ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French unions negotiate with government to impose railway privatization

இரயில்வே தனியார்மயமாக்கத்தைத் திணிக்க பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் பேரம்பேசுகின்றன

By Anthony Torres
19 May 2018

பிரான்சின் தேசிய இரயில்வே நிறுவனத்தை (SNCF) தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து இரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், தொழிற்சங்கங்கள் இந்த அரசியல் வெடிப்பான தாக்குதலுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு தொழிலாளர்கள் மத்தியில் இருக்கின்ற வலுவான எதிர்ப்பைக் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் அறிந்து வைத்திருக்கின்ற போதும், எல்லாவற்றையும் விட அவரது அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான ஒரு போராட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். சர்வதேச அளவில் தொழிலாளர்கள் தீவிரப்பட்டுச் செல்வதன் மத்தியில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த மே-ஜூன் 1968 வேலைநிறுத்தத்தில் போல, தங்களது கைமீறிச் சென்றுவிடக் கூடிய ஒரு சமூக வெடிப்பைக் குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர். ஆகவே, அரசாங்கத்துடனான அவர்களது பேச்சுவார்த்தைகள் அனைத்தும், சீர்திருத்தமாக சொல்லப்படுவதைத் திணிப்பதற்கு உடன்படுவதை அடிப்படையாகக் கொண்டவை என்ற உண்மையை மூடி மறைப்பதற்கு வரிசையான சூழ்ச்சிவேலைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று, பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) மற்றும் தன்னாட்சி தொழிற்சங்கங்களது தேசியத் தொழிற்சங்கம் (UNSA) ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும் போக்குவரத்து அமைச்சரான எலிசபெத் போர்ன் க்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளும் தொழிலாளர்கள் மீது அவை திணிக்கத் திட்டமிட்டு வருகின்ற நடவடிக்கைகள் மீது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மும்முரமாய் வேலைசெய்து கொண்டிருக்கின்றன.

இந்த வாரத்தில், CFDT இன் உதவிப் பொதுச் செயலர் செபஸ்டியான் மரியானி இந்த சந்திப்பின் முடிவுகளைப் பாராட்டினார்: “ஒரு உண்மையான பேச்சுவார்த்தையாக அழைக்கக்கூடிய ஒரு பரிவர்த்தனையில் மிகத் துல்லியமான வேலையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இன்று, நாங்கள் உண்மையாகவே மனம்திறந்து முன்னே வருகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆலோசனையளிக்கப்பட்ட 42 திருத்தங்களையும் ஆய்வு செய்வதற்கு எங்களால் இயன்றிருக்கிறது, ஒவ்வொன்றிலும் ஆழமாக எங்களால் இன்னும் செல்ல முடிந்திருக்கவில்லை என்றாலும் கூட, இது இன்னும் நிறைய கலந்தாலோசனைகளுக்குக் கொண்டு செல்லும்.”

UNSA நிர்வாகி ரோஜர் டிலன்செகர் தெரிவித்தார், “எங்களது வரைவுத் திருத்தங்கள் பெறப்பட்டிருக்கின்றன, விரிவாக ஆய்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது, இந்த ஒட்டுமொத்த வார இறுதியிலும் தொடரவிருக்கிற ஒரு வேலையை நாங்கள் ஆரம்பிக்கிறோம், ஏனென்றால் கால அட்டவணை சற்று இறுக்கமானதாக இருக்கிறது.”

CFDT மற்றும் UNSA உடனான சந்திப்புக்குப் பின்னர், போர்ன் தெரிவித்தார்: “ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கான சக்திகளாக ஆக விரும்புகின்ற இரண்டு தொழிற்சங்கங்கள் இங்கே இருக்கின்றன, வரவிருக்கும் நாட்களில் அவற்றுடன் நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையை தொடருவோம்.” “அரசாங்கத்தின் அடிப்படையான நிலையை தெளிவாக விளக்குவதற்காக ஒரு குறிப்பான வேலைக் கூட்டத்தை” நடத்துவது குறித்தும் அவர் அறிவித்தார்.

ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) மற்றும் ஒற்றுமை-தொழிற்சங்கம்-ஜனநாயகம் (SUD) ஆகிய தொழிற்சங்கங்கள் போர்ன் உடன் சந்திப்பதற்கு இதுவரை மறுத்து வந்திருக்கின்றன. ஆனால், போர்ன் உடன் பேசுவதைக் காட்டிலும் பிரதமர் எட்வார்ட் பிலிப் உடன் பேசுவதே மேம்பட்ட முடிவுகளைத் தரும் என்று கூறி —SNCF ஐ ஒரு தனியார் நிறுவனமாக மாற்றுவது, இரயில்வே தொழிலாளர்களது தனிச்சட்டப்பிரிவை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இரயில்வேயை தனியார் போட்டிக்காய் திறந்து விடுவது ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதை பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையாக பிலிப் வலியுறுத்தி வந்திருக்கிறார் என்றபோதும்— அவருடன் சந்தித்துப் பேசுகின்றன. CGT-SUD மூலோபாயம் CFDT மற்றும் UNSA வினுடையதில் இருந்து எந்த அடிப்படை வித்தியாசமும் கொண்டதில்லை.

பிலிப்புக்கும் இந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புகளுக்கும் இடையில் மே 7 அன்று நடந்த சந்திப்புக்குப் பின்னர், CGT-இரயில்வே பொதுச் செயலரான லோரோன்ட் பிறன் France-Info நிகழ்ச்சியில் அந்த கூட்டத்தைக் குறித்து புகழ்ந்து கூறினார்: “இந்த விடயத்தில் தனிப்பட்ட ஈடுபாடு கொள்வதாக பிரதமர் எங்களிடம் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார். இது எங்களுக்கு மிகவும் ஒரு நேர்மறையான அம்சம் ஆகும். SNCF கடன் மற்றும் நிறுவன ஒப்பந்தம் ஆகியவை சம்பந்தப்பட்ட சுற்றுவட்ட விடயங்களில் அவர் குறிப்பான முன்முயற்சிகளை எங்களுக்கு காட்டியிருக்கிறார்.”

பிறன் மேலும் சேர்த்துக் கொண்டார், “இந்த விவாதங்கள் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கின்றன. நாங்கள் முழுமையாக உடன்பாடு கொண்டிருக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் எல்லாமே வெளிப்பட்ட களத்தில் இருக்கின்றன, அரசாங்கம் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளை தெளிவுபடுத்த விரும்புவதாகத் தெரிகிறது, அது ஒரு நல்ல விடயம். வெளிப்படையாகவே, வேலைநிறுத்தம் செய்பவர்கள் விடயத்தில் அது பெரும் உறுதியுடன் இருக்கும் என்று வலியுறுத்துகிறது, ஆகவே வேலைநிறுத்தம் செய்பவர்களும், அரசாங்கம் திரும்பி வந்து அதன் திட்டங்களில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களும் உறுதியுடன் இருப்பதைக் காட்டியாக வேண்டும்.”

தொழிலாளர்கள் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் வேலைநிறுத்தத்தை தமது சொந்தக் கைகளில் எடுப்பதும் தங்களது போராட்டத்தை ஒருங்கிணைக்க தொழிற்சங்கங்கள் அத்தனையில் இருந்தும் சுயாதீனப்பட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதும் அவசர பிரச்சினையாக இருக்கிறது என்பதை விளங்கப்படுத்த இந்தக் கருத்துக்கள் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன.

தனியார்மயமாக்கத் திட்டத்தில் இருந்தும் இரயில்வே தொழிலாளர்களது ஊதியங்கள் மற்றும் சட்ட நிலைமைகள் மீதான தாக்குதல்களில் இருந்தும் சிறிதும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என பிலிப் வலியுறுத்தியிருக்கிறார், இந்த நிலைமைகளில் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதையும் தொழிலாளர்களின் முதுகிற்குப் பின்னால் ஒரு விலைபேசலுக்கு வேலைசெய்வதையுமே குறிப்பதாக இருக்க முடியும். மக்ரோனுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கான எந்த முன்னோக்கையும் வழங்காமல், இந்த நிலைமைகளின் கீழ் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர தொழிலாளர்களை அழைப்பதென்பது, வெறுமையானதாகவும் நேர்மையற்ற வாய்ச்சவடாலாகவும் மட்டுமே இருக்கிறது.

