யூனிஸ்ட் பிரசுரமான "சோவியத் அதிகாரம்" இன் (“Władza Rad,” www.1917.net.pl) ஆசிரியர்களை எட்டியது, சில நாட்களுக்குப் பின்னர் வடமேற்கு போலாந்தின் Szczecin பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு மார்க்சிச கூட்டத்தில் பொலிஸ் தேடுதல்வேட்டை நடாத்தியது.

ஏப்ரல் 30, திங்கட்கிழமை, “சோவியத் அதிகாரம்" பிரசுர ஆசிரியர்கள் ஒருவரின் வீட்டில் நுழைந்த பொலிஸ் அவரின் மடிக்கணணி, இரண்டு ஹார்டு டிஸ்குகள் மற்றும் செல்போன்களை எடுத்துச் சென்றது. கம்யூனிசத்தை வெகுஜனமயப்படுத்துவது போலாந்தில் சட்டபூர்வமானது என்ற உண்மைக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, முற்றிலும் சட்டவிரோதமானது. இது, இடதுசாரி எதிர்ப்புக்கு எதிரான மற்றொரு மூர்க்கமான ஒடுக்குமுறை நடவடிக்கையாகும்.

போலாந்து சட்டத்தின்படி, கம்யூனிசத்தை பரப்புவது சட்டபூர்வமானது. அரசு தரப்பு இந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு, செய்யாத குற்றத்திற்காக Władza Rad ஆசிரியரைக் குற்றஞ்சாட்ட முயன்று வருகிறது. போலாந்தின் தண்டனை தொகுப்பு சட்டம் "சர்வாதிபத்தியத்தை" மற்றும் பாசிசவாத பிரச்சாரத்தை மட்டுமே தடுக்கிறது. ஆனால் அது கம்யூனிசத்தைத் தடுக்கவில்லை, இது 2011 இல் அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரியில் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. Brudzinski, போலாந்தில் நவ-பாசிசவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை மறுத்ததுடன், ஜனநாயகத்திற்கு எதிராக "நவ-கம்யூனிச" அச்சுறுத்தல் எனப்படுவது இருப்பதாக கூறி ஒரு சிவப்பிற்கு எதிரான குற்றச்சாட்டை பயன்படுத்த முயன்றார்.

இதற்குப் பின்னர், பொலிஸ் மற்றும் அரசு தரப்பு அதிகாரிகள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் மற்றும் போலாந்தில் உள்ள எந்தவொரு இடதுசாரி எதிர்ப்புக்கு எதிராகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சட்டபூர்வமாக பதிவு செய்துள்ள போலாந்து கம்யூனிஸ்ட் கட்சி (Komunistyczna Partia Polski, KPP) கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. பரிந்துரையின் பேரில் KPP இன் செயல்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், மேல்முறையீடு செய்து அவர்கள் வெளியில் வந்த போதும், அவர்கள் மீதான வழக்குகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ஜனநாயக மற்றும் ஆக்ரோஷமான கம்யூனிஸ்ட்-எதிர்ப்பு கட்சியான ரஜெம் கட்சியுமே கூட (Razem, ஸ்பானிய பொடெமோஸ் இன் போலாந்து வடிவமாக தன்னை காட்டிக்கொள்ளும், “இணைவோம் கூட்டணி”), ஒடுக்குமுறைகளை முகங்கொடுத்தது—அரசாங்க-சார்பு இளைஞர் அமைப்புகளின் சில உறுப்பினர்கள் "கம்யூனிசத்தை ஊக்குவிப்பதற்காக" அதை சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரினர்.

ஜோன் குளோட் ஜூங்கர் போன்ற மத்திய-வலது ஐரோப்பிய அரசியல்வாதிகளே கூட வரலாற்றில் கார்ல் மார்சின் இடத்தை அங்கீகரிக்கின்ற போதினும், போலாந்து அரசு தொலைக்காட்சி (அந்த விஞ்ஞானபூர்வ சோசலிசத்தின் ஸ்தாபகரது மேற்கோள்களை இட்டுக்கட்டி) "கார்ல் மார்க்சின் கொலைகார சிந்தனை" என்றவொரு பகுதியை சமீபத்தில் ஒளிபரப்பியது, மேலும் போலாந்து அரசாங்கம் எந்தவொரு இடதுசாரி எதிர்ப்பு நடவடிக்கையையும் தண்டிக்கிறது, அதேவேளையில் ONR இன் (1930 களில் இருந்த யூத-எதிர்ப்புவாத பாசிசவாத அமைப்பு ஒன்றில் இருந்து அதன் பெயரை தருவித்துக் கொண்டுள்ள, “National Radical Camp,” தேசிய தீவிர முகாம் எனும் இதன்) நவ-பாசிசவாத ஆர்ப்பாட்டங்கள் பொலிஸால் பாதுகாக்கப்படுகின்றன. சர்வாதிபத்தியத்தை நோக்கிய அரசின் போக்கு இப்போது பல்கலைக்கழக சுயஅதிகாரத்தை மீறும் அளவுக்கு உள்ளது. மே 12, சனிக்கிழமை, பொலிஸ், பல்கலைக்கழக சுயஅதிகார சட்டத்தை மீறி, மார்க்ஸ் பிறந்து 200 வது நினைவாண்டு கொண்டாட்டத்திற்கான ஒரு விஞ்ஞானபூர்வ கூட்டத்திற்குள் நுழைந்தது.

போலாந்து கம்யூனிஸ்ட் வலைத் தளமான Władza Rad இன் ஆசிரியர் குழுவான நாங்கள் எப்போதுமே பேச்சு சுதந்திரம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிற மனித உரிமைகளை நிபந்தனையின்றி பாதுகாக்க நிற்கிறோம். எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் நாங்கள் எதிர்க்கிறோம். போலாந்து அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக நாங்கள் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்புவிடுக்கிறோம்!

போலாந்து அரசு ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான அடிப்படை விதிகளை மீறி வருகிறது. இந்த பிற்போக்குத்தனமான அரசாங்கத்தின் ஒரே நோக்கம், மூலதன ஆட்சியின் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்தி வைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான முதலாளித்துவ சுரண்டல் முறையைப் பேணவும், தேசியவாத மற்றும் முதலாளித்துவ கட்சியான PiS இன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு இடதுசாரி எதிர்ப்பையும் அழிப்பதாகும்.

தொழிலாள வர்க்கத்திற்கான ஜனநாயக சட்டங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் அரசியல் அமைப்புகளின் பாதுகாப்பு இப்போது முற்றிலும் அவசியமாகிறது!

உலகெங்கிலும் உள்ள அனைத்து போலாந்து தூதரகங்கள் முன்னிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும், போலாந்து கம்யூனிஸ்டுகளைத் தொல்லைப்படுத்துவதற்கு எதிராக தூதர்களுக்கு கடிதங்கள் எழுதுமாறும் நாங்கள் கோருகின்றோம்.

Editorial board of Władza Rad

15 மே 2018