அதேநேரத்தில், SNCF தொழிலாளர் படையிலான மக்ரோனின் சீர்திருத்தத்தின் —இந்த நடவடிக்கை சோசலிஸ்ட் கட்சியால் (PS) நிறைவேற்றப்பட்ட ஜனநாயக-விரோத தொழிலாளர் சட்டத்தால் சாத்தியமாக்கப்பட்டதாகும்— மீது ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக, தொழிற்சங்கங்கள், இந்த சீர்திருத்தத்திற்கான எதிர்ப்பின் சாத்தியமான மிகப்பலவீனமான வெளிப்பாட்டைக் கொடுப்பதற்கு வேலைசெய்கின்றன. சராசரியாக தொழிலாளர்களை விடவும் அதிகமாய் சீர்திருத்தங்களுக்கு சாதகமானவர்களாய் இருக்கின்ற நிர்வாக அலுவலர்களும் இந்த கருத்துவாக்கெடுப்பில் பங்கெடுப்பதை ஆதரிக்கின்ற தொழிற்சங்க அறிக்கைகள் குறிப்பான முக்கியத்துவமுடையவை ஆகும்.

தொழிற்சங்கங்கள் இந்த கருத்துவாக்கெடுப்பை அறிவித்த பின்னர், WSWS எச்சரித்தது: “ ‘வேண்டாம்’ என்ற வாக்களிப்பு வெற்றிபெற்றாலும் கூட, தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் எட்வார்ட் பிலிப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு கதவு திறந்திருக்கும் நிலையில் இது விடுகிறது.... கருத்துவாக்கெடுப்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கின்ற காரணத்தாலோ, அல்லது வேலைநிறுத்தம்-செய்யாத தொழிலாளர்களின் அல்லது ஊதிய இழப்பால் பாதுக்கப்படுகின்ற வேலைநிறுத்தத் தொழிலாளர்களின் வாக்குகளினாலோ, ‘வேண்டும்’ வாக்களிப்பு வெற்றி பெறுமாயின், அப்போது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதற்கு இந்த முடிவைப் பயன்படுத்திக் கொள்ளும்.”

SUD-Rail இன் புரூனோ போன்சே, இரயில்வே தொழிலாளர்கள் மீது ஒரு “சீர்திருத்த”த்தை திணிக்க தொழிற்சங்கங்களும் கூட விரும்புகின்றன என்பதைத் தெளிவாக்குகின்ற விதமாய் எந்த சீர்திருத்தத்தை “முன்மொழிவது” என்ற தெரிவு தொழிலாளர்களுக்கு இருக்கும்படியான ஒரு வடிவம் தனக்கு இன்னும் கூடுதல் உகப்பானதாய் இருந்திருக்கும் என்று LCI [முழுநீள செய்தித் தொலைக்காட்சி] இல் அறிவிக்கின்ற மட்டத்திற்குச் சென்றார்.

மே 22 வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த கருத்துவாக்கெடுப்பின் பாதையானது இந்த எச்சரிக்கையை தாங்கி நிற்கிறது. இந்த கருத்துவாக்கெடுப்பு “நிறுவனத்திடம் இருந்தான எதிர்ப்பையும் தாண்டி, தொழிற்சங்க நிர்வாக அலுவலர்கள் மத்தியில் உள்ளிட, பெரும் வெற்றி பெற்றிருக்கிறது” என்று CGT-Railways தலைவர் பிறன் பெருமையடித்துக் கொண்டார். “நாங்கள் கற்பனை செய்திராத அளவுக்கு ஏராளமான வாக்காளர்கள் இருந்தனர்” ஆனாலும் “சில ஸ்தாபகங்கள் அல்லது நிர்வாகக் கிளைகள் தமது வளாகங்களில் கருத்துவாக்கெடுப்புக்கான வாக்குப்பெட்டிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன” என்றார் அவர்.

தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: நிர்வாக அலுவலர்களது பங்கேற்பு, வாக்கெடுப்பை மக்ரோனுக்கு சாதகமாக நெருக்குவதற்கே வாய்ப்பு அதிகம் என்பதை முழுமையாக அறிந்திருந்தும், அது குறித்து CGT தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது.

பிரான்சின் மிகவும் நன்கறிந்த மற்றும் அடையாளமான பொது நிறுவனங்களில் ஒன்றின் மீதான மக்ரோனின் தாக்குதலுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் நடத்தையானது, அவை தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேட்டங்களில் எதனையும் பாதுகாக்கத் திறனற்றவை மற்றும் அதற்குக் குரோதமானவை என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.